கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: மூணாம் நெம்பர் சைக்கிள்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

உமாதேவி

யுதபூஜை விடுமுறைக்காக சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டிருந்தன.இப்போதெல்லாம் காலேஜ் அரைநாள் லீவு கிடைத்தாலும் ஊருக்குப் போய்விட வேண்டும்போல் மனசு தவிக்கிறது. அப்பா அம்மாவின் வயதுமுதிர்வும் எனக்காக அவர்கள் காத்திருப்பதும் பறந்தடித்து ஓடவைக்கிறது. ”காலேஜி டீச்சரு அமுலா இது? எப்ப வந்திச்சி ஊர்லருந்து?” அரை மணிநேரத்துக்குள் இரண்டு மூன்று முறை கேட்டுவிடும் அம்மாவுக்கு ஞாபகமறதி இப்போது அதிகமாகிவிட்டது. கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்கிறார். ``எனுக்கு எத்தினி புள்ளிங்க... மேகநாதன், சண்முகம், ராஜா, ராதா, கலைவாணி, அமுலு, உமா, சித்ரா... எட்டுப் புள்ளிங்க தானே” என்று அடிக்கடி கேட்டு ஞாபகப்படுத்திக்கொள்கிறார்.

திருவண்ணாமலை-வந்தவாசி பேருந்துகள் தாம்பரத்திலிருந்தே புறப்படும் என்று செய்திகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. அறக்கப்பறக்க தாம்பரத்திற்கு வந்து வந்தவாசி பஸ்ஸைத் தேடும்போது தூரத்திலிருந்து கண்டக்டரின் “உத்தரமேரூர்... வந்தவாசி...சேத்பட்... போளூர் ஏறுங்க” என்ற குரல் கேட்டதும் வந்தவாசி வழியாகப் போகும் போளூர் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஐந்தாறு இருக்கைகளில்தான் ஆட்கள் இருந்தார்கள். நான் மூன்றாள் சீட்டின் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து வானத்தைப் பார்க்கும்போது மேகங்கள் கூட்டம் கூட்டமாய் பல உருவங்களாகி அதன் வீட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. பஸ்ஸைச் சுற்றிச்சுற்றி வந்து “அக்கா மக்காச்சோளம் வாங்கிக்கக்கா... அண்ணா மக்காச்சோளம் வாங்குண்ணா... அம்மா மக்காச்சோளம் வாங்கிக்கம்மா...” என்று வதங்கிக்கொண்டிருக்கும் பூவின் அரும்பைப்போல் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ஒன்பது வயதுச் சிறுமி. பெரிதாக நான் அதை விரும்பி சாப்பிடுவதில்லை என்றாலும் அவளுக்காக இரண்டு மக்காச்சோளம் வாங்கிக்கொண்டேன். பிறகு என் பேக்்கிலிருந்த எழுத்தாளர் இமையத்தின் ‘வீடியோ மாரியம்மன்’ சிறுகதைத் தொகுப்பை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். கூட்டம் ஏறியதும் பஸ் கிளம்பியது.

மூணாம் நெம்பர் சைக்கிள்
மூணாம் நெம்பர் சைக்கிள்

கண்டக்டர் வண்டியில் ஏறி விசில் அடித்ததும் என்னைப்போலவே கசகசத்துப்போயிருந்த எல்லோருக்கும் சந்தோஷம்தான். கண்டக்டர் மூஞ்சியை உர்ரென்று வைத்துக்கொண்டு “மழ பேஞ்சா இந்த வண்டியில ஒழுவும். நல்ல வண்டி இல்லியா, இந்த வண்டிய உட்டுக்கீறானுங்கன்னு கேக்காதீங்க. அப்டி ரொம்ப ஒழுகுச்சினா வழியில் இருக்குற எதனாவொரு டிப்போவுல கொண்டுபோயி நிறுத்திருவோம்... அப்பறம் ஏன் எதுக்குன்னு எங்ககிட்ட யாரும் கோவப்படக்கூடாது. பஸ்ஸு மெதுவாத்தான் போவும்... டைமுக்குப் போவலன்னு கேக்காதீங்க. வண்டி கண்டிஷனயும் எங்க கண்டிஷனயும் இப்பவே சொல்லிட்டேன். அப்பறம் தேவயில்லாம யாரும் உயிர எடுக்காதீங்கப்பா” என்று கறாராகப்பேசியது பஸ்ஸிலிருந்த சிலருக்குக் கோபத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியது. என் பக்கத்திலிருந்த அறுபது வயதைக் கடந்திருந்த ஒரு அம்மா “ம்... இவன் ஜம்பத்தப்பாரு....கவுருமெண்டு பணம்வாங்கற செலாக்கியத்துல பேசுறான்” என்று சொல்லிக் கொண்டிருக்குபோதே டிரைவர் வண்டியை எடுக்கத்தொடங்கினார். மழைக்காலம்தான் என்றாலும் பயணித்த மூன்று மணிநேரமும் வழியில் எங்கும் மழையில்லை.

இரண்டு மணிநேரத்தில் பஸ் வந்தவாசி கோட்டை மூலையில் வந்து நின்றது. ஆயுதபூஜைக்காக வந்தவாசியே கோலகாலமாகக் காட்சியளித்தது. கலர்க் காகிதங்கள், பலூன்கள், பொரி, வாழைக் கன்றுகள், கல்யாணப் பூசணிக்காய், எலுமிச்சை போன்றவற்றை சீசனுக்குக் கடைபோடும் விற்பனையாளர்கள் ஜரூராக கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர். நான் எப்போதும் போகும் ராஜா அண்ணனின் ஆட்டோவில் வீட்டிற்குப் போகும்போது மஞ்சள்-சந்தனத்தின் வாசமும் என் கூடவே வந்தது. மதியம் இரண்டு மணி என்பதால் அப்பா மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட கழனிக்குப்போயிருப்பார். அம்மா வராண்டாவில் இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார்.

சென்னையில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தால் அண்ணன்கள், அண்ணிகள், அக்காக்கள், குழந்தைகள், நாய், ஆடுமாடு, கோழிகள், பூனைகள் என வீடே ‘ஜே ஜே’ எனக் கூட்டமாக இருக்கும். பெரிய அண்ணி மல்லாட்டையை வறுத்துக்கொடுப்பது; ``கடாமேரி இருக்குற... இன்னும் அடுப்ப ஊதத்தெரியில” என அம்மாவிடம் திட்டு வாங்குவது; “எப்ப வருவன்னு அப்பா உன்ன கேட்டுக்கினே இருந்தாரு... நம்ம வெள்ளப்பசு கண்ணுபோட்ட சீம்பால் கடும்ப சாப்ட்ட ரெண்டுநாளும் உன்ஞாபகந்தான்... போன சனிக்கெழம சின்னபையமூட்டு சேகரும் கல்லூட்டு வெண்ணிலாவும் இஸ்துனு போய்ட்டாங்க. நீ வெச்ச டில்லி கனகாம்பரம் இப்ப நெறைய பூப்பூக்குது” என்று என் தங்கை எனக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஊர்க் கதைகள் என எதுவும் இப்போது இல்லை.

இயந்திர உலகம் எங்களைப் பிய்த்துப்் போட்ட பிறகு ஆளுக்கொரு திசையில் பிழைக்க ஓடிவிட்டோம்.

சேரில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்த அம்மா நான் கூப்பிட்டும் எழவில்லை. நல்ல தூக்கம். நான் உள்ளேபோய் வீட்டைப் பார்த்தேன். வீடெல்லாம் ஒரே ஒட்டடை. வெளித் திண்ணையில் கிடந்த தென்னந் துடைப்பத்தை எடுத்து வீடுமுழுக்க இருந்த ஒட்டடைகளை சுத்தம் செய்து சந்தில் கொட்டப் போனேன். அப்போது சந்தின் சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த துருப்பிடித்த எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிள் என்னையே முறைத்துப்பார்க்கத் தொடங்கியது.

“ம்... இவன் ஜம்பத்தப்பாரு... கவுருமெண்டு பணம் வாங்கற செலாக்கியத்துல பேசுறான்”

அப்பா எங்களைப் படிக்க வைத்துக் கல்யாணம் பண்ணி வைத்்ததற்கெல்லாம் காரணமாக இருந்தது அவர் வைத்திருந்த பங்க் கடைதான். பங்க் கடை வைத்த ஆறு மாதத்தில் இளங்காடு சொசைட்டி பேங்கில் சைக்கிள் லோன் போட்டு வாடகை சைக்கிள்ஷாப்பும் வைத்தார்.

மூணாம் நெம்பர் சைக்கிள்
மூணாம் நெம்பர் சைக்கிள்

அப்போது நான் வந்தவாசி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு ஐந்துமணிக்கு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது எங்கள் கடைமுன் ஊரிலுள்ள ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் கூடியிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நைலான் பையைத் தோளில் மாட்டியபடியே கூட்டத்தை நெக்கிக்கொண்டு உள்ளே போனேன். பார்ப்பதற்குப் பரவசமாக இருந்தது. ஒவ்வொன்றின் தலைமீதும் ஒருகொத்து மாங்கொத்தும் ஒருகொத்து மஞ்சள் சாமந்தியும் செருகியிருந்தது. சந்தன குங்குமமிட்டுக்கொண்டு அழகழகான பெண்கள் வரிசையாக நின்றிருப்பதுபோல் எட்டு சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கம்மா பாட்டி அப்பாவைப் பார்த்து ஆச்சரியத்தோடு “யாண்டா கொய்ந்த... வாடக சைக்கிளா இது? மணிக்கு எவ்ளோ ரூவா?” எனக்கேட்டதும் அப்பா “ஆமா சின்னாம்மா மணிக்கு எட்ணா... அரமணி நேரத்துக்கு நாலணா” என்று சொல்ல பாட்டி வாயைக் கையால் மூடிக்கொண்டு “இதின்னாடி புதுக் கதையா கீதே” என்று சொல்லும்போது கூட்டம் மெல்லக் கலையத்தொடங்கியது. எனக்கு சைக்கிள்களைப் பார்த்ததும் தாங்க முடியாத உற்சாகம்.

மணி ஏழானதும் அப்பா ஒவ்வொரு சைக்கிளாக வீட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார். என்னையும் கடைக்கு அழைத்துவந்து என்னிடமும் ஒரு சைக்கிளைக் கொடுத்து தள்ளச்சொன்னார். அது இந்த மூணாம் நெம்பர் சைக்கிள்தான். சைக்கிளின் பளு என்னைவிட அதிகமாக இருந்து என்பக்கமே சாய்ந்ததால் தள்ளுவதற்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. “பயிப்படாதமா...அப்பா இருக்குறேன் தைரியமா தள்ளிம்போ” என்று சொல்லி சைக்கிளின் பின்பக்கத்தைப் பிடித்துக்கொண்டே வந்து எனக்கே தெரியாமல் கொஞ்ச தூரத்தில் சைக்கிளை விட்டுவிட்டார் அப்பா. நான் நடுத்தெருவில் சைக்கிள் தள்ளிவருவதைக் கம்பத்து லைட் வெளிச்சத்தில் பார்த்த என்னுடன் படிக்கும் அம்மு, மதி, நளினி எல்லோரும் “ஏய் அமுலு சைக்கிள் ஓட்டிம்போறாடி...அங்கப்பாரு அமுலு சைக்கிள் ஓட்டிம்போறா” என்று நான் தள்ளிக்கொண்டு வருவதையே ஓட்டிப்போவதாகச் சொன்னதும் என் இரு கைகளையும் விட்டுவிட்டு மூணாம் நெம்பர் சைக்கிளில் பறப்பதுபோல் இருந்தது.

அவர்கள் சொன்னதற்காகவே ஒரு சனிக்கிழமை, வண்டு வீட்டு பொரடையின் வெட்டவெளியில் எங்கள் சண்முகம் அண்ணனிடம் கெஞ்சி மூணாம் நெம்பர் சைக்கிளைக் கொண்டுவந்து கொடுத்து அரைப்பெடல் அடிக்கக் கற்றுக்கொடுக்கச் சொன்னேன். ஒருவழியாக சைக்கிளைத் தட்டித்தட்டி ஏறி அரைப்பெடல் பழகியதோடு ஒரேநாளில் முழுப்பெடலும் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுச் செல்லக்குட்டி அண்ணன் “தே... கொழந்த அமுலு... ஒரே நாள்ல அரைப்பெடலும் முழுபெடலும் ஜம்முன்னு ஓட்டக் கத்துக்கன. ஏரோபிளாம்மாரி ஓட்ற கொழந்த நீ” என்று என்னைப் புகழ்ந்துவிட்டு “இந்த மூணாம் நெம்பர் சைக்கிளுக்குத்தான் காலைல இருந்து இங்கியே உன் பின்னாலயே சுத்திங்கடக்குறேன். கத்துக்கிட்டது போதும் கொழந்த. சைக்கிள கொஞ்சம் குடும்மா... முக்கிமான வேல இருக்குதும்மா...” எனச்சொல்லி என் பின்னாலேயே சைக்கிளின் கேரியரைப் பிடித்துக்கொண்டு நச்சரித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து நான் எப்போது மணி ஏழாகுமோ என்று சைக்கிள் ஓட்டுவதற்காகக் காத்திருந்தேன்.

மறுநாள் காலையில் ஜீவா அக்கா கூட குட்டகிணற்றுக்குப் போய் குதித்துக் குதித்து விளையாடிக் குளித்்துவிட்டு வந்த அசதியில் படுத்துத் தூங்கிவிட்டேன். சாயங்காலம் மணி நான்கு இருக்கும். ஊரில் எந்தப் பஞ்சாயத்து, பிரச்னையாக இருந்தாலும் அது எங்கள் கடை அருகில்தான் முடிவுக்கு வரும். அதனால் எப்போதும் அம்மாவுக்கு எங்கள் கடைப் பக்கம் ஒரு காது இருந்துகொண்டே இருக்கும். முறத்தில் கெவுரு நோம்பிக்கொண்டிருந்த அம்மா பதறியடித்துக்கொண்டு “எந்தப் பையன் இப்போ வம்பு எட்தாந்து வெச்சானோ” என்று சொல்லிக்கொண்டே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடினார். அம்மாவின் பதற்றத்தால் தூக்கம் கலைந்து வெளியே வந்து பார்த்தேன். எப்போதும்போல் எங்கள் கடைப்பக்கம்தான் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அம்மா ஓடிக்கொண்டிருந்தார். நானும் அவர் பின்னாலேயே ஓடினேன். எங்கள் கடைமுன் ஒரே களேபரமாகக் கூட்டம் கூடியிருந்தது. நான் கூட்டத்தில் புகுந்துசென்று அப்பாவின் பக்கத்தில் நின்றேன்.

“இந்த மூணாம் நெம்பர் சைக்கிளுக்குத்தான் காலைல இருந்து இங்கியே உன் பின்னாலயே சுத்திங்கடக்குறேன். கத்துக்கிட்டது போதும் கொழந்த. சைக்கிள கொஞ்சம் குடும்மா...”

புரியாமல் ``இன்னண்ணா சொல்ற. நா இன்னாண்ண பண்ணே” என அப்பாவியாகக் கேட்டார். முனுசாமி பெரியப்பா “உனுக்குத் தெரியாத இது எப்டி நடந்திருக்கும்?” என்றார். அப்பா “வெவரமா சொல்லுண்ணா” எனக் கேட்டார். முனுசாமி பெரியப்பா எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிளைக் காட்டி “எங்குடும்பத்துக்கே இந்த மூணாம் நெம்பர் சைக்கிள்தாண்டா ஜகினி...” என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. முனுசாமி பெரியப்பா அங்கிருந்த எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிளைக் கோபமாகப்பிடித்து ஆட்டி “இந்த சைக்கிள்ல தாண்டா எம்மொவன் செல்லக்குட்டி அந்த வக்கத்த பொண்ணு லச்சுமி மொவள கூட்னுபோயிருக்கான். அதுக்குக் காரணம் உம்மூணாம் நெம்பர் சைக்கிள்தாண்டா... இதாண்டா காதலுக்குத் தொணபோச்சி” எனச் சொன்னவுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘குபீர்’ எனச் சிரித்துவிட்டு “இந்தாளு இன்னாடா சைக்கிளாண்ட வந்து சண்ட போட்டுங்கீறான் பையன அடக்காத” எனச் சொல்லிக்கொண்டே கலைந்து சென்றார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது செல்லக்குட்டி அண்ணன் என்னிடம் கெஞ்சி மூணாம் நெம்பர் சைக்கிளை வாங்கிச் சென்றதற்கான காரணம்.

மூணாம் நெம்பர் சைக்கிள்
மூணாம் நெம்பர் சைக்கிள்

ஒருமுறை அப்பாவிடம் கெஞ்சி அழுது சாப்பிடாமல் இருந்து அடம்பிடித்து மூணாம் நெம்பர் சைக்கிளைப் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றேன். நான் முழுப்பெடலில் ஓட்டிப்போகும்போது அம்மு, மதி, நளினி எல்லோரும் என் சைக்கிள் கேரியரைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடிவந்தார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தின் உள்ளே நான் நுழையும்போது எங்கள் பிருந்தா டீச்சர் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனார். நான் வகுப்பில் இருந்தாலும் டீச்சர்கள் நடத்தும் பாடம் எதுவும் என் மண்டையில் ஏறவில்லை. என் ஞாபகமெல்லாம் எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிள்மீதே இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்ததும் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கள் கடைக்குப்போனேன். அங்கு கூடியிருந்த எல்லோரும் என்னைப் பார்த்து “யே புள்ள, உன்னால காலைலருந்து எவ்ளோ வேல கெட்டுப் போச்சி” என்று சொல்லிவிட்டு அப்பாவிடம் ”யோவ் மாமா... நாந்தான் காலைல மொத ஆளா வந்து கேட்டேன்” “இல்ல சின்னாப்பா நாந்தான் வந்தேன்” “இல்ல நாந்தான் வந்தேன்” என்று எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிளுக்காக அடித்துக்கொள்ளாத குறையாக ஆளாளுக்குக் கத்தி சண்டைபோட்டுக்கொண்டார்கள்.

என்னதான் எங்கள் கடையில் எட்டு சைக்கிள் இருந்தாலும் எங்களூர் ஆள்கள் “ஏய் ஒன்னான் நெம்பர் கோணடா; அஞ்சான் நெம்பர் ஓவரா மெறி வாங்குது; எட்டான் நெம்பர் பெண்டுப்பா; ரெண்டான் நெம்பர் காத்து நிக்கமாட்து” என்று ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு நோனாநொட்டு சொன்னார்கள். ஆனால் எல்லோருக்கும் இந்த மூணாம் நெம்பர் சைக்கிளைப் பிடித்திருந்தது. “ஓய்.... மூணாம் நெம்பர் சொம்மா குதிரமாதிரி போவுதுடா” என்று அதன்மீது ஒரு கண்ணிருந்ததுபோல் எல்லோருக்கும் இந்த மூணாம் நெம்பர் சைக்கிளோடு ஒருகதையும் இருந்தது.

ஊரில் ஒரு கல்யாணம் என்றால் ஊரே கொண்டாடும். அதுமாதிரி ஊரில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தாலும் ஊரே தவியாகத் தவித்துவிடும். ஒருவாரம் விடாமல் அடைமழை பெய்திருந்த நேரம். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எங்கள் வீட்டுக்குப்் பின்னால் தெருவில் இருக்கும் மண்ணம்மா அண்ணிக்கு ஒன்பது மாதத்திலேயே இடுப்புவலி வந்துவிட்டது. மழைக்காலம் என்பதால் ஊர்ப்பெண்கள் ஜன்னி வந்துவிடுமோ என்று வீட்டிலேயே பிரசவம் பார்க்க ரொம்பவும் பயந்தார்கள். இரவு ஒன்றேகால் மணிக்கு வேலு அண்ணன் ஓடிவந்து அப்பாவிடம் இந்த மூணாம் நெம்பர் சைக்கிள்தான் வேண்டும் என்று கேட்டார். “எளங்கிம்மா புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா ஆய்டுண்டா... நீ தைரிமாப் போ” என்று சொல்லிக்கொண்டே வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த மூணாம் நெம்பர் சைக்கிளின் சாவியை எடுத்துக்கொடுத்தார் அப்பா.

குப்பு பெரியம்மா, நீலா பெரியம்மா, சுகுணா சின்னம்மா, அன்னக்கிளி அத்தை என எல்லோரும் கூடியிருந்தார்கள். தொண்ணூற்று நான்கு வயதிலும் சும்மா ‘ரங்கெ’ன்று இருந்த கள்ளிம்மா ஆயா “நாங்கல்லாம் நடுவுநட்டுக்கினுபோம்போதே வவுத்துலகீற புள்ள தொபுக்குன்னு வுய்யும். அத்த அளுங்காத கையில புட்சி தோள்ள போட்டுக்கினு வேலபாத்த ஊருடி இது. எதுக்கும் அசராத... ஏறி ஒக்காரு. பொட்டச்சிய மீறியா புள்ள பொறந்துடும்” என்று தைரியம் சொன்னாள்.

மண்ணம்மா அண்ணி வலியின் முனகலோடு தலையில் கோணிப்பையைப் போட்டுக்கொண்டு வேலு அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “தம்பி... நீ எதையும் போட்டுக் கொழப்பிக்காத. மழநாளாகீது... மண்ணம்மாக்கு ஜன்னி கின்னி வெச்சிச்சின்னா வம்பாப்பூடும் தயவுசெஞ்சி ஆஸ்பித்திரிக்கி கூட்னுபோய்டு” என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாகச் சொன்னாள் சரசு அண்ணி.

மண்ணம்மா அண்ணி வலக்கையால் வயிற்றையும் இடக்கையால் இடுப்பையும் பிடித்துக்கொண்டு மூணாம் நெம்பர் சைக்கிளின் அருகில் மெதுவாக நடந்துவந்து நின்றாள். “தெம்பா போய்வா. எனுக்குக் கூழ் ஊத்திக் குடுக்க ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து எட்தாருவ பாரு” என்று கள்ளிம்மா ஆயா கணீர்க் குரலில் சொன்னதும் மண்ணம்மா அண்ணி முகப்பிரகாசத்துடன் நமுட்டுச் சிரிப்பும் வலியுமாக சைக்கிளின் கேரியரில் இரு கைகளையும் அழுத்தியூன்றி ஏறி உட்கார்ந்தாள். வேலு அண்ணண் கூடவே ராஜேந்திர அண்ணன் சுகுணா சின்னம்மாவை ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்். இன்னொரு சைக்கிளில் மோகன் அண்ணனும் ஏழுமலை மாமாவும் வேகவேகமாக சைக்கிளை மிதித்துக் கிளம்பினார்கள்.

இங்கிருந்து வந்தவாசி ஆஸ்பத்திரிக்கு ஆறு கிலோமீட்டர். இடையிலுள்ள செம்பூர், அரிசி குடோன், கவர்ன்மெண்ட் பஸ் டிப்போ தவிர வேறு எங்கும் கம்பத்து லைட் வெளிச்சம் கிடையாது என்றாலும், இந்த ரோட்டின் பள்ளங்கள் எங்களுக்குப் பழகித்தான் இருந்தன. “என்னால வலி தாங்க முடியல மாமா” என்ற முனகலோடும் வலியோடும் துடித்துக்கொண்டிருந்த மண்ணம்மா அண்ணியை ஆரத்தழுவிக்கொண்ட எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிள் ரோட்டில் தேங்கிக்கிடந்த தண்ணீரையும் குண்டும்குழியுமான பள்ளங்களையும் ஒரு குதிரைபோல் கடந்துசென்று வெற்றிபெற்ற ஒரு படைவீரனைப்போல் கம்பீரமாக ஆஸ்பத்திரிக்குள்போய் நின்றது. அப்போது ராத்திரி மணி ஒண்ணே முக்கால்.

“யாரும் பயப்பட்ற மாதிரியில்ல. கூட்டிம்போன கால்மணிநேர்த்துல நல்லபடியா பொறந்துட்சி கொழந்த” என்று ராஜேந்திர அண்ணன் வந்து சொன்ன ரெண்டரை மணிக்குத்தான் ஊரே பெருமூச்சு விட்டது. “இன்னாடா கொழ்ந்த” என்று கள்ளிம்மா ஆயா தான் படுத்திருந்த திண்ணையின் ஓலையை விலக்கிக்கொண்டு கேட்டாள். “பையன் ஆயா” என்று ராஜேந்திர அண்ணன் சொன்னதும் எதிர்த் திண்ணையில் பீடி பிடித்துக்கொண்டிருந்த ஏசு மாமா “மூணாம் நெம்பர் சைக்கிள்னா சும்மாவா மாப்ள. சீமான்...சீமான்யா அவன்” என்றார். அதனால்தான் இப்போதும் எங்கள் ஊரில் இருக்குற நிறையபேர் மண்ணம்மா அண்ணியின் மகன் பூவரசனை ‘மூணாம் நெம்பர் சைக்கிள்.... மூணாம் நெம்பர் சைக்கிள்’் என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டதும் வந்தவாசியிலிருந்து நான், அம்மு, மதி, நளினி நால்வரும் பேசிக்கொண்டே முன்னும்பின்னுமாக நடந்து வந்தோம். செம்பூர் தாண்டியதும், ஐம்பது மீட்டர் தொலைவில் யாரோ ஒருவர் நெல் அரைக்கும் மில்லுக்குப்போக ஒரு மூட்டையை சைக்கிளில் வைத்துத் தள்ளமுடியாமல் தள்ளிக்கொண்டு வந்தார்.

மண்ணம்மா அண்ணியின் மகன் பூவரசனை ‘மூணாம் நெம்பர் சைக்கிள்.... மூணாம் நெம்பர் சைக்கிள்’ என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

எங்கள் பக்கத்துவீட்டுச் செல்லக்குட்டி அண்ணனின் அப்பா முனுசாமி பெரியப்பா அப்பாவைப் பார்த்து “பங்காளிக்குப் பல்லுல வெசம்னுவாங்கடா. எங்குடும்பத்த கெடுத்துட்டியே...” எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா ஒன்றும்

நாங்கள் அந்த ஆளை நெருங்கினோம். மூச்சுவாங்க வந்துகொண்டிருந்த அவர் முட்டத்தூரான் வீட்டுக் கந்தன் மாமா. எனக்கு நெஞ்சு பக்கென்று ஆனது. ஒற்றை மாட்டுவண்டியில் பத்துப் பதினைந்து மூட்டைகளைப்போட்டு அந்த மாட்டை ஜாட்டியால் அடிக்கும்போது கண்ணீரோடு அது இழுத்துச்செல்லுமே, அப்படிச் சென்றது எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிள். அதைப் பார்த்ததும் எனக்குப் பொலபொலவென்று கண்ணீர் வந்துவிட்டது.

வீட்டிற்குச் ெசல்லாமல் நேராகக் கடைக்குப்போனேன். அப்பாவிடம் நடந்ததைச் சொல்லி மடியில் படுத்துத் தேம்பித்தேம்பி அழுதேன். “அழாதம்மா.... எஞ்சாமியில்ல....எஞ்செல்லப்புள்ள அழாதமா.... இனிமே அவுனுக்கு வண்டிய குடுக்க மாட்டேன். அறுகெட்டவன்... தோ ஒரு மணிநேரத்துல கொண்டாறேன்னு எட்தும்போனான். இன்னா வேல பண்ணிக்கீறான் பாத்தியா? வர்ட்டும் அவன திட்றேன் அழாதே” என்று அப்பா என் தாடையில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கந்தன் மாமாவைத் திட்டினார். ஏசு மாமா ஒருபடி மேலே போய் கந்தன் மாமாவை அடிப்பதாகவும் எனக்கு உறுதிமொழி கொடுத்து என்னை அமைதிப்படுத்தினார்கள்.

அந்த அமைதியோடு இப்போது பார்க்கிறேன், சந்தில் நின்றுகொண்டிருக்கும் எங்கள் மூணாம் நெம்பர் சைக்கிளை. ஊர்ல காதுகுத்து, கல்யாணம், காதல்... எதுவாக இருந்தாலும் இந்த மூணாம் நெம்பர் சைக்கிள் எவ்வளவு பிசியாக இருக்கும் என்று என் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது, “ரெண்டு மணிக்கு சேர்ல ஒக்காந்தவ.... மணி நாலு ஆவுது உன்னும் தூங்கிங்கீறாப்பாரு” என்று கழனியிலிருந்து வந்த அப்பாவின் குரல் கேட்டது. நான் சந்திலிருந்து வந்து பார்த்தேன். அப்பா “எப்போ கொழந்த நீ வந்த?” என்றார். “ரெண்டு மணிக்கிலாம் வந்துட்டேன்ப்பா” என்றேன்.

“பொழுது அமுராங்காட்டியும் நடுவூட்ட கீற ஆயுத பூஜ சாமான்லாம் எட்தாம்மா” என்று சொன்ன அப்பாவிடம் அவற்றைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, சந்தில் நிறுத்தியிருந்த மூணாம் நெம்பர் சைக்கிளை நான் சிறுவயதில் அடித்த அரைப்பெடலின் ஞாபகத்தோடு வாசலில் தள்ளிவந்து நிறுத்தினேன். பக்கத்திலிருந்த தொட்டியிலிருந்து அடுக்குசட்டியில் தண்ணீர் மொண்டு வந்து அதன் தலைமீது ஊற்றினேன்.

தேங்காய் எண்ணெய்போட்டு அப்பாவின் பழைய சட்டையால் அழுத்தித் துடைத்துவிட்டு சைக்கிளுக்கு சந்தன குங்குமம் வைத்துக்கொண்டிருக்கும்போது ராயல் என்பீல்டு பைக்கில் வந்த மண்ணம்மா அண்ணியின் மகன் பூவரசன் வண்டியை நிறுத்தி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “என்னக்கா... மூணாம் நெம்பர் சைக்கிளா?” என்றான். “ஆமாம்பா” என்று நான் சொல்லி முடிக்கும்போது அப்பா தான் கொண்டுவந்த ஒரு கொத்து மாங்கொத்தை சைக்கிளின் ஹேண்டில்பாரில் செருகிவிட்டு என்னிடம் “ஒரு ரவுண்டு ஓட்டும்மா” என்றார். நான் மிதிக்கலாம் என்று அதைத் தள்ளும்போது செயினில் துருபிடித்திருந்த கறகறகற எனும் அதன் சத்தம் என்னை மிகவும் தொந்தரவு செய்தது.

சிறுவயதில் முதன்முதலாய் அதைத் தள்ளப்பழகிய நினைவோடு கொஞ்சதூரம் தள்ளிப்போய்விட்டு வந்து மறுபடியும் வீட்டுச் சந்தின் சுவரிலேயே கொண்டுபோய் நிறுத்திவிட்டுப் பார்த்தேன். அது என்னையே முறைத்துப் பார்த்தது.