கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கோடை மகிழ்வு

பசுமை பதித்துக் கீழிறங்கல்.

தகிக்கும் கோடை

அகன்ற பாத்திரத்தில் ததும்பத் ததும்ப

நீர் நிரப்பி வைத்தேன்

மாடியில் தோதான இடத்தில்.

வீட்டையொட்டி ஒரு பெருமரத்தின்

விரிந்த கிளையிலமர்ந்து

பழமுண்ணும் பறவை

சட்டெனப் பறந்து வந்து நீரருந்தியது.

போதுமான நீரருந்தியபிறகு

எந்த நிமிடத்திலும் பறக்கலாம்

அது அதன் ஆசுவாசத்தைப் பொறுத்து.

பறத்தலினூடே எச்சமிடலாம்.

ஒரு மரத்தையும்

மரம் வளர்வதற்கான நீரையும்

தந்துவிட்ட மகிழ்வில்

மாடியை விட்டு இறங்குகிறேன் நான்.

- துரை. நந்தகுமார்.

சொல்வனம்
சொல்வனம்

கோடை மகிழ்வு

பழுத்து உதிரும்

வாதாம் மரத்தின்

செந்நிற இலைக்கு

கோடையைத் தெரிகிறது

விடுமுறை நாளில்

காவலாளியின் கூண்டின் மீது

விழுந்து கொண்டதுமில்லாமல்

வளாகம் முழுக்க

குழந்தைகளாகப்

பெருகிக்கொண்டு

குதூகலிக்கிறது.

- நந்தன் கனகராஜ்

அனாந்தரத்தில் விழும் உப்புக்கனி

ஒற்றைக்கனி பிழிந்து தினம்

உப்புச்சாறு குடிக்கும்

உழைப்பாளா்கள்

அதன் சிவந்த சக்கையை

கறுத்த இருளின்

மேற்குத் திசையிலெறிந்துவிட்டு

ஓய்வெடுப்பாா்கள் அன்று

ஆளில்லாத அனாந்தர வெளியில்

பறிப்பாரற்று

வானக்கொடியிலேயே

வாடி வாடி உதிா்கிறது

அவ்வுப்புக்கனி இன்று.

- வெள்ளூர் ராஜா

கடைத்தெருக்காட்சி

சாலையோரம்

நிறுத்தப்படுகிறது

`ஷாப்பிங்' வந்த

உயர் ரக கார் ஒன்று!

கைக்குழந்தையுடன் ஓடிப்போய்

கையேந்துகிறாள் ஒருத்தி

உடன் வந்த நாயை மட்டும் காருக்குள்ளேயே விட்டு

பூட்டிச்செல்கின்றனர்...

காசு ஏதும் போடமுடியாமல் தவித்தபடி நாய்

வெறுமனே வெளியே

தலையை நீட்டுகிறது

அதையே பார்த்து

புன்னகைப்பிச்சை போட்டபடி

நகர்கிறது கைக்குழந்தை...

அய்யாறு. ச.புகழேந்தி