சினிமா
Published:Updated:

மனிதனின் சிறு இதயம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- ஹேமிகிருஷ்

சிந்துவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. உதவி செய்ததற்காக அவமானப்படுத்தியது போலிருந்தது. ஆதங்கத்தில் இன்னும் வேகமாய் நடந்ததால் பலமாய் மூச்சிரைத்தது.

சற்று முன் அந்த அடுக்கக வளாகத்தில் நடைப்பயிற்சி செய்யும்போதுதான் கவனித்தாள். வயதான அமெரிக்கர் ஒருவர் பெரும் பெட்டியை வீட்டுப் படிக்கட்டின் மேல் ஏற்றக் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். காரிலிருந்து வீட்டுப் படிக்கட்டு வரை தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்திருப்பார் போலும். அந்தச் சக்கரத் தள்ளுவண்டியிலிருந்து அந்த பார்சலை மேலே ஏற்ற முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். சிந்து ஓடிச் சென்று படிக்கட்டிலேற்றி உதவினாள்.

``ஓ யங் லேடி, தேங்க் யூ சோ மச்’’ என மகிழ்ச்சியாகச் சொல்லி இரு கைகளைக் கூப்பி நன்றி சொன்னார். ஒல்லியாய் நீளமான வெண்தாடியில் ஆறடி உயரத்தில் இருந்தார். இமைகளும் வெண்ணிறத்தில் இருந்தன. தலையில் பெரிய நீள் வடிவத் தொப்பியும் அணிந்திருந்தார். அவள் பரவாயில்லை எனச் சொல்லி, தனது நடையைத் தொடர்ந்தாள். அவருக்கு இந்திய வணக்கம் சொல்லும் முறையும் தெரிந்திருக்கிறதே என ஆச்சரியப்பட்டாள். அந்த வளாகத்தின் வெளி கேட் வரை சென்று மீண்டும் திரும்புகையில் அந்த முதியவர் அவர் வீட்டின் முன் காரருகே நின்றுகொண்டிருந்தார்.

சிந்து அருகில் வந்ததும் புன்னகைத்து கையில் தயாராய் வைத்திருந்த ஒரு 10 டாலர் தாளை அவளிடம் கொடுத்தார். சிந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை. பணத்திற்காக இதைச் செய்யவில்லை என நிராகரித்தாலும் அவர் விடுவதாயில்லை.

``அப்படிச் சொல்ல வேண்டாம். இது உங்கள் கடவுள் லக்ஷ்மி. வேண்டாம் என்றால் அவரை நிராகரிப்பதுபோல், எனவே வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்றார்.

``இல்லை. இதை வாங்குவது எனக்கு அசௌகரியமாக இருக்கும். மன்னிக்கவும்.’’

``அப்படிச் சொல்லக் கூடாது. அதிர்ஷ்டத்தை நம்புவீர்களா, இதை நல்ல தொடக்கமாய் நினைத்துக்கொள்ளுங்கள்.’’

``உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றால் ஆதரவற்றவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.’’

``அது உங்கள் விருப்பம்! இதை வாங்கிக் கொண்டு நீங்களே ஆதரற்றவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’’ அவர் குரல் காட்டமாய் உயர்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். காட்சிப்பொருளாகிவிடக் கூடாதென வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டு நடந்தாள்.

உதவி செய்ததற்கு ஏதோ பிச்சைக்காரர் போல் பணம் தருகிறாரே எனக் கோபம் வேறு. `இதெல்லாம் தேவையா? பேசாமல் போயிருக்கலாம்’ என மனம் முழுக்க நடந்த அவமானத்தையே சுற்றி வந்தது.

சதுர வடிவத்தில் அமைந்த மூன்றடுக்கு மாடிக்குடியிருப்புகள் அது. ஐந்து கட்டடங்களாய் ஒவ்வொரு கட்டடத்திலும் சுமார்100 வீடுகள் இருந்தன. ஓக் மரங்களும் பல வித வண்ணச் செடி, புதர்களும் குடியிருப்பை அழகுபடுத்தியிருந்தன. அச்சு பிசகாத நகல்கள்போல் எல்லாக் கட்டடங்களும் ஒன்று போலிருக்கும். ஆரம்பத்தில் தன் வீட்டிற்கே குழப்பத்தினால் மாறிபோய்விடுவாள். அந்தச் சதுர வடிவக் கட்டடத்தில் நட்ட நடுவில் இருக்கும் நீச்சல் குளமே அவளுக்கு அடையாளம். அதனருகில்தான் அவள் வீடிருந்தது.

இன்று இப்படி ஒரு நிகழ்வு வருத்தம் தருமென எதிர் பார்க்கவில்லை. அந்த வயதானவர் நடந்துகொண்ட விதத்தை ஊரிலிருக்கும் அவளுடைய அப்பா விடம் சொல்லி வருத்தப்பட்டாள்.

மனிதனின் சிறு இதயம் - சிறுகதை

``அட விட்டுத்தள்ளு கண்ணு... நாம மட்டும் என்னவாம். ஊர்ல ஏப்பசாப்பையா இருந்தா இளக்காரமா நினைக்கிறதில்லையா? அப்படி நம்மளையும் எளக்காரமா நினைக்கற சனங்களும் இருப்பாங்கல்லோ’’ என்றார்.

அவரிடம் பேசியபின்தான் அவள் சமாதானமடைந்தாள். அவர் அப்படித்தான். ஒரு மனிதரையும் குறைசொல்ல இயலாது. ``போச்சாது போ. உம்பொழப்ப பாரு கண்ணு’’ அவ்வளவுதான், முடித்துவிடுவார். அந்த வார்த்தையே சிந்துவிற்கு பலரிடமும் விரோதத்தை வளரவிடாமல் செய்தது.

படிப்பை முடித்து சிந்துவிற்கு சென்னையில் வேலை கிடைத்த போது அவள் அம்மா விடவேயில்லை. ``அதெப்படி நாளைக்கு கல்யாணமாகி இன்னொரு வூட்டுக்கு போற புள்ள தனியா டவுனுக்கு அனுப்பறது?’’ எனச் சண்டையிட்டாள். அவளுடைய அப்பாதான் சமாதான மாக்கி சென்னைக்கு அனுப்பி விட்டார்.

திடீரென புது புராஜெக்டிற்கு அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆர்டர் கையில் வந்தபோது கனவு போலிருந்தது. படிப்பு முடித்ததும் சென்னைக்கு வருவதே சிந்துவிற்குப் பெரிய கனவு. இவ்வளவு விரைவில் கண்டம் தாண்டி அமெரிக்கா வருவதையும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய அம்மாவிற்கு சிந்துவைப் பல தொழில் செய்யும் தன் ஒன்று விட்ட அண்ணன் மகனிற்கு மணம் செய்து வைத்து அதே ஊரிலேயே வைத்திருக்கவேண்டுமென ஆசை. ஆனால் இவளுக்கு அவற்றில் எல்லாம் விருப்பமில்லை. அமெரிக்க ஆர்டரைப் பற்றி, அப்பா இருந்த தைரியத்தில் சொன்னாள். அவள் அம்மா குதித்தாள். யார் யாருக்கோ அலைபேசியில் அழைத்துத் தடுக்கச் சொன்னாள். ஆனால் அனைத்துமே இவளுடைய அப்பாவினால் சாத்தியமாயிற்று.

வானைமுட்டும் கட்டடங்கள் கொண்ட டவுன்டவுன், நாசா, ஹெர்மன் பார்க் என ஒவ்வொரு இடத்துக்கும் சென்றபோது மறக்காமல் வீடியோ எடுத்து அவளுடைய அப்பாவிற்கு அனுப்புவாள். வீடியோ அழைப்பிலேயே அவள் செல்லும் இடங்களைக் காண்பிப்பாள். அவளுடைய அப்பா, வியப்பாகப் புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார். வீட்டையும் காட்டையும் தவிர வேறெங்கும் செல்வதில்லை. சென்னைக்கு அழைத்தபோதுகூட விதைப்பு, அறுவடை என இடுப்பொடிய காட்டிலேயே காலத்தைக் கழித்தார்கள். கொரோனா காலம் முடிந்தவுடன் அமெரிக்காவிற்கு ஒருமுறையாவது அவர்களைஅழைத்து வர வேண்டும் என நினைப்பாள்.

மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது அங்கிருக்கும் வீடுகளை ஆராய்வாள். மங்கிய மஞ்சளும் இருளுமாய் ஓவியம் போல் எந்த வீடுமே கலைக்கப்படாமல் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆள் நடமாட்டமிருக்காது. பெரும்பாலும் தனியாளாகவே வசிக்கிறார்கள்.

சாலையைப் பார்த்திருக்கும் வீடொன்றில் மெக்ஸிகன் குடும்பம் ஒன்றிருக்கிறது. வெள்ளி இரவானால் மெக்ஸிகன் இசையை சப்தமாய் ஒலிக்கவிட்டு, வெளியில் கரிமூட்டி கறியைச் சமைக்க ஆரம்பிப்பார்கள். மெதுவாய் ஆடிக்கொண்டே குடும்பங்களாய் சேர்ந்துண்பார்கள். மேற்கத்திய பாப் பாடல்கள், கொரியன் பாடல்களில் நாட்டமில்லாத சிந்துவிற்கு பழைமையான மெக்ஸிகன் நாட்டுப்புறப் பாடல்கள் ஈர்த்தன. மெக்ஸிகன் இனத்தவர் எப்போதும் இசையும் கையுமாக இருந்ததைப் பார்த்தபோது, ஊரில் பேருந்திலும், நடக்கும்போதும், கையடக்க அலைபேசியில் இளையராஜா பாடல்களை ஒலிக்க வைக்கும் எளிய மனிதர்களை அவள் நினைக்காம லிருந்ததில்லை.

அந்த வளாகத்தில் நிறைய பூனைகள் உலாவின. எல்லாமே கொழுத்துக் கிடந்தன. ஐந்தாவது கட்டடத்தில் அடர்த்தியான புதருக்கிடையே கொழுத்த பூனையொன்று இருந்தது. பொமரேனியன் குட்டி அளவிற்கு உயரமாய் இருக்கும். பார்க்க அச்சம் தரும் அந்தப் பூனை பழகுவதற்குக் குழந்தை போலிருந்தது. அருகில் வந்தால் காலைச் சுற்றிக் கொஞ்ச ஆரம்பிக்கும்.

புதர்களுக்கிடையே வேட்டையாட ஒளிந்து கொண்டு பார்க்கும். புலி உருமாறி குட்டியாகி விட்டது போலிருக்கும் அதன் தோற்றம். இந்தப் பூனையின் பெயர் சேமி என அங்கு அருகில் வசிக்கும் வில்லியம் சொன்னான்.

ஒருமுறை அங்கே சென்றபோது, சிறு பூனையின் குரல் புதர்களுக்கிடையே கேட்டது. சிந்து சென்று உள்ளே எட்டிப் பார்த்தாள். நிறைய பூனைக்குட்டிகள் பஞ்சுப்பொதிகள் போல் பழுப்பும் வெள்ளையாகவுமிருந்தன. சேமி பூனை ஈன்றெடுத்திருந்தது. அவற்றை தினமும் வந்து பார்த்து தாய்ப்பூனைக்கும் சேர்த்துப் பால் வைத்துவிட்டுப் போவாள். அங்கு வரும்பொழுதான் வில்லியமிடம் பேசத் தொடங்கினாள். அவனும் அவற்றுக்கு உணவளித்து வந்தான். அமெரிக்காவின் வடகிழக்கு மூலையில் எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்தவன் வில்லியம். சிறுவயதிலேயே அமெரிக்காவின் வெதுவெதுப்பான மாநகரத்தில் சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஹூஸ்டன் நகரத்திற்கு வந்ததாக அவளிடம் சொல்லியிருந்தான்.

மனிதனின் சிறு இதயம் - சிறுகதை

வில்லியம், சேமி பூனை, மெக்ஸிகன் குடும்பம், அந்த முதியவர் என அனைவரையும் ஊரிலிருக்கும் அவள் அப்பா தெரிந்து வைத்திருந்தார். அத்தனை கதைகளையும் அவள் அப்பாவிடம் ஒப்புவித்திருந்தாள்.

அந்த நிகழ்விற்குப் பிறகு அந்த முதியவரை அவள் சந்திக்க வேயில்லை. அவர் கொடுத்த 10 டாலரைத் தொடாமல் அப்படியே வைத்திருந்தாள். பர்ஸைத் திறக்கும்போதெல்லாம் அந்த 10 டாலர் தாள் அவள் தன்மானத்தைப் பார்த்து இளிப்பதாகத் தோன்றும் அவளுக்கு.

அவரை மறுபடியும் வேறொரு பிரச்னையில் சந்திப்பாள் என நினைக்கவில்லை. வாரம் இருமுறை அவள் தளத்திலிருக்கும் லாண்டரி அறைக்குச் சென்று துணி துவைத்துக் கொண்டு வருவாள்.

அன்றைக்கு அவளுடைய தளத்தில் இருந்த இயந்திரம் வேலை செய்யவில்லை. அதனால் சிந்து தனது துணியைத் துவைக்க 3வது கட்டடத்திலிருக்கும் லாண்டரி அறைக்குக் கொண்டு சென்றாள். எல்லா மெஷின்களும் ஓடிக் கொண்டிருந்தன. ஒன்றில் மட்டும் ஒரே ஒரு துண்டு இருந்தது. எவரேனும் விட்டுச் சென்றிருக்கக் கூடுமென யூகித்து அதனை விரல் நுனியால் எடுத்து அங்கிருந்த பெஞ்சில் வைத்துவிட்டு, தனது துணியை மெஷினில் போட்டுக் கொண்டிருந்தாள். அவ்வேளையில் அதே ஆறடி முதியவர் வந்தார். அந்த மெஷினையும், பெஞ்சில் போடப்பட்டிருந்த தனது ஒற்றைத் துண்டையும் பார்த்துப் புருவத்தைச் சுருக்கினார். அவருக்கு சிந்துவை அடையாளம் தெரியவில்லை.

இவளாகவே ``மன்னிக்கவும், இந்தத் துணியை யாரோ விட்டுச் சென்றுவிட்டார்கள் என்றுதான் அங்கு வைத்தேன்’’ என்றாள்.

``விட்டுச் சென்றாலும் அவர்களாகவே வந்து எடுக்கும் வரை நீங்கள் தொடக் கூடாது மேடம்’’ என தனது துணியை எடுத்து அருகிலிருந்த ட்ரையரில் இட்டார்.

``மன்னிக்கவும்’’ என்றாள் தர்மசங்கடமாய்.

``இருந்தாலும் இன்னொருவர் துணியை எடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. இது கொரோனா காலம் எனத் தெரியாதா’’ எனக் கேட்டார்.

இவள் மீண்டும் ``மன்னிக்கவும் சார்’’ என்றாள்.

அவர் அந்த ட்ரையரின் கதவை ஓங்கி அடித்து மூடினார். சிந்துவிற்கு வெலவெலத்தது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. அவர் போய்விட்டார். `ச்சே, என்ன இப்படி நடந்து கொள்கிறார். இதைக்கூட மன்னிக்க மாட்டாரா? சிறு தவற்றையும் மன்னிக்காமல், செய்த உதவிக்கும் பங்கம் விளைவித்து… என்ன மனிதர் இவர்?’ என மனம் புழுங்கினாள்.

அவளுடைய அப்பாவிடம் சொன்னால் வருத்தப்படு வாரென சொல்லவில்லை. வில்லியமிடம் இதனை வருத்தமாகச் சொன்னபோது ``ஓ மன்னிக்கவும்... இப்படி நடந்திருக்கக் கூடாது, நீங்கள் வருத்தப்படவேண்டாம்’’ என்றான். இவளைப் பார்க்கும்போதெல்லாம் ``ஆர் யூ ஓகே’’ என அன்பாய் விசாரிப்பான்.

வழக்கத்திற்கு மாறாக குளிர் மைனஸில் சென்று பிப்ரவரி 15 வாக்கில் பனிப்புயல் வரலாம் என வானிலை எச்சரிக்கை விடுத்தது. பொதுவாக குளிர் அதிகம் இருந்தாலும் பனி பொழியாத இந்தப் பிரதேசத்தில் பனிப்பொழிவை அனுபவிப்பதற்காக மக்கள் மகிழ்ச்சியில் காத்திருந்தனர்.

அடுக்ககத்தின் நிர்வாகக் குழுவிடமிருந்து தொடர் மெயில் வந்த வண்ணம் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். இது புதிதல்ல, இதற்கு முன்னரும் சிலமுறை பருவகால மாற்றத்தின்போது வெள்ளம், சூறாவளி வரப்போவதாக முன்னெச்சரிக்கை மெயில்கள் வந்தபோது, வானிலை பொய்த்துப்போய், அளவுக்கு மீறி வாங்கி வைத்த பொருள்கள் வீணாகிப் போனதும் நடந்திருக்கிறது. அதனால் இந்தப் பனிப்புயலையும் வழக்கம்போல் என நினைத்துவிட்டாள்.

பிப்ரவரி 15 நெருங்குகையில் கடுங்குளிர் ஆரம்பித்தது. வீட்டிற்குள் ஹீட்டரை சொடுக்கியிருந்தாள். பனிப்பொழிவிற்கு முந்தைய நாள் மெல்ல மெல்ல பூப்போல் தூவியது. சிந்துவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி, ஒவ்வொரு இடமாய்ப் புகைப்படம் எடுத்து அவள் அப்பாவிற்கு அனுப்பினாள். மறு நாள் காலை பால்கனியின் கதவு திறந்து `புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ என்ற பாடலுக்கு இன்ஸ்டா ரீல், டிக் டாக் எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தாள். 12 மணி வரை விழித்திருந்து பின் தூங்கிப்போனாள்.

எல்லோரும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயம் பார்த்து வானம் மட்டும் அதிதீவிரமாய்ப் பனியைப் பொழிந்துகொண்டிருந்தது. சிந்துவிற்கு அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வந்தது. அவசரமாய் அவளது அறையின் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள். கருந்தார் ரோடு காணாமல் வெள்ளையாக இருந்தது. அத்தனை வெண்மை. பாலின் தூய்மை. பூப்பூவாய் வானத்திலிருந்து விழுந்துகொண்டேயிருந்தது. பால்கனியின் கண்ணாடிக் கதவைத் திறந்து வீடியோ எடுத்தாள். குளிர் வீட்டிற்குள்ளேயே அதிகம் இருந்தது. அப்போதுதான் கவனித்தாள், வீட்டில் மின்சாரமில்லை. அதனால்தான் குளிர் உறைக்கிறது. மீண்டும் படுக்கையில் சென்று படுத்தாள். வெடவெடவென இருந்தது. சூடாகத் தேநீர் தயாரிக்கலாமென்றால், அடுப்பெரிய மின்சாரம் வேண்டுமே. இங்கு மின்சார அடுப்புதான்... அப்படியே குளிருக்குத் தூங்கிப் போனாள்.

அவள் அப்பா கதவைத் தட்டுவது போலொரு கனவில் திடுக்கிட்டு எழுந்தாள். விடிந்திருந்தது. படுக்கையறையின் ஜன்னல் வழியே பார்த்தாள். வெண்துகள்கள் மெதுவாய் தூவிக் கொண்டிருந்தன. யாரோ ஒருவர் சாலையின் ஓரத்தில் நிற்க வைத்திருந்த காரைப் புறப்படவைக்கும் முயற்சியிலிருந்தார். இவள் எழுந்து கூடத்தின் பால்கனி கதவைத் திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. பனியில் உறைந்து இறுகிப்போயிருந்தது. இன்னும் மின்சாரம் வரவில்லை.

இதென்னடா குளிர் அசுரத்தனமாய் இருக்கிறதே என, சுவரிலிருந்த தட்பவெப்ப நிலை காட்டும் கருவியைப் பார்த்தபோது, அது மைனஸ் 8 செல்சியஸில் காண்பித்தது. மின்சாரம் வருவதற்குள் வீடியோ, புகைப்படம் எடுக்கலாம் என வெளியே வந்தாள். முகத்தசை எங்கோ இழுப்பது போலிருந்தது. கையுறை, சூட்டைத் தரும் ஜாக்கெட் எல்லாம் அணிந்தும் குளிர் தாங்க இயலவில்லை. அங்கு இவளைப் போலவே பல இந்தியக் குடும்பங்கள் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் பனியில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் முகமெல்லாம் இறுக ஆரம்பித்ததும் வீட்டிற்குள் வந்துவிட்டாள்.

அப்படியே படுத்துக்கொண்டு அலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் பார்த்துக்கொண்டிருந்த போது வெளியிலிருந்த அதே குளிர் வீட்டிற்குள்ளும் புக ஆரம்பித்தது. அவளுடைய வட இந்திய மேனேஜரான சுபாஷிடம் அலைபேசியில் கேட்டபோதுதான் பனியின் தீவிரம் புரிந்தது. பனிப்புயல் காரணமாக பிரதான மின் கம்பம் வெடித்துவிட்டது. எப்போது மீண்டும் மின்சாரம் வருமெனத் தெரியாது. ஏதாவது ஓரிரு இடங்களில்தான் மின்சாரம் இருக்கும். தான் ரிவர் ஓக்கிலிருக்கும் நண்பர் வீட்டிற்கு வந்துவிட்டதாகச் சொன்னார். பேசிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய அலைபேசியும் மின்னேற்றம் இல்லாமல் அணைந்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. பசி வேறு.

சமைக்காமல் சாப்பிடும்படி ஏதும் இருக்கிறதா என சமையலறையில் தேடினாள். எதுவுமில்லை. மரத்துப்போயிருந்த கை கால் விரல்கள் எல்லாம் நெருப்பாய் எரியத் தொடங்கின. ரத்தம் சுண்டிப் போய் சுருக்கம் சுருக்கமாய் அவள் விரல்கள் மாறியிருந்தன. உள்ளங்கை ஓரங்கள் எல்லாம் நீல நிறத்தில் மாறத் தொடங்கின. தலையில் ஐஸ் கட்டி வைத்தாற்போலிருந்ததால், தலையில் ஒரு கம்பிளித் துணியை மூக்கோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள். மணி 11 ஆகியும் மின்சாரம் வரவில்லை, சாப்பிட உணவில்லை, நீரும் வரவில்லை. திடீரென உலகின் இணைப்பு துண்டித்து, தான் மட்டும் தனித்திருப்பதுபோல் உணர்வு உண்டானது. யாருமில்லா இந்தத் தனிமை முதன்முறை மரண அச்சத்தைக் கொடுத்தது.

``பொறந்தப்போ கொடிசுத்தி நீலம் பாய்ஞ்சு தோல் சுருங்கிப்போய்தான் வெளில வந்த. குழந்த செத்துடுச்சுன்னு சொல்லி உன்ன பொட்டணம் கட்டி அந்த நர்சம்மா ஓரமா வச்சுட்டுப் போயிடுச்சு. உங்கம்மா ஈனத்துல அனத்தறா... நான் உன்ன எடுத்துட்டு டாக்டரைப் பாக்க வராந்தால ஓடினேன்... அந்நேரம் பாத்து பெரிய டாக்டரம்மா ரவுண்டு வந்தவுக என்னன்னு விசாரிச்சு உன்னைத் தூக்கிட்டுப் போய் உள்ளார கவனிச்சாங்க. கொஞ்ச நேரத்துல எங்கிட்ட அந்த டாக்டரம்மா வந்து `யார் சொன்னா செத்துப்போனதா? போய்ப் பாருங்க, ஜம்னு ரெடி ஆயிட்டா உங்க புள்ள’ன்னு சொன்னாங்க.அந்த மாரி, பொறக்கறப்பவே பெரிய கண்டத்தை முழுங்கிப்போட்டுதே நீ வந்த. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல.’’ அவள் துன்பப்படும் போதெல்லாம் அப்பா இதைச் சொல்வார்.

அவளுக்கு அப்பாவிடம் பேச வேண்டும்போலிருந்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ``நீ எல்லாத்தையும் சமாளிச்சு வந்துடுவ கண்ணு. எப்பேர்ப்பட்ட ஆளு நீ’’ என அசரீரியாக அவளுடைய அப்பா சொல்வது போலிருந்தது.

ஏதாவது உணவகம் திறந்திருக்கிறதா என்று போய்ப் பார்க்கலாம் என மெல்ல எழுந்தாள். கதவைப் பூட்டக்கூட இயலாமல் கைவிரல்கள் வலித்தன. தீப்பற்றியதுபோல் விரல்கள் எரிந்தன. கால்களால் ஊன்ற முடியவில்லை. கையை உதறிக்கொண்டே வலியைப் பொறுத்தபடி கதவைப் பூட்டி கார் சாவியுடன் வெளியே வந்தாள். வில்லியம் ஜனவரி இறுதியில் ஊருக்குச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. தப்பித்திருந்தான். வெளியில் விளையாடிய இந்தியக் குடும்பங்கள் அனைத்தும் வீட்டைப் பூட்டிக்கொண்டு நண்பர்கள் இடத்திற்கும், விடுதிக்குமாய்ச் சென்றுவிட்டிருந்தன.

அந்த மிகப்பெரிய அடுக்ககமே பேரமைதியில் திகிலாய்க் கிடந்தது. முற்றத்தைக் கடந்து, படிகளில் இறங்கினாள். நீச்சல் குளம் பனியால் நிரம்பியிருந்தது. செடிகொடிகளெல்லாம் பனியுருவமாய் மாறிப்போயிருந்தன. மரத்திலிருந்த இலைகள் பனியின் அழுத்தம் தாங்காமல் கவிழ்ந்திருந்தன. நீச்சல் குளமருகே சேமிப் பூனையும் அதன் குட்டிகளும் இறந்து போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானாள். ஒரு அமெரிக்க இளம் பெண், தான் காப்பாற்றிய பூனைகளை அணைத்தபடி எங்கோ சென்றுகொண்டிருந்தாள்.

நீச்சல் குளமருகேயிருந்த படிக்கட்டுகளில் இறங்கி, கவலையுடனே தரைத்தளத்திற்கு வந்தாள் சிந்து. காரை இயக்கி சூடேற்றியைச் சொடுக்கினாள். தனது அலைபேசியை சார்ஜிலிட்டாள். மெதுவாக காருக்குள் சூடு பரவியதும் உடல் மோசமாய் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாக வண்டியை ஓட்டினாள். பனிச் சாலையில் மெதுவாகச் செல்ல வேண்டும், இல்லையெனில் விபத்திற்குள்ளாக நேரிடும். நேற்றிரவே ஃப்ரீவே எனச் சொல்லப்படும் மேம்பாலத்தில் பனிச்சாலையில் பத்திற்கும் மேற்பட்ட வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைச் செய்தியில் படித்திருந்தாள்.

சில நிமிடங்களில் அவளது அலைபேசி உயிர்பெற்றது. வெஸ்டைமர் சாலையிலிருந்த சரவணபவன் திறந்திருந்தது. ஆனால் எல்லாம் காலியாகிவிட்டதாகச் சொன்னார்கள். உடனே ஹில்கிராஃப்ட் நோக்கி வண்டியைச் செலுத்தினாள். அங்கு நிறைய இந்தியக் கடைகள் இருக்கின்றன. செல்லும் வழியில் இருந்த அனைத்துத் தானியங்கி பெட்ரோல் பங்குகளில் மின்சாரமில்லாதால் பெட்ரோல் கிடைக்காமல் எல்லா கார்களும் வருவதும் செல்வதுமாய் இருந்தன. ஓரிரு நாள்கள் முன்தான் சிந்து பெட்ரோல் போட்டதால் பெருமூச்செறிந்தாள். மின்சாரமில்லாமல் ஒட்டுமொத்த நகரமே ஸ்தம்பித்திருந்தது.

ஹில்கிராஃப்டில் மெதுவாக ஒவ்வொரு இடமாய்ப் பார்த்தபோது ஒரு அரேபியக் கடை மட்டும் திறந்திருந்தது. சென்று விசாரித்தபோது ரொட்டி பாக்கெட் மட்டுமிருப்பதாகச் சொன்னார்கள். இரு ரொட்டி பாக்கெட்டுகளை வாங்கினாள். பணம் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய 10 டாலரை பர்ஸில் துழாவினாள். ஏடிஎம் அட்டையில்தான் அவள் பணம் செலுத்துவது வழக்கம். இன்று எல்லாமே தலைகீழாக இருந்தது. வேறுவழியின்றி அந்த முதியவர் கொடுத்த 10 டாலரை எடுத்துக் கொடுத்தாள். வாங்கிய ரொட்டி பாக்கெட்டுகள் ஏளனமாய் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. கண்களைத் திருப்பிக்கொண்டாள்.

வெளிவந்த போதுதான் கவனித்தாள். சில இந்தியக் குடும்பங்கள் சற்றுத் தொலைவில் நின்று பேசிக்கொண்டிந்தன. இவர்களிடம் ஏதாவது கேட்டால் தெரியுமென சென்று விசாரித்தாள். மின்சாரம் இந்தப் பகுதியில் வர இன்னும் மூன்று நாள்களாவது ஆகும். வெகுசில இடங்களில் மட்டுமே இருக்கிறது, `சுகர் லேண்டில்' இருக்கும் அவர்களின் நண்பர் ஒருவர் வீட்டில் மின்சாரம் இருப்பதால் அவர்கள் அங்கே செல்வதாகச் சொன்னார்கள்.

மனிதனின் சிறு இதயம் - சிறுகதை

அவர்களிடம் தனக்கும் அடைக்கலம் தர முடியுமா எனக் கேட்டாள். இவள் ஒருத்தி மட்டும் என்பதால் தயக்கமில்லாமல் ஒப்புக்கொண்டார்கள். அவர்களுடைய நண்பரின் வீட்டு முகவரியையும், வரைபட இருப்பிடத்தையும் அவளிடம் பகிர்ந்தார்கள். படுக்கை விரிப்பும், கனமான போர்வையும் கொண்டு வரச் சொன்னார்கள். இவள் சரியென ஒப்புக் கொண்டு அவசரமாய் காரை வீட்டை நோக்கி முடுக்கினாள்.

வீட்டிற்குள் குளிர் மிக மோசமாக இருந்தது. ஒரு நிமிடம்கூட இருக்க முடியாமல் தவித்துப்போனாள். மிகவும் பிரயத்தனப்பட்டு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஏதோ ஒரு குரல் கேட்டது.

வராந்தாவின் ஒவ்வொரு வீட்டின் கதவையும் யாரோ தட்டிக் கொண்டிருந்தார். ``யாராவது இருக்கீங்களா? உதவி செய்யுங்கள்’’ என்றது அந்தக் குரல். இவள் அருகில் சென்றாள். அதே உயரமான முதியவர்.

``இங்கிருந்த அனைவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு தொலைவில் சென்று விட்டார்கள். யாருமில்லை’’ என்றாள்.

``பசிக்கிறது, சாப்பிட எதுவுமில்லை. குளிரும் மோசமாய் இருக்கிறது. அவசர எண்ணிற்கு அழைத்தால் அவர்கள் என்னைக் கூட்டிச் சென்று இருப்பிடம் தந்து உதவுவார்கள். அவர்களைத் தொடர்பு கொள்ளலாமென்றால், எனது அலைபேசியும் செயலிழந்துவிட்டது’’ என்றார் நடுங்கிய குரலில்.

சிந்து அவளது அலைபேசியைக் கொடுத்து அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளச் சொன்னாள். அவர் நன்றி சொல்லி அவசர எண்ணிற்கு அழைத்து அவருடைய விலாசம் தந்தார்.

``கவலை விடுங்கள். சில நிமிடங்களில் உங்களை அழைத்துச் செல்ல வந்து விடுவார்கள். தற்காலிகமாய் இந்த ரொட்டியை சாப்பிட வைத்துக் கொள்ளுங்கள்’’ என இரு ரொட்டிப் பாக்கெட்டு களையும் அவரிடமே கொடுத்தாள். ``ஓ... தேங்க் யூ ஸ்வீட் ஹார்ட்’’ என நெகிழ்ந்தார். அவருக்கும் அவளுக்குமாய் இருந்த கணக்கு ஒன்று முடிந்த திருப்தி அந்த இக்கட்டான நிலையிலும் அவளுக்குத் தோன்றியது.

அவரை ஏறெடுத்தும் பாராமல் திரும்பி வெளியே வந்து காரை இயக்கினாள். அவள் அப்பாவிடம் சொல்ல அவளுக்கு நெடுங்கதை ஒன்று கிடைத்திருந்தது. பனிப்பொழிவினிடையே அவளுடைய வண்டி ‘சுகர் லேண்டை’ நோக்கிச் சென்று கொண்டிருந்தது.