Published:Updated:

சிறுகதை: காட்டாயி

காட்டாயி
பிரீமியம் ஸ்டோரி
News
காட்டாயி

க.அரவிந்த் குமார்

“மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில்தான் நானும்” என்று மேடையில் சி.என்.அண்ணாதுரை பேசிக் கொண்டிருந்தார். ராயபுரம் ராபின்சன் பூங்காவின் ஒரு மரத்தடியில் தலைக்கு முந்தானையைக் குடையாகப் பிடித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் காட்டாயி. ``என்ன இங்க நின்னுட்டு இருக்க” என்று கேட்டபடி காட்டாயியின் தோளைத்தொட்டுத் திருப்பினான் கணவன் வைரமுத்து. ``ஏன், நின்னா என்னா?” என்று புருவத்தையும் தாடையையும் ஒருசேர உயர்த்திக் கேட்டாள் காட்டாயி. ``இல்லை, இன்னிக்குக் காலையில்தான் நமக்குக் கல்யாணம் ஆச்சு, இன்னிக்கு மொத ராத்திரி சடங்கு எல்லாம் இருக்கு. எங்க வூட்ல எல்லாரும் தேடிட்டு இருந்தாங்க, உங்காளுங்கதா சொல்லி வுட்டாங்க, கட்சி மீட்டிங் நடக்குற இடத்துல காட்டாயி இருப்பான்னு, அதா கூட்டிப்போலாம்னு வந்தேன்” என்றான் வைரமுத்து. ``என்னா மொத ராத்திரி? உனக்கு இது ரெண்டாங் கல்யாணம். எனக்கு ஒரு கால் தாங்கி தாங்கி நடப்பேன்னு எவனும் கட்டிக்கல. உன்கூட சேத்து வுட்டாங்க, என்னமோ மொத ராத்திரிக்கு ரேங்கிக்கினு வர்ற” என்று புருவத்தில் சேர்ந்திருந்த மழைநீரைக் கட்டை விரலால் வழித்தபடி கேட்டாள் காட்டாயி. ``யோவ், மேடையைப் பார்த்தியா?” என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள் காட்டாயி. வைரமுத்து மேடையை உற்றுப் பார்க்க, “என்னா தெரியுது” என்று காட்டாயி கேட்க, ஒன்றும் புரியாதவனாய் தலையை ஆட்டினான் வைரமுத்து. ``இவ்ளோ ஆம்பளைங்க இருக்கோ சொல்லோ ஒரு பொம்பளையும் சமமா சேர் போட்டு ஒக்காந்திருக்கா பார்த்தியா? உன் கண்ணுக்கு அதுலா தெரியலயா?” என்று எரிச்சல் பட்டாள் காட்டாயி. வைரமுத்து மீண்டும் மேடையைப் பார்க்க சத்தியவாணி முத்து அமர்ந்திருப்பது தெரிந்தது. ``நீ என்னடான்னா? கல்யாணம் ஆயிடுச்சு சடங்குனு கூப்புட்ற” என்று அலுத்தபடி “சத்யா இருக்காளே என் கூட்டாளிதான்” என்று கூறியபடியே கால்களைச் சற்றுத் தாங்கியபடி கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்தாள் காட்டாயி. முதல் மனைவி பிரசவத்தில் குழந்தையோடு சேர்ந்து இறந்துவிட, தாயின் நச்சரிப்பு தாளாமல் தன்னைவிடப் பத்து வயது குறைந்த ஒருகால் சற்று ஊனமான காட்டாயியைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டான் வைரமுத்து.

சிறுகதை: காட்டாயி

காசிமேட்டில் காட்டாயியைத் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. ஒருகால்தான் சற்று விந்தி நடப்பாளே தவிர, சாவுக்கூத்து ஆடுவதில் அவளை அடித்துக்கொள்ள காசிமேடு ஆரம்பித்து தாழங்குப்பம்வரை ஆளே கிடையாது.காசிமேட்டில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் முதல் தகவல் காட்டாயிக்குத்தான். அவள் வந்து சடலத்தை உற்றுப் பார்த்துவிட்டு இடுப்பில் முடிந்து வைத்துள்ள சுருக்குப் பையில் கை விட்டு இரண்டு விள்ளல் பன்னீர்ப் புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து வாயில் போட்டு மென்று கண்களை ஒருகணம் மூடி அதில் லயித்தபிறகு உத்தரவுகள் போட ஆரம்பிப்பாள். அதன்படிதான் ஒவ்வொரு சடங்கும் அரங்கேறும்.அஞ்சலை, ராமாயி, தாமிரவேணி, கபாலி என்று தன்னைவிட 30 வயது அதிகம் கொண்ட ஒப்பாரி செட்டை அழைத்து வருவாள் காட்டாயி. ஐந்து பேரும் சடலத்தைச் சுற்றி அமர்ந்து பாட ஆரம்பிப்பார்கள். ஊதுவத்தி மணக்குதா, பன்னீர்ப் புகையிலை மணக்குதா, அந்தப் பாட்டு மணக்குதான்னு தெரியாது. கொஞ்சநேரம் பொணத்தை வுட்டுட்டு கூட்டம் ஒப்பாரியைக் கேக்கும். அந்த மாதிரி இருக்கும் பாட்டு எல்லாம். இதிலே விசேஷம் என்னன்னா, கூத்து. கடைசியா சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போறப்போ பொணத்துக்கு முன்னாடி ஒருபாட்டில் பிராந்தியை அப்படியே வாயில் லபக்கென்று கவிழ்த்துக்கொண்டு காட்டாயி ஆடுவாள் பாருங்க ஒரு ஆட்டம், அப்படி இருக்கும். காட்டாயி ஆடுனா பொணமே எழுந்து நின்னு வேடிக்கை பார்க்கும்னு காசிமேட்ல ஒரு பேச்சு உண்டு. நடக்கும்போது விந்தி விந்தி நடக்கும் காட்டாயிக்கு ஆடும்போது எங்கிருந்துதான் அந்த சக்தி வருமோ தெரியாது. கால்கள் தரையில் படாமல் சுழன்று சுழன்று ஆடுவாள். தப்படிக்கிறவனுக்கு காட்டாயியின் ஆட்டம் கண்டு விட்டால் குஷி தாளாது. அவன் கையில் இருந்து தாளக்கட்டுகள் குதித்து குதித்து வரும், காட்டாயி முட்டி போட்டு நாக்கை மடித்துக் கொண்டு கைகளைக் காற்றில் சுற்றியபடி இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவாள். சமயத்தில் ஆம்பிளைகள் சிலர் காட்டாயியுடன் இணைந்து போதையில் ஆடுவதுண்டு. அவர்கள் திணறிப் போகும் அளவுக்கு சேலையை இடுப்பில் எடுத்துச் செருகிக்கொண்டு மயானம் வரை மூச்சு வாங்காமல் ஆடிப்போவாள் காட்டாயி. இதெல்லாம் தெரிந்துதான் காட்டாயியைக் கட்டிக்கொண்டான் வைரமுத்து. என்னமோ கூச்ச சுபாவம் கொண்ட வைரமுத்துவுக்குக் காட்டாயியைப் பிடித்துப்போனது. சாவுக்கூத்து இல்லாத நாள்களில் கருவாடு காய வைக்கப் போவாள். கடமாவின் மையை லாகவமாகப் பிரித்து எடுத்து வியாபாரிகளுக்குக் கொடுப்பாள்.

சிறுகதை: காட்டாயி

தொழில் இல்லாத சமயங்களில் காசிமேட்டில் இருந்து அலை ஓரமாக நடந்து துறைமுகம் வரை சென்று கொட்டப்பட்டிருக்கும் பாறைகளில் படிந்துள்ள ஆளிகளைப் பிடித்து வந்து வேகவைத்து, தெருவோரத்தில் விற்பாள். எல்லாவற்றையும்விட கட்சிக் கூட்டங்களை வேடிக்கை பார்ப்பது காட்டாயிக்கு மிகவும் பிடிக்கும். அப்படித்தான் இன்றும்.ராபின்சன் பூங்காவிலிருந்து எதுவும் பேசாமல் காசிமேட்டில் உள்ள வீடு வந்து சேர்ந்தனர் காட்டாயியும் வைரமுத்துவும். ஓலைத் தடுக்கைக் கொண்டு கதவை அடைத்தபின்னர் திருவொற்றியூர்க் கோயில் அருகே விற்கப்படும் முடக்குப் பாயை தரையில் விரித்தபடி வைரமுத்துவிடம் கேட்டாள் காட்டாயி. “அண்ணாதுரை என்னம்மா பேசுறாருல, ஒருநாள் பெரிய ஆளா வருவாரு பாரு. பொம்பளைக்கு சமமா இடம் கொடுக்குறார்னா அந்த மனசு பெரிய மனசு இல்ல” என்றாள். “ஏன், நீ கட்சில சேரப் போறியா?” என்று கேட்டான் வைரமுத்து. ``ஏன், சேர்ந்தா என்னா தப்பு?” என்றாள் காட்டாயி. ``தப்பு ஒண்ணியும் கெடயாது” என்று இழுத்தான் வைரமுத்து. ``அப்புறம் என்ன, மொதராத்திரி சடங்கப் பாரு” என்று படுத்தாள் காட்டாயி. அன்று சடங்கு செய்ததன் விளைவு அடுத்த வருடமே சேகர் என்ற குழந்தைக்குத் தாயானாள் காட்டாயி.பேறுகாலத்திலும் பச்சை உடம்புக்காரியாக இருந்த கொஞ்ச நாள்கள்தான் அடங்கி இருந்தாள். சேகர் கால்முளைத்து ஓட ஆரம்பித்த உடனே, அதுவரை அடக்கிவைத்திருந்த ஆட்டத்தை மீண்டும் தொடங்கிவிட்டாள். வைரமுத்துவும் பெரிதாகக் கேட்டுக்கொள்ள மாட்டான். 50 காசு எடுத்துக்கொண்டு திமுகவில் உறுப்பினராகச் சேர காட்டாயி பெரிதும் முயற்சி எடுத்தாள். 25 பேரைத் திரட்டிக் கிளை ஒன்றை உருவாக்கவும் முயன்றாள். ஆனால் கம்யூனிஸ்ட் ஜீவாவின் பேச்சுக்குத்தான் காசிமேட்டு மக்களிடையே மரியாதை இருந்தது. எங்கிருந்தோ வந்த ஜீவாவை ராயபுரம் மக்களும், காசிமேட்டு மக்களும் எதற்காகவோ ஏற்றுக்கொண்டார்கள். சிங்காரவேலர் கூடவே ஜீவா இருந்ததும் ஒரு காரணம். ஆனாலும் முயற்சியை விடவில்லை காட்டாயி. ``லூசாடி நீ, கறுப்புச் சட்டைக்காரன் கட்சியை ஆரம்பிக்கணும்னு பேசிக்கிட்டு இருக்க...

சிறுகதை: காட்டாயி

அவனுங்க சாமி இல்லைன்னு மேடைக்கு மேடை பேசுறானுங்க, அவனுங்க கட்சியில் சேர்ந்துட்டா தேசம்மா சோறு தின்னுவியா மாட்டியா?” என்று சண்டைக்கு வந்தாள் ஒப்பாரி பாட்டுப் பாடும் கபாலி. “அண்ணாதுரை கறுப்புச் சட்டை இல்லை, வெள்ளைச் சட்டை” என்று தனக்குத் தோன்றிய பதிலைக் கூறிவிட்டு அமைதியாகிப் போனாள் காட்டாயி. 1952-ம் வருஷம் எல்லாரும் ஓட்டு போடலாம்னு சொன்னாங்க. அப்படின்னா என்னன்னு அந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரோட்டு மேல பெரிய பொட்டி ஒண்ணு வச்சு, அதுக்குள்ள காயிதத்தைப் போட்டுப் போட்டு எடுத்துக் காமிச்சாங்க. இதுபோல நீங்களும் காயிதத்தைப் போடணும்னு சொன்னாங்க. ஆனா அந்தக் காயிதத்தை அவங்களே எடுத்துட்டுப் போய்ட்டாங்க. சேகரை இடுப்பில் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காட்டாயி, “இந்தக் காயிதத்துல அண்ணா துரை இருக்காரா” என்று கேட்டாள். பெரிய கண்ணாடி போட்ட அந்த நபர் இல்லை யென்று சொல்லிவிட்டு காட்டாயியை ஆச்சர்யமாகப் பார்த்துவிட்டுப் போனார்.

வைரமுத்துவுக்குத் துறைமுகத்தில் வேலை. ஆரம்பத்தில் சுமை தூக்கும் தொழிலாளி யாகத்தான் உள்ளே நுழைந்தது. பின்னர் எடுபிடி வேலைகள் பழகி மெக்கானிக்குகளுக்கு உதவும் இடத்திற்கு வந்து விட்டான்.

துறைமுகத்தின் நுழைவாயிலில் பரந்து விரிந்திருந்த மணலில் ஜீவாவும், மணலி கந்தாசாமியும் அடிக்கடி வந்து கூட்டம் போடுவார்கள். தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்றெல்லாம் உரக்கப் பேசுவார்கள். அந்தக் கூட்டத்திற்குப் போனால் மெக்கானிக் வேலை கிடைக்காது என்று நாமிரெட்டி அண்ணா மிரட்டுவார். அதனாலேயே அந்தப் பக்கம் போகமாட்டான் வைரமுத்து. அப்படி கம்யூனிஸ்ட் கூட்டம் நடக்கும் சமயங்களில் ராயபுரம் ரயிலடிக்குப் போய் நேரம் கடத்திவிட்டு அதன்பிறகு துறைமுகத்திற்கு வருவது அவன் வழக்கம். அதேபோன்று அன்றைய தினமும் துறைமுகம் பக்கத்தில் கட்சிக் கூட்டம். எதற்கு வம்பு என்று வைரமுத்து ராயபுரம் ரயிலடி நோக்கி நடக்கத் தொடங்கினான். ஆனால் ரயிலடியில் ஏதோ கலவரம்போலத் தோன்றியது. நீண்ட லத்திகளால் போலீஸ்காரர்கள் அங்கும் இங்கும் விரட்டிக்கொண்டிருந்தார்கள். கைகளில் தார் முக்கி எடுத்த சவுக்குக் கட்டைகளை வைத்திருந்த பலர் சிதறி ஓடினர். ராயபுரம் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையை நான்கைந்து நபர்கள் கையில் வைத்திருந்த தாரால் அழித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் கைகளில் இருந்து தார்க் குச்சிகளைப் பிடுங்க போலீஸ்காரர்கள் போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த வைரமுத்துவுக்குத் தொடையெல்லாம் உதற ஆரம்பித்தது. ‘அங்க கட்சிக்காரங்க தொல்லைன்னு இங்க வந்தா, இங்கயும் கலாட்டாவா இருக்கே’ என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். ஆனால் ராயபுரம் பெயர்ப் பலகை அருகே காட்டாயி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவளை நோக்கி ஓடினான். அவன் அருகில் செல்லவும் கையில் வைத்திருந்த லத்தியால் போலீஸ்காரர், வைரமுத்துவின் தொடையில் மடாரென்று போட்டார். நெருப்பு பட்டதுபோல் சுரீரென்றது வைரமுத்துவுக்கு. அதனைப் பொறுத்துக்கொண்டு “ஐயா, ஐயா, என் சம்சாரம் என் சம்சாரம் கூட்டத்துல மாட்டிக்கிட்டாங்க அவளைக் கூட்டிப்போக வந்தேன்” என்று உடம்பெல்லாம் உதற சொல்லி முடித்தான் வைரமுத்து. ``சம்சாராமா, யாரு, கையில் குழந்தையோடு போர்டு பக்கத்துல நிக்குறாளே அவளா?” என்று கேட்டார் நீண்ட தொப்பி போட்டிருந்த ஒரு அதிகாரி. ``ஆமாம் ஐயா” என்றான் வைரமுத்து. ``அறிவு இருக்காடா உனக்கு? அவதாண்டா மொதல்ல தார்க்குச்சிய எடுத்துக்கிட்டு ரயில்வே ஸ்டேஷன் நேம் போர்ட அழிக்க வந்தா” என்று இவனிடம் கொந்தளித்தார். ``போ, போய் ஒழுங்கு மரியாதையா அவளை இங்க இருந்து கூட்டிட்டுப் போ” என்று மிரட்டினார்.காட்டாயியிடம் நெருங்கிய வைரமுத்து, “என்ன இங்க நின்னுட்டு இருக்க, அதுவும் கொழந்தைய கையில் வச்சிக்கிட்டு” என்று பதறினான். ``நான் வூட்டாண்ட ஒக்காந்துட்டுதான் இருந்தேன். சத்தியவாணி அக்காதான் அண்ணாதுரை போராட்டம் பண்ணச் சொன்னாரு, தமிழ் பேசுற ஊர்ல இந்தி எதுக்குன்னு அழிக்கச் சொன்னாருன்னு சொன்னா. நியாயமா பட்டுச்சு, அதா நானும் கிளம்பி வந்துட்டேன்” என்று கூறினாள் காட்டாயி. ``அதுக்கு புள்ளையை இடுப்பில வச்சிட்டு வந்துடுவியா? லத்திய பாத்தியா? ஒவ்வொண்ணும் எவ்ளோ நீளம் இருக்கு? அவங்க அடிச்சுப் பழகுனுவங்க, நமக்கு எதுக்கு வம்பு? போய்டலாம் வா” என்று அழாத குறையாகக் கேட்டான். ``லத்தியா? யோவ், அதவிட நாலு மடங்கு நீளமான தொழாவ போட்டுக் கட்டுமரம் வலிச்சிருக்கேன்யா...

இத்தப் பாத்து ஓடச் சொல்றியா?” என்று அவனைத் தள்ளி விட்டாள்.இந்தக் கூச்சல்களுக்கு மத்தியில் இடுப்பில் இருந்த சேகர் அழ ஆரம்பித்தான். ``புள்ள அழுது காட்டாயி, வூட்டுக்குப் போயிடலாம்” என்று கண்ணீர் விடாத குறையாகக் கெஞ்சினான் வைரமுத்து. ``போம்மா, போம்மா, புள்ளைய வச்சிட்டு இருக்கேன்னு வுட்றேன்” என்று தொப்பிக்காரர் அடுத்தவர்களை விரட்ட ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து வீட்டிற்கு நடந்தே வந்தனர். “ஏன் இப்பிடிப் பண்ணுற காட்டாயி” என்று புலம்பினான் வைரமுத்து. “நான் எவனுக்காச்சும் பல்லு காட்டுனேனா?” என்று ஒரே போடாகப் போட்டாள் காட்டாயி. ``ஐயோ நான் அப்பிடிச் சொல்லல, இந்த அரசியல் போராட்டம்லா நமக்கு எதுக்கு... நீ கருவாட்டுக்குப் போற, சாவுக்கூத்துக்குப் போற அது போதாதா?” என்று கேட்கவும் வீடு வரவும் சரியாக இருந்தது. சேகரைத் தூங்க வைத்தாள் காட்டாயி. சில மாதங்கள் அமைதியாகப் போனது. அன்றைக்கு திருச்சினாங்குப்பத்தில் ஒரு இழவு. காட்டாயி தன் சகாக்களுடன் போய் எல்லாவற்றையும் முடித்துவிட்டுக் கிளம்ப மாலை ஆகிவிட்டது. வரும் வழியில் லட்சுமி கோயில் அருகே ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்தது.கூட்டத்தைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் காட்டாயி. நீண்ட துண்டுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த சிலர் தங்கள் பையில் வைத்திருந்த பெட்டி ஒன்றை மக்கள் திரளுக்கு நடுவே வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். “பாம்பு, பாம்பு” என்று கும்பல் அலறி அடித்துக்கொண்டு ஓட, காட்டாயி மட்டும் அசையாது நின்றுகொண்டிருந்தாள். மேடையில் இருந்தவர், “ஏம்மா, பாம்பக் கண்டு உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டார். “போடறவங்க போடட்டும், ஓடறவங்க ஓடட்டும், பேசறத நீங்க பேசுங்க, கேக்குறத நான் கேக்குறேன்” என்று திடமாக நின்றபடி கூறினாள் காட்டாயி. “இதோ அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பாரீர் மக்களே. காங்கிரஸ் கட்சியினர், கூட்டத்திலே பாம்புகளை விட்டாலும் பதறாமல் நிற்கும் புறநானூற்று வீரமங்கையின் புதுவடிவம்” என்று அவர் பேச, அதன்பிறகு அங்கிருக்கப் பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தாள் காட்டாயி. சேகருக்கு ஏழு வயசு ஆகும்போது காஞ்சிபுரத்துல அண்ணா ஜெயிச்சுட்டாருன்னு பேப்பர்ல வந்த செய்தியை வைரமுத்து படித்துக் காண்பித்த போது காட்டாயிக்குத் தானே ஜெயிச்சதுபோல் தோன்றியது. அன்றிரவு முதல்முறையாக மினர்வா தியேட்டருக்குப் போய் தாய்க்குப் பின் தாரம் படம் பார்த்தார்கள் வைரமுத்துவும் காட்டாயியும். வரும்போது தள்ளுவண்டியில் விற்ற லாடு வாங்கி தூங்கி விழுந்த சேகருக்கு ஊட்டினாள் காட்டாயி. திருவொற்றியூர்க் கடற்கரையில் இருந்த காசி விஸ்வநாதர் கோயிலில் சேகருக்கு முடி இறக்கினாள் காட்டாயி. அப்போது சிரித்தபடி கேட்டான் வைரமுத்து, “அண்ணாவ உனக்கு அவ்ளோ புடிக்கும், ஆனா கோயில்ல புள்ளைக்கு மொட்ட போடற.

உன் அண்ணா பார்த்தா கோச்சிக்கப் போறாரு” என்றான் வைரமுத்து. “அண்ணா என்ன கோயிலுக்குப் போகக்கூடாதுன்னு சொன்னாரா? கோயிலுக்குப் போறவங்கள கையப் புடிச்சு இழுத்தாரா?” என்று இடுப்பில் கைகளை ஊன்றியபடி கோவத்துடன் கேட்டாள் காட்டாயி. இதற்குமேல் பேசினால் அவளை அடக்க முடியாது என்று பம்மிக்கொண்டான் வைரமுத்து. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அடுத்த ஐந்து வருடங்களில் வைரமுத்து துறைமுகததில் மெக்கானிக் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டிருந்தான்.

1962-ம் வருஷம் கப்பலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தவறி கடலுக்குள் விழுந்த வைரமுத்து கான்கிரீட் தளத்தில் மோத, அவன் இடுப்பு எலும்பு முறிந்தது. நடந்து போனவனைத் தொட்டில் கட்டித் தூக்கி வந்தார்கள்.

அலுங்காமல் படுக்கையில் படுக்க வைத்த அவனை இடுப்புக்குக் கீழே தொட்டுக்காட்டி “சப்ப நகந்துடுச்சுமா, பத்திரமா பாத்துக்க. எல்லாமே இனி படுக்கையில்தான்” என்று கூறிவிட்டு நகர்ந்தார்கள். அதேநாளில் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். ஓங்கிக் குரலெடுத்து அழுதாள் காட்டாயி. வைரமுத்து அடிபட்டதற்கு அழுதாளா, அண்ணாதுரை தோற்றுப் போனதற்கு அழுதாளா என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவன் மெக்கானிக்காக மாறியதிலிருந்து சாவுக்கூத்து ஆடுவதை நிறுத்தி வைத்திருந்த காட்டாயி அதன்பிறகு எல்லா இழவுக் கச்சேரிகளையும் ஒப்புக் கொண்டாள். சமயத்தில் பழவேற்காடு வரைகூடப் போய் ஆடிவிட்டு வந்தாள். வைரமுத்துவைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டு வாசலிலேயே இட்லிக் கடை ஒன்றைப் போட்டாள் காட்டாயி. காசிமாநகர், சிங்காரவேலர் குப்பம் போன்ற தெருக்களில் இருந்து காட்டாயி கடைக்கு வருவதை ஊர்மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டனர். அதுவும் காட்டாயி செய்யும் அட்லாப்பம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிப்போனது. அரிசி மாவு, கடலை மாவு, ரவை, வெல்லம் ஆகியவற்றைக் கலந்து அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றித் தேங்காய் போட்டு அடுப்பில் மூட்டம் போட்டு இறக்கி வைத்தால் அட்லாப்பம் தயார். படுத்த படுக்கையாக இருந்தாலும் சமயங்களில் வைரமுத்துவும் அட்லாப்பத்தின் சுவைக்கு அடிமையாகிக் கேட்பான், “காட்டாயி ரெண்டு துண்டு பிச்சு வாயில போடேன்’’ என்று.

வைரமுத்து நடமாடிக் கொண்டிருந்தவரை அவனை ஏகத்துக்கும் திட்டிய காட்டாயி அவன் எப்போது படுத்தானோ அன்றிலிருந்து கடிந்து ஒருவார்த்தை சொன்னதில்லை. “கொஞ்சம் தண்ணி கொடு சேகரு” என்று மகனிடம் வைரமுத்து குரல் கொடுத்து அதனை சேகர் கேட்க மறுத்தால், அன்றைய தினம் பேயாடி விடுவாள் காட்டாயி. இதனாலேயே வீட்டில் தங்காமல் பள்ளிக்கூடமும் செல்லாமல் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கிக்கொண்டான் சேகர். என்னதான் காட்டாயி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டாலும் படுத்துக் கொண்டே இருந்ததால் வைரமுத்துவின் முதுகில் ஏராளமான புண்கள் வர ஆரம்பித்தன. ஓரிருமுறை வீட்டிற்கு வந்து பார்த்த மருத்துவர்களும் அதன்பிறகு வருவதை நிறுத்திக் கொண்டனர். சீழ் வடியும் அவன் முதுகை முகங்கோணாமல் பஞ்சினால் துடைத்து பவுடர் போட்டு படுக்கைத் துணிகளை அடிக்கடி மாற்றி, சமயங்களில் கட்டிலைத் தரதரவென்று இழுத்து வெளியில் போட்டு வெயில் அவன்மீது படும்படி செய்வாள் காட்டாயி. ஒருநாள் தூங்கி எழுந்தபோது சிரித்தபடியே செத்துக் கிடந்தான் வைரமுத்து. 17 வயது இளைஞனாக மாறிவிட்ட சேகர் அப்பாவின் மரணத்தை சாக்காக வைத்து பிராந்தி பாட்டிலை மடக்கென்று வாயில் கவிழ்த்துக் கொண்டான். காசிமேட்டின் முக்கியத் தலைக்கட்டாக இருந்தவர் பட்டுச்செட்டி. அவரின் மகன்தான் வைரமுத்து. அதனால் ஊரின் பழைய ஆட்கள் ஒன்றுதிரண்டு வந்து ஆகவேண்டிய காரியங்களைச் செய்ய ஆரம் பித்தனர். எல்லா இழவு வீட்டிலும் சடங்குகளை முன்னின்று செய்யும் காட்டாயி, சுவரில் சாய்ந்து வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வைரமுத்துவைக் குளிப்பாட்டி மயானத்திற்குத் தயார் செய்தார்கள். திடீரென தெருவில் பட்டாசு சத்தம் பலமாகக் கேட்டது. “திமுக ஜெயிச்சுடுச்சு, திமுக ஜெயிச்சுடுச்சு” என்று கத்தியபடியே வண்ணாரப் பேட்டை இளைஞர்கள் ரிக்ஷாவில் ஊர்வலமாகச் சென்றார்கள். திடுமென எழுந்து வெளியே ஓடிய காட்டாயி, ஒருவனை மறித்து “அண்ணா ஜெயிச்சிட்டாரா” என்று கேட்டாள். அந்த இளைஞனுக்கு பதில் தெரிய வில்லை. “திமுக ஜெயிச்சுடுச்சு, அப்படின்னா அண்ணாவும் தானே ஜெயிச் சிட்டாரு” என்று ஒருமாதிரி யாகச் சொல்லி வைத்தான். வைரமுத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. போதை தலைக் கேறியதால் நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டி ருந்தான் சேகர்.

சேலையை இழுத்து இடுப்பில் செருகிய காட்டாயி, டர்ணக்கு டர்ணக்கு என்று இழுக்கப்பட்ட தாளத்திற்கு இணையாக ரோட்டில் தாறுமாறாக ஆடினாள். சாலையின் ஒருபக்கம் ரிக்ஷாவில் திமுகவின் வெற்றி ஊர்வலம், இந்தப் பக்கம் வைரமுத்துவின் இறுதி ஊர்வலம். நடுவில் ஆடிக்கொண்டிருந்தாள் காட்டாயி. வைரமுத்து போன பிறகு இட்லிக்கடை போடுவதை நிறுத்தி விட்டாள் காட்டாயி. வைரமுத்துவின் பென்ஷன் பணம் அவளுக்கு வந்தது. சேகர் படித்திருந்தால் அவனைத் துறைமுகத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார்கள். ஆனால் அந்தத் தற்குறி படிக்காமல் அம்மாவுக்கு எதிரிலேயே வில்ஸ் நேவிகட் சிகரெட்டை 50 பைசா கொடுத்து வாங்கிப் புகைக்க ஆரம்பித்திருந்தான். அதனால் வைரமுத்து இறந்தபின்பு கிடைத்த பணத்தைக் கொண்டு பூண்டி தங்கம்மாள் தெருவில் வீடு ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டாள். வீட்டில் புழங்கிய பணமும், நண்பர்களின் சகவாசமும் சேகரை கத்தியைத் தூக்கி கலாட்டா செய்ய வைத்தது. வைரமுத்துவின் மரணம், சேகரின் ரவுடித்தனம் இரண்டும் சேர்ந்து காட்டாயியை மிகவும் ஒடுக்கிவிட்டது. முன்புபோல இப்போதெல்லாம் அவளால் சாவுக்கூத்துக்குச் செல்ல முடிவதில்லை. அதேசமயம் பன்னீர்ப் புகையிலையும், பிராந்தி பாட்டிலும் அவளை விடாமல் ஒட்டிக்கொண்டன. இரண்டே வருடத்தில் காசிமேட்டின் முக்கிய ரவுடியாக உருமாறியிருந்தான் சேகர். அவனை நினைத்து வருந்துவதா? அண்ணா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளாரே அவருக்காக வருந்துவதா என்று வேதனையில் உருக்குலைந்து போனாள் காட்டாயி. ராயபுரத்தில் நடந்த கொலைமுயற்சி ஒன்றில் முதல்முறையாகக் கைதாகி சேகர் சிறைசென்ற அன்றைய தினம்தான் அண்ணாதுரை இறந்துபோனார் என்ற தகவலும் காட்டாயிக்குக் கிடைத்தது. ஒருநொடி உலகமே இருண்டுபோனது. மகனைப் பார்க்க சென்னை மத்திய சிறைச்சாலை வரை சென்ற காட்டாயி, பொறுக்க முடியாமல் அண்ணாவைப் பார்க்க ஓடினாள். கட்டுக்கடங்காத கூட்டம். அண்ணாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை காட்டாயியால். தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களைத் தள்ளி விட்டு சாவுக்கூத்து ஆட ஆரம்பித்தாள் காட்டாயி. அவளை அடிக்கப் பாய்ந்த போலீஸ்காரர் ஒருவரை மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி “ஆடட்டும் விடு” என்றார். காட்டாயி ஆடிக்கொண்டே இருந்தாள். ஊரே வேடிக்கை பார்த்தது. தன்னைமறந்து ஆடிக் கொண்டிருந்தாள் காட்டாயி.

சில மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளிவந்த சேகர், வீட்டில் காட்டாயி இல்லாததைக் கண்டு உறவினர்களிடம் விசாரித்தான். கடைசியாக அண்ணா சாவுக்கு அவள் ஆடியதைத்தான் எல்லாரும் பார்த்தார்கள்.

பிறகு அவள் என்ன ஆனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. எல்லார் மனதிலும் கடைசிவரை ஆடிக்கொண்டே இருந்தாள் காட்டாயி.