
மாதவன்
``யாரது’’ என இரண்டாம் முறையாக மங்களத்தம்மாள் சத்தம் போட்ட பின்னாலும் கதவில் தொங்கும் இரும்பு வளையத்தினால் டங் என அடித்தார்கள் அப்பாவும் மகனும். கர்... கர்... எனக் கத்திக்கொண்டிருந்த காகம் சிறிய அமைதிக்குப் பின்னர் அந்த இடத்தை மீண்டும் வட்டமடித்தது. தாழ்வாரத்தில் காலை மடக்கி திருகில் உளுந்து அரைத்துக் கொண்டிருந்தவள் வாசல் கதவையே பார்த்தாள். இடதுகால் மரமரத்துப் போயிருந்தது. காலையில் சொர்ணம் டிபன் கொண்டு வந்ததிலிருந்து இப்படியே உட்காந்திருப்பது மங்களத் தம்மாளுக்கு ஞாபகம் வந்தது. ஆனாலும் சம்படத்தில் இன்னும் மிச்சமிருக்கும் உளுந்து இரண்டு படிக்கு இருந்தது. “கிருஷ்ணா கபேன்னா பொடுசுகளுக்கும் தெரியும்னு டம்பம் பேசுறா, இன்னும் உளுந்த பக்குவமா அரைக்கத் தெரியல இந்த சொர்ணத்துக்கு” என நினைத்துக்கொண்டாள். வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் கிணற்றின் மேல் உட்கார்ந்திருந்தது காகம். கையை ஓங்கி உஸ்ஸ் என விரட்டினாள். மரியாதைக்காக இரண்டடி சிறகடித்து சற்றுத் தள்ளிப்போய் உட்கார்ந்தது அது.
டங்...
வாசலுக்கும் முகப்பிற்கும் இடையே நீண்டிருந்த கற்படிகளின் இரண்டு பக்கமும் கோரைப்புற்கள் பெயருக்கு ஏற்றபடி வளர்ந்திருந்தன. மங்களத்தம்மாள் மணமாகி வரும்போது கிணற்றையொட்டி சிறிய வாழைத்தோட்டம் இருந்தது. “எல்லாம் என் அம்மா சந்தைக்குப் போய் பாத்து விசாரிச்சு வாங்கியாந்தது” என அவளிடம் அருணாசலம் எத்தனை தடவை சொன்னார் என்பதற்கான சாட்சிகள் ஏதுமில்லை. ஒரு ஆடிக்காற்றில் மரங்கள் சாய்ந்துபோன பிறகுதான் அதிகம் என்று அவள் நினைப்பதுண்டு. முகப்புப் படியை விட்டுக் கீழே இறங்க, கால் இன்னும் தயாராக வில்லை. மெதுவாகக் காலை அசைத்துப்பார்த்தாள். எறும்புகள் ஊர்வது போன்றதான உணர்வு இன்னும் அடங்கவில்லை. நாக்காலில உக்காந்து அரைக்க முடிஞ்சா தேவலை. எவ்வளவு நேரம் இப்படியே இருக்கது, காலும் தான் என்ன பண்ணும் என முணுமுணுத்துக்கொண்டாள். ஈஸ்ஸ்ஸ்வரா என இடுப்பை ஒருகையால் பிடித்து எழுந்ததும் மணி பார்க்கும் ஆசை வந்தது. தாழ்வாரத்திலிருந்து குனிந்து நிலை வழியாக உள்சுவரில் சுழலும் கடிகாரத்தைப் பார்ப்பது சிரமம். எழுந்திருக்கும் முன்னரே பார்த்திருக்க வேண்டும். அப்படியே குனிய முடியாது. மீண்டும் நிமிரும்போது தலை சுற்றும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என மேல்கட்டில் கால்வைக்க... டங்…

தாழ்வாரத்திலிருந்து இறங்கி வாசலுக்குப் பாதிதூரம் வந்த பிறகு நெற்றியின் மேலே கையைக் குவித்து வானத்தைப் பார்த்தாள். பெரிதாக வெயில் இல்லை. பழுப்பு நிறத்தில் மேகங்கள் அலைந்தவண்ணம் இருந்தன. கார்த்திகைக்கே வெயிலைக் காணோம். மார்கழி இன்னும் முழுசா மிச்சமிருக்கு என வாய்விட்டே சொன்னாள். நடுவானில் இளமஞ்சளின் தாக்கம் அதிகமிருந்தது. எப்படியும் மணி பதினொன்று இருக்கும் என்று கெந்தியபடி வாசல் கதவிற்கு வந்துசேர்ந்தாள். மடிசார் தலைப்பால் உடலைச் சுற்றிக்கொண்டு நாதாங்கியை விடுவித்தாள்.
``யாருடாப்பா நீ... போர்வையா?’’ என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்ல ஆரம்பித்தது இடுப்பில் இருந்த குழந்தைதான். மங்களத்தம்மாளின் அகண்ட உருவத்தைப் பார்த்தவுடன் வாயை அஷ்ட கோணலாக்கி அழத் தொடங்கியது. குழந்தை இருந்த இடக்கையை மேலும் கீழும் அசைத்தபடியே ``போர்வை வேணுமா மேடம்?’’ என்றான். மங்களத்தம்மாளுக்கு சிரிப்பு உதட்டில் பரவ, ``வாண்டாம்’’ என்றாள். ``நல்ல போர்வை மேடம், குளுர் தாங்கும் மேடம்’’ என அடுத்தடுத்து வந்து விழுந்த மேடம்கள் மங்களத்தம்மாளை வெடிச்சிரிப்பிற்குத் தயாராக்கிக்கொண்டிருந்தன. தலைக்கு மேலே மூட்டையாய்க் கட்டப்பட்டிருந்த போர்வை களையும் கையில் இருந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
வளையத்தைப் பிடிக்கும் முயற்சியில் தோற்று தொப்பெனப் படியிலேயே உட்கார்ந்து விசும்பத் தொடங்கியது குழந்தை.
இரண்டையும் கீழிறக்கி மூட்டையைப் பிரித்தான். வாண்டாம் என மங்களத்தம்மாள் சொல்லிக்கொண்டிருப்பது உள்ளே இருக்கும் மயில் கழுத்து நிறத்திலிருக்கும் போர்வையைப் பார்த்தவுடன் நின்றுபோகும் என நம்பினான் அவன். ``பாருங்க மேடம், பிடிச்சா வாங்கலாம்’’ என்பது சலுகை வாக்கியங்கள். உல்லன், சோலாப்பூர்களை விரித்துக் காட்டினான். தன்னிடத்தில் இருப்பதிலேயே அதி உன்னதமான கலைப்படைப்பாக அவன் நினைக்கும் அடர் நீல நிறப் போர்வையின் தயாரிப்பு நேர்த்திகளைக் கூடுதல் சிரமப்பட்டு விவரித்தான். தள்ளாடி இரண்டு முறை விழுந்து, தவழ்ந்து மீண்டும் வளையத்தைப் பிடிக்க முயலும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்களத்தம்மாள். அவளுடைய கவனத்தை ஈர்க்க தனக்குத் தெரிந்த தமிழில் முயன்றுகொண்டிருந்தான்.
அதன் அடுத்த நிலையாக விரிப்புகள் அடுக்கப்பட்டிருந்த மூட்டையின் விளிம்புகளை விடுவித்தான். வளையத்தைப் பிடிக்கும் முயற்சியில் தோற்று தொப்பெனப் படியிலேயே உட்கார்ந்து விசும்பத் தொடங்கியது குழந்தை. தலைக்குமேலே பாவிச்சென்ற மங்களத்தம்மாளின் கை, குழந்தையின் செயலுக்கு வினையூக்கியானது. அவன் விரிப்புகளை உயர்த்திப்பிடித்துக்கொண்டே குழந்தையை சமாதானப்படுத்த நாக்கை மடக்கி விநோத சப்தம் எழுப்பினான். தகப்பனின் பிரயத்தனத்தைச் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், குழந்தையைக் கைகாட்டி ``எத்தன வயசு?’’ என்றாள். வெல்வெட் துணியால் எம்பிராய்டரி போடப்பட்ட விரிப்பின் மையப்பகுதியை நன்றாகத் திறந்தபடி ``ஒண்ணரை’’ என்றான். தோள்களில் சுருண்டுவிழும் முடியைக் கவனியாது குழந்தை தன் அப்பாவைப் பார்த்து அழத்தொடங்கியது. அடுத்த விரிப்பை எடுப்பதற்காகக் குனிந்திருந்தவன் ஏதோ நினைவு வந்தவனாய் கால் சட்டைக்குள் கைவிட்டு விசில் ஒன்றை எடுத்து நீட்டினான். ஆர்வமாய் வாங்கிக்கொண்ட குழந்தை எச்சிலொழுக ஊத ஆரம்பித்தது.
கழுத்தை ஒடித்து அந்த சத்தத்தினை ஆய்வு செய்து கொண்டிருந்தது காகம். மங்களத்தம்மாள் மர பீரோவில் விரிக்கப்படாமலேயே இருக்கும் பழைய போர்வைகளின் வாசனையில் மூழ்கியிருந்தாள். பத்பநாபன் கல்யாணத்தின்போது வாங்கி வைத்தவை. மஞ்சளும் பச்சையுமான பிரமாண்ட விரிப்பில்தான் தாம்பூலச்சீர்கள் வைக்கப்பட்டிருந்தன. கால்கள் என்பவை ஓடுவதற்காகவே படைக்கப்பட்டவை என எண்ணும் குழந்தைகள் திருமணத்திற்கு முந்தைய இரவுகளில் அதில்தான் படுத்திருந்தார்கள். அழுக்கேறி அதனால் எடைகூடிப் பருத்திருந்த அதனை வெளுக்க பொன்னம்மாவை வரச்சொல்ல வேண்டியிருந்தது. மகனும், மருமகளும் பூனாவுக்குத் திரும்பிய இரவில், அதன்மீது படுத்திருந்தாள் மங்களத்தம்மாள். வெறுந்தரையில் இருப்பதுபோல உணரச்செய்யும் அந்தக் கடினமான விரிப்பு, சிரிப்பும் அதட்டல்களும், விளித்தலும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருந்த பொழுதுகள் பற்றிய எண்ணங்களைத் தூண்டிவிட்டது. ஒருக்களித்துப் படுக்கும்போது அவையனைத்தும் அந்த விசாலமான அறையில் ஓடி மறந்தவண்ணம் இருந்தன. ஒலிகள் வேட்டையாடப்பட்ட அந்த இரவின் மத்தியில் காலால் அதனைச் சுருட்டி மூலையில் தள்ளிவிட்டு தனதரைக்குச் சென்றுவிட்டாள். அது இப்போதும் வைக்கப்பட்ட அதே இடத்தில் இருக்கிறது. பீரோக்கதவுகளின் கிரீச் ஒலிகள் அறையை நிரப்பும் போதெல்லாம் இந்த ஞாபகம் அவளைப் பற்றிப்படரும்.

கதவில் கைகளை ஊன்றி நின்றுகொண்டிருந்தது குழந்தை. வாயிலிருந்து கோடாய் எச்சில் பூமி நோக்கி இறங்கியது. ``எது வேணும் மேடம்?’’ என முடித்தான் அவன். இவள் வாண்டாம் என மறுக்கவே, ``இன்ஸ்டால்மென்ட்லகூட தாங்க மேடம்’’ என்றவனை, நிறுத்துமாறு சைகை காட்டி, காதுகளை முகப்பின் பக்கம் திருப்பினாள். அதேதான். `ஓம் கங்கணபதியே நமோ நமஹ...’ நினைவிலில்லாமல் நிஜமாகவே ஒலிப்பதை உறுதிசெய்தாள். அவசரமாகத் திரும்பியவளால் அதேவேகத்தில் நடக்க முடியவில்லை. உள்ளே அழைக்கும் செல்போனை எடுக்கத் துடித்தன அவள் கைகள். `யாராக இருக்கும், இந்த நேரத்துல? பத்துவா? இன்னிக்கு ஞாயித்துக்கிழமையா?’ பொருத்தமில்லாத பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. கடைசிப் படியில் ஏறும்போது தனது சப்தத்தை நிறுத்திவிட்டிருந்தது செல். டேபிளின் மூலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது அவளுக்கு. சிந்தனையின் வேகத்தில் இதயம் துடித்தது. இருமலும், மூச்சும் முட்டிமோதி வெளிவந்தன. அழுகைக்குப் பின்னர் உறங்கிய குழந்தையைப் போலிருந்தது ஷெல்பில் இருந்த போனைக் கையிலெடுக்கும்போது. வேகமாக நடுப்பொத்தானை அழுத்திப் பார்த்தாள். ஐந்து A-க்களாகச் சேமித்துவைக்கப்பட்ட பத்பனாபனின் அழைப்பு தவறியிருந்தது.
மங்களத்தம்மாள் போனை உபயோகிப்பது சற்றேறக்குறைய ஆபத்தான பரிசோதனைபோல இருக்கும். போனை இடதுகையில் முகம்பார்க்கும் கண்ணாடிபோலப் பிடித்துக்கொள்வாள். வலது ஆட்காட்டி விரல் மட்டுமே போனை இயக்குவதற்கு உகந்தது என்னும் எண்ணம் அவளிடம் உண்டு. சொல்லப்போனால் இதுவரை அவளது மற்ற விரல்கள் போனைத் தொட்டதுகூட இல்லை. போனை இயக்குகையில் பற்களுக்கிடையே அவளுடைய நாக்கு கடிபட்டு சிக்கி நிற்கும். சிரமமான எடையை ஒற்றைவிரலால் தூக்கிச்செல்வது போல முகம் வெட்டித் திரும்பும்.
கிருஷ்ணனின் யாராக இருக்கும், இந்த நேரத்துல? பத்துவா? இன்னிக்கு ஞாயித்துக்கிழமையா?’ பொருத்தமில்லாத பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின.
“பட்டன் இருக்கபடியா ஒண்ணு வாங்கித் தாயேன்” என அவள் கெஞ்சிய பின்னரும், ஆண்ட்ராய்டு போனைக் கொடுத்தது பத்பநாபன் தான். “காலம்பற ஆரம்பிச்சா ரவைக்குள்ள மொத்தத்தையும் கத்துக்கலாம்” என அருகிலிருந்து போன் பாடம் நடத்தினான், கடைசி முறை வந்தபோது. அமெரிக்காவில் இருக்கும் பேத்தியிடம் வீடியோ காலில் பேசியதிலிருந்து போனைப்பற்றிய அவளது மரியாதை வெகுவாக ஏறிவிட்டிருந்தது. அடுத்தநாள் சொர்ணத்திடம், “அசப்பில வெள்ளக்காரியாட்டம் மாறிட்டாடி நம்ம ராகவி. பொம்பளைகளும் கோட்டு சூட்டுதான் போடணுமாம் அங்க. நிர்வாகம்லாம் இவதானாம் அந்தக் கம்பெனில. வீட்டு வாடகையே நம்ம ஊர்க் காசுக்கு ஒண்ணரை லெச்சமாம்டி” என்றாள். ``மாவு மில்லுக்குப் போறேன். மதியத்துக்கு கிருஷ்ணன அனுப்புறேன்’’ என்பது மட்டுமே சொர்ணத்தின் தரப்பு வார்த்தைகள். அவளுக்கு இது வழக்கமான ஒன்றுதான் என்பதாலும், தனக்கிருக்கும் ஆர்வத்தை அவளறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும் உடனே விடைபெற்றுக் கொண்டாள். ``ஈஸ்வரா, கொழந்தைய நல்லா வச்சுக்க’’ எனக் கைகளை வானத்தை நோக்கி அகல விரித்து வேண்டினாள். அதற்குப்பின்னரும் வீடியோ கால் செய்வதற்கு கிருஷ்ணனின் உதவி தேவைப்பட்டது. தனியாக முயற்சி செய்கையில் பார்வையில்லாத வனின் புதுவீடு போல இருந்தது அவளுக்கு.
கிருஷ்ணனின் விடாமுயற்சியின் பலனாக சுயமாகவே கால் செய்யக் கற்றிருந்தாள். அது ஒரு சமையல் குறிப்புபோல அவளுக்கு போதிக்கப்பட்டிருந்தது. எளிய படிநிலைகள் வழியாக இவ்வெற்றியை அவள் அடைந்திருந்தாள். சில நாள்களிலேயே நார்மல் கால், வீடியோ கால் போன்ற வார்த்தைகளை அநாயாசமாகக் கையாளக் கற்றுக்கொண்டாள். மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பதிலழைப்பை உறுதி செய்தாள். பத்பநாபன் எடுக்கவில்லை. மறுபடியும் அதே வழிமுறைகள். இம்முறை பத்பநாபன் குரல் சன்னமாக ``அம்மா’’ என்பதை அவளால் கேட்க முடிந்தது. சங்கரன் கொண்டுவரும் பணத்தை வாங்கிக்கொள்ளவேண்டும் என்னும் செய்தியை, சில விசாரிப்புகள், கேள்விகளுக்குப் பிறகு தெரிவித்தான்.

நிமிடங்களில் முடிந்த அந்த உரையாடலில் பத்பனாபனின் உடல்நிலை, சென்னையில் பெய்த சமீபத்திய பேய்மழை, காலையில் எடுத்துக்கொண்ட தோசையின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருக்கும் பேத்தியின் மகனுக்குக் கொடுக்கச்சொன்ன கஷாய செய்முறையின் தற்போதைய நிலை என நினைவில் எழுந்த அனைத்தையும் கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். போன் வைக்கப்பட்ட பின்னரும் ``தம்பி...’’ எனக் கூப்பிட்டுக் காத்திருந்து பின்னர் போனைப் பழையபடி பத்திரமாக டேபிளில் வைத்தாள். ஒரே நேரத்தில் நிரம்பித் தளும்புவது போலவும், காலியாகவும் இருந்தது. நடுமுற்றத்தில் குத்தீட்டிகளாக வந்துவிழும் சூரியக்கதிர்களின் ஒளியில் மிதக்கும் துரும்புபோல உணர்ந்தாள். பாலீஷ் செய்யப்பட்ட, மஞ்சளுக்கும் வெள்ளைக்கும் மத்தியிலிருந்த சுவர்களைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தாள்.
விடாமுயற்சியின் பலனாக சுயமாகவே கால் செய்யக் கற்றிருந்தாள். அது ஒரு சமையல் குறிப்புபோல அவளுக்கு போதிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் எதிர்ப்புறமிருந்த மஞ்சனாத்தி மரங்களின் கூட்டத்திற்குள் அவன் சிறுநீர் கழிக்கச் சென்ற வேளையில்தான் குழந்தை வீட்டிற்குள் போயிருக் கவேண்டும். மங்களத்தம்மாள் முகப்புப் படியில் இறங்குவதற்காக எத்தனிக்கையில், கற்படிகளில் கைகளை அகல விரித்தவாறு நடக்கும் குழந்தையைப் பார்த்தாள். வாசலில் நின்றிருந்தவனைக் காணவில்லை. நிறங்களின் குவியலாய் மூட்டை கிடந்தது. குழந்தை தனக்கே உரித்தான சந்தோஷ உலகத்தின் தாளத்திற்கு ஏற்றவாறு கால்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்தது. பதைத்து ஓடிவந்தவன் வாசல் கதவில் நின்று ``அரே... சோட்டூ...’’ என்றழைத்தான். தந்தையுடைய ஒலியின் அலைவரிசையைக் கண்டறிந்த குழந்தை திரும்பிப் பார்த்தது. விரல்களால் வரும்படி அழைத்தபோதும், தனக்குக் கிடைத்த சிறு சுதந்திரத்தின் நேரத்தை நீட்டிக்கும் நோக்கில் சிரித்துக்கொண்டே மேலும் முன்னேறியது. இதற்குள் கடைசிப் படிக்கு இறங்கியிருந்தாள் அவள். அப்பாவைப் பார்த்தவாறே நடந்த குழந்தையின் கைகள் மங்களத்தம்மாளின் முழங்காலில் பட்டபோது அவளுக்கு மெத்தென்றிருந்தது. தூக்கிக் கொள்ளும் வாஞ்சை உள்ளூரப் பரவியது. தொளதொளக்கும் பனியனுடன், கீழிறங்கும் எலாஸ்டிக் போன ட்ரவுசரை பிடித்தபடி தன் அப்பாவிடம் ஓடும் குழந்தையைப் பின்தொடர்வது அவளுக்குப் பிடித்திருந்தது. வேகம் அதிகரிக்க, அதிகரிக்க குழந்தையை வாரி தலைக்குமேலே தூக்கவேண்டும் எனும் ஆசை அவளை வழக்கத்தைவிட வேகமாய் நடக்க வைத்தது. இதையெல்லாம் கவனித்துக்கொண்டு வெளியே அணைத்துக்கொள்ளத் தயாராய் இருந்தவனது கைகளில் சரணடைந்தது குழந்தை. அந்தியில் ஒளித் துவாரங்கள் சட்டென்று அடைபடுவதுபோல, மிச்சமிருந்த கடைசி இனிப்பும் தீர்ந்துபோன குழந்தையைப் போல மாறியிருந்தாள் மங்களத்தம்மாள்.
``இங்க வா பொம்ம தரேன் பொம்மை, கழுத்தாட்டுற பொம்ம பாத்திருக்கியா’’ என ஜாடை செய்து காண்பித்தாள். ``சாக்லேட் வேணுமா?’’ என்றவளின் குரலில் இறக்கம் இருந்தது. குழந்தை தன் அப்பாவின் முதுகுப்பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டது. இப்படியான சூழ்நிலைக்கு ஒத்துப்போவதற்கு எப்படி முகத்தை வைத்துக்கொள்ளவேண்டும் எனத் தெரியாமல் தடுமாறினான் அவன். பேசவேண்டும் என்பதற்காக ``எது வேணும் மேடம்’’ என்றான்.

எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள் அவள். குழப்பமாக சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் போர்வைகளை மீண்டும் அடுக்கி மூட்டையில் வைக்கத் தொடங்கினான். தனக்குப் பிடித்தமான போர்வையை முதலாக வைத்தான். விரிப்புகளை மடிப்புகளின் வசம் மாறாமல் அடுக்கி சேலைத் துணியை விரித்து மேலே பரப்பி, அதன் விளிம்புகளை இறுக்கினான். மூட்டைகளைத் தூக்குவதற்கு வசதி செய்து கொண்டிருந்தவனை “ஏண்டாப்பா” என அழைத்தாள் மங்களத்தம்மாள். “ஹண்ட்ரட் கூட கம்மி பண்ணிக்கலாம் மேடம்” என்றான் எழுந்தபடி. அவளுடைய கையில் சிறிய பாலித்தீன் கவர் இருந்தது. அவளே அதனைத் திறந்து உள்ளிருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை உருவினாள். மங்கிய வெள்ளையில் இன்னும் வெள்ளியாகவே இருந்த அதை அவனிடம் நீட்டினாள். “ஆம்பள பையன் அர்ணாக்கயறு இல்லாம இருக்கக்கூடாது. கட்டிவிடு” என்றாள். மறுத்தவனின் கைகளில் திணித்தாள். அவனுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தலையைச் சாய்த்துப்பார்க்கும் குழந்தையைத் தூக்கி “தேங்க்ஸ் போலோ” என்றான். அது வேகமாய் தலையைத் திருப்பிக்கொண்டது. மேலதிக முயற்சிகளும் பலனிக்கவில்லை. அதன் முதுகில் விரல்களால் தடவியவாறே “இவன் அம்மா எங்க?” என்றாள். வீட்லே இருக்கு என்றபடி குழந்தையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டான். விடைபெறுதலின் தருணங்கள் மிக மெதுவாகவே நிகழ்கின்றன. அவன் விசில் இருந்த அதே பாக்கெட்டில் பாலித்தீன் பையைப் பத்திரப்படுத்திக்கொண்டான். தூக்குவதற்குத் தயாராக இருந்த மூட்டைகளை எடுத்துத் தலையில் வைத்தான். சிறிய புன்னகையின் இறுதியில் நடக்கத் தொடங்கினான். தோள்பட்டையில் கன்னமழுத்திப் படுத்திருக்கும் குழந்தையைப் பார்த்தபடியே இரும்பு வளையத்தை `டங்’கென்று அடித்தாள் அவள். முயல்குட்டிபோல வேகமாய்த் தலையைத் தூக்கிப் பார்த்துச் சிரித்தது குழந்தை.