
பிணையல் விடும் வேளையில வந்ததா மனிதா?
வாக்கூடு
மண்ணுல ஏர் அழுத்தறப்ப வராத இரக்கம்
விதைச்சு
களை பறிச்சு
கதிர் அறுத்து
களம் சேர்த்து
பிணையல் விடும் வேளையில வந்ததா மனிதா?
மண்ணைத் தின்னுடும்னும்
கருது குத்திடும்னும்
வாகூசாமப் புளுகிட்டு மாட்டி விட்ட...
சுத்தி வர்ற நேரத்துல என்ன தின்னுடப்போகுதுன்னு எண்ணாம
சுயநலமாப் பூட்டி விட்ட...
மூக்கையும் வாயையும் மூடிவிட்டு எங்கள மூச்சிரைக்க வச்ச பாவத்துக்குத்தான்
இன்னைக்குத் திரியற
வாக்கூடு மாட்டிக்கிட்டு
- அய்யனார் ராஜன்

காத்திருப்பு
கண் மூடித்
திறப்பதற்குள்
வானத்தின்
வயிற்றைக் கிழித்து
தடம் தெரியாமல்
தைத்துவிடுகிறது
மின்னல்.
குளிருக்குத் தாங்காத
என் கிழிந்த போர்வைகளை
அதனிடம் கடன்
சொல்லியாவது
தைத்து விட வேண்டும்.
இனி எப்பொழுது
மழை வரும்.
- சிலம்பரசன் சின்னக்கருப்பன்
பார்வை
யாராவது
பார்த்துவிடுவார்கள் என
நாம் பாராமல் இருக்கிறோம்,
நாம் பாராமுகமாய் இருப்பதையும்
யாராவது
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
- திருப்பூர் சாரதி
அடிபம்பு வாழ்க்கை
நடைபாதையில் ஆழமாய் நடப்பட்டிருந்த
நன்னீரைப் பொழியும் குழாயடி நோக்கி
நெகிழிக்குடத்தைச் சுமந்து வந்த ஜெயராணிக்கும்
ஐஸ்கட்டி வாங்க வந்த ஜெயராஜிற்கும்
பெயர்ப் பொருத்தத்தில் துவங்கி,
முகத்துவாரச் சந்திப்புகளினூடாகப்
பற்றிக்கொண்டது மற்றுமொரு காதல்.
வெட்டு, குத்து, பலகளேபரங்களில்
முதலில் அடித்து நொறுக்கப்பட்டது
ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்ட அடிபம்பு.
கண்ணீராய்ப் பீறிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றை
டம்மி போட்டு மூடிவைப்பதற்குள்,
காதலர்கள் ஓடிப்போனார்கள் கடல்புறத்துக்கு.
பிறகொருநாள் வீங்கிய வயிற்றுடன்
மீன்பாடி வண்டியில் வந்திருந்தவள்
மூடப்பட்டுக் கிடந்த அடிபம்பைப் பார்த்து,
பெருமூச்சுடன் சொன்னாள்
‘எங்க கடற்கரையில தோண்டினாலே
நல்ல தண்ணி ஊற்று வருது’
- ஸ்ரீநிவாஸ் பிரபு