
மழைப்போர்வை
கையறு நிலை
மழை வருமென்று அறிவித்தபடி
பறந்துகொண்டிருக்கின்ற
தட்டாம்பூச்சிகளில் ஒன்று
சாலையில் வேகமாகச் செல்லும்
வாகனத்தின் கண்ணாடியில் அடிபட்டுச்
சாலையில் விழுகிறது.
இன்னும் சரிவர நடக்கப்பழகாத
நாய்க்குட்டிகள் இரண்டு
சாலையில் ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்குக் கடக்க
ஓடும் வாகனங்களுக்கு நடுவே
முயன்றுகொண்டிருக்கின்றன
சாலையின் ஓரத்தில்
யாரோ விட்டுவிட்டுப் போன
கண் திறக்காத பூனைக்குட்டியொன்று
மியாவ் மியாவ் என்று கத்தியபடி
சாலையிலேறி நகர்ந்துகொண்டிருக்கிறது
பெட்ரோல் தீர்ந்துவிட்டதா
அல்லது டயர் பஞ்சராகிவிட்டதா தெரியவில்லை
ஏதோ ஒரு நிறுவனத்தின் சீருடையோடு
வியர்வை வழிய வழிய
அவசர அவசரமாக
இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு
நடந்துபோகிறான் ஒருவன்
யாதொன்றுக்கும் நின்றுதவ நேரமில்லை
இன்னும் ஐந்து நிமிடத்திற்குள்
ஐந்து கிலோமீட்டர்களைக் கடந்து
விரல் ரேகை பதித்தாக வேண்டும்
இன்றைய என் சம்பளத்திற்கு.
- சௌவி

மழைப்போர்வை
சாலையோரமாய்
எதையும்
பொருட்படுத்தாமல்
அமர்ந்திருக்கும்
யாசகனின்
உடல் முழுவதும்
போர்த்தியிருக்கிறது
இப்பெருமழை.
- ச.ப.சண்முகம்
சமையல்
உள்ளங்கையில்
பருப்பு கடைந்து
விளையாடிவிட்டு
அவளுக்கெனக் கிடைத்த உணவை
பத்திரமாக மூடி
வைத்துக்கொண்டு
உறங்குகிறாள் மகள்
நேரம் கழித்து வரும்
அப்பாவுக்கென்று.
- க.அய்யப்பன்
பயணம்
நுரைத்து
உடைந்து பெருகும்
நதியில் நீந்த
நீ
எனக்காக
அத்தனை அன்போடு தயாரித்துக்கொடுத்த
காகிதக் கப்பலில்தான்
என் பயணம் தொடர்கிறது
நான்
இன்னும் மூழ்காதது
உன்னைப்போல்
எனக்கும் ஆச்சர்யமாகத்தானிருக்கிறது.
- விருட்சகன்