
விடாய்க்குக் கெடந்து கரைகிறது எச்சமும் கிட்டாத காகம்
இயல்பு தொலைத்த இயலாமைகள்
அடிக்காத அலாரம்
நேரத்தில் எடுக்கப்படாத பால் பாக்கெட்கள்
காணாமல்போன காலைநேரப் பரபரப்பு
மறந்தேபோன காலைவேளைக் குளியல்கள்
நெடுநேரத் தூக்கங்கள்
நேரந்தவறிய உணவுமுறை
அளவற்ற சிறுதீனி
உபயோகப்படுத்தாத சீருடைகள்
பயன்படுத்தாத சலவைப்பெட்டி
மடிப்பு கலையா உடைகள்
அளவற்ற சோம்பேறிதனம்
மழையோ வெயிலோ
இரவா பகலா என அறியத்
தேவையற்ற பொழுதுகள்
துக்கச் செய்தியிலும் நிர்ச்சலனமாய்
மரத்துப்போன மனம்
என நீண்டுகொண்டே போகின்றன
இயல்பு தொலைத்த நம் இயலாமைகள்!
- தனுஜா ஜெயராமன்
பைசாசப் பசி
விடாய்க்குக் கெடந்து கரைகிறது
எச்சமும் கிட்டாத காகம்
தாட்டியம் மெலிந்து
ஒரு சிற்றூரையெழுப்புகிறது
சோளப்பொரியும் காணாத யானை
கங்குலை வன்மையாகக்
குரைத்துக் குரைத்துக் கேவுகிறது
தொண்டை விம்மிய ஞமலி
ப்ரிட்ஜைத் திறக்கப்போராடி
ஊசிவிழுந்த இருளில் சந்திரியாய்
ஊளையிடுகிறது கர்ப்பிணிப்பூனை
அடுக்களையில் சாம்பார் ஊறிப்
பாவிய கறையை மீசையிழையால்
சொரண்டிப்பார்த்துக் கவிழ்ந்து
முதுகிலடித்துக்கொள்கிறது கரப்பான்பூச்சி
நானோ காமத்தை மல்லாக்கிட்டு
அதன்மேல் குப்புறப்படுத்துக்கொள்கிறேன்
திரட்சியான வனப்பில்
ஒரு பைசாசமாய் எங்களைப் பார்த்து
அசரீரியாகச் சிரிக்கிறது பசி
கரட்டொலியில் அதன் வயிறு ரொம்பும்வரை.
- ச. அர்ஜூன்ராச்

கேட்காதீர்கள்...
ஏன் என்ற
கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்
இப்படித்தான் பலரைக்
கீழே தள்ளினேன்
இப்படித்தான் சிலரைக்
காயப்படுத்தினேன்
இப்படித்தான் சிலரை
உதாசீனப்படுத்தினேன்
இப்படித்தான் நான் மேலேறி
உச்சியில் நிற்கிறேன்
ஏன் என்று கேட்காதீர்கள்
என் காதுகள் நிராகரிப்புகளால்
நிரம்பி இருக்கின்றன
மீண்டும் சொல்கிறேன்
ஏன் என்ற கேள்வியைக்
கேட்காதீர்கள்...
நான் முதலில் தள்ளிவிட்டதே
முதல் படியில் குவிந்திருந்த
கேள்விகளைத்தான்.
- மணிவண்ணன் மா
முரண்
அரிசி மூட்டையின்
அருகில் எலி பேஸ்ட்டை
வைத்துவிட்டு
வெளியே
கரையும் காக்கைக்காக
சின்னத் தட்டில்
சோறு வைத்துவிட்டு வந்தேன்.
- பெ.பாலசுப்ரமணி