
மீன் தூண்டிலிடம் ஈரம் பற்றியும், மண் தரையில் காற்று நுழைந்தது பற்றியும்
விதையின் கற்றல்
முளைவிடும் சிறுவிதை
பிரசவ சுகமளிக்கிறது பிரபஞ்சத்திற்கு
தரை நனைக்கும்
மழைத்துளி மூலம்
வாசம் பழகிக்கொள்கிறது
இரைகொத்தும்
பறவைக் கூட்டத்திடம்
சோறுண்ணும் கலை கற்று
இளநீரிலும்
பழங்களிலும் சேமிப்பைப் பயின்று
பாதைகளின் வழி
பயணங்களின் ஸ்பரிசமறிந்து
அருவி ஆறுகளில்
குளித்தலின் சுகம்தெரிந்து
வாழும் இந்த பூமியின் வாழ்க்கையை
சற்றும் புரிந்துகொள்ள முடிவதில்லை
சராசரி மனித வாழ்வால்...
- சாமி கிரிஷ்

விதிக்கப்பட்டவை
இரவு
அடுக்களையோடு இணைக்கப்பட்ட
பூஜையறை
பத்தாயத்தில் சிக்கிக்கொண்டு
தன் இஷ்ட தெய்வத்தை
வேண்டிக் கீச்சுக்கொண்டிருந்தது
எலி
பாகனுக்கு அடங்கியொடுங்கி
யாசக உலா சுற்றிவந்திருந்த களைப்பில்
பலமாக உறங்கிக்கொண்டிருந்தது
யானை
விடிந்தது
மூணு தோப்புக்கரணமும்
தலையில் குட்டும் போட்டுக்கொண்டார்கள்
எலிக்குக் கழுவேற்றம்
யானைக்கு அதே யாசகப் பிழைப்பு!
- அர்ஜுன் ராஜ்
கேட்காக் கதை
மீன் தூண்டிலிடம் ஈரம் பற்றியும்,
மண் தரையில் காற்று நுழைந்தது பற்றியும்
ஒரு கதையிருக்கிறது
தூண்டிலில் சிக்கி
முன்பொரு நாள்
மடிந்த மண்புழுக்கள் கூறியதாக.
- நட்சத்திரா
கணம்
கிளைகளில் மழையைப்
பிடித்து வைத்திருக்கிறது மரம்
இப்போது
நீங்களோ நானோ
உலுக்கி விடுவதொன்றே பாக்கி.
- மகேஷ் சிபி
வாழ்தலின் ஏக்கம்
குளம் வெட்டி
வளர்த்த மீனின்
செதில்களில்
வறண்ட ஆற்றின்
சுடு மணல் துகள்கள்
செருகிக் கிடக்கின்றன
பாசி படர்தலின்
ஏக்கத்தோடு!
- தக்சன்
குமிழியின் சிரிப்பு
காற்றை ஒருகணம்
சிறைபிடித்துவிட்ட
மகிழ்ச்சியில்
வெடித்துச் சிரித்தவாறே
மரிக்கின்றன
நீர்க்குமிழிகள்.
- அஜித்