கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கொடும் வெயில் கடும் மழை இயற்கைப் பேரிடர்கள்

மறுபக்கம்

நான் கறுப்பு

பிடிக்குமென்கிறேன்

வெள்ளை பிடிக்காதென

நீங்களே முடிவெடுக்கிறீர்கள்

எனக்கு மழையின் மீது

காதல் என்கிறபோது

வெயிலை வெறுப்பதாக

நினைத்துக்கொள்கிறீர்கள்

இரைச்சலைத்

தவிர்க்கக் கதவடைக்கிறேன்

பறவைகள் கிரீச்சிடுதலை

ஒதுக்குவதாகக்

கதை கட்டுகிறீர்கள்

என் விருப்பினை வைத்து

வெறுப்பை எடை போடுகிறீர்கள்

கிளைகளின் திசைகளை நோட்டமிட்டு

வேர்களின் திசைகளைத்

தவறாக அனுமானித்து என்ன

செய்யப்போகிறீர்கள் நீங்கள்?

- தி.கலையரசி

நாயுடைமை

டுநிசியில் தெருக்கள் நாய்களினுடையவை

இது தன்‌ இடமென முகம்

கிழியச் சண்டையிடும்

துவண்டுகிடக்கும் பெண்பாலுடன்

இணைசேர ஆண்மை பாராட்டும்

பல் கழன்ற கிழடுகளைக்

கடித்து விரட்டும்

நடுநிசியில் தெருக்கள் நாய்களினுடையவை

மற்ற பொழுதுகளில்

நம்முடையதைப்போலவே.

- கீர்த்திவாசன்

சொல்வனம்
சொல்வனம்

திறப்பு

வீட்டின் கேட்டைத் திறக்கும்

சத்தம் கேட்டாலே

வாசலில் வந்தமர்ந்து

உணவேதும் கிடைக்கும்

என்ற நம்பிக்கையோடு

காத்திருக்கிறது நாய்க்குட்டி

உணவு எதுவும் இல்லாத

நாள்களில்

சத்தம் இல்லாமல் கேட்டைத்

திறப்பது எப்படி என

சிந்தித்துக்கொண்டிருக்கிறது

மனது!

- மு.முபாரக்

பிரமை

தொடுதிரைக் கைபேசியுடனேயே

கரைந்துசெல்லும் வாசிப்புப் பழக்கம்

விரல் சுவைக்கும் குழந்தையென

ஆள்காட்டி விரலையும்

கட்டைவிரலையும்

குவித்து அழுத்தி

விரித்துப் பார்க்க எத்தனிக்கிறது

அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களின்

எழுத்துகளின் மீதும்!

- ஸ்ரீநிவாஸ் பிரபு

இசைக்கும் வயலினுக்குக் குருதியின் நிறம்

நூற்றாண்டைக் கடந்த பாழடைந்த பங்களாவின்

துருப்பிடித்து இத்துப்போன இரும்புக்கதவை

சங்கிலியால் இணைத்த பழம்பெரும் பூட்டில்

இன்னமும் பதிந்திருக்கிறது

இறுதியாகப் பூட்டியவரின் ரேகை

கொடும் வெயில் கடும் மழை இயற்கைப் பேரிடர்கள்

அத்தனையும் மீறிப் பச்சையம் பூசி

நகைத்து நிற்கும் அதனுள்ளே

பேரிரைச்சலாய்க் கேட்கிறது நிசப்தம்

நடுக்கூடத்தின் சுவரில் நிர்கதியாய் தொங்கிக்கொண்டிருக்கும்

வயலினுக்குக் கருங்குருதியின் நிறம்

அதனருகில் அறையப்பட்ட ஆணியில்

மாட்டப்பட்டிருந்த செல்லரித்த காகிதக் கோப்பில்

ஊசலாடும் உயிர்போல இசைக்குறிப்புகள்

வருடத்தின் ஒரு பௌர்ணமி இரவில் மட்டும்

நிசியில் தனக்குத்தானே இசைக்கும்

வயலினிலிருந்து வழிந்துகொண்டிருக்கும்

வஞ்சிக்கப்பட்டவர்களின் ஜீவிதம் நசிந்த இறுதி இசை;

வன்மங்கள் வஞ்சங்கள் ஏமாற்றப்பட்ட துரோகங்களென

துயரங்கள் இருளைக் கிழிக்கும் ஓலங்கள்

புறத்தில் கசிவதில்லை

அந்த திவசத்தில் நடுஜாமத்தில் அத்தெருவில்

யாராவது கவனித்திருக்கிறீர்களா

பாசியம் அப்பிய அப்பெரிய வீட்டில்

தொங்கிக்கொண்டிருக்கும் சங்கிலியும் பூட்டும்

வயலினை இயக்கும் கரங்கள்போல மேலும் கீழும் அசைவதை.

- வலங்கைமான் நூர்தீன்