
ஓவியம்: செந்தில்
நாள்பட்ட காத்திருப்பு
வகுப்பறைச் சுவரின் மூலையில்
பல்லி ஒன்று
பூச்சி தின்னக்
காத்திருக்கும் சமயம்
ஆய்வகக் கதவைத் திறந்தபோது
அதன் குறி தவறிப்போனது...
கரும்பலகை தன்
மார்பில் நான் கடைசியாய் எழுதிய சமன்பாடுகளை
ஜூன் வந்தும்
ஏன் அழிக்கவில்லை
என்று என்னைப் பார்த்ததும்
வினவின...
கூட்டிப் பெருக்கிக்
கொட்டிவிட்டேன்
பள்ளி திறக்கும்
தேதியையும் சேர்த்து...
மனதை அரிக்கும்
கவலையைப் போல அங்கங்கு
மூலைகளில் முளைத்திருந்தன
செல்கள்...
யாரும் இல்லாததால்
வெறுத்துப்போன
அறைச்சுவர்கள்
வெளியே போக வழியில்லை...
தூசி படிந்த கருவிகள்மீது
நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையின் அளவீடுகள்...
துருப்பிடித்த பூட்டுக்குள்
நுழைந்த சாவி மறுப்பதைப்போல
எனக்கும் பூட்ட மனமில்லை
இயற்பியல் ஆய்வகத்தை.
- ந.வீரா
நகரத்தைப் பிரித்தல்
எனது நகரத்தை
மூதாதையர்களின் நிலத்திலிருந்து
பிரித்துவிட வேண்டுமென்று,
உருமாற்றமடைந்த
உங்களால் ஊகிக்க முடியாது
அவன் சொன்னான்.
அவன்
என் அறையில் ஆங்காங்கே
இடம் மாறும் பொம்மையுமல்ல
சன்னல் ஊடாக நுழைந்த
மாரிக்காலக் குளிருமல்ல
புனைவுகளோடு வந்து நிற்கும்
என் கவிதையுமல்ல.
மூதாதையர்களின் நிலத்திலிருந்து
எனது நகரத்தைப் பிரித்துவிடவேண்டுமென்று
அவன் சொல்வதற்கு
ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள்
அவன் வசமிருந்தன.
ஒற்றைப் பிரதியை
அவன் என்னிடம் முன்வைத்தான்
அப்பிரதியை
என்னால் திறந்து பார்க்க முடிந்தது
பிரதிக்குள்ளிருந்து
குவியல் குவியலாக
நிர்வாண மனிதர்கள் வெளிவரத் தொடங்கினார்கள்.
- ஏ.நஸ்புள்ளாஹ்
நோய்க்காலம்

மாலைப்பொழுது
மஞ்சள் வெயிலை
அனுமதிக்கவில்லை
மனம்தோறும்
நிரம்பி வழிகிறது
எல்லையில் குருதிகள்.
உலக நிலங்கள் முழுவதும்
பேரிடர்க் காலக் கல்லறையை
அமைத்து அழச்செய்கிறது
உரோமம் உதிர்ந்த காலையும்
மரணத்தை எண்ணுகிற மாலையும்
தொலைக்காட்சிப் பெட்டியில்
நிரம்பி வழிகிறது
மனித எண்ணிக்கைகளாய்
சடலங்கள்.
தேர்தல் முடிவுகளைப்போன்று
மரணத்தின் முடிவுகளை
மாவட்டங்களாய் சொல்லி நின்ற
செய்திகளை
உலகமே முதல் முறை
கேட்டுக்கொண்டிருக்கிறது
இன்று ஊர்ப் பெயரில் மரணத்தை அழைக்கத் தொடங்கிவிட்டது.
கருணையற்ற முகமான
கிருமி நுரையீரலை பலம்கொண்டு
குத்திக் கிழித்துவிடுகிறது
சரியான மருந்தில்லா
மாலுமிகள் என்ன செய்வார்கள்
வெளியில் மனிதப்படகுகள்
மரணங்களாய் நிலம் ஒதுங்கிறது.
கடைநிலை மனிதன்
கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு
பசிக்காகப் போராடுகிறான்
ஒரு டைலர் சானிட்டைசர்
வைத்துக்கொண்டு நூல் கோக்கிறார்
காசப்புக் கடைக்காரர் கிருமிநாசினியைத்
தெளித்துவிட்டுக் கறி வெட்டுகிறார்
எந்தப் பேரிடர் நோய்த்தொற்றாகட்டும்
காய்கறிகளை விற்றுக்கொண்டும்
நம் பசியைப் போக்குகிறது கடைத்தெரு.
கடைநிலை மனிதர்களால்
நிரம்பியது நம் தேசம்.
எத்தனையோ வேண்டுதலையும் மீறி
நரபலியில் சிக்கித்தவிக்கிறது உலகமின்று
மனங்களும் ஆலயம் என்றார்கள்
நான் ஆலயத்தின் கதவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பாராளுமன்றமும் நாடாளுமன்றமும்
மூடியே இருக்கட்டும்
திறந்திருந்தபொழுதும் இப்படித்தான்
புலர்ந்தது.
- ப.தனஞ்ஜெயன்.