சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அம்மாவின் ஒரேயொரு இருமல் இரண்டு மூன்றாகத் தொடர்கிறது அருகில் சென்று

காலத்தைத் தாங்கும் ஆணிகள்

சுவர்களில் அறையப்படும் ஆணிகள்

நினைவுகளைத் தாங்கும்

பாட்டன் பூட்டன் தாத்தா என

நமக்குத் தெரியா காலங்களின்

வரலாறு பேசும்.

ஆச்சி பாட்டி பூட்டியின்

தோடுகளும் காது வளர்த்த

கதைகளும் நிழற்படம் நிரப்பியே

இருக்கும்

அம்மா ஆச்சியின் கதையைச்

சொல்கையிலும்

ஆச்சி பூட்டியின் கதையைச்

சொல்கையிலும்

சீதனமாய் வந்த உரலும்

அம்மிக்கல்லும் அதன் காலங்களைக்

கணக்கெடுத்துச் சொல்லும்

ஆணிகள் எப்போது

அடிக்கப்பட்டதெனத் தெரியாது

நிழற்படத்தில் குறிக்கப்பட்ட

எண்களால் வருடத்தை நினைவுகூரலாம்

ஆணிகள் காலத்தையே தாங்கும்

வரம் பெற்றவை

சுதந்திரத்திற்காக

காந்தியோடிருந்த பூட்டன்

என்னிடம் பேசுகிறார்

ஐஎன்ஏவில் கேப்டனாக இருந்த தாத்தா

இப்போதும்

கம்பீரமாகவே மீசை முறுக்குகிறார்

ஆவணங்கள் பேசுவதை

ஆணிகள் தாங்குகின்றன

காலத்தை அழித்துவிட்டு

ஆணிகளை அப்புறப்படுத்த முடியாது.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்.

வரமா சாபமா?

நான் கடவுள்

நகரில் வாகனங்கள் பெருகி

சாலைகள் விரிவாக்கப்பட்ட நாளில்

ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன

பறவைகள் தங்க இடமில்லாமல் பெயர்ந்தன

அந்தநாளில்

நவநாகரிக மனிதன் ஒருவனுக்குப்

பறவையாகும் ஆசை பிறந்தது

கடவுளாகிய என்னிடம் வந்தான்

முதலில் ஊர்வனவாகவும்

பின் பறக்கும்படியும் மாற்றுகிறேன் என்றேன்

மனதில் பட்டாம்பூச்சி நினைவுக்கு வரவும்

சரியெனத் தலையாட்டினான் அவன்

பின்னாளில்

சிக்னல் விழும்போது

வாகனத்தில் ஊர்ந்துகொண்டும்

சிக்னல் விழுந்தபின்பு

பறந்துகொண்டும்

வாழ ஆரம்பித்திருந்தான்

என்னை நினைத்து

அவன் நொந்துகொண்ட நாளிலிருந்து

அவனைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தேன்.

- இரா.செந்தில் கரிகாலன்

சொல்வனம்

தாமத வலி

ம்மாவின் ஒரேயொரு இருமல்

இரண்டு மூன்றாகத் தொடர்கிறது

அருகில் சென்று

தலையை ஆறுதலாகப்பற்றி

`என்னம்மா?' என்றதும்

`ஒண்ணுமில்லப்பா இப்ப

சரியாகிடுச்சி' என்கிறார்

முதல் இருமலிலேயே

நான் கேட்டிருக்கலாம்

எத்தனையோ வலிகளைத் தந்துவிடுகிறது

தாமதமாகும் ஒற்றை ஆறுதல்.

- ஆண்டன் பெனி

காணவில்லை

காந்தி சிலை பின்புறம்

உரச் சாக்கு நிழலில்

ஒற்றைக்காலை மடித்தும்

பிறிதொன்றை நீட்டியும்

செருப்புத் தைத்துக்கொண்டிருந்த

எழுபது வயதைக் கடந்த முதியவர்

நாளொன்றுக்கு மூன்றுமுறை

எல்லாப் பேருந்திலும் ஏறியிறங்கும்

இரண்டு கைகளின் விரலிடுக்கில்

பாப்கார்ன் பூத்திருக்கும்

பதினைந்து வயதுக்குக் குறைவான சிறுவன்

எடை பார்க்கும் மிஷினுக்கு அருகில்

இடுப்புக்குக் கீழே தொங்கும் பூச்சரத்துடன்

சிரித்தபடி கண்சிமிட்டும் கலைமகள்

‘கண்ணில்லாதவன்மா தர்மம் பண்ணுங்கம்மா’வென

சுதிமாறாமல் நாள்முழுதும் வளையவரும்

பார்வையற்ற வயோதிக தம்பதியர்

உச்சி வெயிலில் வெற்றுடம்பில்

கன்றி குருதியொழுகும் கோடுகளுடன்

சுளீரென சாட்டையால் விளாசிக்கொள்ளும்

சலங்கை கட்டிய அந்த அண்ணனும்

சுதிசேர்த்து மேளம் கொட்டும்

அவர் மனைவியும்

மேலாடையில்லாமல்

தட்டேந்தி வரும் அவர்கள் மகனும்

இயல்புக்குத் திரும்பிய பிறகும்

எங்கும் காணவில்லை

கடந்து செல்லும் நொடியில்

இமைச் சிறகில் நகைசிந்தும்

என்னையும்கூடத் தேடலாம்

அவர்கள் எங்காவது.

- ப.செல்வகுமார்