கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

பழுத்த நாவல் கனியொன்று

விலைபேசி

செல்லாவின் உலகம்

இருக்கிறது

செவ்வகமாய்...

கடமைதவறாத

காணொலி தரிசனத்தில்

தாத்தா பாட்டி

கிளிக்குப் பதிலாக

டாக்கிங் டாம்

வளர்க்கிறாள்.

பசித்தவுடன் ஓடிவருகின்றன

ஸ்விக்கியும் ஸொமெட்டோவும்

படித்துவிட்டாயா

கேட்டுக்கொண்டே

அருகமர்கிறான்

பைஜூஸ் பையன்

இந்த

கேண்டிகிரஷ்

மிட்டாய்களை

நொறுக்கித்

தள்ளுவதில்தான்

எவ்வளவு தித்திப்பு...

ஆன்லைனில்

அடுக்கடுக்காக

விரிகிறது

வரலாறு

பூகோளம்

கணிதம்

கட்டணத்திற்கு நியாயமாய்

கராத்தேவும்கூட...

அதிசயமாய்

அருகமர்ந்து

அம்மா யாரென்று

கேட்கும்

அம்மாவுக்கு

அடையாளம் காட்டுகிறாள்

அலைபேசி கவர்போட்டோவில்...

- கலைவாணி ஆனந்த்

பழுத்த நாவல் கனியொன்று

ஈக்கள் அண்டாமல் விரட்டிக்கொண்டு

வெயில் மழையென

தாக்கிவிடாமல்

கை வலிக்கக்

குடை பிடித்தவாறு

ஒரு மரம் காத்ததைவிடவும்

கொஞ்சம் கூடுதலாகவே

பாதுகாத்து வீற்றிருக்கிறாள்

வெட்டவெளியில்

நாவல் பழம் விற்கும்

கனிந்த பாட்டியொருத்தி.

- சாமி கிரிஷ்

சொல்வனம்

சொற்களற்ற அம்மா

வீட்டுக்கு வருபவர்கள்

கால்களைக் கழுவ

வாளியில் தண்ணீர் வைத்து

வந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்து

கதவருகே ஒண்டிக்கிடக்கும் அம்மாவுக்கு

ஒன்பது பிள்ளைகள்...

அப்பாவின் முகம் பார்த்துப்

பேசியதில்லை

உறவினர்கள் கூட்டத்தில்

அப்பா அருகே சமமாய் அமர்ந்ததில்லை

ஆசையாய் ஒரு முழம் பூ

வாங்கித் தராத அப்பா

ஓட்டும் சைக்கிள்

கேரியர் நுனியில்

அமரும் அம்மாவிடம்

தன் இடுப்பு அல்லது தோள்களைப்

பிடித்துக்கொள்ள

ஒருபோதும் சொல்லியதில்லை.

- முகில் முருகேசன்

பாவனை அழகு

இடையில் கைவைத்து

உயிர்பெற்றெழுந்த

கோப்பையென

உலவியபடி

இப்படி இருக்கும் தம்ளரில்

தேநீர் கொடு என்கிறாள்.

குட்டி தேவதையின்

அபிநயத்தால்

அழகாகிறது

அறியாமை ஒன்று.

- மு.கவிதா சரவணன்