கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அரசர்கள் மாறவில்லை

பெருநகர அறிமுகம்

ஒரு பெருநகரத்தோடு

மல்லுக்கட்டுவதென்பது அவ்வளவு எளிதல்ல

குறைந்த விலையிலான

நல்ல உணவகத்தைத் 

தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்

வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களை மீறாமல்

கிடைத்த அறையில்

வாழப் பழகிக்கொள்ள வேண்டும்

இத்தனை மணிக்குள் எனக் காலத்தையும்

இத்தனை அளவு எனத் தண்ணீரையும்

நமக்காக யாரோ நிர்ணயிப்பதற்குள்

நம்மைச் சுருக்கிக்கொள்ள வேண்டும்

கூட்டமாக வருகிறதே என்றெல்லாம்

கவலைப்படாது

தவறவிடாது பேருந்தில் பயணித்து

அலுவலகம் சென்று

வருகையை நேரம் கடந்துபோகுமுன்

பதிந்திட வேண்டும்

மின்சாரமற்ற நாளில்

இருட்டிய அறைக்குள்

நான்கு சுவர்களோடு 

வாழ்வைப் பேசிக்கொண்டு

அமர்ந்திருக்க வேண்டும்

அத்துமீறும் அதிகாரங்களுக்குப்

பணிந்து பணிந்து

சுயத்தைத் தொலைத்துவிட்டு

உதடுகளுக்குச் சிரிக்கவும் புன்னகைக்கவும் மட்டுமே பழக்கிக்கொள்ள வேண்டும்

வணிக வளாகத்தின் 70 MM அகலத்திரையுடைய திரையரங்குகளில்

முன்வரிசையில் அமர்ந்து

படம் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும் வேலைநேரம் முடிந்தும்

வழங்கப்படுகின்ற வேலைகளைச்

செய்ய

உடலையும் மனதையும்

எப்போதும் தயார்நிலையிலேயே

வைத்திருக்க வேண்டும்

உன் வானத்தை

உன் பறவைகளை

உன் மேகங்களை

உன் மழையை

உன் இசையை

உன் வீதிகளை

எல்லாவற்றையும் மறந்துவிட்டு

சிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஏமாற்றப்படுகிறோமெனத் தெரிந்தே

பொருள்களை

அதிக விலை கொடுத்து

புன்னகை மாறாமல் வாங்கப்

பழகிக்கொள்ள வேண்டும்

கத்தியில்லாமலே முதுகில் குத்தும்

வலிகளை

ஜீரணித்துக்கொள்ள வேண்டும்

ஒரு பெருநகரத்தோடு

மல்லுக்கட்டுவதென்பது அவ்வளவு எளிதல்ல

வந்தேறியொருவனுக்கு.

- சௌவி

சொல்வனம்

அரசர்கள் மாறவில்லை

சகலரையும் முகமூடி அணியவைத்திருக்கிறார்

எங்கள் மன்னர்

அவற்றின் மீது அரசருக்கு

எப்போதுமே ஓர் அலாதி பிரியம் உண்டு

எப்போது எந்த முகமூடி பொருத்தமானதாக இருக்கும் என்பதில் கைதேர்ந்தவர் அவர்

இயல்பான நாள்களிலும்

அவர் அதையே

அணிந்துகொள்வதால் என்னவோ

எங்களுக்கு முகமூடிகள் புதிதாகத் தெரியவில்லை

இப்பொழுது அணிந்துகொள்கிறோம் 

கையில் கிடைப்பதை

மன்னன் எவ்வழி நாங்களும் அவ்வழியென்று

வேறு வழி இன்றியும்

நம்மை வைரஸ்களிடமிருந்து

முகமூடிகூட காக்கலாம்.

ஆனால் மன்னர்களிடமிருந்து...?

- நேசன் மகதி