கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

கவிதை

தனிமை மழை

உன்

தனிமையின் பனித்துளிக்குள்

ஊடுருவுகிறேன்

எங்கும்

வானவில் வெளிச்சம்

வெட்கம் பூசிய சொற்கள்

ஆடை கலைக்கின்றன

கள்ளிப்பழ இதழ்கள்

புல்லாங்குழலாகி

இசைக்கத் தொடங்குகையில்

மனவெளியெங்கும்

பச்சை அலைகள்

முத்தத்தின் வாசங்களாகி

மிதக்கின்றன

அந்தி மேகங்கள்

மஞ்சள் விரல்களில்

பற்றிய தீ

வானின் நீலமாகி

எரிகிறது

ஊறிய வானத்தை

உன் தேகமெங்கும்

ஊற்றுகிறேன்

கடலாகித் ததும்புகிறது

அணைகள் உடைய

அணைத்துக்கொள்கின்றன

தாகங்கள்

கண்கள் மின்ன மின்ன

பெய்யும் மழை நனைகிறது

இப்போது

பனியுமில்லை

ஒளியுமில்லை.

- வேல்முருகன்

ஓடும் நீரில் அமைதியில்லை

புத்தன் பற்றிய கவிதைகள்

ஏராளமாய் இறைந்து கிடக்கும்

நூலகத்தின் அறை

பொறுக்கி எடுக்கும் முகங்களிலெல்லாம்

பதிந்திருக்கிறது கவலைகளின் ரேகை.

நன்றாகவே அறைந்திருக்கின்றன

ஆசைகளின் கைகள்.

***

புத்தனை வரையும் ஓவியன்

புத்தனை வடிக்கும் சிற்பி

புத்தனைச் செதுக்கும் தச்சன்

இவர்களில் யாரும் அவனை

நேரில் பார்த்ததில்லை

தத்ரூபமாக இருக்கும் புத்தர்கள்

யாருடைய வீட்டிலோ,

ஏதாவதொரு அலுவலகத்திலோ,

பௌத்த ஆலயத்திலோ

நிம்மதியாக அமர்ந்துவிடுகிறார்கள்

யசோதரைகள் தேடுவதென்னவோ

கௌதம சித்தார்த்தன்களை.

- வலங்கைமான் நூர்தீன்

பறத்தல்

ஊஞ்சலில் மேலேறும்

சிறுமி கால்களால் உதைக்கிறாள்

வானத்தை!

- தக்‌ஷன்

பாலை

விரல்களைக் கோத்தபடி

பொதுவெளியில் நடந்ததில்லை

சிறு மழையை என்னோடு

அமர்ந்து ரசித்ததில்லை

எனக்கே எனக்காய்

ஒரு தேநீர்கூட

போட்டுத் தந்ததில்லை

பிறந்தநாள்

திருமணநாள்

எந்த வாழ்த்தும் சொன்னதில்லை

வருகைப்பதிவேட்டு ஆசிரியராய்

முழுப்பெயரைத் தவிர

எந்தச் செல்லப்பெயரிலும்

இதுவரை அழைத்ததில்லை

ஒரு புடவையைக்கூட

எனக்காக நீ

தேர்ந்தெடுத்துத் தந்ததில்லை

எழுதிக் கொட்டுகிறாய்

அடுக்கடுக்காய்

ஆயிரத்தெட்டுக் காதல் கவிதைகளை

யார் மெச்சிக்கொள்ள?

- பிரபுசங்கர்

சொல்வனம்

பொய்யுரைத்தல்

மனசிலிருந்து சொல்கிறேன்

என்றாய்

அதுவே பொய்...

பிரிந்துவிடு

மறந்துவிடமாட்டாய்தானே

என்றாய்

அதுவே முரண்

எனக்கு முன்னால்

உன் மணச் சேதி வந்தது

அதுவே இன்பம்

எங்கேனும் ஓரிடத்தில்

ஏதோவொரு செடியில்

மலர் பறித்து நுகரும்போது

பூவைத் தாண்டிய வாசம் இதிலென்று

மனைவிக்குச் சொல்லுகிற வெள்ளந்தியை

எனக்கு மட்டும் தந்திருக்கிறது

அதுவே

காதல்.

- இயற்கை