Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

மழை

சொல்வனம்

நான்கு கால் குழந்தை

பிரசவம் முடிந்து

பெண் குழந்தையோடு

ஊருக்குப் போய்விட்ட

சுசீலா அக்காவின் வீடு

பூட்டியே இருக்கிறது

அலுவலகத்திலிருந்து நேராக

பாப்பாவைப் பார்க்கப் போய்விடும்

ராசு மாமாவும் வீட்டுக்கு வருவதில்லை

வீட்டு வாசலில்

தினமும் வெள்ளைநிறப் பூனை ஒன்றுக்கு

பாலூற்றி வைக்கும் பீங்கான் பாத்திரம்

காய்ந்துபோய்க் கிடக்கிறது

யாருமற்ற வீட்டுக்கு

நாள்தோறும் வந்துபோகும்

அந்த வெள்ளைநிறப்பூனை

பீங்கான் பாத்திரத்தில்

சுசீலா அக்காவின் முகத்தைத் தேடுகிறது

திறக்கப்படாத கதவின் முன் அமர்ந்து

நான்கு கால் குழந்தையாக மாறி

அழுகின்ற பூனையின் சத்தம்

சுசீலா அக்காவுக்குக் கேட்டிருக்க வேண்டும்

இல்லையென்றால் பூனைக்குப்

பால் வைக்காமல் பாப்பாவைப் பார்க்க வராதீங்க என்று மாமாவிடம்

சொல்லியிருக்க மாட்டாள்.

- மு.மகுடீசுவரன்

சொல்வனம்

பீகார் 21 கிலோமீட்டர்

இன்றைய முக்கியச் செய்தியினூடே

அதிர்ந்த சற்றுமுன் செய்தியில்

கிடத்தி வைத்தவர்களைக் கண்டதும்

பதறியபடி அமர்ந்தேன்.

அந்தப் பதினேழு பேரில்

தெளிவாய்த் தெரிந்தான்

அது அவன்தான் அவனேதான்.

பீகாரிலிருந்து புலம்பெயர்ந்து

தச்சூர் கூட்டுரோட்டின்

வேப்பமரத்தின் கீழ் தள்ளுவண்டியில்

இருபது ரூபாய்க்கு சாத்துக்குடி பிழிந்து

பயணிகளின் தாகம் தீர்த்தவன்.

மார்ச் இருபதாம் தேதி

`சார் கேசே' என்றவன் `மே' பத்தில்

கிடக்கிறான் கிடத்தி வைக்கப்பட்டவர்களில்

ஏழாவது நபராக.

- துரை. நந்தகுமார்

சொல்வனம்

எலிப்பொறி

ஒரு வீட்டின்

எல்லா எலிகளும்

எலிப்பொறியில்

சிக்குவதில்லை...

எலிப்பொறியில் சிக்கிக்கொள்ள

ஒரு குறிப்பிட்ட நரம்பின் படபடப்பு

தேவைப்படுகிறது...

பார்க்கப்போனால்

அந்த நரம்பைப் படபடக்கச்செய்யும்

உந்துவிசையை

வீடானது எப்போதும்

வெளிப்படுத்தியபடியேதான்

இருக்கிறது...

இவையெல்லாவற்றையும் மீறி

எலிப்பொறியில் சிக்காமல் தப்பித்துவிடும்

எலிகளுக்கு

ஏனோ

எந்த வீட்டிலுமே

சிலைகள் வைக்கப்படுவதில்லை...

- ராம்பிரசாத்

சொல்வனம்

மழை

கோடை வெயிலில்

காய்ந்துபோன கிணறும்

வறண்டுபோன குளமும்

தண்ணீரைத் தொலைத்திருக்க

தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த

என் மாடுகளுக்காக

கருவேல மரத்துக்

கற்றாழைக்குருவிகளிடத்து

உதவி கேட்டிருந்தேன்

உதவுவதாய்ச் சொல்லிவிட்டு

இரண்டு நாள்களுக்கு முன்னர்

வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்

இப்போது மேகங்களை

இழுத்துக்கொண்டு வருகின்றன

எம் கிணறுகளை நோக்கியும்

எம் குளங்களை நோக்கியும்

பருவமழை தொடங்கிவிட்டதாய்

வானொலியிலும்

தொலைக்காட்சியிலும்

செய்தித்தாள்களிலும்

அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்.

-சௌவி