Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

பரிகாரம்

சொல்வனம்

வாய்தா

இரண்டு மணி் நேர

தோட்ட வேலைக்கு

இருநூறு கூலி பேச

அரைமணி நேரமானது

கூடுதலாய்க் கேட்ட

ஐம்பது ரூபாய் பேரத்தில்

ஒப்பந்தம் முறியும் வரை சென்று

ஒரு வழியாய் ஓகே ஆனது

காலைச் சிற்றுண்டியும்

ஒரு மணி நேர இடைவெளியில்

தேநீரும்

வேலை முடிந்தவுடன்

பழச் சாறும்

ஒப்பந்தத்தில் இல்லா

ஷரத்து இணைக்கப்பட்டு

அம்மா வேலை பார்த்தவாறே

ஊர்க் கதைகளைப் பரிமாற

தோட்டக்காரர் உறவாகிப்போனார்

பேச்சு சுவாரசியத்தில் கூடுதலாய்

நூறு ரூபாயைக் கொடுக்க

திருப்பிக்கொடுத்த

தோட்டக்காரருக்கும்

அம்மாவிற்கும்

அந்த ஐம்பது ரூபாய்

வழக்கொன்று அடுத்த வாய்தா

வாங்கியிருந்தது.

- காரைக்குடி சாதிக்

சொல்வனம்

அகலிகையின் சாபம்

பத்து மணியைக் கடந்தும்

இரவெனத் தெரிந்தும்

இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறான்

உனக்குப் படியளக்கும் வெளிநாட்டு முதலாளி

உன் அலைபேசியில்

தாய்மொழியை மறக்கும் அளவுக்கு

அவன் மொழியைப் பழக்கிய

உன் நாக்கு இப்போதெல்லாம்

சுவை நரம்புகளுக்கு

வேலையே தருவதில்லை

அடுத்தமாத வேலைக்கான

முன் ஒத்திகைகள்

கணினியில் தொகுத்து வைக்க வேண்டிய

குறிப்புகளென ஒன்று விடாமல்

கேட்டுத் துளைத்துக்கொண்டிருப்பவன்

அவன் வேலைகளிலேயே குறியாகக் கிடக்க

அரை உறக்கத்திலும்

காத்துக்கிடக்கும் காமத்திலும்

சாபம் விடுகிறேன்

அவன் நாட்டில் இரவென்ற

ஒன்று இல்லாமல்போக

நவீன அகலிகையாய்.

- பிரபுசங்கர். க

சொல்வனம்

பரிகாரம்

மீன் வீச்சமின்றி

மிதப்பில் இருக்கிறது

நீர் வறண்ட குளம்.

தானிய மூட்டைகள்

இருந்த வீட்டில்

எலிகள் பறித்த துளைகள்

வெளிறிய கண்களென.

ஆடிப்பட்டம் அழிந்து

வெம்மை விரவிய நிலம்

அடமானம் வசம்.

நன்செய் நிலம்

கைநழுவிய தவிப்பில்

சினத்தில் இருக்கிறார் சித்தப்பா.

குலம் காக்கும் சாமிக்குப்

படையலிட்டு

காக்கும் தொழில்

கைவிரிப்பு நீட்ட

பரிகாரம் தேடுகிறார்.

கொடுவாள் கொண்டு

குறுக்கு வெட்டு விழுந்த

கழுத்தை மறைக்க

மலர்மாலை சூடி மறைக்கிறார்

குலதெய்வம் மாடசாமி.

- முகில் முருகேசன்

சொல்வனம்

கிளிக்

ராஜா காலத்துப் புகைப்படங்களில்

தாத்தாவின் தாத்தாவும்

பாட்டியின் பாட்டியும்

புகைப்படம் பற்றிய நினைவுகள்

சிறிதுமின்றிப்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

காலம் உடைத்து நுழைகிறேன்

கறுப்பு வெள்ளைக்குள் செல்வது

கண்ணாடிச் சட்டத்தைக் கடப்பது

பென்சில் மீசை வரைவது

பாட்டியின் புல்லாக்கு சரிசெய்வது

என இன்று முழு இரவும் தேவைப்படுகிறது

விடிந்தபொழுதில் நானறியா சுயத்தில்

புகைப்படத்துள் நிற்கிறேன்

என்னவோ மாற்றம் என்பதுபோல

தாத்தாவின் தாத்தாவும்

பாட்டியின் பாட்டியும்

புருவம் அசைக்கிறார்கள்

நான் பின்னாலிருக்கும் சுவரில்

பல்லியாகிறேன்

புகைப்பட கிளிக் சப்தம் எனதெங்கும்..!

- கவிஜி