சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

குரலின் ஏற்ற இறக்கமோ அவ்வளவு அழகாயிருக்கும் வயலினை மீட்டும் நரம்பு ஏறி இறக்குவதைப்போல

மாறாத ஸ்வரம்

பருவத்தை எட்டிடாத வயதிலேயே

சைக்கிளில்

ரவிக்கை பாவாடையை

விற்கும் அண்ணன்

எனக்கு மிகப் பரிச்சயம்

ஜாக்கெட்டென்று

காற்றை உள்வாங்கி

குரல்வளையை வளைத்து நெளித்து

அவர் எழுப்பும் சப்தம்

கிட்டத்தட்ட ஒரு ஸ்வரம் பாடுவதைப்போல

அப்பொழுது எழும்

குரலின் ஏற்ற இறக்கமோ

அவ்வளவு அழகாயிருக்கும்

வயலினை மீட்டும் நரம்பு

ஏறி இறக்குவதைப்போல அது

பல ஆண்டுகள் கழித்து

மீண்டும் கண்டேன்

இன்றும் எங்கள் வீதியில்

அதே சைக்கிளில்

அதே அண்ணன்

அதே போன்று உரத்த குரலில்

குரல்வளையை வளைத்து நெளித்து

கொஞ்சம்கூட அதில் பிசிரில்லை

வருத்தம் என்னவென்றால்

அவர் அதே ஸ்வரத்தைப்

பிடித்துக்கொண்டிருப்பதுதான்.

- சரண்யா சத்தியநாராயணன்

*****

வழித்துணை

நீண்டதூரப் பேருந்தில்

“பாத்து பத்திரமாப் போ”வென

பேருந்து கிளம்பியபின்னும்

கையசைத்து விடைகொடுத்து

வழியனுப்ப வந்த அப்பாவின்

தலை மறைந்தபின்

துளிக்கும் கண்ணீர் துடைக்கையில்

ஜன்னல் வழி விசாரித்தபடி

இரவெல்லாம்

ஆறுதலாய்த் தொடரும் நிலா.

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

*****

பதிலி

அமைதியான

நதியில் தெரியும்

நீர்ச்சுழி நினைவுபடுத்துகிறது

தூக்கத்தில் வழியும்

குழந்தையின் புன்னகையை.

- அய்யாறு.ச.புகழேந்தி

மறுபெயர்

நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை

பெய்யப் பெய்ய

இருள் கரைந்து

வெளிச்சம் வந்தது

அதை விடியல் என்கிறார்கள்

இவர்கள்.

- அ.கோ.விஜயபாலன்

*****

சொல்வனம்

ஒற்றைத் தண்டவாளம்

நான்கு வயிறுகளுக்கான

ஒற்றைத் தண்டவாளம்

நான் நடக்கும் இந்தக் கம்பி

கம்பி மேல் நடக்கும்போது

எல்லோரும் என் காலடியில்தான்

ஆனாலும் அவர்களின் கருணையை

எதிர்பார்த்தே நடக்கிறேன்

இரண்டாவது மாடிகளின்

ஆடம்பரங்கள்

எனக்குச் சமமாகத் தெரிகின்றன

என்றாலும் எனக்கு உரிமையாக இல்லை

கீழே நின்று தாளம் தட்டும்

பெற்றோரின் கவனமெல்லாம்

ராகத்தின் மேலும் அல்ல

வானத்தின் மேலும் அல்ல

ஒற்றைக் கம்பியில் நகரும்

வாழ்வின் பசிமீதே படர்ந்திருக்கிறது.

- இளந்தென்றல் திரவியம்