
கதை நேரம்
கலையும் வீடு
ஊரடங்கு நெருக்கடியால்
வீட்டை விட்டு வெளியேற முடியாத குழந்தையொன்று
வீட்டுக்குள்ளேயே
தன் அபார்ட்மென்ட் கட்டும் விளையாட்டைத் தொடங்கியது
அடுக்குமாடி வீடுகள்
வீட்டைச் சுற்றிய புல் தரைகள்
நீச்சல் குளம்
பிளே கிரவுண்ட்
பார்க்
கார் பார்க்கிங்
என எது ஒன்றையும் தவறவிடாத
நேர்த்தியும் ஆச்சர்யமும்
குட்டிக் குழந்தைகளாக
இருக்கும்
டோரா பொம்மைகளிடம்
இரு கைகுவிப்பின் வழியே
ரகசியமாகச் சொன்னபோதுதான் தெரிந்தது
பிளே கிரவுண்டில்
விளையாட அனுமதிக்காத
செக்யூரிட்டி அங்கிளையும்
அவரிருக்கும் சிறிய ரூமையும்
கட்டாமல் தவிர்த்த
கதை!
- இரா.செந்தில் கரிகாலன்.

கதை நேரம்
தாலாட்டைத் தாண்டிய
மகள்களுக்கு இப்பொழுதெல்லாம்
உறங்கத் தேவையாக இருக்கின்றது
ஒரு கதை.
அம்மா ராஜா
கதையென்கின்றாள்
பெரியவள்...
சிங்கக் கதைதான்
வேண்டுமென்கின்றாள்
சின்னவள்...
சிங்கத்தையும் ராஜாவையும் இதுவரையில் நேரில் பார்க்காத
எனக்கோ இப்பொழுது
தேவையாக இருக்கின்றது
ஒரு கதை.
- சரண்யா சத்தியநாராயணன்.
நோயுற்ற பசுவைப்போலப் படுத்திருக்கும் பெருநகர்
இந்நகர்
வசீகரமான பழங்கிழவி
வெள்ளம் புயலென
நோவு வந்து
படுத்த போதெல்லாம்
பத்தே நாளில்
சாகக்கிடக்கும் கிழவி
விடியக்காலையிலெழுந்து
களை வெட்டுக்குக் கிளம்பும்
மிடுக்கான தோரணையோடு
எழுந்துகொள்ளும்.
இப்போதும் அப்படித்தான்
அதன் சீரற்ற மூச்சை
அசைவற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
பிள்ளைகள் நாம்.
இப்பெருநகரை
விட்டுப் போய்விடலாம்தான்
ஆனாலும்
நோயுற்ற பசுவைப்போலப் படுத்திருக்கும்
இந்நகரை
அதன் கொட்டடியிலேயே விட்டுவிட்டு
எந்தக் குடியானவன் போவான்?!
- வெள்ளூர் ராஜா

அழுகை
தோல்போர்த்திய வெளிறிப் படர்ந்த
வதங்கிய உடல்
தலைமாட்டில்
உயிரின் சில நாள்களை
அதிகப்படுத்தும் மாத்திரைப் பைகள்
சோம்பிய முகத்தில் தலைப் பேன்கள்
ஊர்ந்துகொண்டிருக்கின்றன
உன்னை விட்டுச் செல்கிறேனே என்பதை
பாதி திறந்த கண்கள் சொல்லாமல் சொல்கின்றன
சுவாசத்தின் ஏற்ற இறக்கங்களை மீறி
எதையோ சொல்லத் திறந்து மூடுகிறது
காய்ந்து உதிரும் செல்கள் நிரம்பிய வாய்
யாருமற்ற பெருவெளியை நோக்கிய பயணத்தில்
மரணமும் ஒரு சமர்ப்பணமாகிவிட
என்னைப் பெற்ற நேரத்தில்
நான் இப்படித்தான் வீறிட்டழுதிருப்பேன்
மீண்டும் என்னைப் பெறுவாள் அம்மா...
- லக்ஷ்மி