கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நான்கிலொரு பாகம் - சிறுகதை

நான்கிலொரு பாகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
நான்கிலொரு பாகம் - சிறுகதை

- மு.குலசேகரன்

தொலைவிலிருந்து பறையடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்டது. திருப்பித் திருப்பி “சா, சா” என்று சொல்வதைப் போலிருந்தது. அது குன்றுகளில் எதிரொலித்து எங்கும் மரணம் வியாபித்திருப்பதாகத் தோன்றியது. எங்கள் வாகனம் சாலையிலிருந்து மண் பாதைக்குத் திரும்பியது. இருமருங்கிலும் ஊமத்தையும் கருவேலமும் கவிந்திருந்தன. சிறிது தூரம் சென்றதும் குடிசைகள் தென்பட்டன. அப்பால் ஊர் முழுதாக மாறியிருந்தது. பெரிய ஏரிக் கால்வாய் பாதி தூர்க்கப்பட்டிருந்தது. கரையில் ஓட்டு வீடுகளும் கட்டடங்களும் முளைத்திருந்தன. இரண்டாவது தெருவில் சீரான தாளத்துடன் மேளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பூவரச மரத்தடியில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். முதல் வீடு இன்னும் கட்டிமுடிக்கப்படாமல் சொரசொரப்பான தூண்களுடனும் சுவர்களுடனுமிருந்தது. வாசலெதிரில் துணிப்பந்தலின் கீழே குளிர் சவப் பெட்டி கிடத்தப்பட்டிருந்தது.

நானும் மனைவியும் சற்று தூரத்தில் வாகனத்திலிருந்து இறங்கிக்கொண்டோம். கையில் ரோஜா மாலை வேகமாக உதிர்ந்துகொண்டிருந்தது. இன்னும் சத்தமாகப் பறையொலி வீறிட்டது. அதற்கேற்ப நெஞ்சு அதிர்ந்தது. எனக்கும் சடலத்துக்கும் இடைவெளி ஒவ்வொரு அடியாகக் குறைந்தது. செருப்புகளைக் கழற்றிவிட்டு பிணப் பெட்டியை நெருங்கினோம். பெண்கள் கூட்டத்தில் தனித்த கேவல் எழுந்தது. அது இரண்டாம் அக்காவின் கம்மிய குரல். குளிர்ப்பெட்டிக் கண்ணாடி வழியாகக் கடைசி அக்காவின் உடல் மங்கித் தெரிந்தது. கூரிய நாசி, அழுத்தமாக மடிந்த உதடுகள், நீள மோவாயுடன் எங்கள் குடும்ப முகம். முழுக்க அப்பாவைப் போன்றது. எனது அழுகை அடக்கமாட்டாமல் பீறிட்டது. வாயை இறுக மூடிக்கொண்டேன். அப்படியும் சிறு சத்தம் வெளிப்பட்டுவிட்டது. என்னையறியாமல் கண்ணீர் கன்னங்களில் குளிர்ச்சியாக வழிந்தது. மனைவி மெல்ல என் தோள்களைத் தொட்டாள். அக்காவின் முகத்தை மறைக்காதவாறு மாலையை கண்ணாடி மேல் விரித்தேன். குளிர்ப்பெட்டியை ஒட்டி நின்று பார்த்தேன். மஞ்சள் புடவையுடன் ஒல்லியான தேகம். கைகளைக் கோத்து ஆழ்ந்து உறங்குவதைப்போலிருந்தது. என் வருகையை உணர்ந்து உதடுகள் பிரியாமல் என் பெயரை மெதுவாக உச்சரித்தாள். வழக்கம்போல் அர்த்தமும் அன்னியோன்யமும் கலந்த விசாரிப்பு. நானும் எப்போதும்போல் தலையசைத்தேன். அவள் புன்னகையுடன் மீண்டும் உறங்கத் தொடங்கினாள். அவளுக்குத் தொந்தரவு தர விரும்பாமல் திரும்பி நடந்தேன். பெண்கள் கூட்டத்தில் மனைவி சென்று உட்கார்ந்தாள். ‘என்னை மன்னிச்சுடு’ என்று மனதுக்குள் அக்காவிடம் வேண்டினேன், அவள் அதை ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டாளெனினும்.

நான்கிலொரு பாகம் - சிறுகதை

இறந்த அக்காவின் கணவர் முருகேசன், வாசலெதிரில் தலைகுனிந்து நின்றிருந்தார். என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரெனத் தோன்றியது. அவர்தான் அதிகாலையில் என்னை எழுப்பி கைப்பேசியில் சாவுச் செய்தியைத் தெரிவித்திருந்தார். இருபது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கிறேன். அவரிடம் நிறைய மாற்றங்கள். பின்னால் அழுத்திச் சீவப்பட்ட தலைமயிர் முழுதாக வெளுத்திருந்தது. ஓடிக்கொண்டேயிருந்ததன் அடையாளமாய் கண்கள் சோர்ந்திருந்தன. சட்டையின் மார்பில் லேசாக மசகுக் கறை படிந்திருந்தது. அவருடைய காய்ப்பேறிய கைகளைப் பற்றினேன். அழுகையில் தழுதழுத்தபடி ‘‘இப்படி விட்டுப் போயிட்டாளே’’ என்றார். அவருக்குப் பதில் நான் ஆறுதலளிப்பதாகிவிட்டது. அழுத்திய சுமை சற்றுக் குறைந்தது போலுணர்ந்தேன். ‘‘அவளுக்கு நோய் முத்தி சாகப்போறது முன்னாடியே தெரிஞ்சுட்டது. ஊர் திரும்பலாம்னு சொல்லிட்டா. இங்க வந்ததும் உயிர் அடங்கிடுச்சு’’ என்றார். என் கண்ணீர் மீண்டும் சுரந்தது. அவர் சற்று தூரத்தில் கைப்பேசியில் ஆழ்ந்திருந்த மகளை அழைத்தார். ‘‘இப்பத்தான் வேலையில சேந்திருக்கா’’ என்றார். என் இளம் வயது அக்காவைக் காண்பது போலிருந்தது. அவளும் கொழுகொம்பைப்போல் ஒல்லியாயிருப்பாள். ஆனால் அவள் கண்ணாடி அணிவதில்லை. சற்று நேரம் துக்கம் காப்பதைப்போல் நின்றிருந்தேன். ‘‘சரி, நடக்கவேண்டியதப் பாருங்க’’ என்றேன். அவர் கை காட்டிய பூவரச மரத்தடியிலிருந்த நாலைந்து நாற்காலிகளை நோக்கிச் சென்றேன். சிலர் கை கூப்பி வணங்கினார்கள். இளம் வயதுக்காரர் ஒருவர் எழுந்து இருக்கை தந்தார். நான் மறுக்காமல் உட்கார்ந்தேன். என் பெரிய அக்காக்களின் கணவர்கள் யாரும் அங்கில்லை. அவர்கள் எப்போதும் தங்கள் சாதிக் கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். முறுக்கு மீசை கொண்ட இரண்டாம் மாமா மிகப் பிடிவாதக்காரர். “என் மானம் போயிடும், நா சேரிக்கு வர மாட்டேன்” என்று சொல்லியிருப்பார். சித்தப்பாக்களும் ஒருவரும் வந்திருக்கவில்லை.

அவ்வப்போது பழுத்த பூவரச இலைகள் சுழன்று உதிர்ந்தன. தொலைவில் பந்தலும் கண்ணாடிப் பெட்டியும் சுற்றி பெண் உருவங்களும் மௌனப் படக் காட்சியைப் போலிருந்தன. மனைவியை அடையாளம் தெரியவில்லை. பெட்டியின் கீழே சிறு குன்றைப் போல் மலர் மாலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து நீர் கசிந்து கோடாகத் தெருவில் ஓடிக்கொண்டிருந்தது. மாலைகளுடன் ஆட்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் வரும்போதும் மேளம் தீனமாக எழுந்தது. ஒப்பாரி உரத்துக் கேட்டது. அங்கங்கே ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். தெருவோரமாக மூங்கில்களால் தேர்ப்பாடை வேகமாக உருவாகிக்கொண்டிருந்தது. பசும் தென்னை ஓலைக் கீற்றுகள் இணைத்துப் பின்னப்பட்டுக்கொண்டிருந்தன.

கடைசி அக்காவைச் சந்தித்தது முப்பது வருடங்கள் முன்னால் அந்தி வேளையில். அவள் காணாமல்போனது மதியம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. காலையும் மத்தியானமும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை. தோசையும் சோறும் கீரைக் குழம்பும் மீந்திருந்தன. சமைப்பதிலும் நெல் காயப்போடுவதிலும் ஆழ்ந்திருந்த அம்மாவுக்கு, அவள் எப்போது காணாமல்போனாள் என்று தெரியவில்லை. மகள் திரும்பி வந்துவிடுவாள் என்று அம்மா பூரணமாக நம்பினாள். அதையே மீண்டும் மீண்டும் சொன்னாள். முதலில் வீட்டுப் பரண், குளியலறை, கட்டிலுக்கு அடியில் தேடினார்கள். பூஜையறையில் பிரமாண்ட தானியக் குதிரைத் திறந்து பார்த்தார்கள். அக்காவின் தடயம் கிடைக்கவில்லை. சித்தப்பாக்களும் பெரிய மாமாக்களும் தங்கள் வீடுகளைச் சோதனையிட்டார்கள். பிறகு மற்றவர்கள் வீடுகளிலும் தேடினார்கள். அவள் டி.வி-யில் ஓயாது மூழ்கிக்கிடந்ததால் அம்மா திட்டினாள் என்று காரணம் சொன்னார்கள். ஊரையொட்டி கொல்லை மாட்டுக்கொட்டகையிலும், புளிய மரங்களுக்குப் பின்னாலும், உண்ணிப் புதர்களையும் ஆராய்ந்தார்கள். சின்னத்தம்பி தியானிப்பதைப்போல் கயிற்றுடன் வரப்பில் நின்றிருந்தார். அவர்கள் தேடுவதே அவருக்குத் தெரியவில்லை. எருமை நிதானமாக மேய்ந்துகொண்டிருந்தது. தூரத்து எல்லையம்மன் கோயிலின் இருண்ட கருவறையில் நெருப்புக் குச்சி கிழித்துப் பார்த்தார்கள். அருகில், அருகன் மலை மடியிலிருந்த பாறைகள், உயர்ந்த மரங்களையும் அலசினார்கள். அதற்கப்பால் செல்ல முடியாமல் மலை நீண்டிருந்தது. சித்தப்பா, வீட்டுக் கிணற்றைக் குனிந்து பார்த்தார். பின்னாலுள்ள மொட்டைக் கிணற்றையும் எட்டிப் பார்த்தார். அதில் பாசி மூடி தேங்காய் மட்டைகளும் ஓலைகளும் மிதந்துகொண்டிருந்தன. அவருடன் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு அர்த்தம் புரிந்து அடங்காத துக்கம் மேலிட்டது. இனி சின்ன அக்காவிடம் நான் கோபப்படவே முடியாது. கிணற்றடியில் உட்கார்ந்து சுயவிரக்கத்துடன் தேம்பினேன்.

மதிய வேளையில் வீடு, மரணம் விழுந்ததைப்போலாகிவிட்டது. வெளியில் பந்தல் போடாத குறை. தெரு, வாசல் முழுவதும் ஆட்கள் கூடியிருந்தார்கள். ஊரில் துக்கம் விசாரிப்பது கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கம். வீட்டைப் பூட்டிக்கொண்டு பெண்கள் அனைவரும் வந்திருந்தார்கள். சமையலறையில் அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதார்கள். தங்கள் வீட்டுப் பிரச்சினையாக நினைத்து ஆறுதல் கூறினார்கள். ‘‘அவ திரும்பி வருவாக்கா, ஒண்ணும் பயப்படாதிரு’’ என்றாள் சித்தி, மூக்கைத் துடைத்தபடி. பக்கத்து பெரியம்மா வீட்டிலிருந்து அனைவருக்கும் காபி வைத்துத் தந்தார்கள். இரண்டாம் அக்கா, வாயில் புடவைத் தலைப்பைத் திணித்துக்கொண்டு கதவோரம் தனியாக அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் ஏதோ ரகசியம் ஒளிந்திருந்தது. அதை முதலாம் அக்கா கண்டுபிடித்தாள். ‘‘கூட்டுக் களவாணிங்க’’ என்று அவள் மோவாயை இடித்தாள். இரண்டாம் அக்கா எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. இருவரும் கொல்லைப்புறம் தோய்க்கும் கல்லில் உட்கார்ந்து கிசுகிசுத்தார்கள். தங்கை ஒருவனுடன் ஓடிப் போயிருப்பாள் என்று இரண்டாம் அக்கா ஊகித்தாள். எழுந்து அலமாரியில் தேடிப் பார்த்தார்கள். இரு ஜோடி தங்கக் கம்மல்களும், வளையல்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அப்படியேயிருந்தன. பக்கத்தில் மெல்லிய டாலர் சங்கிலி சுருண்டிருந்தது. எப்போதும் சின்ன அக்காவின் கழுத்தில் தொங்குவது. எண்ணெய் பட்டு மங்கியிருந்தது. அம்மா எதையும் நம்ப மறுத்தாள். ‘‘என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்ல’’ என்று அனைவரும் கேட்குமாறு புலம்பினாள்.

நான்கிலொரு பாகம் - சிறுகதை

எனக்கு நினைவு தெரிந்து சின்னத்தம்பி எங்கள் கொல்லைக்குக் குத்தகைக்காரர். முப்பாட்டன் காலத்திலிருந்து அவர் குடும்பம் அதே வேலை செய்வதாக அப்பா சொல்லியிருந்தார். சின்னத்தம்பி சட்டையணிந்து பார்த்ததில்லை. தலைத் துண்டு, கோவணத்துடன் மாடு மேய்த்தும் நீர் கட்டிக்கொண்டுமிருப்பார். அவர் மனைவி தென்னை ஓலைகளை முடைந்தவாறிருப்பார். அவர்கள் பெரிய மகன் சிறு வயதிலேயே பொறியியல் ஞானத்தோடிருந்தார். நகரத்தில் மின்னணு வேலைகள் நிபுணருக்கு சிஷ்யனாகி இன்னும் கற்றார். ஆழ்கிணற்றில் தண்ணீர் இறைக்கும் எல்லா வகை மோட்டார்களையும் பழுது பார்த்தார். எங்காவது வயர்கள் பிரிந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடித்துவிடுவார். வீடுகளில் அழுதுகொண்டிருந்த குண்டு பல்புகளைக் கழற்றிவிட்டுக் குழல் விளக்குகளை மாட்டினார். பால் போன்ற வெளிச்சத்தைக் கண்டு வீட்டார்கள் பரவசமடைந்தார்கள். எல்லாப் புராதனக் கறுப்பு சுவிட்சுகளையும் பிளக்குகளையும் மாற்றினார். அவரைச் சேர்ந்தவர்களை வாசப்படியில் நிறுத்திய கதவுகள் அவருக்காகத் திறந்தன. சுற்றியுள்ள ஊர்களிருந்தெல்லாம் அழைத்ததால் அவர் மோட்டார் பைக் வாங்கினார். அதில் புகை கக்கியபடி பெருத்த சத்தத்துடன் போவது ஆச்சரியமாயிருந்தது. அவரைப்போல் வளர்ந்து பெரிய மெக்கானிக்காக ஆசைப்பட்டேன்.

முருகேசன்தான் ஊருக்கு டெலிவிஷனையும் வீடியோவையும் அறிமுகப்படுத்தினார். அவற்றின் மீது அனைவருக்கும் மோகம். முதன் முதலாக, திறந்த வெளியில், ஓரிரவில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை முருகேசன் காட்டினார். அவ்வப்போது காட்சிகள் நின்றபோது ஏதேதோ தந்திரம் செய்து ஓட வைத்தார். அவர் உண்மையான கதாநாயகனாகத் தோன்றினார். நானும் அக்காக்களும் அம்மாவும் நூற்றுக்கணக்கான தலைகளின் ஊடாகப் பார்த்தோம். நீண்ட கனவைப் போலிருந்தது. மறுநாளெல்லாம் ஊர் மயங்கித் தூங்கியது. அடுத்தடுத்து வெவ்வேறு திரைப்படங்கள் வெளியாகின. எல்லாப் பட வசனங்களையும் சின்ன அக்கா மனப்பாடமாக ஒப்புவித்தாள். அவள் பட்டினிகிடந்து அப்பாவை வற்புறுத்தி டி.வி வாங்கச் செய்தாள். இழுத்து மூடும் மரக் கதவுகளுள்ள பெரிய பெட்டி. முருகேசன்தான் நகரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்தார். மேலே காக்கைக் கூடு போலிருந்த ஆன்டெனாவைத் திருப்பி அலைவரிசைகளைக் கண்டுபிடிக்க முயன்றார். ஓட்டுக் கூரையில் ஏறி “தெரியுதா, இப்ப தெரியுதா?” என்று கேட்டார். கீழே சின்ன அக்கா டி.வி-யின் குமிழ்களைத் திருகியபடி “இன்னும் கொஞ்சம்” என்றாள். டி.வி-யில் பிம்பங்கள் உயிர்பெற்றதும் கைகொட்டிக் குதூகலித்தாள்.

தாழ்வாரத்து பெஞ்சு விளிம்பில் கைகளை ஊன்றி அப்பா அப்படியே உட்கார்ந்திருந்தார். மேலே மல் பனியனும் துண்டும் போட்டிருந்தார். அவரின் தலை குனிந்திருந்தது. சின்ன அக்கா காணாமல் போனதற்கு இல்லையென்றாலும் அவர் எப்போதும் அப்படித்தான் அமர்வார். அவர் அபூர்வமாக மற்றவர்களை நிமிர்ந்து பார்ப்பார். பெரும்பாலும் கீழே விழுந்ததைத் தேடுவதைப்போல் தரையில்தான் பார்வை பதிந்திருக்கும். தெருவில் பாதையைப் பார்த்தவாறு பின் கைகட்டிக்கொண்டு போவார். அவருக்குத் தெரியாமல் சித்தப்பாவும் நானும் மறுபடியும் கொல்லைக்குச் சென்றோம். சின்னத்தம்பியின் மனைவி மரத்தடியில் ஓலைகளைப் பின்னிக்கொண்டிருந்தார். சின்னத்தம்பி எருமையுடன் பேசியபடி உண்ணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். சித்தப்பா கோபமாக ‘‘உண்மையச் சொல்லு, என்ன நடந்துச்சு?’’ என்றார். கயிற்றைப் போட்டுவிட்டு, கைகட்டி கால்வாயில் இறங்கி நின்றார் சின்னதம்பி. சிறிது கோபம் தணிந்து ‘‘பையன் எங்க?’’ என்றார் சித்தப்பா. சின்னத்தம்பி ‘‘நாங்க வூட்டுக்குப் போயி ரொம்ப நாளாவுது சாமி’’ என்றார். நாங்கள் திரும்பி வந்தோம். கூடத்திலும் தெருத் திண்ணைகளிலும் ஆட்கள் கத்திக்கொண்டிருந்தார்கள். அப்பா எதுவும் பேசவில்லை. பெரிய மாமா பின்னால் சென்று தேங்காய் உரிக்கும் கத்தியை உருவி வந்தார். ‘‘போடறன் பார் அவந் தலையை’’ என்று புறப்பட்டார். அப்பா நிமிர்ந்து பெரிய மாமாவை முறைத்தார். அவருக்கு எப்போதாவதுதான் கோபம் வரும். பெரிய மாமா கத்தியைப் பழையபடி கூரையில் செருகிவிட்டு வந்தார். அப்பாவின் கண்கள் நீலமானவை. இன்னும் அருகன் மலையில் வாழும் பழங்குடிகளுக்கும் அப்படித்தானிருக்கும். அவர்கள் தீபாவளி நோன்புக்கு முன்பு தெருக்களில் பாடி வருவார்கள். அந்த மொழி யாருக்கும் புரியாது. ஒரே மாதிரி ஒலிக்கும். அவர்கள் விரதமிருந்து கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசம் சுட்டு எடுப்பார்கள் என்று ஊரில் சொல்வார்கள். அப்பா அவர்களுக்கு வழக்கம்போல் படி அரிசியும் வெல்ல உருண்டைகளும் தருவார்.

அன்று நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. சின்னத்தம்பி வெளியில் நின்றிருந்தார். கொல்லையில் தேங்காய் திருடியவன் பிடிபட்டிருக்கிறானாம். அப்பாவுடன் வேடிக்கை பார்க்கச் சென்றேன். காவலிருந்த அக்கம்பக்கக் கொல்லைக்காரர்கள் கூடியிருந்தார்கள். திருடிய அதே தென்னை மரத்தில் திருடனைக் கயிற்றால் இறுகக் கட்டியிருந்தார்கள். அவன் கோவணத்துடன் இருட்டிலும் கறுப்பாக ஒல்லியாயிருந்தான். உடலெங்கும் அடிபட்ட தடங்கள் நிறைந்திருந்தன. காலடியில் கனத்த தேங்காய்க் குலைகளிருந்தன. அவற்றை சத்தம் எழாமல் கயிறு கட்டி இறக்குவது கடுமையான வேலை. அவனால் மொத்தத் தேங்காய்களையும் சுமக்க முடியுமா என்று சந்தேகமாயிருந்தது. அவன் கட்டை விரலை வெட்டவும், எரித்துவிடவும் யோசனைகள் சொல்லப்பட்டன. திருடனின் முகத்தை அப்பா பார்த்தார். தாடி பரவிய, ஒட்டிய கன்னங்கள். அவன் கூலிக்கார முனியனின் மகன். அப்பா அமைதியாக “அவுத்து விடு” என்று சின்னத்தம்பியிடம் கையசைத்தார். சுற்றிலுமிருந்தவர்கள் முணுமுணுத்தார்கள். சித்தப்பா அதிருப்தியுடன் தலையைத் திருப்பிக்கொண்டார். சின்னத்தம்பி வேகமாகக் கயிற்றை அவிழ்த்தார். திருடன் கைகளை உதறி நீவிக்கொண்டான். அப்பா “அவனுக்கு ரெண்டு தேங்காயக் குடு” என்றார் சின்னத்தம்பியிடம். திருடன் தேங்காய்களைச் சுமந்துகொண்டு இருட்டில் சென்று மறைந்தான். அனைவரும் கலையத் தொடங்கினார்கள்.

அப்பா வீட்டில் தொடர்ந்து மௌனமாக உட்கார்ந்திருந்தார். அங்கங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதோ ஓடிப்போனவர்களைப் பற்றியும், அவர்களைப் பிடித்து இழுத்து வந்ததைப் பற்றியும், சிலர் துணிச்சலாக ஒன்றாக வாழ்ந்துகொண்டிருப்பதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். கீழ் சாதிக்காரனைத் திருமணம் செய்துகொண்ட தன் மைத்துனன் மகளைப் பிரித்து வந்து எப்படி வேறொருவனுடன் திருமணம் செய்து வைத்தேன் என்பதை ஒன்றுவிட்ட மாமா பெருமையாக விளக்கிக்கொண்டிருந்தார். அம்மா சமையலறைக் கதவோரம் வந்து நின்றாள். அப்பா ஏறிட்டுப் பார்த்தார். அவளுடைய எண்ணத்தை உணர்ந்துகொண்டார். அப்பாவும் அம்மாவும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஓரிரு வார்த்தைகள் மட்டும்தான். சித்தப்பாவிடம் “அங்க போயி விசாரிச்சிட்டு வாங்க” என்றார் அப்பா. சித்தப்பாவும் மாமாக்களும் உடனே கிளம்பத் தயாரானார்கள். அம்மா “அவங்களை ஒண்ணும் பண்ணக்கூடாது” என்றாள் அழும் குரலில். நானும் அவர்களுடன் சேர்ந்து நடந்தேன்.

ஊரையொட்டி பஞ்சாயத்து நடக்கும் கல் மேடையில், பல காலம் முதிர்ந்த அரச மரமும் வேப்ப மரமும் பிணைந்திருந்தன. அருகில் பாழடைந்த பாசி மூடிய குளம். அதற்குப் பக்கத்தில் குறுக்குப் பாதையில் சென்றோம். முதலிலிருந்த எங்கள் கொல்லை முழுவதும் தென்னை மரங்களும் கழனிகளுமிருந்தன. சின்னத்தம்பி எப்போதும்போல் எருமைக் கயிற்றைப் பற்றியிருக்க, அவர் மனைவி ஓலை கிழித்துக்கொண்டிருந்தார். பெரிய சித்தப்பாவின் மாமரத் தோப்பின் வழியாகப் பாதையை அடைந்தோம். இருபுறமும் வண்டித் தடங்கள் ஆழப் பதிந்திருந்தன. நடுவில் பாறைகளும் புதர்களும் நிமிர்ந்திருந்தன. அந்த வழி அருகன் மலைக்கும் அப்பால் நீண்டு செல்கிறது. திரும்பி ஏரிக் கால்வாயை அடைந்தோம். கரைகளின் சரிவில் வரிசையாகக் குடிசைகளிருந்தன. அது புறம்போக்கு நிலம் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். கூரைகளிலிருந்து புகை கசிந்துகொண்டிருந்தது. இரவு சமையலுக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. கோழிகளும் நாய்களும் தம் பாட்டில் திரிந்தன. குழந்தைகள் விரல் சூப்பியபடி எங்களை வேடிக்கை பார்த்தன. கொல்லைகளில் வேலை செய்பவர்கள் பவ்யமாக உடன் வந்தார்கள்.

நான்கிலொரு பாகம் - சிறுகதை

நேராக சின்னத்தம்பியின் குடிசைக்குச் சென்றோம். குட்டை மண் சுவர்களின் மேல் பனவோலைகள் வேய்ந்திருந்தன. பக்கத்தில் தென்னை ஓலைப் படல்கள் கட்டிய திறந்த குளியலறை. வெளியில் நாதாங்கி தொங்க, கதவு மூடியிருந்தது. சித்தப்பா எட்ட நின்று குரல் கொடுத்தார். உள்ளே தாழ்ப்பாள் விடுபடும் சத்தம். கதவைத் திறந்துகொண்டு முருகேசன் குனிந்து வெளியில் வந்தார். அவர் இன்னும் பட்டுச்சட்டை வேட்டியிலிருந்தார். இரண்டாவது மாமா கெட்ட வார்த்தையை உதிர்த்தபடி முன்னால் பாய்ந்தார். சித்தப்பா அவரைப் பிடித்து நிறுத்தினார். பின்னால் சின்ன அக்கா தலை குனிந்தவாறு வந்து நின்றாள். அவள் வெள்ளை ஜாக்கெட்டுடன் அரக்கு நிறக் கூறைப் புடவை உடுத்தியிருந்தாள். தலையில் வாடிய மல்லிகைச்சரம். கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. அனைவரும் சற்று தூரத்திருந்து பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எனக்கு அழுகை பொங்கி வந்தது. அவள் அருகில் போக விரும்பினேன். சுற்றியிருந்தவர்களை மீறி என் கால்கள் நகர மறுத்தன. சித்தப்பா ஏதோ கேட்டது போலிருந்தது. அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். அதுதான் நான் அவளைக் கடைசியாகப் பார்த்தது. நாங்கள் ஒருவருடனொருவர் பேசிக்கொள்ளாமல் திரும்பி நடந்தோம்.

மேளம் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. நேரமாக ஆக அதன் சுருதி கூடிக்கொண்டிருந்தது, தேர்ப்பாடை கட்டி முழுதாக முடிக்கப்பட்டது. சுற்றிலும் பூக்கள் சரம் சரமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. முன்புறம் சரிகைக் காகிதங்கள் மின்னின. மேலே மகுடம் வைத்ததுபோல் கறுப்புக்குடை. பச்சையோலை முடையப்பட்டு தயாராயிருந்தது. இனி சின்ன அக்காவைச் சந்திக்கப்போவதில்லை என்ற நினைப்பு உறுத்தியது. அவளுடன் பழையபடி சில வார்த்தைகள் பேசத் தோன்றியது. சிறு வயதில் அக்காக்களுடன் வாசலில் கண்ணாமூச்சி விளையாடியது ஞாபகம் வந்தது. கடைசியில் எங்களுக்குள் பேச ஒன்றுமில்லாமலாகியிருந்தது.

இன்னும் இறுதிச் சடங்குகள் முடிய நேரமாகும். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நெஞ்சம் அழுத்தத்தால் வெடிப்பது போலிருந்தது. கால் சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்தேன். எதற்கும் இருக்கட்டுமென எடுத்து வந்த இரும்புச் சாவி பத்திரமாயிருந்தது. பழைய வீட்டைத் தனியாகப் பார்த்து வரத் தோன்றியது. பழகிய வழிகளை ஒருபோதும் மறக்க முடியாது. எழுந்து குறுக்குப் பாதையில் நடந்தேன். முதலில் பெரியப்பாவின் நிலம் வந்தது. முன்பு, மாங்காய்களைக் கைநீட்டிப் பறித்துக்கொள்ளலாம்போல் கீழே தொங்கும். இப்போது காய்ந்த சில மரங்கள் மட்டுமிருந்தன. அதைக் கடந்ததும் எங்கள் கொல்லை. அதை சித்தப்பாவே கவனித்துக்கொள்கிறார். மேடும் பள்ளமுமான வரப்புகளில் கால்கள் தடுமாறின. வனம்போல் களைகள் மண்டியிருந்தன. தென்னை மரங்கள் பட்டுப்போயிருந்தன. எப்போதும் கவிந்திருக்கும் குளிர்ந்த இருட்டான நிழலில்லை. மோட்டார் கொட்டகை சரிந்திருந்தது. சுவிட்ச் பலகை தனியாக இடிபாடுகளுக்கு நடுவில் நின்றிருந்தது. எல்லாவற்றையும் தாண்டி மேட்டில் ஏறி மரத்தடிக்கு வந்தேன். வேம்பும் அரசும் கலந்த மரம் முதிர்ந்து, கிளைகள் முறிந்து வடிவத்தை இழந்திருந்தது. வேர்கள் புடைத்துக் கருங்கல் மேடை சிதைந்திருந்தது. அதைத் தாண்டி ஆளற்ற தெருவில் நடந்தேன்.

தொலைவில், நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு கண்ணில்பட்டது. கூரை ஓடுகள் சில உதிர்ந்து சிதறியிருந்தன. தெருப்படிகள் அங்கங்கே உடைந்திருந்தன. இரு பக்கத் திண்ணைகளிலும் மண்ணும் ஆட்டுப் புழுக்கைகளும். அப்போதும் தலைத்திண்டுகள் பளபளத்தன. சாவியை எடுத்து அழுத்தித் திறந்தேன். அழுவதைப்போல் கதவு கிறீச்சிட்டது. உள்ளே பெரிய வாசலில் வானிலிருந்து வெளிச்சம் கொட்டிக் கொண்டிருந்தது. சுவர்கள் காரை உதிர்ந்து வினோதச் சித்திரங்களை வரைந்திருந்தன. தாழ்வாரத்திலிருந்த பழைய புகைப்படங்கள் ஒட்டடை படிந்து மேலும் பழுப்பாகியிருந்தன. அப்பா வழக்கமாக உட்காரும் நீள பெஞ்சில் தூசி படிந்திருந்தது. கொல்லைப்புறக் கதவைத் திறந்தேன். புதர்கள் வீட்டை விழுங்கி விடுவதைப்போல் வளர்ந்திருந்தன. புழுதியும் சருகுகளும் துவை கல்லை மூடியிருந்தன. அதில்தான் கடைசி அக்கா எப்போதும் கன்னத்தில் கைவைத்தபடி சமைந்திருப்பாள். கல்லை மெல்லத் தொட்டேன். உடலைப்போல் வெப்பமும் குளிர்ச்சியும் கலந்திருந்தன.

அவசரமாக நடந்து சாவு வீட்டுக்குத் திரும்பினேன். கடைசி அக்காவின் உடலுடன் பாடை தயாராயிருந்தது. மேளம் அடக்கமாட்டாது விம்மியது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருந்தன பெண்கள் கடைசியாக ஒரு முறை அரற்றிக்கொண்டி ருந்தார்கள். மீசையை மழித்து வேட்டி கட்டி தலையில் முக்காடுடன் முருகேச மாமா நின்றிருந்தார். அவர் வேறு யாரோ போலிருந்தார். கையில் கொள்ளிச் சட்டி புகைந்துகொண்டிருந்தது. அருகில் போய் நின்றேன். நான் சற்று முன்னால் வந்திருக்க வேண்டும். இருப்பினும் இதைவிடவும் பொருத்தமான நேரம் வாய்க்காது. அப்பாவுக்கும் இந்த எண்ணமிருந்தது. ஒருவருக்கு தேவையில்லையெனினும் அவருக்கு உரியதைத் தர நினைப்பார். முருகேச மாமாவின் காதில் ‘‘வீட்டையும் கொல்லையையும் நாலா பிரிச்சுக்கலாம். அதில உங்களுக்கும் ஒரு பங்கிருக்குது. நீங்க மறுக்கக் கூடாது’’ என்றேன். தூரத்திலிருந்து சின்ன அக்காவைப்போல் அவள் மகள் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘‘இப்படியே கிளம்புறோம்’’ என்றேன் தொடர்ந்து. கடைசியாக அக்காவின் முகத்தைக் குனிந்து பார்த்தேன். பாடை தூக்கப்பட்டு சுடுகாட்டை நோக்கிப் போகத் தொடங்கியது.