சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

நீங்களோ நானோ அவரைக் கடந்தாலே போதும் அவரின் கதை மாந்தர்களாகிவிடுவோம்

இரண்டு பூனைகளின் உலகம்

ளீர் வெளிச்சத்தைப்போல வெண்மையாகவும்

பிரகாசிக்கும் இருளாய் கருமையாகவும்

இரண்டு பூனைகள் வளர்கின்றன வீட்டில்

வேறு நிறங்களின் துளிகூடக் கலப்பில்லாமல்

பார்த்து பார்த்து வாங்கினான் ரினான்

சொல்வனம்

வெள்ளைப் பூனை அதிகமாய்

இரவு நேரங்களிலேயே வலம் வருகிறது

கறுத்த பூனை பகலையே அதிகம் விரும்புகிறது

இரண்டிற்கும் வித்தியாசம் வண்ணம் மட்டுமல்ல

அதன் உணவுகள் உண்ணும் இடம்

உறங்குமிடமெனப் பிரித்துக்கொண்டன

எப்போதாவது இரண்டும் சேர்ந்து நின்று

மியாவ் மியாவ் என்று கத்துவது

இரண்டு பியானோக் கட்டைகளை மாறி மாறி

அழுத்துவதுபோலவேயிருக்கும்

பகல் இரவைப்போல வலம் வருபவைகளுக்கு

டே, நைட் என்று தனித்தனியாகப்

பெயர் வைத்து அழைக்கிறான் நிஹான்

பகலில் வழிதவறி ஜன்னலில் நுழைந்த

வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்துவதும்

இரவில் பல்லிகளை விரட்டுவதுமென்பது

பூச்சைகளுக்கு விளையாட்டு

ஃபைஹாவிற்குப் பூனைகள் என்றால் சிறிது பயம்

அவளைக் காணும் சமயங்களில் மட்டும்

ஒளிந்துகொள்ளும் இரண்டும்

வீடு அமைதியாக இருக்கும் பள்ளி நாள்களில்

என்றாவது ஒருநாள்

இரண்டும் சேர்ந்து மாடிப்படிகளின் கீழ் கிடக்கும்

நீலக் கால்பந்தை உதைத்துக்கொண்டிருக்கும்

பகலுக்கும் இரவுக்கும் இடையில்

அவை உருட்டிக்கொண்டிருக்கும் பந்துதான்

இருபுறமும் மாறி மாறி சுழன்றுகொண்டிருக்கும்

இரண்டு பூனைகளின் உலகம்

அதில்தான் வாழ்கிறார்கள் மூன்று குழந்தைகள்.

- வலங்கைமான் நூர்தீன்

சொல்வனம்

கதைசொல்லி தாத்தா

தைசொல்லி தாத்தா

இறந்துவிட்டார்

கதைசொல்லி என்றால்

நூறு கதைகளை எழுதியவரல்லர்

ஆயிரம் கதைகளைப் புனைந்தவர்

நீங்களோ நானோ

அவரைக் கடந்தாலே போதும்

அவரின்

கதை மாந்தர்களாகிவிடுவோம்

அவரது

பாழடைந்த வீட்டில்

சொலவடைகளும் பழமொழிகளும்

தோரணம் கட்டித் தொங்கும்

கொள்ளிவாய்ப் பிசாசையும்

உச்சி முனியையும்

நுகத்தடியில் பூட்டி

முக்கால் குறுக்கத்தை

உழவடித்ததில்தான்

இப்படி வெள்ளை வெள்ளையாய்த்

தம் கரிசலில்

பேய்ப் பருத்தி விளைந்துகிடப்பதாகவும்

உள்ளூர் வியாபாரிகள்

வாங்க பயந்ததாகவும் சொல்லி

விழுந்து விழுந்து சிரிப்பார்

சீரியலும்

மொபைலும் வந்தபிறகு

ஒரு சாரார்க்கு

புனைவு தாத்தா

புழுகிணி தாத்தாவாகிப்போனார்

ஆயிரம் கதைகளைச் சுமந்தவரின்

உடல்

அப்படிக் கனக்கிறது

அதைவிட அவருக்குப்பின்

கதைகளற்ற ஊராகிவிடுமோ

என்றெண்ணுகையில்

மனமும் வெறுமையில்

அப்படிக் கனத்துப் போய்விடுகிறது.

- வெள்ளூர் ராஜா