
அலுவலகம் கிளம்புகையில் தினமும் கவலைகளை அள்ளி சட்டை பாக்கெட்டில் நிறைத்துக்கொள்கிறேன்
பால காண்டம்
முழங்கையில் நீர் வழிய
கடிக்கும் தர்ப்பூசணித் துண்டை
வேடிக்கை பார்க்கும் எவரிடமும்
வேணுமா எனக் கண்ணாலோ
தலையசைப்பாலோ
கேட்டுக்கொண்டிருந்த குழந்தை
இவ்வருடம் யாரையும் பார்க்காது
உறிஞ்சி உறிஞ்சித் தின்றுகொண்டிருக்கிறது
ரஃப் நோட்டின் தாள் கிழித்து
கொய்யாக்காயை கிடைத்த கல்லால் நசுக்கி
துக்குளி துக்குளியாய்ப்
பங்கிட்டுக்கொண்டிருந்த நான் எந்த வயதில்
கடித்துத் தின்ன ஆரம்பித்தேன்
நினைவில்லை
பாலகாண்டங்கள்
திடீரென்று முடிந்துவிடும் போல.
- உமா மோகன்
***
சேமிப்பு
அலுவலகம் கிளம்புகையில் தினமும்
கவலைகளை அள்ளி
சட்டை பாக்கெட்டில் நிறைத்துக்கொள்கிறேன்
வழியில் தெரிந்தவர்களிடமும்
அலுவலகத்தில் பழகியவர்களிடம்
முடிந்த வரை கொட்டிவிட்டு
மீதமிருப்பவற்றை வீடு திரும்பியதும்
ஹாங்கரின் இரண்டாவது கொக்கியில் மாட்டிவிட்டு
நாளையுடன் இன்றையும்
சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று
குறித்துக்கொள்கிறேன்.
- விவெ

***
புனைவின் பொத்தல்
வரம்புகள் சீவப்பட்ட
தெளி நட்சத்திரம் நீ
வல்லானையும் நேர்ப்படுத்தும்
பின்னத்தி ஏர்
நுனிப்புல் மேயும்
பனி ஆடு
கவிநூற்புச் சந்தையில்
சல்லிசாய்க் கிடைக்கும்
வார்த்தை மீன்
சிராய்ப்பின்றி
நீரில்
விழுந்தெழுந்த
மீன்கொத்தி
கருமேகத் தலையில்
எட்டிப்பார்க்கும்
மின்னல் நரைமுடி
மோகித்தலின் போது
தொலைந்துபோன
பிருஷ்ட பாகம்
கற்பனையில் சிலாகித்தெழுதுவது
எவ்வளவு சுகமானது
முதலில் அப்பனின் கிழிந்த
பனியனை மாற்ற வேண்டும்.
- சுனந்தா சுரேஷ்
***
நிமிர்த்த முடியா ஒன்றின் வால்
அன்பிற்காய் ஏங்கும்
அபூர்வ உயிரி
என்னென்ன செய்யும்
பக்கத்தில் பக்கத்தில்
வந்து ஏக்கத்தோடு
கண் நோக்கும்
தன் விசுவாசத்திற்கு
வாலாட்டும்
சுற்றிச் சுற்றி வரும்
ஒரு கோணல் சிரிப்புடன்
கல் எடுக்கும்போதும்
வாலைக் குழைத்து
ஊ ஊ ஊ சொல்லும்
புறக்கணிப்பில் ஆனது
வலி கல்லால் அல்ல
என்றுணரும் நொடியில்
தேட முடியா
திசையொன்றில்
காதெட்டும் தூரத்தில்
கச்சிதமாய்
ஒளிந்துகொள்ளும்.
- தேவசீமா