Published:Updated:

சிறுகதை: ஏந்திழையாள் பூந்துகிலாம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

நர்சிம்

நான் தேடி வந்திருக்கும் என் நண்பன் ரகு இப்பொழுது சாதாரண நண்பன் ரகு மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ரகு. கேமரா வைத்துப் படம் எடுக்கிறார்களோ இல்லையோ, ரகுவின் பாடல்வரிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடவேண்டும் என்ற நிலை. சமீபமாக, நான்கைந்து ஆண்டுகளில்தான் இந்தப் புகழின் உச்சியை எட்டியிருக்கிறான். ஆனால், அவன் ஊரை விட்டு வந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆரம்பத்தில் அவன் என்ன ஆனான், எப்படி இருக்கிறான் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வப்போது ஊருக்கு வருவான். ஏதோ கம்பெனியில் வேலையில் இருப்பதாகச் சொல்வான். அவ்வளவுதான்.

இப்போது நான் ஏதோ உதவி கேட்டு அவனைத் தேடி வந்திருப்பதுபோலவும், அவன் என்னை மதிக்காமல் திருப்பி அனுப்பிவிடப்போவதாகவும், நான் என் ஏழ்மையை நொந்துகொள்ளப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு படிக்காதீர்கள். அதெல்லாம் இல்லை. ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்க நொடியிலும் ரகுவும் நானும் சபியாவும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து இருப்போம். அது அப்படியே எங்கள் கல்லூரிக்காலக் காற்றோடு போய்விட்டது. அல்லாப்பிச்சை இந்தப் புத்தாண்டு முடித்து வெளிநாடு செல்கிறான். அதனால் ரகுவோடு, சென்னையில் எங்களின் கல்லூரிக்காலம்போல் கொண்டாட வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறான். அதைவிடவும் முக்கியமாக, சபியா ரகுவைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது எனச் சொன்னதுதான், நான் ரகுவைத் தேடிவரக் காரணம்.

எங்கள் பள்ளி, கல்லூரி காலத்தை வசந்தமாக மாற்றியதில் ரகுவிற்குப் பெரும்பங்குண்டு. புகழ்பெற்ற எல்லாப் பாடல்களையும் அவன் மாற்றிப்பாடுவான். வகுப்பறை பெஞ்சில் தாளம்போட்டு அவன் பாட ஆரம்பித்தால் மற்ற மேஜர் பையன்களும் ஆஜர் ஆகிவிடுவார்கள். ஆனால், முதல் இரண்டு தாளத் தட்டுகளில் பெண்கள் பிடுங்கி அடித்து ஓடிவிடுவார்கள். ஏனெனில், அவன் அந்தப் பாடல்கள் மெட்டுக்கு ஏற்றாற்போல் சொற்களை மாற்றி, கெட்ட கெட்ட வார்த்தைகளாக ஆனால், அதே ஸ்ருதி தாள லயத்தில் அந்தச் சொற்களைப் பொருத்திப் பாடுவான். செந்தமிழ் தேன் மொழியாள் பாடலை எல்லாம் அவன் பாடி டி.ஆர். மகாலிங்கம் கேட்டார் எனில், கொலை செய்துவிடுவார் அல்லது தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

சிறுகதை: ஏந்திழையாள் பூந்துகிலாம்

எந்தப் புள்ளியில் ரகுவின் தொடர்பு முற்றாக அறுந்தது என எவ்வளவு யோசித்துப்பார்த்தும் விடை கிடைக்கவில்லை. சில நிகழ்வுகள் அப்படித்தான். கனவிலும் நினைத்துப் பார்த்திராதவையெல்லாம் தன்னியல்பில் நடந்தேறியிருக்கும். இவ்வளவு ஏன், ரகு இப்படிப் புகழ்பெற்ற ஒருவனாய்த் தமிழ்நாட்டில் வலம்வருவான் என்பதே நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்றுதான். ஆனால், இப்படி பாஸ்பரஸ் குண்டுகள் சிதறியதுபோல் உருண்டு ஒட்டாமல் ஓடிப்பிரிவோம் என எந்நாளும் நினைத்ததே இல்லை.

ரகுவின் முகவரி கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாகவெல்லாம் இல்லை. சென்னை, சாலிக்கிராமம், தசரதபுரம் எனக் குத்துமதிப்பாக விசாரித்து வந்துவிட்டேன். சினிமாக்களில் காட்டுவது போல் நீண்ட மதில்சுவர்; அதில் ‘கவிஞர் ரகு’ எனப் பெயர் பதித்த மார்பிள், அதற்கு அருகில் இந்தியில் தமிழ் பேசும் கூர்க்கா, ‘ச்சலோ’ என என்னை விரட்டி அடிப்பான் போன்ற எவ்வித இத்தியாதிகளும் இல்லாமல் மிக எளிமையாக இருந்த அந்த வீட்டின் வாசலில் கைலியை மடக்கிக் கட்டிக்கொண்டு வாசலில் இருந்த முருங்கை மரத்தின் தண்டுப்பகுதியில் கை வைத்து மேலே ஏறப்போகும் உத்தேசத்தில் நின்றிருந்தான் ரகு. உள்ளுணர்வு உந்தத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் ஆச்சர்யம் விரிந்ததை உணர முடிந்தது. அருகே ஓடிவந்து என் உடமைகளை வாங்கிக் கொண்டான்.

“அட, என்ன மாப்ள திடீர்னு?”

“எப்பிடிக் கண்டுபிடிச்சு வந்தேன்னு கேள்றா மயிரு.”

அதுவரை சதா பேசிக் கொண்டே வந்த கால்டாக்ஸி ஓட்டுநர் இப்போது வாயடைத்து நிற்பது தெரிந்தது. பிரபலமானவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் எனும் கர்வம் கொண்டு ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ரகுவைப் பின்தொடர்ந்தேன். ஆனால், நமக்குத் தெரிந்தவர்கள் பிரபலமா கிவிட்டால் மட்டும் மனம் அவ்வளவு எளிதில் ஏற்க மறுக்கிறது. அப்படித்தான் எனக்கு எங்கள் ரகு பிரபலம் என்பது இன்னமும் ஐயம்திரிபற மனதிற்புகவில்லை.

சிறுகதை: ஏந்திழையாள் பூந்துகிலாம்

வெகு எளிமையான இரண்டு பெட் ரூம்கள் கொண்ட வீடு. சிறிய சமையலறை. ஓர் ஆள் நின்று சமைக்கலாம் என்பதுபோலான அமைப்பு. தரையெங்கும் துணி, காகிதங்கள், படுக்கை, அதன்மீது முதலைவாயைப் பிளந்த நிலையில் இருப்பதுபோல் லேப்டாப். சுவரெங்கும் விதவிதமான புகைப்படங்கள். புகழ்பெற்ற இயக்குநர்களோடு, தனியாக என. இவன் தனியாக இருந்த படங்களிலெல்லாம் பேனாவைப் பிடித்து ஆகாயம் பார்த்தபடி இருந்தான்.

“என்னடா இதெல்லாம்?”

கண் அடித்தான்.

எதிரிலிருந்த டீக்கடையின் மசாலா டீயின் சுவை சொல்லியது அந்த மாஸ்டர் ரகுவின் ரசிகன் என.

அவ்வளவுதான். இருவரும் சிரிக்கத் தொடங்கினோம்.

எங்கு விட்டோமோ அங்கிருந்தே அவ்வளவு இயல்பாகத் தொடங்கினோம். அப்படி அது எல்லோரிடமும் செல்லுபடி ஆகாது. ரகுவின் ட்ரேடு மார்க் இழுவையில் ஆரம்பித்தான்

“அப்பறம் மாப்ள...”

நடுவில் கடும்பாறையென இருந்த ஆண்டுகள் அத்தனையும் அந்த `அப்பறம் மாப்ள’வில் கரகரவெனக் கரைந்து கல்லூரிக்குள் போய்விட்டோம், எளிதாக.

“நீதாண்டா சொல்லணும் ரகு, உன் பாட்டக் கேட்காத ஆளே தமிழ்நாட்ல இல்லன்னு ஆகிருச்சு. செமல்ல...”

எதிரிலிருந்த டீக்கடையின் மசாலா டீயின் சுவை சொல்லியது அந்த மாஸ்டர் ரகுவின் ரசிகன் என. அவ்வளவு ருசி. இஞ்சியும் ஏலக்காயும் மணம். அஸ்வகந்தா அதிமதுரம் இருந்ததா எனத் தெரியவில்லை. அவை என்னவென்றே தெரியாததும் காரணம்.

ரகு டீயைக் குடித்துக்கொண்டே சிரித்தான். சிரித்துக்கொண்டே குடித்தான்.

“ஆரம்பிச்சிட்டியா சிரிக்க. ஒண்ணு சொல்லிட்டு சிரி, இல்ல சிரிச்சிட்டு சொல்லு.”

ரகு இன்னும் மாறவில்லை. அவனால் சிரிப்பை அடக்கவே முடியாது. ஒருமுறை ஏதோ ஓர் அவசரமான அலுவலகக் கோப்பு ஒன்றை என் தந்தை அவரோடு வேலை பார்த்த, நீண்ட விடுப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்தி சாரிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார். ரகுவோடு போனதுதான் நான் செய்த தவறு. வெகுநேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை என்ற சலிப்போடு நிற்க, அவ்வளவு அழகான, அவரின் மகள் வந்து கதவைத் திறந்தாள். கண்டதும் காதல்தான். வேறு வழியை விட்டுவைக்கவில்லை அவளின் அழகு. ரகுவும் ஸ்தம்பித்துத்தான் போனான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அந்தப் பெண் கதவைத் திறந்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

நாங்கள் பின்தொடர்ந் தோம். ஹாலில் நின்றிருந்த அவள் அம்மா எங்களை வரவேற்றார். அப்பா போனில் முதலிலேயே சொல்லியிருப்பார் போல. ஹாலின் ஓரத்தில் இருந்த டேபிளின் மீது இருந்த ஃபைலை எடுத்துக் கொடுக்கப் போனார். ரகு சட்டென சுதாரித்துத் தண்ணீர் கேட்டான். அவன் நோக்கம், உள்ளே சென்ற மகளை மீண்டும் பார்ப்பது. எனக்கும் அந்த ஆவல் இருந்தாலும் அப்பாவின் நண்பர், போகவும் மிகுந்த கோபக்காரர் இந்தக் கிருஷ்ணமூர்த்தி சார். இரண்டொருமுறை அப்பாவோடு பார்த்திருக்கிறேன். ஒல்லியான தேகம், ஆனால் அதட்டித்தான் பேசுவார். குறிப்பாக, படிப்பு குறித்து நோண்டி நோண்டிக் கேட்பார். ஏதாவது சேட்டை செய்தால் நேராக அப்பாவிற்குப் போய்விடும். ரகுவைக் கண்களால் எச்சரித்தேன். அவன் கண்டுகொள்ளவில்லை. அந்த அம்மாள் தன் தவற்றை உணர்ந்து, விருந்தோம்பும் விதமாய் நீரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். அதுவரை எல்லாமும் சரியாகத்தான் போனது. நான் பண்பாடு கலாசார நேர்த்தியோடு கேட்ட கேள்விதான் வினை. “சார் இல்லையாக்கா?”

உடனே எங்களை அந்த அறைக்கு அழைத்துச் சென்றார். ரகு என் காதில் கிசுகிசுப்பாக, அந்தப் பெண்ணும் அந்த அறைக்குள்தான் நுழைந்தாள் என்ற தகவலைச் சொன்னதும் நான் இயல்பாக இருப்பதுபோல் தலைமுடியை சரிசெய்து கொண்டு நுழைந்தேன். ரகுவும் வந்தான்.

அங்கே ஒரு நாற்காலியில் கிருஷ்ணமூர்த்தி சார் அமர்ந்திருந்தார் அல்லது அமர்த்திவைக்கப் பட்டிருந்தார். கைகளை நேராக நீட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். காலையும் சற்றுக் குறுக்கி அமர்ந்திருந்தார். உடலில் அவ்வளவாக அசைவில்லை, தலையை மட்டும் நிமிர்த்தி எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

சிறுகதை: ஏந்திழையாள் பூந்துகிலாம்

“சாருக்கு என்னாச்சு” என நான் கேட்க,

“புகைக்கூண்டுல இருந்து விழுந்துட்டாரு” என அந்த அம்மாள் சொல்லி முடிக்கும்முன்பே ரகு சிரிக்கத் தொடங்கிவிட்டான். அவன் சிரிக்கத் தொடங்கியதும் கோபமும் பயமும் என்னைக் கவ்வ ரகுவை முறைத்தேன். ஆனால், அவன் கொஞ்சம் கொஞ்சமாக அடக்க முயன்று தோற்று, சிரித்துக் கொண்டே இருந்தான். ஒருமுறை அவரைத் திரும்பிப் பார்த்தேன். அனிச்சையாக மேலே நிமிர்ந்து புகைக்கூண்டைத் தேடினேன். சிரிப்பு வந்துவிட்டது எனக்கும். அவ்வளவுதான். அவர்கள் மூவரும் எங்களை எரித்துவிடுவதுபோல் பார்க்க, சமாளித்து ஃபைலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டோம்.

“புகைக்கூண்டுக்குள்ள எதுக்குடா போனான் அந்தாளு?” அவ்வளவுதான். குடித்த தண்ணீர் புரை ஏற சிரிப்பு.

“அந்தப் பிள்ள நல்லா சைன் போட்டுச்சு மாப்ள, நீ சிரிச்சு காரியத்தைக் கெடுத்துட்ட” என்றேன். ரகு அவர் புகைக்கூண்டில் நுழைந்து கீழே விழுந்து, விழும்போது கத்தியவிதம் என அத்தனையும் அக்குவேறு ஆணிவேறாக சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சொன்னதுபோல் சிம்புத்தேவன் வரைந்த கார்ட்டூன் போலத்தான் இருந்தார் அந்த மேற்படி கோபக்கார கிருஷ்ணமூர்த்தி சார்.

நானும் எதையோ நினைத்துச் சிரிப்பதை உணர்ந்த ரகு, “இன்னொரு மசாலா டீ சொல்லவா மாப்ள?” என்றதும், வேண்டாம் எனத் தலையாட்டி சகஜ நிலைக்கு வந்தேன்.

“ஏண்டா இவ்ளோ ஃபேமஸ் லிரிசிஸ்ட் ஆகிட்ட, ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கியே, என்னா மேட்டரு? இல்ல பணத்த மொத்தமா பேங்க்குல போட்டு வெச்சிருக்கியா... மொத்தமா போயிரும்டா, பார்த்துக்க.”

ரகு சிரித்தான்.

“அவ்ளோலாம் சம்பாதிக்க முடியாதுடா, இதென்ன மாசா மாசாம் வர்ற சம்பளம் மாதிரியா? ஒரு பாட்டுக்கு இவ்ளோன்னு, அதுவும் பாதிக்குப் பாதி பழக்கத்துக்கு, மீதில பாதிப் படம் வந்ததான்னு போயிரும். ஆனா டெய்லி மீட்டர் ஓடிட்டே இருக்கும் ஜாலியா. அதான் வயசு இருக்குல்ல. மெதுவா சேர்த்து வைப்போம்.”

“அதுவும் சரிதான். ஒரு கல்யாணத்தப் பண்ணிக்க, வர்றவ சேர்த்துருவா... சரி அத விடு, நம்ம அல்லாப்பிச்ச கல்ப் போறான். அதுனால இந்த நியூ இயர்க்கு முந்தி நம்ம சிட்டிங்க போடுவமே, அதே மாதிரி பண்ணுவோம்னு சொன்னான். எனக்கும் ரெண்டு மூணு வருசமாவே மனசப் போட்டு ஒலப்பிட்டு இருந்துச்சு, சரின்னு கெளம்பி வந்துட்டேன். என்ன சொல்ற?”

கண்களில் அச்சம்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன் மாப்ள, அதுனால மச்சம்னு ஒக்கார வெச்சது தப்பாப்போச்சு.

ரகு தலையாட்டிக் கொண்டே மொபைலை எடுத்து “எப்ப வருது?”

“ம்ம்... ஒண்ணாந்தேதிதாண்டா யப்பா டேய் கவிஞா...”

“அதில்லடா, புதன்கிழம,” என அவனாகவே ஏதோ முணுமுணுத்து, “நான் அன்னிக்கு பாம்பேல...”

அவன் முடிக்கும் முன்னர் நான் சொன்னேன் “சபியும் வர்றா.”

ரகுவின் கண்கள் ஒருமுறை என்னை மின்னல்வெட்டியது போல் பார்த்தன.

எனக்குத் தெரியும் அவன் வாயிலிருந்து அடுத்து வரும் சொற்கள் ‘என்னடா சொல்ற...’ என்பதே. அப்படியே அதே ஏற்ற இறக்கத்தோடு கேட்டான்,

“என்னடா சொல்ற?”

“ஆமா ரகு, உன் கவிதைப் பேப்பர உன் முகத்துல கிழிச்சுப் போட்டாளே, அதே சபியா பேகம்தான்.”

என அண்னாமலை ரஜினி குரலில் நான் சொல்ல, சிரித்தான்.

“நான் பண்ணதும் தப்புதான, கன்னத்து மச்சம் உன் கண்களின் அச்சம்னு” எழுதி நீட்டிட்டேன், அவ ஒரு நாள் ராத்திரி பூராம் கண்ணாடியப் பார்த்துட்டு, என் மூஞ்சில மச்சமே இல்ல எவள நெனச்சு எழுதுனேன்னு பஞ்சாயத்தக் கூட்டிட்டா, கண்களில் அச்சம்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன் மாப்ள, அதுனால மச்சம்னு ஒக்கார வெச்சது தப்பாப்போச்சு.”

பாடலாசிரியர் மொழியில் சொல்லிச் சிரித்தான்.

ஒருநாள் மதியம் வழக்கம்போல் டெலிபோன் மணிபோல் பாடலைக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு மாற்றிப் பாடிக்கொண்டிருந்தான் ரகு. நாங்கள் சுற்றிலும் தாளம் தப்பட்டை என அதகளப் படுத்திக்கொண்டிருந்தோம். திடீரென, யாரோ கதவை ஓங்கி அடித்து சத்தம் எழுப்ப, நாங்கள் பயந்து திரும்பிப் பார்த்தோம். ஒரு பெண், தன் பெற்றோருடன் நின்றிருந்தாள். அந்தப் பெற்றோரின் முகத்தில் கோபமும், வருத்தமும் அதைவிட அதிக அளவில் பயமும் கலந்து, எங்களை அசூசையாகப் பார்த்தார்கள். அவ்வளவு கெட்ட வார்த்தைகளைக்கொண்டு இட்டுக்கட்டி தன்னை மறந்து ரகு பாடியதே காரணம்.

அவர் தயங்கித் தயங்கி, “ட்ரான்ஸ்ஃபர்ல வந்துருக்கோம். எம் பொண்ணு இங்க ஜாயின் பண்ணியிருக்கா, மத்த பொம்பளப் பசங்க எல்லாம் எங்க?” எனக் கேட்டார்.

நான் நிலைமை உணர்ந்து அவரிடம் சென்று அது மதிய உணவு நேரம் என்றும், பெண்கள் அமரும் இடத்தையும் காட்டி, அந்நொடியின் விக்கிரமன் பட நாயகனாகி, அப்பெண்ணின் பெயர் சபியா என அறிந்து, பயப்பட எதுவும் இல்லை எனத் தைரியம் கொடுத்து, எங்கள் வகுப்பிற்கு ஓடோடி வந்து, அவள் பெயர் சபி என்றும் என்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள் என்றும் அறிவித்துவிட்டேன். கூடவே, இனி ரகுவை இப்படியெல்லாம் பாடும் வேலையை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்டளை இட்டுவிட்டேன்.

அவள் இரண்டே நாள்களில் ரகுவிடம் அவன் குரல் அற்புதமாக இருப்பதாகவும், கெட்ட வார்த்தைகளுக்குப் பதில் அதே பாடல்வரிகளையோ அல்லது வேறு சொற்களையோ போட்டுப் பாடினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறாள். இது எதுவும் தெரியாமல் நான் ஒட்ட முடிவெட்டி சலூன் அன்புவிடம் கிரீம் போடச்சொல்லி முகத்தைப் பளபளப்பாக்கும் முயற்சியில் இருந்தேன். கிடைத்தது முகம் என அன்புவும் விட்டு வெளுத்துக்கொண்டிருந்தார் என் கன்னத்து எலும்புகளை.

“என்னா மாப்ள ஒரே கோட்டிங்கா இருக்கே, என்னா விவரம்?” என்னைத்தேடி சலூனுக்கே வந்துவிட்டிருந்த ரகு நக்கலாகக் கேட்க, அன்பு ரகுவிடம் “அதெல்லாம் இனி அப்பிடித்தான், ஆளு ஆஸ் பண்றாரு இல்ல” என்றதும் நான் பதறி உதறி அதெல்லாம் இல்லை என்பதுபோல் ரகுவைப் பார்த்தேன். அவன் காதலின் தீபமொன்று ஏற்றினாளே ரஜினிபோல் நின்றிருந்தான்.

ரகு, சபியாவிற்காக உயிரையே விடும் நிலையில் இருந்தான். பம்பாய் அரவிந்த்சாமியாகவே வலம் வந்தான். ‘உயிரே’ பாட்டை அவன் கெட்டவார்த்தை இல்லாமல் அப்படியே பாடிக்கொண்டு திரிந்தான். நாங்கள் ‘தயிரே தயிரே...’ எனக் கேலி செய்வோம். சபியும் அவனோடு நன்றாகத்தான் பழகினாள். புத்தாண்டு அன்று திருப்பரங்குன்ற மலை உச்சிக்கு நான், அல்லாப்பிச்சை, சபி, ரகு என நால்வரும் போனோம். அங்கு சிறிய மசூதியும் இருக்கிறது. கீழே புகழ்பெற்ற முருகன் கோயில்.

என்

இதயரோஜா

உனக்காக முட்கள் இல்லாமல்

முட்களால் முகவரி எழுதுவதும்

சூடிக்கொள்வதும் உன் இஷ்டம்

என ஏதேதோ கவிதைகள் எல்லாம் எழுதிவைத்திருந்த நோட்டை ரகு சபியிடம் கொடுத்தான்.

அல்லாப்பிச்சை அங்கிருந்த தர்காவிற்குள் நுழைய, சபியா வாயைப் பிளந்து அவன் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தாள். என் மனதில் இருவரையும் அங்கிருந்து எட்டி உதைத்து உருட்டிவிட்டால் எப்படிக் கத்திக்கொண்டே விழுவார்கள் எனும் கற்பனை ஓடியது. அப்படியே வருடங்கள் சில உருள, ரகு சென்னைக்கும் மதுரைக்கும் என வந்து போய்க்கொண்டிருந்தான். சரியான வேலை அமையவில்லை, சபியா பேகத்திற்கு அவளுடைய சொந்தத்தில், சாதிக்குடன் திருமணம் செய்து வைத்தார்கள். ரகுவும் நானும் அவள் திருமணத்தில் உணவுப் பந்தி பரிமாறிய போது,சபியா தன் புதுமாப்பிள்ளையோடு சாப்பிட வந்து அமர, ரகு ஒரு கணம் திகைத்து நின்று என்னைப் பார்த்த நொடி இன்றும் என் கண்ணில் அப்படியே உள்ளது.

நாங்கள் சிரித்த சிரிப்பில் புத்தாண்டு குலுங்கிக்கொண்டு உற்சாகமாய் வந்தது. டிவியில் ஹேப்பி நியூ இயர் என கமல் பைக்கைக் கிளப்பினார்.

சபியா, அவளின் மூன்று வயதுப் பெண் குழந்தை, அல்லாப்பிச்சை, நான் என ரகுவின் வீடு புத்தாண்டைக் கொண்டாடும் வண்ணம் ஜொலித்தது. ரகு தன் திரைத்துறை நண்பர்களின் உதவியோடு வீட்டை எங்களுக்காக நன்றாக அலங்கரித்திருந்தான். நாங்கள் இருந்த பழைய புகைப் படங்களைப் பெரிதுபடுத்தி ஹாலில் மாட்டியிருந்தான்.

சபியா நேயர் விருப்பமாக ரகுவை டெலிபோன் மணிபோல் பாட்டை கல்லூரியின் முதன்நாள் போல் இட்டுக்கட்டி பாடச்சொன்னாள். ரகு கெட்டவார்த்தைகளில் பாட முடியாமல் வெட்கப்பட்டான். நாங்கள் சிரித்த சிரிப்பில் புத்தாண்டு குலுங்கிக்கொண்டு உற்சாகமாய் வந்தது. டிவியில் ஹேப்பி நியூ இயர் என கமல் பைக்கைக் கிளப்பினார்.

சிறுகதை: ஏந்திழையாள் பூந்துகிலாம்

ரகு ஒரு பாடலாசிரியன் தொனியில் “இந்தப் பாட்ல ஹேப்பி நியூ இயர்ன்ற வார்த்தையத் தவிர பாட்டு ஃபுல்லா கமல் புகழ் பாடுறதாத்தான் இருக்கும். நியூ இயர் பத்தி ஒரு சொல்கூட இருக்காது. ஆனா, நியூ இயர்னா இந்தப் பாட்டுன்னு ஆயிருச்சு பார்த்தியா?” என்றான். ‘அட ஆமாம்’ என்பதுபோல் கவனித்தேன்.

பாட்டு எழுதுறதுங்குறது அந்தப் புகைக்கூண்டுல விழுந்தாரே ஒங்க அப்பா ஃப்ரெண்டு, ஞாபகம் இருக்கா, அதுமாதிரிதான் மாப்ள. இத்துணூண்டு புகைக்கூண்டு, உள்ள ஒடம்பக் குறுக்கிட்டமாதிரி, ஒவ்வொரு சொல்லையும் குறுக்கி செதுக்கின்னு மெட்டுக்கு எழுதணும். கேட்க ஈஸியா இருக்கும் பாட்டுல்லாம் என்னைய மாதிரியான ஒருத்தனோட ஒவ்வொரு துளி உயிர் அது. ஆமா, சரியான சொல் வராம செத்துப் பொழச்சு உளைச்சல் ஆகி, அந்தப் பாட்டு முடிஞ்சதும் ஒரு விடுதலை வரும் பாரு. அதுல இன்னும் கொடுமை என்ன்னா ஸ்கூல்ல படிச்ச மனப்பாடப்பாட்டு சொல் ஏதாவது மனசுல சுத்தும். அத கரெக்ட்டா ஒக்கார வைக்கணும். இப்பக்கூட ஏந்திழையாள் பூந்துகிலாம்னு நம்ம தமிழம்மா சொன்ன செய்யுள் வரியை எங்க சொருகுறதுன்னு யோசிச்சுக் கிட்டு இருக்கேன். ஆனா, வர்ற சிச்சுவேஷன் எல்லாமே ப்ளாஷ்டிக் பூவே பார்ட்டித் தீயே ரேஞ்சுலதான் இருக்கு... இது ஒரு நச்சுப்பூ மாப்ள.”

நான் சிரித்தேன். ரகு, “ஓ! இப்ப அந்தப் புகைக்கூண்டு உன் மாமனார் இல்ல” என மீண்டும் அந்தச் சூழலுக்குப் போக எத்தனித்தான்.

“அப்போ இவனுங்க போனதுக்கு அப்புறம் வெட்கப்படாம அந்தக் கெட்டவார்த்தைப்பாட்ட பாடிக் காட்டணும்,

சட்டென அவனுடைய அவ்வளவு உற்சாகமும் வடியும்படி சபியா கேட்டாள்,

“சரிடா, நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

ரகு ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் பதில் சொன்னான்.

“நல்லவேள, பண்ணிக்கல சபி. இதோ, நீ புருசன் இல்லாம குழந்தையோட இருக்க, நான் உங்கிட்ட இங்கயே இருந்துரு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்குறதுக்காகவே பண்ணிக்காம இருந்திருக்கேன்னுகூட வெச்சுக்கோயேன்.”

எனக்கும் அல்லாப்பிச்சைக்கும் நிலைமையின் கலவரம் புரிய, திகிலாக சபியைப் பார்த்தோம்.

அவள் ரகுவிடம், “அப்போ இவனுங்க போனதுக்கு அப்புறம் வெட்கப்படாம அந்தக் கெட்டவார்த்தைப்பாட்ட பாடிக் காட்டணும், சரியா?” என்றாள்.

ரகு சிரிக்கத் தொடங்கினான். இனி சிரித்துக்கொண்டே இருப்பான்.

அல்லாப்பிச்சை சபியைப் பார்த்து சொன்னான்,

“ஹேப்பி நியூ இயர் சபியா”

டிவியில் ‘இளமை இதோ இதோ...’ பாடலின் ஊடாகத் தெருவில் வெடிச்சத்தமும் ஹேப்பி நியூ இயர் சத்தங்களும் கேட்கத் தொடங்கின.