சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

வெயில் வீதி

பார்வை

முன்வாசலின்

கண்ணாடிக் கதவில்

தன்முகம் பார்த்து

தினமும் வந்து

வலுவாகக் கொத்தித் தள்ளும்

ஒரு கறுப்புவெள்ளைக்குருவி.

கண்ணாடி உடைந்துவிடுமோ என்று

கவலைப்படுகிறாய் நீ...

அலகு உடைந்துவிடுமோ என்று

பயப்படுகிறேன் நான்!

- ராகவ்.மகேஷ்

பார்வை
பார்வை

வெயில் வீதி

கூடுதலாய் வானம்

தெருவிற்குள் நுழைந்திருக்கிறது

திண்ணையின்மேல் கால்களைப்

பரப்பிக்கொண்டு படுத்திருக்கிறது வெயில் 

வெறுமையின் சிறகுகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன

எல்லாவிடத்திலும் இறுக்கத்தின் முணுமுணுப்பை

நன்றாய்க் கேட்கமுடிகிறது 

எதையோவொன்றை இழந்துவிட்டதற்கான

அடையாளங்கள் ஆங்காங்கே விடப்பட்டிருக்கின்றன

ஒன்றிரண்டாகவோ கூட்டமாகவோ

இளைப்பாறும் நாய்களின் நடமாட்டம்

ஏதுமின்றி வெறிச்சென்றிருக்கிறது வெளி

பலமுறை அவதானித்திருக்கிறேன் 

மரம் வெட்டிய பின்

ஒவ்வொரு முறையும்

இப்படித்தானிருக்கிறது தெரு. 

    - மகேஷ் சிபி

வெயில் வீதி
வெயில் வீதி

உபதேச சுமை

உபதேச மூட்டைகளைச்

சுமந்தபடி சுற்றுகிறார்கள்

மூட்டை நிறைந்து வழியும்

இலவச அறிவுரைகள்

நடக்கத் தடமின்றிச்

சிதறிக் கிடக்கின்றன

கால்மிதிபட்டுக் கிடப்பதைக்

கூட்டிப் பெருக்கிக் கழித்துக்

குப்பைத் தொட்டியிலிட்டு

ஆசுவாசமாய் அமர்கையிலும்

அறையின் சுவரெங்கும்

அலறும் யோசனைகள்

எல்லாச் சிக்கல்களுக்கும்

தீர்வு வைத்திருக்கிறார்கள்

எல்லா வியாதிகளுக்கும்

மருந்து சொல்கிறார்கள்

எல்லாப் பிரச்னைகளையும்

ஏதுமற்ற‌தாக்குகிறார்கள்

சங்கடங்களும் நோய்களும்

தீர்ந்துபோன‌போதிலும்

தீராத அறிவுரைகளை

அள்ளி மூட்டை க‌ட்டி

முதுகில் சுமக்கிறேன்

எதிர்ப்படும் எவருக்கேனும்

இலவசமாய் வாரி இறைக்க

ஊரோடு உபதேசித்து வாழ்.

- சௌம்யா

உபதேச சுமை
உபதேச சுமை