சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

நட்சத்திரங்கள் அங்கேயேதான் இருக்கின்றன இருள்தான் இடம் மாறிச்செல்கிறது

ரணப் பெரும் வலி

ஒவ்வொருவரின் தலையிலும்

துதிக்கை

பதித்து ஆசீர்வதிக்கும்போது

யானை

பெரும் காட்டின் தவத்தையே

தருகிறது

பசிக்காக

நடந்து வருகையில்

டயரின் தூண்டிலில்

நெருப்பையள்ளி வீசியபோது

பெரும் காடே பேதலித்துப்

போனது

வண்டியில் யானையைக்

கிடத்தியதும்

அதிர்ந்த காட்டில்

மரண நரம்பறுத்த

மனித வாசத்தை

ஓலமிட்டு எழுதியது

வெளியே தொங்கிய

துதிக்கை.

- வீரசோழன்.க.சோ.திருமாவளவன்.

றவின் பாடல்கள்

யதேச்சையாக உதிரும்

ஒரு சொல்லைக் கேட்டவுடன்

‘இது ராஜூ மாமா

அடிக்கடி சொல்வது’

என்கிறாள் தங்கை

பின்னொரு நாளில்

வேறொரு பாடலை

முணுமுணுத்துக்கொண்டிருக்கையில்

‘இது அத்தையோட பாடல்’

என்கிறான் தம்பி

ஏதோ குடும்பப் பிரச்னையில்

நான்கைந்து வருடங்களாக

பேசாமல் தள்ளி இருந்தாலும்

உதிரும் சொற்களில்

கேட்கும் பாடல்களில்

உயிர்த்திருக்கிறது

துண்டாகிப் போன உறவுகள்.

- பிரபுசங்கர் க

சொல்வனம்

வா காதல் செய்வோம்!

தொட்டுக்கொள்ளும் தூரம்தான்

இருந்தும்

இருவரும் சேர்ந்தே தனிமையின்

ஆழ்ந்த இருளுக்குள்

தொடுதிரைகளின் ஒளிக்கற்றையில்

உன்னை நீயும் என்னை நானும்

நம்மை நேரமுமாக மாற்றி மாற்றித்

தேடுகிறோம்

குழைந்த அதன்

சிணுங்கல்கள் தனித்திருத்தலை

நினைவுறுத்தித் தொட்டணைக்கக்

கெஞ்சுகிறது

ஒரு பசியுள்ள சிசுவைப்போல

அதன் கனத்த அழுகையானது

விரல்காம்புகளில்

விசும்புகிறது

சுரக்கும் உள்ளுணர்வுகளையெல்லாம்

அதன் மென்மையான நாவிடுக்கில்

கசிந்துவிட்டு வற்றிய இருபெரும்

என்புகளாக காலத்தைக் கட்டியணைத்து

உறங்கச்செல்வோம் வா.

- சாய்வைஷ்ணவி

மாறாதவை

நாற்காலி

அப்படியே இருக்கிறது

பதவியில்

இருப்பவர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்

நட்சத்திரங்கள்

அங்கேயேதான் இருக்கின்றன

இருள்தான்

இடம் மாறிச்செல்கிறது

மலை

அசையாமல் நிற்கிறது

ஓரிடத்தில்

பொன்னொளிக் கதிர்கள்தான்

ஓரிடத்தில் நிற்காமல்

தோன்றி மறைகின்றன

ஆலயங்கள்

அங்கேயேதான் இருக்கின்றன

உலராத கண்ணீரும்

ஓயாத வேண்டுதலும்

மன்றாடும் மனங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன

ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாமல்

சென்றுவிடுகின்றது

உயிர்

கைவிட்ட இடத்தில்

அடம்பிடிக்கும்

குழந்தைபோல்

அங்கேயே கிடக்கிறது

உடல்.

- அமீர் அப்பாஸ்