
மியூசிக்கல் சேர்

அன்ன பூரணிகள்
அவர்கள் எங்கிருக்கிறார்களென
சாதாரண நாள்களில்
கண்ணுக்குத் தெரிவதில்லை
காற்றென கடவுளென
யாரும் காண முடியாமல் பரவியிருக்கிறார்கள்
குழாயடிகளில் ஒரு குடம்
தண்ணீருக்கென பிடிவாதத்தில்
தங்களை நிரூபிப்பார்கள்
ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கென
காலச் சொற்களையெல்லாம்
கண்டெடுத்துச் செலவளிப்பார்கள்
புயற்காலம் பெரு மழைக்காலம்
பேரிடர்க் காலமென
ஊழித்துயரைக் கண்டால்
இவர்கள் கைகள்
பெருகிவிடுகின்றன
அண்ணன்கள் தம்பிகள் அப்பாக்கள்
யாரோ சில நண்பர்கள்
வேண்டிக்கொள்கிறபோது
சமைத்து சமைத்துக் குவிக்கிறார்கள்
எங்கோ யாரோ பசியாறும் காட்சியொன்றில்
அன்னபூரணிகளென அவதாரமெடுக்கிறார்கள்
அமுதசுரபிகளின் அடையாளமாகிறார்கள்.
- க.அம்சப்ரியா

மியூசிக்கல் சேர்
ஊரடங்கின்போது
சோக இசைப் பின்புலத்தில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
மியூசிக்கல் சேர் விளையாட்டு.
வறுமை வட்டத்தில்
ஓட ஆரம்பித்த
அக்குடும்பத்தினர்
ஒவ்வொரு கட்டத்திலும்
தமக்கான உணவைத்
துறந்தபடி இருந்தனர்.
இதோ ஆட்டம்
முடியப்போகிறது
யாரேனும்
ஒரு கவளம்
உணவு தாருங்கள்
இன்னொரு சுற்று
ஆடிவிடலாம்
இல்லையேல்
ஆட்டம் கைவிடப்படும்.
- பா.ரமேஷ்
முப்பரிமாணப் பட்டாம்பூச்சியாக
மின்விசிறிக் காற்றில்
படபடத்துச் சிறகசைத்துக் கொண்டிருக்கும்
சுவரில் ஒட்டப்பட்ட
முப்பரிமாணப் பட்டாம்பூச்சியைப் போல்தான்
பறந்துகொண்டிருப்பதாய்
நம்பவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்...
சுயம் இழுத்துக் கட்டிய
வடத்தின் நுனிவரை தரப்பட்டிருக்கும்
சுதந்திரத்திற்குள்
சுருட்டிக்கொள்ளப் பழகிவிட்டோம்
எங்கள் வாழ்வின் தடங்களை...
இனி மின்விசிறியை மட்டும்
அடிக்கடி அணைத்துவிடாதீர்கள்...
நாங்கள் பறந்துகொண்டிருப்பதாகவே
உணர்ந்தபடி வாழ்ந்துவிட்டுப்போகிறோம்.
- கீர்த்தி கிருஷ்

பழக்கம்
ஒரு நாள் உருளை மசித்து
ஒரு நாள் பயறு கடைந்து
ஒரு நாள் ரசத்தில் பிசைந்து
ஒரு நாள் தண்ணீர் கலந்து,
நான் யோசித்ததைப்போல் இல்லை
எங்களோடு சேர்ந்து
நாங்கள் வைத்த சோற்றை சாப்பிடப்
பழகியிருந்தது
எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி
இந்த ஊரடங்கில்.
- அரவிந்தன்