கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கள்ளத் தேநீர்

பூனை வளர்ப்பு என்பது...

பூனை வளர்க்க ஆசைப்படுபவளுக்குத்

தெரிந்திருக்க வேண்டும்

பூனை எலியைத் துரத்திப் பிடித்துப்

பசியாறாது

பூனைக்கு தினமும் அரைலிட்டர்

பால் வாங்க வேண்டும்

இரண்டு நாள்களுக்கொருமுறை

பூனையைக் குளிப்பாட்டிவிட வேண்டும்

தினமும் பூனையோடு விளையாட வேண்டும்

விளையாட்டால் ஏற்படும்

சின்னச் சின்னக் கீறல்களை

சகஜமாய் எடுத்துக்கொள்ள வேண்டும்

குர் குர் தொடரொலியையும்

பூனை தன் படுக்கையில் உறங்குவதையும்

பழகிக்கொள்ள வேண்டும்

ஏதேனுமொரு நாள் பூனை தன்னிஷ்டத்திற்கு

எங்கேனும் போய்விடும் திரும்பிவராமல்

இவையெல்லாம் தெரிந்துகொண்ட அவள்

இப்போது

பூனை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்.

- சௌவி

தொலைத்தல்

உச்சக் கட்டுப்பாடுள்ள

கோழியூர் பள்ளியில்

பேனா பென்சில்

நோட்டு புத்தகம்

ரப்பர் எரேசர்

எதையுமே தொலைத்ததில்லை

என் சிறகுகளையும்

கனவுகளையும் தவிர.

- வல்லம் தாஜுபால்

சொல்வனம்
சொல்வனம்

கள்ளத் தேநீர்

தேநீர்

ஐம்புலன்களையும் இணைத்து

நம்மை நொடிகளில்

நினைக்க வைக்கும் அதிசயம்.

கடந்து போகையில்.

மூக்கின் மேல் அமர்ந்துகொள்ளும் வாசனை

குடிக்கச் சொல்கிறது.

கண் கடையைப் பார்க்கிறது.

காது அருவியின் பேரதிசயம்போல தூக்கி ஆற்றும் இசையைக் கேட்கிறது.

மெய் சரணாகதி அடைந்து கடையை நோக்கி நகர்கிறது.

வாய் அவரவர்

உணர்ச்சிகளுக்கேற்ப

முத்தமிடுகிறது.

ஒரு தேநீரைத்தொலைப்பது

ஐம்புலன்களையும் புதைப்பதற்குச் சமமாயிருக்கிறது.

அவ்வளவு எளிதில்

புதைக்கவிடாத தேநீர் தயாரிப்பவர்

கள்ளச்சாராயம் போல

கள்ளத்தேநீரைக்

காய்கறி வாங்கும்பையில் மறைத்துத்தந்து

உயிர்த்தெழச்செய்கிறார்.

எங்கள் உயிர்த்தெழுதலால்

இந்த ஊரடங்கில்

கை தட்டாமல்

விளக்கேற்றாமல்

மரிக்காமலிருக்கிறார்.

- சுந்தர்