சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

மீட்பு

மூழ்குவதற்கு முந்தின வாரம்

வங்கியிலிருந்து வந்த கடிதத்தில்

அடகில் வைத்த நகை

ஏலம் போவதாய் எழுதியிருந்தது

அங்கேயும் இங்கேயுமாய்

உருட்டிப் புரட்டி

கெடுவிலிருந்த கடைசி நாளில்

மீட்பதற்கென நின்றிருந்த வரிசையில்

இரண்டு பெண்களுட்பட

எவர் கழுத்திலும் நகைகளில்லை

அசலும் வட்டியுமாய் பணத்தைக் கட்டிய

அரை மணி நேரத்தில்

லாக்கரிலிருந்த நகை

மதிப்பீட்டாளரின் கையில்

குட்டிச் சர்ப்பமெனச் சுருண்டிருந்தது

கையெழுத்துப் போட்டு

வாங்கிய செயினை

பாக்கெட்டில் வைப்பதற்காய்

ஞெகிழியில் மடித்தவனைப் பார்த்து

வங்கி ஊழியர் சொன்ன

‘கழுத்துல போட்டுக்குங்க சார்' என்ற

சொற்களின் கருணையில்

தங்கம் ஜொலித்தது.

- ப.செல்வகுமார்

அடங்கமறுக்கும் மீன்கள்

கடலில்

மீனவன் மாயம் செய்த

வலையைப்போட்டு இழுக்கிறான்

அதில்

கட்டுண்டு வருகிறது

கொஞ்சம் கடல்

கலைந்து ஓடுகிறது முழு நிலா

இரண்டாய்க் கிழிபடுகிறது நீல வானம்

கரைந்து காணாமல் போகின்றன

எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்

துள்ளிக்குதித்து

அடங்க மறுப்பதென்னவோ

பிடிபட்ட மீன்கள் மட்டும்.

- கெளந்தி மு

சொல்வனம்

அடங்கமறுக்கும் மீன்கள்

எதார்த்தம்

பேரத்தில் படியாது

நீட்டிக்கப்பட்ட ஆயுளில்

புற்களை வழக்கத்தினும் மேலாக

ரசித்து மேய்ந்து

வாழத் தொடங்குகிறது

இளங்கிடாயொன்று

இயல்புநிலைக்குத் திரும்ப

வாய்ப்பில்லையென

மருத்துவரால்

கை விரிக்கப்பட்டும்

வழக்கத்திற்கு வந்துவிட்ட

தன் கைகளே அவனுக்கு தெய்வமாகிப்போகின்றன

நீண்டகாலமாய்

குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு வலியை

இரட்டிப்பாய்த் தந்தனர்

பிள்ளைகள் பிறந்து

ஒற்றைக்கனவைச்

சுமந்து அலைந்தவன்

கனவு நிறைவேறியபிறகு

கனவுக்காய் அலைய வேண்டியிருந்தது

வாழ்வின்

இறுக்கங்களும்

நகர்வுகளும்

வாழ்வே அறிந்திராத

ரகசிய எதார்த்தங்கள்.

- சாமிகிரிஷ்

கதையின் தலைகீழாக்கம்

நரியிடம் தின்னக் கொடுத்த வடையோடு

சிறகிலிருந்து சிறிது வானத்தையும் பரிசளித்தது காகம்

நரி பாடிக்கொண்டிருக்கிறது

நீங்கள் ஊளை என்கிறீர்கள்.

- அகராதி