Published:Updated:

`குப்பைகளிலிருந்து உருவான கிராஃப்ட் பொருள்கள்!' - லாக்டௌன் நேரத்தில் அசத்திய மாணவி

கிருத்திகா

''கொரோனா லாக்டௌனால நிறைய நேரம் கிடைச்சது. மொபைல், டிவினு அதை வீணடிக்காம, ஏதாச்சும் பயனுள்ளதா பண்ணணும்னு நினைச்சேன்.''

Published:Updated:

`குப்பைகளிலிருந்து உருவான கிராஃப்ட் பொருள்கள்!' - லாக்டௌன் நேரத்தில் அசத்திய மாணவி

''கொரோனா லாக்டௌனால நிறைய நேரம் கிடைச்சது. மொபைல், டிவினு அதை வீணடிக்காம, ஏதாச்சும் பயனுள்ளதா பண்ணணும்னு நினைச்சேன்.''

கிருத்திகா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவி கிருத்திகா. கொரோனா லாக்டௌனால் கிடைத்த நீண்ட விடுமுறையில் ஒரு புதிய கலையைக் கற்றுக்கொண்டு, அதில் வருமானம் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார், இந்த மூன்றாம் ஆண்டு மாணவி.

'ஆர்ட் ஃபிரம் எனித்திங்' என்ற கான்சப்ட்டில் பழைய பொருள்களை எல்லாம் கலைப் பொருள்களாகவும் ஓவியமாகவும் மாற்றி இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருபவரிடம் பேசினோம்.

கிருத்திகா செய்த கிராஃப்ட்
கிருத்திகா செய்த கிராஃப்ட்

"எனக்கு சின்ன வயசுலயிருந்தே டிராயிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். ஸ்கூல் படிக்கும்போது நிறைய ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கேன். கடைசியா ப்ளஸ் டூ படிச்சப்போ வரைந்தது. காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் படிப்புக்கே நேரம் போதலை. சென்னையில படிக்கிற நான், லீவுக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போறதே பரபரப்பாதான் இருக்கும்.

இந்தச் சூழ்நிலையில, கொரோனா லாக்டௌனால நிறைய நேரம் கிடைச்சது. மொபைல், டிவினு அதை வீணடிக்காம, ஏதாச்சும் பயனுள்ளதா பண்ணணும்னு நினைச்சேன். மீண்டும் நிறைய வரைய ஆரம்பிச்சேன். குறிப்பா, வீணாகும் பொருள்கள்ல இருந்து கிராஃப்ட் பண்ணும் கான்சப்ட்டை எடுத்துக்கிட்டேன். யூடியூப் வீடியோக்கள் பார்த்து அது சம்பந்தமா கத்துக்கிட்டேன்.

நான் பண்ணின கிராஃப்ட்களின் போட்டோஸை எல்லாம் என் இன்ஸ்டா அக்கவுன்ட்ல பகிர்ந்தேன். நல்லா இருக்குனு பாராட்டினதோடு, அதையெல்லாம் விலைக்கும் கேட்டாங்க. இப்போ 85 ரூபாய்ல இருந்து 600 ரூபாய்வரைக்கும் என் பொருள்களை விற்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றவர், மேலும், ''ஒவ்வொரு வேஸ்ட் பொருளையும் வித்தியாசமான பொருளா மாத்திட்டேன். வேண்டாம்னு நாம தூக்கி எறியும் அட்டை, வளையல், பிளாஸ்டிக் எல்லாத்தையும் கிரியேட்டிவிட்டியில கலைப்பொருளா மாத்தலாம்'' என்றார்.

கிருத்திக்கா குடும்பத்துடன்
கிருத்திக்கா குடும்பத்துடன்

கிருத்திகாவின் தந்தை உலகப்பன், தமிழ்நாடு மின்வாரிய திருப்புவனம் பிளாக்கில் உதவி செயற்பொறியாளர். ''என் பொண்ணு பண்ணின கலைப் பொருள்களை என் கூட வேலை செய்றவங்ககிட்ட காட்டுனேன். ரொம்ப ஆச்சர்யப்பட்டு வாழ்த்தினாங்க'' என்கிறார் பெருமையுடன்.

''அம்மா, புது ஆர்டர் வந்திருக்கு, நான் பிஸி'னு கிருத்திகா சொல்லும்போது பெருமையா இருக்கு'' என்கிறார் அவர் அம்மா கண்ணம்மாள்.

தன் கிராஃப்ட் பொருள்களின் ஹைலைட்டான பாட்டில் டிராயிங் பற்றிச் சொல்லும்போது கிருத்திகா, ''ஒரு சேஞ்சுக்காகத்தான் காலி பாட்டில்ல வரைஞ்சேன். முடிச்சுட்டுப் பார்க்கும்போது எனக்கே அது ரொம்ப பிடிச்சிருந்தது. அதேபோல மத்தவங்களுக்கும் அது ரொம்பப் பிடிச்சுப்போக, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாம் பழைய காலி பாட்டில்களை என்கிட்ட கொடுத்து வரையச் சொல்லி உற்சாகப்படுத்தினாங்க.

கிருத்திகா செய்த கிராஃப்ட்
கிருத்திகா செய்த கிராஃப்ட்

என் முதல் பாட்டில் டிராயிங், என் அம்மா, அப்பாவுக்காகப் பண்ணினேன். அக்ரலிக் பெயின்ட், ஸ்பாஞ் பயன்படுத்தி பாட்டில்ல எங்க அம்மா, அப்பாவை வரைஞ்சேன். அதுக்கு நார்மல் பிரஷ் யூஸ் பண்ண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவங்களோட 20வது திருமண நாள் பரிசா அதை அவங்களுக்குக் கொடுத்தப்போ, சர்ப்ரைஸ் ஆகிட்டாங்க. வழக்கமா நானும் தம்பியும் கடையிலதான் கிஃப்ட் வாங்கிக் கொடுப்போம். இந்த வருஷம், அவங்களையே அவங்களுக்கு கிஃப்டா கொடுத்தது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

கலையின் நோக்கம் நெகிழ்வும் மகிழ்வும்தானே!