
மௌனமே...
பருவகாலங்கள்
நீ பேருந்திலேறி
பயணித்து இறங்கும்
இருபது நிமிடங்களுக்குள்
நிகழ்ந்துவிடுகின்றன
அத்தனை பருவகால மாற்றங்களும்
நீ பேருந்திலேறுகையில் மழைக்காலம்
நீ எனைப் பார்க்கையில் இளவேனிற்காலம்
நீ புன்னகைக்கையில் வசந்தகாலம்
நீ பேருந்தை விட்டு இறங்குகையில்
இலையுதிர்காலம்
நீ இறங்கிப்போன பிறகு கோடைக்காலம்.
- சௌவி
காதல் குறியீடு
உனக்காய் நான்
கோயிலுக்கும்
எனக்காய்
நீ மசூதிக்கும்
செல்கிறோம்
எத்தனையோ
இடையூறுகளுக்கு இடையே
இடைவெளியின்றிப்
பயணிக்கிறது...
மதக்குறியீடுகளின்றி
மனக்குறிகளோடு
நம் காதல்!
- மு.முபாரக்

மௌனமே...
உன் மௌனம்
என்னுள்
ஓராயிரம் வார்த்தைகளை
உதிர்க்கின்றன
எதுவுமே பேசமுடியாமல்
என்னையும் உன்னைப்போல்
நிற்கவைக்கிறாய் நீ
நம் மௌனம்
என்னென்ன வார்த்தைகளைக்கொண்டு
நிரப்பிக்கொள்ளப்போகிறதோ!
- அய்யாறு. ச.புகழேந்தி
ரோஜா
புத்தம் புதிய
ரோஜாவைக்காட்டிலும்
பத்திரப்படுத்தப்பட்ட
காய்ந்த ரோஜாக்களிலேயே
பெரும்பாலும்
பசுமையாய் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது
காதல்.
- கௌந்தி மு
உயிர்த்தெழுவேன்...
என் காதலை அறைந்த
சிலுவையின் முன்பே அமர்ந்து
பிரார்த்திக்கிறாய் சர்ச்சில்
பிதா உன்னை மன்னிப்பாராக...
அடிக்கடி தொலைத்துவிடுகிறேன்
என் பெயரை
ஒருமுறை அழைக்கிறாயா...
இன்னொரு முறை பிறக்கட்டுமா...
- வே.புகழேந்தி