
தீபா நாகராணி
“அவனைக் கட்டிக்கிட்ட அத்தோட எங்களை மறந்திரு...” கோபம் கொப்பளிக்கும் குரலில் அம்மா சொன்னது காதைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது.
விடிந்தும் விடியாத காலை நேரம். யார் பார்வையிலும்படாமல் பூனை நடையில் வெளியே வந்தேன். பத்து நிமிட நடையில் காளவாசல் பேருந்து நிறுத்தத்தில் முகம் தெரியாத சிலருடன் கலந்து நின்றேன். பதற்றத்தில் கைவிரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.
சென்னைக்குச் செல்லலாம் என்கிற எண்ணம் உதயமானது. ரெட் டாக்ஸி பிடித்து ஜங்ஷன் வந்தபோது மணி ஆறே கால். வைகையில் பயணச்சீட்டு வாங்கி, பரிசோதகரிடம் காலியான இருக்கைக்குரிய கூடுதல் பணத்தைக் கொடுத்து, இதோ எஸ் 8-ல், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். மாம்பலத்தைச் சுற்றியுள்ள விடுதி ஒன்றில் இப்போதைக்குத் தங்கலாம். பிறகு என்ன செய்யலாம் என முடிவுக்கு வரலாம்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பா. விதவிதமாக சமைத்து யூடியூப் சேனலில் கலக்கும் அம்மா. எனக்குப் பிடித்த கல்லூரியில் படிப்பு. எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது.
டிரைவர் தாத்தா வேலையை விட்டு நின்றவுடன், அப்பாவின் தூரத்து உறவாக அறிமுகப்படுத்தியபடி மதுரைக்கு வந்தவன் சுந்தர். பட்டப்படிப்பு முடித்திருந்தும், வேறு வேலை சரியாக அமையாததால் ஓட்டுநர் வேலை.
என்னை நிமிர்ந்துகூடப் பார்த்துப் பேசாத சுந்தரின் தோற்றம், பழகும் விதம், அவசியமில்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேசாத குணம் என சகலமும் ஈர்த்தன. பழைய டிரைவர் தாத்தா வண்டி ஓட்டும்போது எப்போதாவது அடிக்கும் சிகரெட் மணம், ஒரு நாளும் அவன் ஓட்டும்போது வந்ததில்லை.
கல்லூரிக்கு அழைத்துச்சென்ற ஏதோ ஒரு நாளில் நான்தான் அவனிடம் காதலைச் சொன்னேன். யோசிக்க நேரமெடுத்து ஒரு வாரம் கழித்து சம்மதம் சொன்னான். `தேவைக் கும் அதிகமாகவே இருக்கிற சொத்தைக் கட்டிக்காக்க தன் மகளே அவளுக்கு ஏற்ற இணையைத் தேடிக்கொண்டாள்' எனப் பெருமைப்படுவதற்குப் பதிலாக, செய்யக் கூடாத தப்பைச் செய்ததாகப் புலம்பித் தள்ளிக்கொண்டிருந்தார் அம்மா. இந்தப் பஞ்சாயத்தைப் பேசித் தீர்க்க வார இறுதியில் அப்பாவும் வருகிறார்.
சமையல் வேலைக்கு அமர்த்தியிருந்த பெண் ணிடம், “நாய், பேயைக்கூட வீட்டுக்குள்ள விடலாம்... தெரிஞ்ச சொந்தக்காரனை வேலைக்குன்னு வீட்டுக்குள்ள விட்டதுதான் தப்பாப்போச்சு” என சன்னதம் வந்தது போல நேற்று ஆடிக்கொண்டிருந்தாள்.
“எனக்குப் பிடிச்சிருக்கு... நீ கொண்டாடுற சாதியைச் சேர்ந்தவன்தானே அவன்? நாய் பேயைவிடக் கேவலம்னு பேசிட்டிருந்த... இந்த வீட்டில நான் இருக்க மாட்டேன்.”

“அவனைக் கட்டிக்கிட்ட அத்தோட எங்களை மறந்திரு...” - நூறாவது முறையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நாளெல்லாம் நீண்டது புலம்பல். நான் தூங்குவதுபோல பாவனை செய்தால் புயல் சற்றே ஓய்வெடுக் கும். விடிய ஆரம்பித்ததும் எனக்கு காபி கலக்கிக்கொடுத்துக்கொண்டே தொடரும் வசவு. அடுத்து அழுவார். சில நிமிட இளைப்பாறல். மீண்டும் திட்டல் அழுகை. மூன்றாவது நாளும் நீளும் நீண்ட ஒப்பாரி, நரகத்துக்கு இணையானது. விடுதலை பெறும் நிமித்தமாகவே இந்த வெளியேறல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இன்னும் சில நிமிடங்களில் வண்டி கிளம்ப இருந்த நிலையில், அம்மாவிடமிருந்து அழைப்பு. துண்டித்தேன். அழைப்புகள் தொடர்ந்தன.
“நான் சாகப்போகல, என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடு” - உயர்ந்த குரலால் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவர் அதிர்ந்து உன்னிப்பாக என் முகத்தைப் பார்த்தார். அதோடு மொபைல் அணைக்கப்பட்டு, பைக்குள் சென்றது.
அல்லாடிய உள்ளத்தை சமாதானப்படுத்த இருக்கையின் பின்னால் சாய்ந்தபடி, கண்களை மூடினேன். அம்மாவின் குரலும் முகமும் ஏக நேரத்தில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தன. கண்களைத் திறந்து வேடிக்கை பார்க்க, சோழவந்தானைக் கடந்துகொண்டிருந்தது ரயில்.
சுந்தரை அழைக்கவோ, பேசவோ தோன்றவில்லை. அம்மா, அப்பா, தங்கை என சதா பேசிக்கொண்டே இருப்பவன். இரண்டு அரட்டு அரட்டினாலே அடுத்த பஸ்ஸைப் பிடித்துத் தேனிக்குப் போய்விடுவான். தனக்காக தன்னைப் பற்றி யோசிக்காதவனுக்கு அதிகம் மெனக்கெடுகிறோமோ என்கிற குழப்பம். ஒருவேளை பெரும் காதல் இருப்பதுபோல நடிப்பதற்குப் பதிலாக இப்படி இவன் தன்னைக் காட்டிக்கொள்வது பரவாயில்லை என சமாதானமும் ஓடியது.
அலைபேசியில் மூழ்காமல், அரட்டை அடிக்காமல், அமைதியாக வேடிக்கை பார்த்தபடி செல்வது புது மாதிரியாக இருந்தது. ஓடும் ரயிலில், சாளரத்தின் வழியே விரிந்த பரப்பு சொல்லும் சேதியை உள்வாங்க முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
அம்மாவின் அனத்தல் தாள முடியாத வலியையும் கடும் வெறுப்பையும் உண்டாக்கு கிறது. அதன்வழியே அவள் ஆக்ரோஷம் தணியக்கூடும். ஆனால், அதைவிட இரண்டு மடங்காக அதே ஆக்ரோஷம் என்னுள் ஏறுவதை அவள் ஏன் பார்க்க மறுக்கிறாள்?
நான்கு நாள்கள் எதிரில் இல்லாமல் இருப்பது இருவருக்கும் நல்லது. உள்ளூரில் உள்ள உறவோ நட்போ, எப்படியும் தேடிக் கண்டுபிடித்துவிடுவாள். இப்போது... வாய்ப்பில்லை. ம்ம்... உண்மையில் சுந்தர் அந்தளவு தகுதியானவன்தானா?
எந்தப் பிரச்னையில் இருந்தும் என்னைக் காப்பாற்றியதில்லை. காப்பாற்றும் அளவுக்குப் பிரச்னையும் வந்ததில்லை என்பது வேறு. நேற்று பேசும்போதுகூட, `வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். அப்பா வந்ததும் நேரில் பேசுகிறேன்' என்றான். ஒருவேளை அம்மா நேரடியாக இவன்மீது காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் துளிர்த்தது. அவனையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிய மறுகணத்தில், எந்த வருமானமும் இல்லாமல், கையில் உள்ளதைக்கொண்டு எத்தனை நாள்களை ஓட்டுவது? மேலும், அது முறையாகவும் இருக்காது.
தலைவலி அதிகரிக்கத் தொடங்கியது. சூடான தேநீருக்காகக் காத்திருக்க, மூன்றாவது நிமிடத்திலேயே தேநீர் வந்தது. சுவைத்துப் பருகிக்கொண்டே காகிதக் கோப்பையின் சூட்டை நெற்றியில் ஒத்தியெடுக்க, இதம்.
அம்மா வெகுளி. அப்பிராணி. ஆனால், வாய் ரொம்பவே அதிகம். சொற்களைக் கேட்க இயலாமல்தானே இப்படி ஒரு தப்பிப்பு. பத்து வருடங்களாகக் குழந்தை இல்லாமல், கோயில்களும் மருத்துவமனைகளும் ஒன்று சேர்ந்தாற்போல கைவிரிக்க, தூரத்துச் சொந்தத்தில் ஒருவரின் பிள்ளையைத் தத்து எடுத்து வளர்த்தவர்கள்.
பத்து வயதில் வம்பாக அழுது அடம்பிடித்துக் கொண்டிருந்த என்னை சமாதானப்படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தனர் அம்மாவும் அப்பாவும். ஏதோ திரைப்படம் பார்த்த தாக்கத்தின் பலனாக, ‘ச்சே... வேற வீட்டில பொறந்திருக்கலாம் நான்’ எனக் கத்தினேன்.
‘வேற வீட்டிலதாண்டி பொறந்த நீ, புள்ளயில்லைன்னு உன்னைத் தூக்கிட்டு வந்து கொஞ்சி வளர்த்தா மப்பப் பாரு’ என அப்பத்தா திட்டியவுடன் அரண்டுபோய் அழுகையை நிறுத்தினேன்.
இருவரும் அப்பத்தாவுடன் `எப்படிச் சொல்லலாம்' என மல்லுக்கட்டிக் கொண்டிருந் தனர். அன்றே வீட்டை விட்டுக் கிளம்பி சித்தப்பாவின் வீட்டுக்குப் போனவர்தான் அப்பத்தா.
“என்னால முடியலன்னு, வேறொரு அம்மா மூலமா கடவுள் உன்னை எங்களுக்கு அனுப்பி யிருக்காரு. எப்பவும் நீதான் எங்க உசிரு” என்று நிறைய சொல்லி சமாதானப்படுத்தினர் இருவரும்.
அதன்பின் அப்பா வெளிநாடு சென்றார். வருமானம் உயர உயர, சொத்துகளின் எண்ணிக்கையும் கூடியது. நான் கேட்ட எதையும் மறுத்ததில்லை. இந்த செமஸ்டரோடு இந்தப் படிப்பும் முடிகிறது.
ஒருவேளை நான் தத்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், என்னை உண்மையில் பெற்றவர்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்திருப்பார்கள்? மகளின் மனம்தான் முக்கியம் என யோசிப்பார்களா? வறுமையோ, என்ன இக்கட்டோ... என்னைத் தூக்கிக் கொடுத்துவிட்டனர். எனக்கெனக் காட்ட வைத்திருந்த அன்பை மற்ற குழந்தைகளுக்குப் பிரித்துக்கொடுத்திருப்பார்களா... அல்லது, பெண்ணாகப் பிறந்ததால், செலவு மிச்சம் என இந்தத் தத்துக்கொடுத்தல் நடந்திருக்குமா?
எப்படியிருந்தாலும் என்னைச் சுமந்தவள், அவரைச் சுமக்கும் அந்த அப்பா, உங்களைப் பார்க்க முடியுமா... நீங்கள் எப்படி இருப்பீர்கள்? ஒருவேளை என்னைத் தொலைவிலிருந்து பார்த்திருப்பார்களா... யார் சாயலை நான் கொண்டிருக்கிறேன்... இரண்டு நாட்களாவது உங்களோடு நான் வாழ முடியுமா... ஏதேதோ கேள்விச்சுழல்...
கண்ணிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. கையிலிருந்த டிஷ்யூவால் துடைத்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்திலேயே பாதுகாப்பான வீடு அளிக்கும் அதே வெதுவெதுப்பைத் தேடுகிற மனம் ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் சுற்றுலா செல்லும்போதெல்லாம் இப்படியான பரிதவிப்பு இருந்ததில்லை. எப்படியும் வீடு திரும்புவோம் என்கிற நம்பிக்கை வேறொரு கூட்டைத் தேடச் செய்யாமல் இருந்திருக்கலாம்.

கொடைரோடு ஸ்டேஷன். எனக்கு நேர் எதிரே காலியாக இருந்த இருக்கையில் இருவர் வந்தமர்ந்தனர். ஐரோப்பியத் தோற்றம் கொண்ட ஆண், நம்மூர் சாயலில் இருந்த பெண். டூரிஸ்ட் மற்றும் கைடு ஆக இருக்கலாம். மெல்லிய குரலில் பேசி விளையாடி சிரித்தபடியே வந்தனர் இருவரும். பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
`நானும் சுந்தரும் இப்படி இருப்போமா...' என ஆசையுடன் பார்த்துக்கொண்டே வந்தேன். அவள் சராசரி உயரத்தில் மாநிறம். தலைமுடியைத் தூக்கிக்கட்டி குதிரை வால் ஆக்கியிருந்தாள். கண் மூக்கு எல்லாம் லட்சணமாக இருந்தது. தேனி, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவள்போல பரிச்சயமான முகம். வழக்கமாக காதணி அணியும் இடத்தில் துளை இல்லை. அங்கிருந்து அரை இன்ச் உயரத்தில் கடுகளவு ஒரு கம்மல். இன்னொரு காதில் அதே இடைவெளியில் இரண்டு கம்மல். வேறெந்த அணிகலனும் இல்லை. கார்கோ பேன்ட், தொளதொளவென டி-ஷர்ட் அணிந்திருந்தாள். எளிமையான தோற்றத்தில் வசீகரம் அதீதமாக மின்னியது.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். சேலை, பூ எல்லாம் கூடுதல் அழகு தரும் எனத் தெரியாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் எனப் பட்டது. நான் பார்த்துக்கொண்டே இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
சட்டெனத் திரும்பி என் கண்களைப் பார்த்தாள். புன்னகைத்தேன். அவளும் சிநேகத்துடன் சிரித்தாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் மொழி புரியவில்லை என ஆங்கிலத்தில் கேட்டதும், தாங்கள் பேசுவது ஜெர்மன் என்றாள். அவளது அருகிலிருந்தவன் சிரித்தபடி மொபைலில் மூழ்க ஆரம்பித்தான். எனக்கு அவளோடு பேச வேண்டும் என்ற ஆசை. ஆங்கிலத்தில் உரையாடலைத் தொடர்ந்தேன்.
“என் பேர் கயல்விழி. ரொம்பப் பரிச்சயமான முகமா இருக்கு உங்களோடது...”
“நான் விக்டோரியா. ஏறினதில இருந்து நீங்க என்னைப் பார்க்கிறதை நானும் கவனிச்சேன், என் கணவரும் சொன்னார்.”
“கணவரா... கல்யாணம் ஆயிடுச்சா? ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கீங்க?''
“எனக்கு இருபத்தேழு வயசாகுது. ரெண்டு வருஷத்துக்கு முன்ன கல்யாணம் ஆச்சு. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு வாரம் ஊர் சுத்தப் போவோம். இந்த முறை இங்கே. அடுத்த நாலு நாள் சென்னை, அப்புறம் ஜெர்மனி கிளம்பணும்.”
“எப்படி எங்க ஊர்ப் பொண்ணு மாதிரி இருக்கீங்க?''
“நான் இந்த ஊர்ப் பொண்ணுதாங்க. வத்தலகுண்டு பக்கத்தில உள்ள ஆஸ்ரமத்தில இருந்துதான் என் இரண்டு வயசில, என்னைத் தத்து எடுத்தாங்க. என் தம்பியை மும்பை பக்கத்தில இருந்து தத்தெடுத்திருக்காங்க.''
“உங்களோட சின்ன வயசிலேயே இது தெரியுமா உங்களுக்கு?''
“ மொதல்ல தெரியாது. ஸ்கூல்ல அடுத்தடுத்து க்ளாஸ் போறப்போ, கூடப்படிக்கிறவங்க என்னோட கலர வெச்சு, `நீ வேற'ன்னு சொல்லுவாங்க. அழுதிட்டே ஒருநாள் கேட்டப்போ அம்மா சொன்னாங்க, எங்க ரெண்டு பேர்கிட்டயும்... அவங்க எங்களைப் பெத்தவங்க இல்லைன்னும், இந்தியாவில் இருந்து அழைச்சிட்டு வந்திருக்கோம்னும் சொன்னாங்க. நல்ல பெற்றோரா எங்களை எப்படி வளர்க்கணுமோ வளர்த்தாங்க. இதோ இவரைத்தான் கல்யாணம் செய்வேன்னு சொன்னதும் சந்தோஷமா செய்து வெச்சாங்க. டூர் முடிச்சிட்டு அவங்களைப் போய்ப் பார்த்துப் பேசிட்டுதான் நாங்க இருக்கும் வீட்டுக்குப் போகணும்.”
அவள் கணவன் தூங்க ஆரம்பித்திருந்தான். அவள் பேச்சைக் கேட்க எனக்குப் படு சுவாரஸ்யமாக இருந்தது.
“அப்போ, இங்க வத்தலகுண்டுல நீங்க இருந்த ஆஸ்ரமத்தைத் தேடி, உங்க முகவரி யைக் கண்டுபிடிச்சு, அப்பா அம்மாவைப் பார்த்தீங்களா?''
பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல கண்ணீர் மல்க சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன ஆச்சு? நான் எதுவும் காமெடியா கேட்கலையே? இங்கே அது மாதிரி வளர்ந்த பிள்ளைக அவங்க அப்பா அம்மாவைச் சந்திச்சு போட்டோவோட செய்தி அடிக்கடி நாளிதழ்களில வரும்... அதனால கேட்டேன்...”

சிரிப்பைக் குறைத்துக் கொண்டு... “எதுக்குத் தேடணும்? ஏன் போய் பார்க்கணும்? அவங்களே வேணாம்னு தூக்கிப் போட்டுட்டாங்க. அப்போவே போய்ச் சேர்ந்திருந்தால், அவங்களுக்குத் தெரியவா போகுது? இங்கே உள்ள கள்ளிப்பால் எல்லாம் கொடுக்காம, கழுத்து நெரிச்சுப் போடாம இருந்ததுக்கு நன்றி சொல்லப் போகணுமா? ஏழ்மை மட்டுமே காரணம்னா, என்னைப் பெத்துக்கறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும். பொறுப்பும் இல்லாம, பக்குவமும் இல்லாம செய்த முட்டாள்தனத்தை சகிச்சுக்க என்னால முடியாது. எனக்கு அம்மா அப்பான்னா தத்தெடுத்து வளர்த்து, என்னை உருவாக்கினவங்கதான். நாங்க வந்தது கொடைக்கானலைச் சுத்திப்பார்க்க. இனி, இந்தப் பக்கம் திரும்ப வந்தா, பார்க்காத சுற்றுலாத் தலத்துக்கு மட்டும்தான் போவோம்!''
விக்டோரியாவின் முகம் தீவிரமாக இருந்தது.
திருச்சியை அடைந்திருந்தது ரயில்.
அவன் தூங்கிக்கொண்டிருந்தான். தானும் தூங்கப்போவதாக சைகை காட்டியபடி அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.
வளர்ப்பு அம்மா எனப் பிரித்துப் பார்ப்பதால்தான் அவளது இயல்பான கோபத்தைக்கூடத் தாங்க முடியவில்லையோ...இவனைத்தான் நான் காதலிக்கிறேன்' என்று சொன்னதும் எந்தப் பெற்றோர் உடனே ஒப்புக்கொள்வார்கள்? தடைகள் வந்துகொண்டே இருந்தாலும், அத்தனையையும் தாண்டி, வெற்றிபெறுகிற போராட்டக் குணமற்று, கோழையாக வெளியேறுவதுபோல இருக்கிறது. ஆனால், நாளெல்லாம் திட்டு, இதுதானே எரிச்சலைக் கூட்டுகிறது. ம்ம்... ஆற்றாமையை வெளிப்படுத்த அவளுக்குத் தெரிந்த ஒரே வழி அது. வேறென்ன அந்தத் தாயால் செய்ய முடியும்?
கோளாறு எனக்குள்தான் இருக்கிறதோ? என்ன நடக்கிறது எனத் தெரிந்தும், அவளை மிரட்டி, `நான் பெரிய இவள்' எனக் காட்டிக் கொள்வதைத்தான் விரும்புகிறேனோ? அசிங்கமாக இருக்கிறது. என்னைப் பெற்றவள் எங்கோ நன்றாக இருக்கட்டும். ஆனால், என் ஒருத்திக்காக வாழ்கின்ற இவர்கள் இருவரையும் இறுதிவரை கலங்க வைக்கக் கூடாது.
மொபைலை ஆன் செய்து சுந்தர்கூட பேசலாமா எனத் தோன்றியது. என்ன சொன்னாலும் உப்புசப்பில்லாத எதிர்வினை இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்.
அப்பாவுக்கும் சேர்த்து தண்டனை தருவதாக உறுத்தியது. அலைபேசிக்கு உயிரூட்டி உடனே அவரைக் கூப்பிட்டேன். இப்போது காலை எட்டு மணி இருக்கும் அங்கு. முதல் ரிங்கிலே எடுத்தார்.
``பாப்பா எங்கடா இருக்கே... அப்பா வந்திட்டே இருக்கேன்டா...”
அம்மா என்ன உளறிவைத்தார் எனத் தெரியவில்லை. அவரது இடத்தில் அது சரியாகவும் இருக்கும்.
“பயப்பட வேணாம்ப்பா... அம்மா திட்டிட்டே இருந்தாங்க. அதான் டிரெயின்ல கிளம்பிட்டேன். அடுத்து அரியலூர்ல வண்டி நிக்கும். நான் அங்கே இறங்கி பஸ் பிடிச்சு சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்குப் போயிடறேன். சாரிப்பா...''
உடனே அம்மாவை அழைத்தாள்... “வீட்டுக்கு வந்திரு பாப்பா... காலம் கெட்டுக் கிடக்கு. உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும். நீ வர்ற வரை பச்சத்தண்ணிக்கூடக் குடிக்க மாட்டேன்'' - கேவலுக்கு இடையில் சொல்லி முடித்தாள்.
தொலைவில் அரியலூர் ஸ்டேஷன் வருவது தெரிந்தது.