சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

குறுஞ்சாதனையாளருக்கு வாழ்த்தும் கலைத்திறன் சார்ந்த பதிவுகளுக்குப் பாராட்டும்

தூங்காத்தெரு

பல நட்புகளின்

பிறந்த நாளை

அவர்கள் கொண்டாட உதவச் சொல்லி

நோட்டிபிகேஷன் வருகிறது

சில இரங்கல் செய்திகளுக்கு

வருத்தம் தெரிவிக்க வேண்டியுள்ளது

அவ்வப்போது

குறுஞ்சாதனையாளருக்கு வாழ்த்தும்

கலைத்திறன் சார்ந்த பதிவுகளுக்குப் பாராட்டும்

அனுப்ப வேண்டியுள்ளது

அரசியல் சண்டை

ஆவேசப் பதிவுகள்

அறிவுரைக் கதைகள்

அர்த்தமற்ற மீம்கள்

என சகலத்தையும் பராக்கு பார்க்க நேர்கிறது

முன்பெல்லாம்

வேடிக்கை பார்த்தபடியே

தெரு முழுதும் கடந்து

ஏதேனும் ஓர் பொழுதில் வீடடையக்கூடும்

இன்றோ

வீட்டுக்குள்ளே புகுந்த

முகநூல் தெருவின்

கதவடைப்பதுதான்

பெருஞ் சவாலாய் இருக்கிறது!

- ப்ரணா

****

இருப்பிடம்

நதியென

கூழாங்கற்களும்

கடலென மீனும்

தம்மைத் தாமே

சமாதானம்

படுத்திக்கொண்டு

கிடக்கின்றன

என் வீட்டுக் கண்ணாடித்தொட்டியில்.

- கு.வைரச்சந்திரன்

****

சொல்வனம்

சுழல்

ஒரு பயணம்

முதலில் நடக்கின்றேன்

ஏதேனும் வாகனம் கிடைத்தால்

தேவலாமெனத் தோன்றுகிறது

ஒரு மிதிவண்டியைத் தேடிப் பிடித்து

கொஞ்ச தூரம் பயணிக்கிறேன்

வசதிக்காகப் பின்பு

ஒரு ஸ்கூட்டரைத் தேடுகிறேன்

அதுவும் கிடைக்கிறது

சிறிது நேரத்திற்கெல்லாம்

சாய்ந்து அமர்ந்துகொள்ளும்

ஒரு காரின் மீது ஆசை

அதுவும் கிடைக்கிறது

பூரணமென்று பயணிக்கிறேன்

ஆனால் நெடுநேரம் பயணிக்க முடியவில்லை

இப்பொழுது எனக்கு

மீண்டும் நடந்தால் தேவலாமெனத் தோன்றுகிறது.

-சரண்யாசத்தியநாராயணன்

****

கேள்வி

இருக்கும்வரை

பரஸ்பரம்

புன்னகைக்காத பக்கத்து வீட்டுக்காரரும்

கடைக்குட்டி பிறப்பிற்கு

தாய் மாமன் சீர் செய்யவில்லையென

சண்டைபோட்ட அத்தையும்

சங்கீதம் பிடிக்கிற அதிர்ந்து பேசாத

அரசு வேலை அப்பாவிற்கு

சாமார்த்தியம் போதவில்லையென்று

காதுபடவே சிரித்த சித்தப்பாவும்

நல்ல மனுஷன் என்ற நண்பர்களும்

இன்னும் கடிகாரம் பார்த்தும்

நிபந்தனைக்காய்க் காத்திருந்தவர்களுக்கும் ஒரே கேள்விதான்

எப்போது எடுப்பார்கள்.

- ஆனந்தகுமார்