தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் எழுத்து: ஓட்டம்

ஓட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓட்டம்

பிருந்தா சேது

‘`ஹலோ, நான் கேத்தரின் பேசறேன்மா... உன் குழந்தை ‘மணி’யை விழுங்கிடுச்சு. சீக்கிரம் வாம்மா...’' - ஆபீஸ் வேலைகளுக்கு நடுவே திடீரென்று போன்.

‘`என்னது மணியா... புரியலையே...'’

கேத்தரின் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. 20 வருடங்களுக்கும் மேலாக, சென்னை கெல்லீஸில் கிண்டர் கார்டனுடன் கூடிய `டே கேர்' நடத்துகிறார். நன்றாகத் தமிழ் பேசுவார்.

‘`அதாம்மா, அவள் சட்டைல இருந்ததே பெரிய மணி. அதை விழுங்கிட்டா. சீக்கிரமா வாம்மா.’'

இவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. தலைசுற்றியது. காலையில் எந்தச் சட்டை போட்டு விட்டாள்? எந்தச் சட்டையைக் கொடுத்து விட்டாள்? அய்யோ, அந்த சிவப்பு கலர் சட்டை. அதில் இரண்டு மூன்று இடத்தில் கயிற்றைக் கட்டும் முனையில், கோலிகுண்டு அளவில் சிறியதாக மணி இருக்கும். ஆனால், அதை எப்படி?

ஓட்டம்
ஓட்டம்

இவள் மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, வண்டியில் பறந்தாள். ‘`மேத்தா ஹாஸ்பிட்டலுக்குப் போங்க மேடம். கவலைப்படாதீங்க. எதும் பயப்படும்படி ஆகியிருக்காது. ஏதாவது உதவி தேவைன்னா, உடனே கூப்பிடுங்க...''

பாதையை மறைத்தது கண்ணீர். இவளால் வண்டி ஓட்ட முடியவில்லை.

சின்ன வயதில், இவள் தோழியின் அண்ணன் மகன்... அப்போது அவனுக்கும் மூன்று அல்லது நான்கு வயதுதான். அந்த அண்ணன் வேலை முடிந்து வந்து வீட்டிலேயே டியூஷன் நடத்துவார். அவனும் ‘அப்பா அப்பா’ என்று அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருப்பான்.

ஒருநாள் அவனுக்கு பட்டாணிக்கடலை கொடுத்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தினம் நடக்கும் நிகழ்ச்சிதான். அவனுக்கு பட்டாணிக்கடலை என்றால் உயிர். அவன் அதைச் சாப்பிட்டுவிட்டு, விளையாடிக்கொண்டிருப்பான். அன்று ஏதோ போதாத காலம். அவனுக்குப் புரைக்கேறி, சுவாசக்குழாய் அடைத்துக்கொள்ள, அவர் கண்ணெதிரிலேயே, ஹாஸ்பிட்டல் போவதற்குள்ளாகவே…

அய்யோ... இதெல்லாம் இப்போது எதற்கு நினைவுக்குவர வேண்டும்? என் செல்லத்துக்கு எதும் ஆகக் கூடாது கடவுளே... அவளுக்கு ஓவென்று கதற வேண்டும் போல இருந்தது.

அவள் எழுத்து: ஓட்டம்

டே கேர் மேடம், மகளை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியிருப்பாரா? என்ன நிலைமை? இனிமேல்தான் என்றால், கே.எம்.சி சிக்னல் வழியாகப் போனால், மேத்தா ஹாஸ்பிட்டலுக்கு ஐந்தே நிமிடத்தில் போய் விடலாம். ஆம்புலன்ஸ் கூப்பிட்டு, அவர்கள் வரும் நேரத்துக்குள்ளாக என்னாகுமோ? ஆட்டோ எடுத்துப்போய் விடலாம்.

மகள் எப்படி இருக்கிறாளோ... என்ன ஆச்சு அவளுக்கு? நாலு வயது, மணியை வாயில் போட்டு விளையாடும் வயசா? அந்த வயதைத் தாண்டிவிட்டாள் என்று நம்பித்தானே, டிசைன் வைத்த டிரஸ் போட்டு விட்டாள். சின்னப் பிள்ளைகள் டிரஸ்ஸில் எதற்கு மணி எல்லாம் வைத்துத் தைக்கிறார்கள்?

எப்படி வண்டி ஓட்டினாள், எப்படி வந்து சேர்ந்தாள் எதுவுமே தெரியவில்லை. அரைமணி நேர தூரத்தை, ஐந்து நிமிடங்களில் கடந்தாள். மதிய நேரம் என்பதால் போக்கு வரத்தும் குறைவாக இருந்தது.

கேட்டைத் திறக்கும்போதே, பிரின்சிபால் ரூம் எதிரே மகளும் டே கேர் மேடமும் உட்கார்ந்திருந்தார்கள்.

மகளைப் பார்த்ததும்தான் உயிர் வந்தது. அப்பாடா... பிள்ளை மயக்கமாக எல்லாம் இல்லை. நல்லபடியாகவே தெளிவாக இருந்தாள். வயிறு பானை மாதிரி இருக்க, சொம்புத் தண்ணீரை வயிறு முட்ட குடித்து விட்டு அழுதபடி உட்கார்ந்திருந்தாள்.

ஓட்டம்
ஓட்டம்

‘`நல்லா ஓர் அடி வெச்சேன்மா நானு. மதியம் பிள்ளைங்க எல்லாம் தூங்கப்போகச் சொன்னால், உன் பிள்ளைதான் தூங்க மாட்டாளே... படுத்துக்கிட்டு ஏதோ விளையாடிக்கிட்டு இருப்பாளே... திடீர்னு தண்ணி வேணும்னு தங்கம் ஆயாகிட்ட ஜாடை காட்டியிருக்கா. எப்பவும் சுறுசுறுப்பா எல்லாத்தையும் தானே செஞ்சுக்கிற பிள்ளைக்கு இன்னிக்கு என்னாச்சுன்னு அந்தம்மாவும் தண்ணி கொடுத்திருக்குது. அப்பகூட ஒண்ணும் சொல்லலை. தண்ணி குடிச்சப்புறம் வயித்துல ஏதோ சங்கடம் பண்ணியிருக்கும்போல. `ஆன்ட்டி... இந்த மாதிரி மணியை விழுங்கிட்டேன். தண்ணி குடிச்சுட்டா சரியாப் போயிடுமில்லே'ன்னு கேட்டிருக்கிறா. தங்கம் ஆயா பதறிப் போயி என்கிட்ட ஓடி வந்துது.

என்ன நடந்தது... மணியை எதுக்கு வாயில போட்டேன்னு கேட்டா, பதிலே சொல்ல மாட்டேன்றா... அழுத்தக்காரி. வாயைத் தொறக்குதா பாரு. நல்லா வெச்சேன் ஓர் அடி. இதோ சொம்புத் தண்ணி உள்ளே போயிருக்குது. நீ எதுக்கும் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிரும்மா.'’

அந்தம்மாள் சொல்கிற எதுவும் தலையில் ஏறவில்லை. பிள்ளை கண்ணுக்கெதிரே நல்லபடியாக இருக்கிறாள். அது போதும்.

ஃபேமிலி டாக்டருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

‘`இப்ப என்ன... பிள்ளை நல்லா ஆக்டிவ்வா இருக்கிறாள் இல்லே. வயிற்றுல எங்கயாவது வலிக்குதுன்னு சொல்றாளா... இல்லையே. பயப்படத் தேவையில்லைம்மா. நைட் டின்னருக்கு ரெண்டு வாழைப்பழம் கொடு. காலைல எல்லாம் ஃப்ளஷ் அவுட் ஆகிடும். ஆகலைன்னா, காலையில ஹாஸ்பிடல் வந்துடு. பார்த்துக்கலாம்’' என்றார்.

இப்போதைய பிரச்னைகளே வேறு மாதிரியானவை. பிரீ டீன்ஏஜ் ஸ்டேஜ் எல்லாம் தாண்டி முடித்து, இப்போது டீன்ஏஜ். எது ஞாபகத்தில் இருக்கும், எது மறக்கும். ஏன் கோபம் வரும், எதற்குக் கொஞ்சுவார்கள் – கெஞ்சுவார்கள் என்று சொல்ல முடியாது.

இவள் ஆபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினாள்.

இரவு வரை காத்திருந்து, வாழைப்பழம் தந்து, அதற்குள் நூறு முறை மனதுக்குள் செத்துச்செத்துப் பிழைக்க முடியாது. யோசித்தாள். பப்பாளிப் பழத்தை வேகமாகச் சாப்பிட்டால், உடனடியாக வயித்தைக் கலக்கி வெளியே தள்ளும். ஒரு பெரிய கனிந்த பப்பாளிப்பழம் வாங்கிக்கொண்டாள்.

குழந்தை மிகவும் பயந்துபோயிருந்தாள்.

`‘அம்மா, ஆபரேஷன் பண்ணுவாங்களாம்மா, செத்துப் போயிருவேனாம்மா, நான் வேணும்னு பண்ணலைம்மா’' என்று ஒரே அழுகை.

வாரி அணைத்துக்கொண்டாள்.

‘`இதெல்லாம் யாரு சொன்னா உனக்கு? பயப்படாதே குட்டிம்மா. ஆபரேஷன்லாம் வேணாம். நீ பபாயா சாப்பிட்டு, டூ போயிட்டேன்னா, டூ’ல மணி வந்திருச்சுன்னா, எதுவும் தேவையில்லை. சரியா...''

குழந்தை என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தாள். மளமளவென்று பப்பாளியைச் சாப்பிட்டாள். சொன்ன தெல்லாம் கேட்டாள். பார்க்கவே பாவமாக இருந்தது.

ஆனால், பார்க்கப் பாவம் போல இருக்கிற இந்தப் பிள்ளை சாதாரணப்பட்டதில்லை. டே கேர் மேடம் சொன்ன மாதிரி அழுத்தக்காரி... ஊமைக்கோட்டான்.

ருமுறை லீவுக்கு அண்ணன் வீட்டுக்கு அனுப்பியிருந்தாள். அண்ணி, திரும்பக் கொண்டுவிடும்போது, ``பிள்ளைகிட்ட உடனே கேட்டுடாதே. அடிக்காதே. திட்டாதே. நான் என் பசங்ககிட்ட கேட்டுட்டேன். அவனுங்க செய்யலைன்னுட்டானுங்க. அவனுங்க தடால் புடால் கேஸுங்க. இப்படி நாசூக்கா எல்லாம் குறும்பு பண்ணத் தெரியாது. ஃப்ரிட்ஜில் சாஸ் பாட்டில், ஜாம் எல்லாத்துலயும் தண்ணி ஊத்தி வெச்சிருக்கு. எல்லாம் காலியாகிற ஸ்டேஜ்லதான் இருந்துச்சு. ஒண்ணும் பிரச்னை இல்ல. நீ மெதுவா அவள் நல்ல மூட்ல இருக்கும்போது கேளு. அவதான் பண்ணினாளான்னு’' என்று சொல்லிவிட்டுப் போனார்.

நல்ல விளையாட்டு மூடில் ஜாலியாக இருக்கும்போது மகளிடம் கேட்டாள். ``டேய் அத்தை வீட்ல, ஃப்ரிட்ஜைத் திறந்தியாடா...'’

‘`இல்லியே... ஏன் கேட்கிற...'' ஆனால், அவள் முகம் காட்டிக்கொடுத்தது. பிறகு எதுவும் கேட்கவில்லை.

ஒருநாள் இவர்கள் வெளியே போயிருக்கும் போது, ஹோட்டலோ தியேட்டரோ மகள், ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் குடித்தாள். அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இன்னும் வேண்டும் போல இருந்தது. கேட்டால் அம்மா வாங்கித் தருவாளோ மாட்டாளோ.

மகள் கேட்டாள்... ‘`அம்மா, இதில தண்ணி ஊத்தினா, மில்க்‌ஷேக் இன்னும் ஜாஸ்தி ஆகிடும்தானே?’'

இவள் பிடித்துக்கொண்டாள் ‘`டாய்…. நீதானே அத்தை வீட்டு ஃப்ரிட்ஜுல சாஸ்ல தண்ணி ஊத்தினது?’'

மகள் முகம் நவரசம் காட்டியது.

‘`ஆமாம்மா, சாஸ் எல்லாத்தையும் நானே காலி பண்ணிட்டனா. பாவம் அத்தை என்ன பண்ணுவாங்க... அதான்'’ என்று சிரித்தாள். இவள் சிரித்தபடி மகளை அணைத்துக் கொண்டாள்.

``அம்மா, அம்மா இங்க வாயேன்... மணி வந்திருச்சு'' - பிள்ளை டாய்லெட்டிலிருந்து கூவியது. ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் சான்றோன் எனக் கேட்ட தாய் எல்லாம் இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு தப்பிய தாய்.

நிஜமாகவே, மகளைப்பெற்ற நாளைவிட அதிக சந்தோஷம் அடைந்த நாள் அது.

அந்த வாரம் முழுவதும் திருவிழா போல அந்த சந்தோஷத்தைக் கொண்டாடினார்கள்.

இதெல்லாம் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் நடந்தவை. இப்போது மகளுக்கு வயது 13.

இப்போதைய பிரச்னைகளே வேறு மாதிரியானவை. பிரீ டீன்ஏஜ் ஸ்டேஜ் எல்லாம் தாண்டி முடித்து, இப்போது டீன்ஏஜ். எது ஞாபகத்தில் இருக்கும், எது மறக்கும். ஏன் கோபம் வரும், எதற்குக் கொஞ்சுவார்கள் – கெஞ்சுவார்கள் என்று சொல்ல முடியாது... அம்மா என்பவள் ஹீரோயினா, வில்லியா இல்லை... ரெண்டுமா யூகிக்கவே இயலாது.

எப்ப, என்ன மூட் என்று புரிந்துகொள்ளவே முடியாது. இவளும் இந்த வயதைக் கடந்து வந்தவள்தானே? முடிந்தவரை பொறுமை காத்தாள்.

ன்று, ஒரு லாங் வாக் போகலாம், வரும்போது அப்படியே காய்கறிகள் வாங்கி வரலாம் என்று போனார்கள்.

கடையைக் கடக்கும்போது, சைக்கிளில் விரைந்த பையனைப் பார்த்து, `‘ஹாய்… தீக்‌ஷித்'’ என்று மகள் கூவினாள். அந்தப் பையன் கவனிக்கவில்லை. போய் விட்டான்.

`‘யாரு?’'

‘`எல்கேஜி ஃபிரெண்டும்மா. டே கேர்ல எப்பவும் என்கூடவே இருப்பானேம்மா...'’

இவளுக்கு ஞாபகம் வரவில்லை.

‘`என் பர்த்டேக்குக் கூட எனக்குப் பிடிச்ச பர்ப்பிள் கலர் பென்சில் கொடுத்தானே...''

ஞாபகமில்லை.

‘`ஒருவாட்டி, நீ என்னை டே கேர்ல விட வரும்போது, ஹாய் பப்ளிக்குட்டின்னு அவனைக் கொஞ்சிட்டுப் போனீயே!''

இதெல்லாமா நினைவிருக்கும் என்பது போலப் பார்த்தாள்.

‘`அவன் கூட, வேற ஸ்கூல் சேரப் போறான்னு அழுதேனே...’'

சத்தியமாக நினைவில்லை.

‘`அச்சோ, உனக்கு எப்படி ஞாபகப் படுத்தறது… ம்… அவன்தான்மா, நான் எல்கேஜி படிக்கும்போது, மணியை வாய்க்குள்ளே தட்டிவிட்டது!''

‘`என்ன...’' அதிர்ந்தாள்.

மகள் சட்டென்று நாக்கைக் கடித்து, தலையில் அடித்துக் கொண்டாள். அதிர்ச்சியைச் சட்டென மறைத்துக்கொண்டு, `‘இல்லடா, சொல்லு சொல்லு... அன்னிக்கு என்னாச்சு... நீ நல்ல பிள்ளையாச்சே... அப்படில்லாம் மணியை வாய்க்குள்ள போட மாட்டியேன்னு எப்பவும் அம்மா நினைச்சுக்குவேன். சொல்லுடா...'’

‘`எல்லா பிள்ளைகளும் தூங்கிட்டிருந் தாங்களா. நான் படுத்துக்கிட்டு, கயிற்றிலிருந்து மணியைத் தனியா பிரிச்சு எடுத்துப்பார்த்துக்கிட்டு இருந்தேனா, அப்ப தீக்‌ஷித் படக்குன்னு வாயில தட்டி விட்டுட்டான். எனக்குப் பேச முடியல. ஒரு மாதிரியா இருந்தது. அதுதான் ஆயாகிட்ட தண்ணி கேட்டுக் குடிச்சேன். மேடம் எப்பப் பாரு தீக்‌ஷித்தை சேட்டை பண்றான்னு திட்டிக்கிட்டே இருப்பாங் களா... அதுதான் பாவம்னு அவனை மாட்டிவிடலை. அப்புறம்தான் உனக்கு எல்லாமே தெரியுமே. மேடம்கிட்ட சொல்லப் போறியா? மேடம்கிட்ட சொல்லிடாதம்மா. ப்ளீஸ்...'’

அன்று எத்தனை டென்ஷன், எவ்வளவு ஓட்டம்... இவளுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. மகளை அணைத்துக்கொண்டாள்.