சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தரிசனம் - சிறுகதை

தரிசனம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
தரிசனம் - சிறுகதை

- விக்னேஸ்வரி சுரேஷ்

கோவில் தூணில் சாய்ந்தவாறே வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் மடியில் பச்சிளம் குழந்தை ஒன்று, தானும் தூங்கி, அம்மாவையும் தூங்கவிட்டிருந்தது. பிறந்து ஒரு மாதம் இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். சுகப்பிரசவத்துக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு வந்திருக்க வேண்டும். அவளருகே அங்கப்பிரதட்சிணம் செய்யக் காத்திருந்த பெண்கள், மேற்கூரை இல்லாத வெளிப்பிராகாரத்தில் வெயில் ஏறுவதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்துக் கோவிலில் குருக்கள் வருதற்காகச் சில மணி நேரமாகக் காத்துக்கொண்டிருந்தோம்.

பசி என் வயிற்றைப் பிராண்டியது. சாமி தரிசனத்திற்காகக் காத்திருக்கையில் பசிக்கலாமா என மூளைக்குள் நடந்த ஆன்மிக வாதங்கள் வயிற்றுக்குக் கேட்கவில்லை. சும்மாவே இருந்ததால், பசி என்னையாவது கவனி என்று படுத்திக்கொண்டிருந்தது. இன்னும் சில பக்தர்கள் விதவிதமான கோணங்களில் அமர்ந்துகொண்டு, நின்றுகொண்டு காத்திருப்பின் சலிப்போடு நட்பாகியிருந்தனர்.

அனல்காற்று எங்கள்மீது பிரியம் கொண்டு வீசியது. ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போவதுபோல் சீசன் பார்த்துக் கோவிலுக்கு யாரும் போவதில்லை. கோடைக்காலம், வசந்தகாலம், கார்காலம் போல வேண்டுதலுக்கென காலம் கிடையாதே? மனிதர்களுக்கு வருடத்தின் எல்லா நாள்களிலும் சீதோஷ்ணநிலையிலும் கடவுளிடம் வேண்டுதல்கள் உண்டு. பையனுக்குத் திருமணம் ஆக வேண்டும், பெண்ணுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதாக கோரிக்கைகளில் வார்த்தைகள் கால ஓட்டத்தில் முன்பின் மாறியிருக்கின்றன.

எங்கள் குடும்பத்தில் சின்னச்சின்ன வேண்டுதல்களை வெவ்வேறு கடவுள்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் யுக்தியைக் கையாள்கிறோம். இருந்தாலும், வங்கியில் பெரிய கோரிக்கை என்றால் மானேஜரையே நேரில் பார்த்து விண்ணப்பித்துவிடும் இந்திய மனநிலையில் குலதெய்வக் கோவிலுக்கு வந்துவிடுவோம். இன்றும் அப்படியே.

இதைவிட குக்கிராமம் கிடையாது என்னும்படியான கிராமத்தில் எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கிறாள். வெக்கை என்பதை அவ்வூருக்குக் காரணப்பெயராக வைத்திருக்கலாம். சினிமாவில் காட்டப்படும் சிலுசிலுவெனக் காற்றடிக்கும், கூட்டமாக நாரைகள் பறந்துபோகும் பச்சைப்பசேல் கிராமமல்ல. கைவிடப்பட்ட நிலங்களை முள்ளுச்செடிகள் தத்தெடுத்து வைத்திருக்கும் அனல்காற்று கிராமம். வைத்தீஸ்வரன் கோவில் வரை சென்றுவிட்டால், டவுன் பஸ் கிடைக்கும். நாளுக்கு இரண்டு பஸ் உண்டு. அந்த இரண்டு பஸ்ஸில் எதைப் பிடித்துப் போய் இறங்கினாலும், அது கோவிலின் நடை சாத்தப்பட்ட நேரமாகத்தான் இருக்கும். இந்தத் தகவலால் நாங்கள் மனம் தளர்வதில்லை. சென்னையிலிருந்தே சொந்தக் காரில் மூட்டை முடிச்சோடு போய் வருகிறோம்.

தரிசனம் - சிறுகதை

அம்மன் அங்காளபரமேஸ்வரி. சக்தி வாய்ந்த தேவி! வெளிநாடுகளிலிருந்தும் வந்து வணங்கிப் போகிறார்கள். எனினும், கோவிலுக்கு எதிரில் கடை போட்டிருக்கும் மனிதருக்கு தீபத்துக்குக் கலப்பட எண்ணெய் விற்க சங்கடம் ஏதுமில்லை. பக்தர்கள் நன்மைக்காக கடையில் பொவண்டோ வாங்கி வைத்திருப்பார். அதில் கூலிங் கேட்டால் கூடுதல் இரண்டு ரூபாய்.

``அபிஷேக சாமான்லாம் மெட்ராஸ்லேருந்தே வாங்கிண்டு வந்துடுங்கோ!’’ என்பார் குருக்கள். அது விண்ணப்பம் இல்லை, கட்டளை. ஒருமுறை எதிரிலுள்ள கடையில் எண்ணெய் வாங்கி, விளக்கேற்றச் சொன்னதும், குருக்கள் முகத்தில் கடுகு வெடித்தது. கோவிலை நம்பிக் கடை போட்டிருப்பவருக்கும், கோவிலின் ஒரே குருக்களுக்கும் சரியான ரசாயன மாற்றம் நிகழவில்லை. உட்கார்ந்த இடத்தில் இப்படி ஒரு லீலையை நடத்திக்கொண்டிருக்கிறாள் பரமேஸ்வரி.

அந்த லீலையின் `பட்டர்ப்ளை எபக்ட்'டாக, நாங்கள் சென்னையிலிருந்து அபிஷேக சாமான்களை கார் `ட்ரன்க்'கில் நிரப்பி (அடைத்துக்கொண்டு) கிளம்பி வருவோம். தேர்தல் நேரத்தில், ஹைவேஸில் எங்கள் காரை நிறுத்தி ட்ரன்க்கைத் திறந்துக்காட்டச் சொன்ன போலீஸுக்கு காலில் இளநீர் தேங்காய் நங்கென்று விழுந்திருக்கிறது. எல்லாம் அவள் செயல்!

போகட்டும். இன்றைய கதைக்கு வருவோம். காலை பதினொரு மணிக்கு எங்களைக் கோவிலுக்கு வந்துவிடச் சொன்னார் குருக்கள். காலை ஐந்தரைக்கே வேண்டுதல்களோடு, அபிஷேக சாமான்களையும், குழந்தைகளையும் அடைத்துக்கொண்டு கிளம்பினோம். அதிகாலைத் தூக்கத்தைத் தியாகம் செய்ததால், பயணத்தில் பத்து சதவிகிதத்தை சிணுங்கிக்கொண்டே செலவிட்டன குழந்தைகள். அவர்களை சமாதானம் செய்ததில், எனக்குப் பாதி உயிரை விடவேண்டியதாயிற்று.

ஆறு மணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்துவிட்டோம். கோவிலில் அனேக கூட்டம். எங்களுக்கு முன் ஏழெட்டுக் குடும்பம் வந்து காத்திருந்தது. அவர்களிடத்தும் வெளியூர் எண்ணெய். கட்டப்பட்டிருந்த தூளியும், அதில் ஆழ்தூக்கத்திலிருந்த குழந்தையும் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருப்பதைக் காட்டியது. அபிஷேக சாமான்களைப் பிரித்து வைத்துவிட்டனர். ரோஜாப்பூ மாலையும், கதம்பச் சரமும், வெற்றிலைக்கட்டும், தேங்காய்களும், பலவகைப் பழங்களும் தாம்பாளத்துக்கு வந்துவிட்டன. இனி கொண்டு வந்த `போத்தீஸ்' கட்டைப்பையிலும், செய்வதற்கு வேலையும் எதுவுமில்லை.

ஆண்கள், கோவிலின் எதிர்ப்புறமிருந்த காக்கைகூட வந்தமராத சாலையில் தங்கள் சிந்தனையைத் தொலைத்திருந்தனர். பெண்கள் பேசிய விஷயங்களையே தங்களுக்குள் பேசி, அதிலும் மூன்றாவது ரவுண்ட் வந்திருந்தனர். இளவட்டங்கள் மொபைலில் சிக்னல் கிடைக்காததால், மனிதர்களை நோட்டம் விட்டன. நாயொன்று இருந்த இடத்தில் உடலை நீட்டி, எனக்குத் தெரியாத யோகாவா என்று சவால் விட்டது. கோவிலையாவது வேடிக்கை பார்க்கலாம் என்றால், ராஜாக்கள் தங்கள் முதல் தர சிற்பிகளைக் கொண்டு வடிவமைத்த கோவில் அல்ல அது. சிலையைப் பார்த்தால், காலில் விபூதிதானே கொட்டப்போகிறீர்கள், உங்களுக்கு இதுபோதும் என்று ஒரு கர்ப்பகிரகமும், முன்னே சிறு மண்டபமும், சில எல்லை தெய்வங்களையும் சேர்த்துக்கொண்டு, சின்னக் கோவிலில் வந்தமர்ந்திருக்கிறாள் பரமேஸ்வரி.

கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் சில எண்ணெய் டின்களும், அதைச் சுமந்துக்கொண்டு மனிதர்களும் வரத் தொடங்கினர். கடைசியாக இளம்பெண்ணும் அவள் சாடையில் மற்றொரு பெண்ணும், கையில் பச்சிளம் குழந்தை, கட்டைப்பை நிறைய சாமான்களுடன் ஆட்டோவில் வந்திறங்கினர். அந்நேரம் தோராயமாகச் சொல்வதானால், கோவிலில் நாங்கள் அறுபது பேர் இருப்போம். நிச்சயமாகச் சொல்வதானால், அந்த கிராமத்தின் ஜனத்தொகையைவிட அதிகமிருந்தோம்.

குருக்களுக்கு உதவியாக அந்த ஊரிலிருந்த ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். அவர்தான் கோவிலைத் திறந்து வைத்திருந்தார். கர்ப்பகிரகத்தை மட்டும் அவருக்குத் திறக்க அனுமதியில்லைபோலத் தெரிந்தது. கர்ப்பகிரகத்துக்குள் திரைச்சீலையும் போட்டிருந்ததால், அம்மன் இன்னும் எங்கள் யாரையும் பார்த்திருக்கவில்லை. அபிஷேகத்திற்கு பைப்பில் தண்ணீர் பிடித்து வந்து அண்டாவை நிரப்ப வேண்டும். கோவிலைப் பெருக்கி, சுத்தம் செய்ய வேண்டும். அவ்விரண்டு வேலைகளைத் தாண்டி வேறு எது செய்தாலும் தெய்வகுத்தமாகிவிடும் என்று அந்தப் பெண்மணி நம்பினார் போலும். பக்தர்கள் எந்த வேலையும் அவரிடம் வாங்கிவிட முடியாது. அதற்காக ஓரமாகவெல்லாம் உட்கார்ந்திருக்க மாட்டார். வட்டவட்டமாக குடும்பங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், அருகில் நின்று கவனித்துக்கொண்டிருப்பார். ஒரு வட்டக்கதை போர் அடித்தால், அடுத்த வட்டம். ஒரு எழுத்தாளர் பொறாமைப்படும்படியான வாழ்க்கை அவருடையது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

அவரிடம் போய் நான் கோலமாவு கேட்டதும், யோசிக்காமல் `இங்கே கிடையாது' என பதில் சொன்னார். நானே போடுறேன் என்றதும்தான் கோலமாவு கிடைத்தது. மணி பன்னிரண்டு தாண்டியதும் பேச்செல்லாம் நின்றுபோய், ஒரு கேள்வி மட்டும் பக்தர்களிடம் பிறந்து அந்தப் பிராகாரத்தில் சுற்றிச் சுற்றி வந்தது. என்னிடம் சிலர் கேட்டதை நான் அந்தப்பெண்ணிடம் கேட்டேன்.

``குருக்கள் எப்ப வருவார்?’’

``வந்துடுவாருங்க.’’

குருக்கள் வந்தபாடில்லை. பொதுவாகவே காத்திருப்புகள் கடிகார முள்ளின் எடையை அதிகரித்து நகரவிடாமல் செய்கின்றன. அப்படியும் அன்று மணி ஒன்றரை ஆனதைக் காட்டியது. பெரியவர்கள் பொறுமையை இழந்தாலும் குழந்தைகள் முன் காட்டமுடியாது தவித்தோம். ஏற்கெனவே பசி, குழந்தைகளுக்கு சிணுங்க மேலும் ஒரு காரணத்தைச் சேர்த்திருந்தது. ‘இனிமே கோவில்னா என்னைக் கூப்பிடாத.’ என்று நூறாவது முறையாகச் சொல்ல, எனக்குமே அது சரிதானோ எனத் தோன்றியது.

மீண்டும் அந்த இளம்பெண்ணின் குழந்தை அழ ஆரம்பித்திருந்தது. அவள், அது அழும்போதெல்லாம் பால் கொடுத்து சமாதானம் செய்துகொண்டிருந்தாள். பொதுவாகவே எனக்கொரு ராசி உண்டு. பேருந்துப்பயணமோ, விமானப்பயணமோ, பயணம் முழுவதும் வீரிட்டு அழ ஒரு குழந்தையாவது என் கூடவே வரும். ஆரம்பத்தில் எரிச்சலடைந்து, திருமணமானதும் ஏற்றுக்கொண்டு, எனக்கே குழந்தை பிறந்து அகாலத்தில் வீரிட்டு அழும் போது இயல்பானது. இளம்பெண்ணிற்கு அது முதல் குழந்தை போலும், குழந்தை அழுவதும், அதற்கு மற்றவர்கள் உச்சுக்கொட்டுவதும் அவளைக் கலங்கடிப்பது முகத்தில் தெரிந்தது.

தரிசனம் - சிறுகதை

ஒருவழியாக குருக்கள் ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தார். கோவிலில் ஒரு சிறிய பரபரப்பு தொற்றியது. நெடிய ஒடிசலான தேகத்தோடு, குடுமியும் பாக்குக்கறைப் பற்களுமாய், வெயிலில் கறுத்து தி.ஜானகிராமன் கதையொன்றின் கிழவனார்போலக் காட்சி தந்தார். எனினும் அவர் கிழவனார் இல்லை. வயது நாற்பது இருக்கலாம். நாங்கள் வருடாவருடம் வந்தாலும், அவருக்கு மட்டும் ஐந்தைந்து வயதாக ஏறுவதை ஆச்சர்யமாகப் பார்ப்பேன்.

வீட்டில் பெரியவர்கள் யாருமில்லாததால், பல வருடங்களாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். காதல் திருமணமும் தனக்குத் தானே ஜோடி தேடிக்கொள்வதுதானே? இருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தனக்குத் தானே செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஒவ்வொரு முறை கோவிலுக்குச் செல்லும் போதும், தனக்கொரு பெண் இருந்தால் பார்க்கச் சொல்வார். நிச்சயம் பரமேஸ்வரியிடமும் மிக நேரடியாக விண்ணப்பித்திருப்பார் என நம்புகிறேன். எனினும், குருக்கள் வேலை பல பெண்களுக்குப் பிரியமானதாக இல்லை. சம்பளக்குறைவோ, குடுமியோ, தினமும் பிரசாதம் செய்யவேண்டும் என்பதோ அவர் ஜாதகத்தில் பத்தாவது கட்டமாக இருந்து கெடுத்துக்கொண்டிருந்தது.

ஒருவழியாக அவருக்குத் திருமணமானது. எங்களுக்கு பிரசாதத்தின் சுவை கூடியது. சர்க்கரைப் பொங்கலில் முந்திரியோடு திராட்சையையும், தயிர்சாதத்தில் துறுவிய கேரட்டையும் இஞ்சியையும் சேர்க்க ஒரு பெண் வேண்டும் என்று புரிந்துகொண்டோம். `அம்பாளுக்கு பாலியஸ்டர் வேண்டாம், காட்டன் புடவையாக வாங்கிச் சார்த்துங்கோ!' எனச் சொல்லத்தொடங்கினார்.

சுற்றுப்பட்டு மூன்று, நான்கு கோவில்களுக்கு அவர்தான் பூஜை என நினைக்கிறேன். இந்தக்காரணம் தாண்டியும் இன்று அவர் வந்தது தாமதம்தான். பொதுவாக தாமதமாக வருபவர்கள் இரண்டு வழிமுறைகளைக் கையாள்வார்கள். ஒன்று உடலைக் குறுக்கி, முகம் நோக்காமல், வேகமாகக் கடந்துபோவார்கள். மற்றொன்று, யாரும் எதுவும் கேட்டுவிட முடியாதபடி கோபமாக இருப்பார்கள். குருக்கள், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்திருந்தார். வரும் போதே சரக்கென்று ஸ்கூட்டியை நிறுத்தினார்.

``யார் கார் இது, கோவில் வாசலை அடைச்சுண்டு? நகர்த்தி வையுங்கோ!’’ என்று சத்தமிட்டார்.

ஒவ்வொரு கார்காரரும் வாசலைப் போய் எட்டிப்பார்த்தார்கள். அனைவருக்கும் தாங்கள் காரை நிறுத்திய இடம் மறந்தே போயிருக்கும்.

உள்ளே வந்ததும் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, “மாஸ்க் போடுங்கோ!” என்றார் உரக்க. பொதுவாக இது சின்ன அவமானம்தான் என்றாலும், அந்நேரத்தில் அவர் வந்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு அதைவிடப் பெரிதாக இருந்தது. சுற்றிலும் பார்த்தேன். என்னை கவனிக்கும் அளவுக்கு யாருக்கும் அந்தக் காட்சி சுவாரஸ்யப்படவில்லை.

குருக்கள் கோவிலைச் சுற்றி வந்தார். நிறைய சத்தம் போட்டார். பிராகார தெய்வங்களுக்குப் பழைய உடைகளையும், அலங்காரத்தையும் கலைந்து, நிரப்பி வைக்கப்பட்டிருந்த அண்டாவிலிருந்து தண்ணீரை குடத்தால் மொண்டு அபிஷேகம் செய்தார். பழைய வஸ்திரத்தால் ஒருமுறை துடைத்துவிட்டு, புது வஸ்திரம் கட்டிவிட்டார். சந்தனமிட்டு, குங்குமம் வைத்தார். ஏழு தெய்வங்களுக்குமாகச் சேர்த்து கால் மணி நேரம்தான்.

பிறகு அங்காளபரமேஸ்வரியிடம் வந்தார்.

``அபிஷேகத்துக்கு வந்திருக்கவா முன்னாடி வாங்கோ.’’ வந்தோம்.

யாரோ பஞ்சாமிருதத்தைத் தாங்களே செய்துகொண்டு வந்திருந்தனர். வாங்க மறுத்தார். கொரோனா காலக் கட்டுப்பாடாம். அவர் சிடுசிடுப்பைக் காட்ட ஏதுவாக நிறைய காரணங்கள் தந்துகொண்டே இருந்தோம். கொட்டாவியைப் போல கோபமும் தொற்று தான். வந்திருந்தவர்கள், சிரமப்பட்டு எரிச்சலைக் கட்டுப்படுத்தியிருந்தனர். யாரெனும் கோபப்பட்டு, அங்கு சண்டை வந்துவிட்டால், இன்னும் நேரமாகிவிடுமே என்ற கவலை எனக்கு. சண்டை வரத் தகுந்த காரணமும் அங்கு தாம்பாளத்தில் உட்கார்ந்திருந்தது. எங்களுடை யதையும் சேர்த்து, அங்காளபரமேஸ்வரி கட்டிக்கொள்ளவென நான்கு புதுப்புடவைகள் காத்திருந்தன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பாரோ?

கைக்குழந்தை இப்போது பாலுக்கெல்லாம் சமாதானமாகாத அழுகையை அடைந்திருந்தது. ஆளுக்கு ஆள் அறிவுரை சொல்ல ஆரம்பித்திருந்தனர். அதில் முக்கியமானது, ‘இவ்வளவு பிஞ்சுக்குழந்தையைக் கொண்டுவந்திருக்கக் கூடாது’ என்பது. அந்தப் பெண் கிட்டத்தட்ட அழும் நிலையை அடைந்திருந்தாள். அவளின் அக்கா போலிருந்தவள் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்கும் தொனியில், “மகமாயி இல்லனா பிரசவத்துல புள்ள பொழச்சே இருந்திருக்காதுங்க” என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

தரிசனம் - சிறுகதை

குருக்களைப் பார்த்தேன். அவருடைய தேகத்தில் வியர்வை அபிஷேக நீர்போல ஓடிக்கொண்டிருந்தது. வெளியில் அமர்ந்திருந்த எங்களுக்கு வெக்கை இருந்தாலும், பேருக்காவது தலைமேல் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. சிறிய கர்ப்பகிரகத்தில் இருபுறமும் சரமாக தீப விளக்குகள் எரிந்துகொண்டிருக்க அதன்மேல் படாமல் அவர் அங்கு வேலை செய்வதே எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. சமையலறையில் மூன்று அடுப்பு ஒரே சமயத்தில் எரிந்தால், ஏதேனும் ஒன்றினால் எனக்கு விழுப்புண் நிச்சயம்.

பலதரப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த நல்லெண்ணெயை ஒரே பாத்திரத்தில் மாற்றி, காலி பிளாஸ்டிக் டப்பாக்களை ஓரமாக விட்டெறிந்தார். டஜன் டஜனாகக் குவிந்திருந்த வாழைப்பழங்களை உரித்து, ஏனைய பழங்களும் தேனும் கலந்து பஞ்சாமிருந்தம் தயார் செய்தார். பரமேஸ்வரிக்கு எண்ணெய்க் காப்பு சாற்றி, அரிசி மாவு போட்டுத் துவட்டினார். மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டி, மந்திரங்களை உரக்கச் சொல்லியவாறே பஞ்சாமிருதம், பால், தயிர், தேன், இளநீர் என்பதாக வரிசைப்படி அபிஷேகம் செய்துகொண்டிருந்தார். அவர் கோபமாக அபிஷேகம் செய்வது எனக்கு அடம்பிடிக்கும் குழந்தையை அதட்டிக் குளிப்பாட்டும் அம்மாவைப் போலிருந்தது.

என் அமெரிக்க உறவினர் காதில் கிசுகிசுத்தார். ``அங்கல்லாம் ஸ்வாமிக்கு எவ்வளோ ஆசையா பண்ணுவாங்க, தெரியுமா? இவரென்ன கோபமாவே பூஜை பண்றார்?’’

அவர் என் பதிலை வேண்டிக் கேட்கவில்லை. இருந்தாலும் சொன்னேன். ``காரில் வந்திறங்கி, டாலரில் சம்பாதித்து, ஏசி ரூமில் பூஜை செய்பவரிடமும், வெயிலில் வந்து வெக்கையில் சுழன்றுகொண்டு சில ஆயிரங்களில் வாழ்க்கை நடத்தவேண்டி வேலை செய்பவரிடமும் ஒரே குணத்தை எதிர்பார்க்க முடியாது.’’

வெக்கை மனிதனை எரிச்சல் கொள்ளச் செய்து, சுபாவமாகவே கோபக்காரனாக மாற்றக்கூடும் என்னும் என் தர்க்கம் அவருக்கு சரியாகப்படவில்லை. ``வேலை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், அதன் கஷ்டநஷ்டங்களைப் பழகிக்கொள்ளவேண்டியது தான்’’ என்றார்.

“சரி விடு. உக்கிரகாளி இருக்கிற மாதிரி, உக்கிர குருக்கள் இருக்கக் கூடாதா?” என் நகைச்சுவை முயற்சி தோல்வியில் முடிந்ததை அவர் முகம் காட்டியது. குருக்கள் உள்ளிருந்து அதட்டினார். “பேசாமலிருங்கோ!” உரையாடலை முடிக்க வழியில்லாததால், இருவரும் குருக்கள் சொன்னதைச் சாக்காக வைத்து அமைதியானோம்.

தரிசனம் - சிறுகதை

மின்சாரம் தடைபட, காற்றுப்போல ஏதோ வந்துகொண்டிருந்ததும் நின்றது. மதிய நேரத் தகிப்பை திடீரென எதிர்பாராத குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்க, அதையும் மீறி சரியாக மணிச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

திரை விலகி, அங்காளபரமேஸ்வரி காட்சி தந்தாள். குருக்களின் பலவருட அனுபவம் அலங்காரத்தில் தெரிந்தது. நான்கு குடும்பங்கள் கொண்டு வந்திருந்த புடவைகளையும் அந்தச் சின்னச் சிலைக்கு லாகவமாகக் கட்டியிருந்தார். இரண்டு புடவைகள் இருபக்க தாவணி போலவும், மற்றிரண்டு புடவைகள் கொசுவம் வைத்த பாவாடையாகவும் மாறியிருந்தது. மெஜந்தாவையும் பச்சையையும் சேர்த்திருந்தார். போலவே மஞ்சளும் அரக்கும். என்னால், அவர் வண்ணத்தேர்வை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. வந்திருந்தவர்கள் முகத்தில் பரம திருப்தி. சம்பங்கி, சாமந்தி, ரோஜா, வெட்டிவேர் எனப் பலதரப்பட்ட மாலைகள், முழமுழமாகப் பூ என அனைத்தையும் அம்மனை மறைத்துவிடாமல் சார்த்தியிருந்தார். சந்தனப் பொட்டிட்டு, வெள்ளைக்கல் பதித்த ஆரம் சூட்டி அலங்காரத்தை நிறைவு செய்திருந்தார். மணிச் சத்தத்தோடு, பெரிய கற்பூர ஆராதனையும் சேர, அற்புதமாக ஜ்வளித்தாள் தேவி!

தீபாராதனைத் தட்டோடு வெளியே வந்த குருக்கள் அத்தனை பேரும் காத்திருக்க, இளம்பெண்ணைப் பார்த்து சத்தமிட்டார், “இங்க வாம்மா!”

கைக்குழந்தையோடு முன்னால் வந்தாள். பேர் நட்சத்திரம் கேட்டார். அவள் குழந்தை பேரைச் சொல்ல, மீண்டும் துர்வாசரானார். “ஒரு வயசு ஆறவரை குழந்தை பேர்ல அர்ச்சனை கிடையாது, விபூதி குங்குமமெல்லாம் பூசப்படாது. குழந்தையே தெய்வம்தான்!”

அவள் பெயருக்கும், குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்தார். பிரசாதம் தந்து அவர்களை முதலில் அனுப்பி வைத்தார். யாரும் எதுவும் சொல்லவில்லை.

மீண்டும் பரமேஸ்வரியைப் பார்த்தேன். காத்திருப்பும் விண்ணப்பங்களும் மறந்துபோய், மனதார வேண்டிக்கொண்டேன்.

``பொழச்சுக்கிடந்தா அடுத்த வருஷமும் வந்துடணும் தாயே.’’