
26.09.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
`அவள்தானா அது?’ - மீண்டும் ஒருமுறை உற்றுப்பார்த்து உறுதிப்படுத்த முயன்றார் முத்துசாமி. அவளாகவும், அவளாக இருப்பாளோ என்கிற சந்தேகமும் சேர்ந்தே இருந்தது அவருக்கு. மூக்குக் கண்ணாடியை வேட்டியில் துடைத்துப் போட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தார். இன்னும் முழுமையாகப் பிடிபடவில்லை.
பக்தர்களிடமிருந்து வரும் இரைச்சல், அருகில் நிற்கும் பெண்ணிடம் அவள் ஏதோ சொல்வதைக்கூடக் கேட்க விடவில்லை. அந்தப் பேச்சுச்சத்தம் கேட்டாலும் அவள்தானா என்பதை உறுதிப்படுத்திவிட முடியும். இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே மிதந்துகொண்டு நிற்கிறது, அவளது மென்மைக் குரல்.

நடக்க ஆரம்பிக்கிறாள் அவள். இப்போது பின்தொடரவில்லை என்றால், கூட்டத்துக்குள் அவள் காணாமல்போகக்கூடும். இன்று விட்டுவிட்டால் இனி அவளை எப்போது பார்க்க முடியுமோ? அவசரமாகக் கூட்டத்தை விலக்கி முன்னேற முயல்கிறார். இவர் அவசரத்துக்கு யாரும் அப்படி விலகுவதாகத் தெரியவில்லை. அங்கும் இங்குமாகச் சிலரை லேசாக இடித்து, முன்னகர்கிறார். அவள் போவதில் ஒரு கண்ணும் கூட்டத்தில் ஒரு கண்ணுமாக வைத்தபடி முன்னேறிக்கொண்டிருக்கிறார்.
வடக்கு ரதவீதியைக் கடந்து கிழக்கு ரதவீதிக்குத் திரும்பும் முக்கில் பெரிய தேர் நின்றபோது, குடும்பத்தோடு சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர்களில், அந்த முகம் மட்டும் இழுத்து நிறுத்தியது, முத்துசாமியை. கடந்த சில வருடங்களாக அவர் தேடிக்கொண்டிருக்கிற, அல்லது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிற வள்ளிநாயகி, அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
தேருக்கு இடது பக்கத்தில் நண்பன் சண்முகசுந்தரத்துடன் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் தற்செயலாக முன்னால் பார்த்தார் முத்துசாமி. ஒரு நொடிதான். அவள் வள்ளிநாயகி என்று தெரிந்ததும் மனதுக்குள் குதியாட்டம். இருந்தாலும் அவள்தானா என்கிற சந்தேகமும் வந்து உட்கார்ந்துகொண்டது.
வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை தேர் பார்க்கக் கூட்டம் அதிகம். பார்க்க என்பது மிகச்சரியே. தேரின் வடத்தைப் பிடித்து இழுக்க யாரும் தயாரில்லை. `இந்த வேனல்ல என்னத்த போட்டு இழுக்க?’ என்று நினைத்திருக்கலாம். அல்லது குனிந்து நிமிர முடியாததும் காரணமாக இருக்கலாம். அடிவயிறுவரை தொங்கும் தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்திருக்கிற அந்தப் பெரியவர், ‘`எளவட்ட பயலுவோ எல்லாம் இப்படி ஓரமா ஒதுங்கிட்டா என்னடே அர்த்தம்?’’ என்று வடம் பிடித்து இழுக்க அழைத்துக்கொண்டிருந்தார்.
கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும் வியர்வை வடிய வடிய சைலப்பரை தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள். தேரோட்டத்துக்காக, பந்தலுக்குள் முளைத்திருக்கிற மிட்டாய்க் கடைகளும் குழந்தைகளுக்கான பலூன், துப்பாக்கி உள்ளிட்ட விளையாட்டுச் சாமான்களைக் குவித்திருக்கும் கடைகளும் புதுமையான அழகைத் தந்துகொண்டிருக்கின்றன. அந்தந்தக் கடைகளில் குவிந்திருக்கிறது கூட்டம். இவைதவிர, சைக்கிளில் ஐஸ் மற்றும் காபி விற்கும் வியாபாரிகளும் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டி ருக்கிறார்கள். மரங்களுக்குக் கீழே, தென்னை மற்றும் நுங்கு வியாபாரிகளும் தீட்டப்பட்ட அரிவாள்களுடன் பிஸியாக இருக்கிறார்கள். தேர் சுற்றும் வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கிற இலவச பானகாரம், நீர் மோர் வழங்கப்படும் தட்டிப் பந்தல்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
பின்னால், பெண்கள் இழுக்கும் சின்னத் தேர் வருகிறது. சரசரக்கும் பட்டுப்புடவைகளிலும், வியர்வையில் நனையும் முகங்களிலிருந்து வடியும் பசையான பவுடரைத் துடைத்துக்கொண்டும் பெண்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள், பக்தியோடு.
முன்னொரு காலத்தில் இதே சின்னத் தேர், வீதிக்குச் சென்று கொண்டிருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் அவளோடு கைபிடித்து நின்ற நாள்கள் ஞாபகத்துக்கு வந்தன.
முத்துசாமிக்கு, ‘அது, அவள்தானா’ என்கிற சந்தேகம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவள், வள்ளிநாயகியாகவே இருந்துவிட வேண்டும் என்று, தேரில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் சைலப்பரை வேண்டிக்கொண்டார். அவரது சந்தேகத்துக்கான காரணம், அப்போதைய வள்ளிநாயகிக்கும் இப்போதைய நாயகிக்குமான கால இடைவெளி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள். பல மற்றங்களைத் தன்னால் கொண்டு வந்து சேர்த்து விடுகிற காலம், முகச்சாடைகளை மட்டும் அப்படியேவா வைத்திருக்கும்?
கூட்டம் விலக்கி, வேகவேகமாக நடக்கிறார் முத்துசாமி. அவள்பற்றிய ஞாபகப் பரபரப்பில், கூட்டத்தில் கோன் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன்மீது எதிர்பாராமல் மோதியதில், அவன் கையில் இருந்த ஐஸ் தரையில் விழுந்து, மண்ணானது. உதட்டின் மேல், கீழ் மற்றும் கன்னங்களில் ஐஸ் இழுவியிருக்கும் சிறுவன், முறைத்துப் பார்த்தான் அவரை. ‘பாக்காம இடிச்சுட்டன்டே… கூட்டத்துக்குள்ள இப்படியா தின்னுட்டு வருவே?’’ என்று சமாளித்த முத்துசாமியை, அந்தச் சிறுவனின் அப்பாவும் முறைத்தார். சிறுவன், விழுந்துகிடந்த கோன் ஐஸைப் பார்த்தான். அதன்மீது இரண்டு மூன்று பேரின் கால்கள் ஏறியதும், வெறுப்பாக அவரை மீண்டும் முறைத்தான்.
``ஓரமா நின்னு தின்னுட்டு வந்திருக்கலாம்லா…’’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு முன்னேறுகிறார் முத்துசாமி.
‘`உன்னைலாம்…’’ என்று சிறுவனை அடிப்பதற்குக் கையை ஓங்கிய அவனின் அப்பாவைக் கவனிக்காமல் நடக்கிறார்.
நான்கைந்து பெண்களுடனும் ஒரு பெரியவருடனும் சின்னத்தேர்போல் அசைந்து சென்றுகொண்டிருக்கிறாள் வள்ளிநாயகி. அவளுடன் நிற்கும் அவர்கள் யாரும் முத்துசாமிக்குத் தெரிந்தவர்கள் இல்லை. அவள் கணவர்வழி சொந்தமாக இருக்கலாம். கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். தலையின் பின்பக்கம் நரைத்திருக்கும் இடத்தில் அவள் அடித்திருக்கிற `டை’ மங்கலாகத் தெரிந்துகொண்டிருக்கிறது. இன்னும் நான்கைந்து நாள்களில் அது முழுமையாக நரைமுடிகளை வெளிப்படுத்தும். இடது தோளில் தொங்கிக்கொண்டிருக்கிறது, அழகான ஹேண்ட்பேக். இந்தக் கூட்டத்துக்குள் அது திருட்டுப்போகவும் வாய்ப்பிருக்கிறது. அதை அவள், பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கவலை முத்துசாமிக்கு.
வள்ளிநாயகிமீதான காதல் எங்கு தொடங்கியது என்பது அவருக்குத் தெரியவில்லை. பாண்டிராசா கோயில் கொடையின் மூன்றாவது நாள், படைப்புச் சோறு வாங்கும்போதுதான், அவளிடமிருந்து வந்த அந்தப் பார்வையைக் காதலென உணர்ந்தார். அந்தப் பார்வை அப்படியே அவர் கண்களுக்குள் நிலையாய் நின்றுவிட்டது. இப்போதும் அந்தப் பார்வைதான் அகல விரிந்து தொடர் துன்புறுத்தலுக்கு அவரை ஆளாக்கித் தேடச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
பிறகொருநாள், அவர் வீட்டுக்கு வந்த வள்ளிநாயகி, ``ஏத்தெ, இதை அத்தானுக்கு வச்சுக்கொடுங்க, நானே செஞ்சது’’ என்று அவர் இருக்கும்போதே, நெத்திலிக் கருவாட்டுத் தலை மொளவாடியை, சிறு சம்படம் ஒன்றில் வைத்துக் கொடுத்துவிட்டு, தன் காதலை உறுதியாக ஊன்றிவிட்டுப் போனாள். பழைய சோற்றுக்கு அந்தப் பொடி மட்டும் இருந்தால் போதும். முத்துசாமிக்கு இரண்டு சட்டிச் சோறு இறங்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள்.

வழக்கமாக காதலிகள் ரோஜா, அழகழகான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகள் உள்ளிட்டவற்றைக் கொடுத்துக் காதல் வளர்க்கும்போது, இப்படி நெத்திலித் தலை மொளவாடி கொடுத்துக் காதல் வளர்த்தது இவளாகத்தான் இருப்பாள் என்று நினைத்துக்கொண்டார் . பிறகு மௌனமாகவே பல நாள்களாகத் தொடர்ந்த சந்திப்பு, மெள்ள மெள்ளக் காதலாகக் கனிந்துருகி, செம்புலப்பெயல் நீரான காலத்தில், படித்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஒரே குடும்பம் என்பதால் இந்தக் காதல் நிறைவேறும் என அவர் எண்ணியது, அறியாப் பிழை. குடும்ப முன்பகை காதலைக் காவுவாங்கும் என்பதை அவர் அறியவில்லை.
அணைக்கு மேலே, காட்டுக்குள் பளிஞ்சி அருகே கல்லாறும் தோணியாறும் இணையும் இடத்தில் இருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்த நாளொன்றில், அப்பாவிடமும் அம்மாவிடமும் சொன்னார் முத்துசாமி, வள்ளிநாயகியைத்தான் திருமணம் செய்வேன் என்று. சாமிகொண்டாடியான அப்பா, அருள் வராமலேயே ஆடினார். அப்போது அவளும் குடும்ப சகிதம் அந்தக் கோயிலுக்கு வந்திருந்தாள். குடும்பத்துக்குள் வெட்டுக்குத்து விழாத குறையாக, பெருஞ் சண்டை நிகழ்ந்தது குலசாமியின் முன்னால்.
இதற்கான காரணம் மிகச் சாதாரணமானது. `‘என்னைய ஆடுகளவாணி பயன்னு சொன்னாம், அவா அப்பேன். அந்தப் பயட்ட போயி, உம் மவளைக் கொடுன்னு கேட்கச் சொல்லுதியோ?’’ என்று சாமிகொண்டாடி அப்பாவும், ‘`நாலு வயக்காட்டை வச்சிருந்தா, அவம் என்ன பெரிய இவனா? எங்கிட்ட வந்து பொண்ணு கேப்பானோ, முட்டாப் பய? அவனுக்கெல்லாம் என்ன தெரியும்?” என்று அவள் தந்தையும் கோயிலின் வெவ்வேறு பகுதியில் அமர்ந்து ரகசியமாகத் திட்டியது, ஒவ்வொருவர் வாயில் இருந்தும் வேறு வேறு மாதிரி வெளிப்பட்டு, இருவர் காதுக்கும் வந்தபோது, குலதெய்வத்தின் முன் ஒரு காதல், உடைந்து சிதைந்திருந்தது.
இதற்குப் பின் வள்ளிநாயகி அவசரம் அவசரமாக மதுரையில் அரசுப்பணியில் இருந்த, அசல் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள் என்பது முன் கதை.
இந்தச் சம்பவத்துக்குப்பின் குடும்பம் பிரிந்தது. அவளை அவரும் அவரை அவளும் சந்திக்கவில்லை. கடைசியாக அவளிடமிருந்து ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்திருந்தது அவருக்கு. ``வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். இன்றே அழைத்தால்கூட, எங்கள் வாசல் தாண்டத் தயாராக இருக்கிறேன். உங்கள் முடிவுக்காக... வள்ளிநாயகி’’ என்று எழுதப்பட்ட அந்தக் கடிதத்தைப் பல முறை வாசித்து ஏங்கிய முத்துசாமியால், அவளுக்கு எந்த உறுதியையும் கொடுக்க முடியவில்லை.
முத்துசாமி இப்போது விவசாயி என்று சொல்லிக்கொண்டலைகிறார் ஊரில். வயலும் வாழ்வுமென இருந்த அவருக்கு, சமீபகாலமாக வயல் மட்டுமே இருக்கிறது. மூன்று பூ விளைச்சலில்லை. பெருங்கோடை, வயல்களைப் பாளம் பாளமாகப் பிளந்து மழைக்குக் காத்திருக்க வைத்திருக்கிறது. வானம் பார்த்து தவம் கிடக்கும் நிலத்தில், இனி தண்ணீரின்றி விளையும் தானியம் ஏதுமிருக்கிறதா என்று ஆலோசனை கேட்கலாமா என யோசித்திருக்கிறார் முத்துசாமி.
அப்போதே அரசுத் தேர்வு எதையாவது எழுதி யிருந்தால்கூட ஏதாவது வேலை கிடைத்திருக்கும். ஆனால், வள்ளிநாயகியைத் திருமணம் செய்துகொள்ள, பாசக்காரத் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், அவரைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு ஊர்சுற்றத் தொடங்கினார் முத்துசாமி. அவர் சொன்ன எதற்கும், அவரென்ன, எவர் சொன்னதற்கும் செவிசாய்க்காத முத்துசாமி, அப்பா மாரடைப்பில் இறந்த பிறகு வேறு வழியில்லாமல் வயக்காட்டு வேலையைப் பார்க்கப் போனார். தொடக்கத்தில் விருப்பமின்றி வயலுக்குள் கால் வைத்தவர், பிறகு அதிக ரசனையோடு பொழுதென்றும் வயல்களில் கிடக்கலானார். அவ்வப்போது, மனதுக்குள்ளி ருந்து துள்ளி எழும் வள்ளிநாயகி, ஓடைக்கரை களில், வயற்காட்டுச் சகதிகளில் அவரோடு ஓடியாடிக்கொண்டிருந்தாள் மகிழ்ச்சியாக. இந்த ஓட்டமும் ஆட்டமும்தான் அவர் வாழ்வை அழகாக இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
முத்துசாமியின் மகன்கள், படித்து முடித்து விட்டுத் தலைநகரத்தில் பணி யாற்றுகிறார்கள் என்பதால் பொருளாதாரப் பிரச்னை இப்போது அதிகம் அழுத்தவில்லை அவரை. இப்போதைய அவரது அழுத்தமெல்லாம், தனக்குள் நீந்தி நீந்திக் கரையேற மறுக்கிற விழிகள் நடுவில் அமர்ந்து கொண்டு எங்கெங்கும் தன்னையே காணவைக்கிற வள்ளிநாயகியை ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்பதுதான்.
வள்ளிநாயகியை அவர் சந்திக்காமல் இருந்தாலும் அவள் பற்றிய தகவல்கள் அவருக்கு வந்து சேரும், அவ்வப்போது. அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் அவள் கணவனுக்கு, இரண்டு மூன்று வருடத்துக்கொரு முறை டிரான்ஸ்பர் கிடைக்கும் என்பதால், ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறாள் என்றும் தற்போது மதுரையில் இருப்பதாகவும் எப்போதோ வந்த தகவல் சொன்னது.
உள்ளூர் நண்பனின் அப்பாவை, மதுரை மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார்கள், நெஞ்சுவலிக்காக. அவளை, அந்தத் தூங்கா நகரத்தில் எங்காவது சந்தித்துவிட மாட்டோமா என்ற நப்பாசையிலேயே முத்துசாமி, நண்பனின் அப்பாவைப் பார்க்கச்சென்றார். ஊருக்குத் திரும்பும்போது மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் அவள் வள்ளிநாயகியாகவே தெரிந்தாள். தனது வேண்டுதலை இவ்வளவு விரைவாக நடத்திக் காட்டிவிட்ட மீனாட்சிக்கு மானசிகமாகப் பெரும் நன்றியைத் தெரிவித்துவிட்டு, அவளை மீண்டும் பார்த்தார்.
மருந்துக்கடையின் வாசலில் நின்றிருந்தவளின் நீண்ட கூந்தலே, அது வள்ளிநாயகிதான் என்பதை உறுதிப்படுத்தியது. இவ்வளவு நீண்ட கூந்தலுடன் இந்தக் காலத்தில் யார் இருக்கிறார்கள்? கிளிப்பச்சை நிறத்தில் பூப்போட்ட சேலையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருக்கிற அவள், இப்போது புதிதாகத் தன்னைப்போலவே மூக்குக்கண்ணாடி போட்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே, சாலையை வேகவேகமாகக் கடந்தபோது, ஒரு டூவீலர்க்காரன் முறைத்துவிட்டுப் போனதைக் கவனிக்கவில்லை முத்துசாமி. அவள் நிற்கும் இடத்துக்கு அருகில் சென்றார். தன்னைப்போலவே அதே காதல் ஞாபகங்களுடன் அவளும் இருப்பாளா என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். அவள் திரும்பி நின்றிருந்தாள். வள்ளிநாயகியின் பின்பக்கக் கழுத்தின் கீழே, கொஞ்சம் இடப்பக்கம், பளிச்செனத் தெரியும் அதே மச்சம் இப்போது மங்கலாகத் தெரிகிறது. தலைநிறையப் பூ வைத்திருக்கிறாள். இது அவளேதான்.

நெஞ்சம் படப்படப்பானது. கொஞ்சம் பதற்றம். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என நினைத்துக்கொண்டே, அவளின் முன்பக்கமாகச் சென்று, ``வள்ளி…’’ என்றழைத்தார். வார்த்தை முடியும் முன்பே, அவள் வேறொரு பெண்ணாக இருப்பதைக் கண்டதும், சுதாரித்து மருந்து வாங்குவதுபோல கடைக்குள் சென்றார். ஒரு நொடியில் மாறியது எல்லாம். அவள் வள்ளிநாயகியின் சாயலைக் கொண்டவள்.
அந்தப் பெண், அவரை வித்தியாசமாகப் பார்த்து, மருந்து வாங்கிவிட்டு வந்த கணவனுடன் நகர்ந்தாள். சிறிது தூரம் கடந்ததும், திரும்பிப் பார்த்து முத்துசாமியைக் கைகாட்டி, கணவனிடம் ஏதோ சொன்னதைப் பார்த்தவர், திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
பிறகொரு முறை, அவள் கணவர் திருச்சிக்கு மாற்றலாகிவிட்டார் என்றும், அங்கு வசிப்பதாகவும் உறவினர் ஒருவர், யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்தார் முத்துசாமி. புறநகர்ப் பேருந்து நிலையத்தின் பின்பக்கம் இருக்கிற ஏதோ ஒரு தெருவின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். தெருப்பெயர் நினைவில் இல்லை. ஆனால், பேருந்து நிலையப் பின்பகுதி மனதில் பதிந்துவிட்டதை அடுத்து, இரண்டு முறை அங்கு சென்றிருக்கிறார். வீதிதோறும் விடாமல் தேடியலைந்தும் ஏமாற்றமே மிச்சம்.
இதற்குச் சில மாதங்களுக்குப் பின், வள்ளிநாயகி பற்றிய யோசனை ஏதுமில்லாத வெயில் கொளுத்திய வேனல் நாளொன்றில், தன் மகளைப் பாளையங்கோட்டைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பார்த்தார் அவளை. பாபநாசம், அம்பாசமுத்திரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில், சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள் சிரித்தபடி. காலுக்கடியில் டிராவல் பேக். அடுத்த நொடியே தனது மேனியில் வேறு விதமான மாற்றத்தை உணர்ந்தார் முத்துசாமி. அவளைச் சந்தித்து விடமாட்டோமா என்று ஏக்கத்தில் அங்கும் இங்குமாக எத்தனையோ முறை தவித்திருக்கிற முத்துசாமி, இன்று அதிர்ஷ்டவசமாக அவளைச் சந்திக்கப்போகிறார். காலம் இப்படித்தான், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராததைக் கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டார். இது அதிர்ஷ்டம். தேடித் தேடி, அலைந்து ஓய்ந்தவரின் முன் எதேச்சையாக வந்து நிற்கிறாள் அவள்.
சிறுவயதில் ஒன்றாகப் படித்த யார் யாரையெல்லாமோ, எதேச்சையாகப் பேருந்தில், பேருந்து நிறுத்தங்களில், கோயில்களில், சினிமா தியேட்டர்களில், பார்த்துவிட முடிகிறபோது, தான் நேசித்தவளை அல்லது தன்னை நேசித்தவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா என்ன? கண்டிப்பாகச் சந்தித்துவிடுவேன் என்கிற அவரது அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிறைவேறப்போகிறது என்ற எண்ணமே அவருக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
மகளை நிற்கச் சொல்லிவிட்டு, வள்ளிநாயகியின் அருகில் சென்றார். அவளை எப்படி அழைக்கலாம்? ‘`வள்ளி… எப்படியிருக்க?’’ ச்சீ… இதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல்? இப்போது அவள் அதிகாரி ஒருவரின் மனைவி, அதனால், ``எப்படி இருக்கீங்க?’’ என்பது கொஞ்சம் மரியாதையாக இருக்கும். இன்னும் சிலவாறு நடத்தப்பட்ட ஒத்திகைகள், சில நொடிகளில் முடிந்தன. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவள் அருகில் சென்றார். அதே நிறம். கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறாள் இப்போது. அவள் அணிந்திருக்கிற சேலையும் ஜாக்கெட்டும் அவ்வளவு ஈர்ப்பாக இருக்கின்றன. கிட்டே செல்லச் செல்ல படப்படப்பு அதிகமாகிறது. அவள் முன்னால் சென்று, ‘`வள்ளி..?’’ என்று அழைக்கத் தொடங்கி நிறுத்திய போதே, அவள் வள்ளி இல்லை என்பதும் அவளின் சாயலைக் கொண்ட இன்னொரு பெண் என்பதும் தெரிந்துவிட்டது. `ஸாரி’ என்று சொல்லிவிட்டுத் திரும்பியவனை அந்தப் பெண், ஏதோ சொல்லிச் சிரித்தாள். வள்ளிநாயகிக்கு இருக்கும் அழகான தெத்துப்பல் இவளிடம் இல்லை.
திருமணமாகிவிட்ட முன்னாள் காதலியை இப்படி, பெருங்காதலும் பேராசையும் கொண்டு தேடுவது முறைதானா என்று தனக்குள் பல முறை கேட்டிருக்கிறார். இதில் தவறென்ன இருக்கிறது? தன்மீது காதல்கொண்டிருந்த, தன்னையே திருமணம் செய்ய ஆசைகொண்டிருந்த பெண்ணைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று விளக்கமும் சொல்லிக்கொண்டார்.
அப்படிச் சந்தித்தாலும் என்ன நடந்துவிடப் போகிறது? ‘எப்படியிருக்க வள்ளி?’ என்று செல்லமான விசாரிப்பு. அந்த விசாரிப்பின் வழி, நீள்கிற ஏக்கங்களின் அலைகளில் நீந்திப் பயணிக்கிற ஒரு தவிப்பை நீர்த்துப்போகச் செய்யும், அல்லது, அதை அதிகரிக்கச் செய்யும் முயற்சி. அதோடு, திருமணத்துக்கு முன் தனது முடிவை எதிர்நோக்கி ஆழங்கொண்ட ஆசையோடு கொடுத்திருந்த கடிதத்துக்கு எந்தப் பதிலையும் சொல்லாத, தன்மீதான தவற்றுக்கும் இயலாமைக்கும் சேர்த்து ஒரு பகிரங்க மன்னிப்பு. சூழல் அனுமதித்தால் அவள் கால்களில் விழுந்து எழ வேண்டும். இது போதும்.
அந்த `போதும்’க்காகக் கிளைகள் விரித்துத் தவியாய்த் தவிக்கிறது மனது. கருமை பூசிய அடர் இருட்டில், சிறு ஒளி தேடி அலைகிற விழிகளாய், அவர் அந்தக் காதல் ஒளியைத் தேடிக்கொண்டி ருக்கிறார்.
தேர், அதற்குள் கீழ ரதவீதி முக்குக்கு வந்துவிட்டது. எங்கெங்கும் மனிதத்தலைகள். தேரை இழுப்பவர்களின் அவயமும் கொட்டுச் சத்தமும் கலந்து பேரிரைச்சலைத் தந்து கொண்டிருந்தன. இப்போது வள்ளி நாயகியும் அவளுடன் வந்த பெண்களும் பள்ளிக்குச் செல்கிற சாலையின் வழியில் இருக்கிற பழைமை யான ஆலமரத்தின் நிழல் தேடிச் செல்கிறார்கள், முந்தானையால் முகத்தில் வீசிக்கொண்டே. ``என்னா வெயிலு?’’ என்று சொல்லியபடி அங்கு ஏற்கெனவே பலர் நின்று கொண்டிருந்தார்கள்.
முத்துசாமியும் அவளைப் பின்தொடர்ந்து நடக்கிறார். இப்போது ஆட்களைக் கடந்து கடந்து, வள்ளிநாயகியின் அருகில் சென்றுவிட்டார். இது அவளாகவே இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே நின்றிருந்தார். தன்னைப்போலவே, அவளும் தன்மீதான காதல் பற்றி நினைத்துக்கொண்டி ருப்பாளா? இது வள்ளிநாயகியாக இருந்தால், இந்தப் பெருங்கூட்டத்தில் தன்னை அவள் கண்கள் தேடிக்கொண்டிருக்குமா? காதல்கொண்ட நாள்களில் நடந்த தேரோட்டத்தின்போது, பேசிய ஞாபகங்கள் அவளுக்கு நினைவிருக்குமா என்று யோசித்த படியே, அவளை நெருங்கி வந்து நின்றுகொண்டார்.
இப்போது மிக அருகில் நின்று பார்த்தார். தான் தேடிக்கொண்டிருக்கிற, பேசத் துடித்துக்கொண்டிருக்கிற, தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்ற பேராசையுடன் இருந்த, தனக்குப் பிடிக்கும் என்று நெத்திலிக் கருவாட்டுத் தலை மொளவாடி தந்த, அதே வள்ளிநாயகிதான் இது என்று தெரிந்ததும் உடலில் மெல்லிய நடுக்கம் நுழைந்து உடலெங்கும் பரவ ஆரம்பித்தது முத்துசாமிக்கு.
சிறுபதற்றம் சூழ்ந்து எப்போதும் இல்லாததோர் உணர்வைத் தந்தது. எத்தனை வருட ஏக்கம், இதோ முன்னால் நிற்கிறாள். பேசு பேசு என்று மனதை ஏதோ ஒன்று விரட்டிக்கொண்டே இருக்க, தேர்க்கூட்ட இரைச்சலைக் கிழித்தபடி, பின்னால் சொகுசு கார் ஒன்றின் ஹாரன் சத்தம். பின்பக்கத் தெருவில் இருந்து வந்து, வளைந்து திரும்பி நின்ற கார் எழுப்பிய ஒலி அது. அதில் இருந்த, முன்தலையில் அதிக முடி இல்லாத, பெரிய மீசை வைத்திருக்கிற ஆள், மீண்டும் அந்த ஒலியை எழுப்பியதும் வள்ளிநாயகியும் அவளுடன் நின்றிருந்தவர்களும் கையை ஆட்டியபடி காரை நோக்கி நடக்கிறார்கள்.
அவள் திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று ஏங்கியபடியே நின்றிருந்தார், காரையும் ஹாரன் ஒலியையும் எதிர்பார்க்காத முத்துசாமி. திடீரென மேலிருந்து பறவையொன்று போட்ட எச்சம் அவர் தோள்பட்டையில் விழுந்து தெறித்தது. அந்த எச்சத்தோடு வந்து விழுந்த வேப்பங்கொட்டை, அவர் காலுக்கடியில் கிடந்து சிரிப்பதுபோல இருந்தது அவருக்கு.
- ஏக்நாத்,
ஓவியங்கள்: எஸ்.ஏவி.இளையபாரதி
(26.09.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)