
கோடை வலம்
காட்டின் நினைவுகள்
மகள் வரைந்துகொண்டிருந்தாள்
ஒரு வெள்ளைக்காகிதம் முழுவதும்
பழுப்புநிறப் பாறைகளேயில்லாத
பச்சையம் போர்த்திய மலைகள்
அடர்ந்த மரங்கள்...
மலைகளுக்கு மேலே நீல வானம்
அதில் இறக்கை விரித்த இரு கருங்குருவிகள்...
மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே
கொத்துக் கொத்தாய்
வண்ண வண்ண வீடுகள்...
கடைசியாக வரைபடத்தில்
ஏதோ ஒன்றினை வரைவதற்கு இடமில்லாமல்
யோசித்தபடியே கைவிரல்கள் பிடித்திருந்த
சாம்பல் நிற பென்சிலைக்
கீழே வைத்துவிட்டு
ரப்பரால் இரண்டு வீடுகளை
அழித்துக்கொண்டிருந்தபோதுதான்
தொலைக்காட்சியில்
நீங்கள் தலைப்புச் செய்தியாய்
ஔிபரப்பினீர்கள்
ஊருக்குள் நுழைந்து வீடுகளைச்
சூறையாடியது
காட்டு யானைகளென்று...

- சரண்யா சத்தியநாராயணன்
ஊர்ப்பெயர் தாமரைக்குளம்
முன்பொரு காலத்தில் குளம் இருந்தது
இப்போது அங்கே அபார்ட்மென்ட் இருக்கிறது
இயற்கை எதையும் பாதிக்காதபடி
கட்டியதாகச் சொன்னார்கள்
சரிதான்
தொட்டியில் மீன் நீந்திக்கொண்டிருந்தது
அவ்வப்போது பறவைகள் வந்துபோய்க் கொண்டிருந்தன
இரவுநேரம் தவளைகள் மேய்ந்துகொண்டிருந்தன
அபார்ட்மென்ட்டைச் சுற்றி
அழகழகான பூச்செடிகள் சூழ்ந்திருந்தன
முற்றத்தில் அல்லிகளையும் தாமரைகளையும்
ஒரு கிண்ணத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்
நீருக்கு மட்டும் போர் போட்டிருந்தார்கள்
அவர்கள்
இயற்கையோடு வாழ்வதாய்
மயக்கத்தில் நீந்திக்கொண்டிருந்தார்கள்.

- பிறைநிலா
இறுதி ஊர்வலம்
தார்ச்சாலையெங்கும்
அச்சாலையின் கறுப்பை மறைத்து
நிறைந்திருந்த மஞ்சள் பூக்கள்
சற்றுமுன் கடந்திருந்த
இறுதி ஊர்வலத்தை
எல்லோருக்கும்
ஞாபகமூட்டிக்கொண்டிருந்தது
வாகனங்களில்
மஞ்சள் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
கடப்பவர்களின் கண்களில்
வந்துபோகின்றன கலந்துகொண்ட
இறுதி ஊர்வலங்களின் காட்சிகள்
அடர்த்தியாய் காற்றில் விரவியிருக்கும்
மஞ்சள் பூக்களின் வாசனை
ஏதேதோ மனநிலையில் கடக்கும் எல்லோர் மனதிலும்
சற்றே ஒரு அழுத்தத்தை நிரப்பி
வாசனையை வெறுப்பென மாற்றுகிறது
தவிர்க்க நினைத்தும் தவிர்க்க முடியாமல்
தங்களின் இறுதி ஊர்வலத்தைப் பற்றி நினைப்பவர்கள்
வேகம் குறைத்து நிதானமாக
ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள் வாகனத்தை

- சௌவி
கோடை வலம்
பேரரசனை மலர்தூவி
வரவேற்கும் குடிமக்களின் பாங்கில்
சருகிலைகளை உதிர்த்து
வரவேற்கின்றன கோடையை
மரங்கள் அனைத்தும்.
நீர்தங்கிய சுவடுகள் மட்டும்
நிராதரவாய்க் கிடக்க
தாகத்தில் நா வறண்டு
வாய்பிளந்து கிடக்கின்றன
குளங்கள் எல்லாம்.
நேர்நின்று விரல்நீட்டி
எதிர்ப்பார் எவருமற்ற மிதப்பில்
கிடைக்கும் இடமெங்கும்
வெம்மையை நிரப்பிக்கொண்டு
வலம்வருகிறது பகல்முழுதும்
வழமையான கோடை.

- பாப்பனப்பட்டு வ.முருகன்