
`அன்பே தவம்’ என்பது நம் வாழ்க்கையின் ஆதார சுருதியாக அமைய வேண்டும். வீடு கற்களால் கட்டப்பட்டி ருக்கலாம். ஆனால், மனித மனங்களின் அன்பால் இணைக்கப்பட வேண்டியது அது.

வீடு என்பது சமையல் தொழிற்சாலை அல்ல; மனங்கள் இணைந்து, கூடிக் கலந்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் செழுமை கண்டு, பொது வாழ்க்கையில் வெற்றிபெறும் தடத்தை நோக்கிப் பயணிப்பது. இந்த வாழ்க்கை என்பது வீட்டுக்காக மட்டுமல்ல; நாட்டுக்காகவும்தான். இன்றைக்கு அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு என அனைத்திலும் அபார வளர்ச்சி யடைந்திருக்கிறோம். ஆனால், மனித மனம் வெற்றிகண்டிருக்கிறதா... பக்குவப்பட்டி ருக்கிறதா?
ஒரு குடும்பத்துக்குள்ளேயே எத்தனை பிரச்னைகள்... சண்டைகள்? `பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்’ என்பது வழக்குமொழி. அது, பிள்ளையின் பெயரைச் சொல்லி அழைப்ப தற்காகவா... இல்லை. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி, சமூகத்தில், `இவன் தந்தை யார்... இவன் தாய் யார்... இவன் பெற்றோர் வாழ்த்துக்குரி யவர்கள்’ என்ற பெயரைப் பெற்றுத் தர வேண்டும். அதற்காக. இன்று சமூகத்தில் நிலைமை அப்படி இல்லை. குடும்பத்தில் மட்டுமல்ல; பொது வாழ்விலும் முரணான உறவே நிலவுகிறது. நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள். ஆனால், அவர்களுக்குள்ளேயே பிரச்னைகள்.
ஒரு ரொட்டிக் கடைக்காரரும் வெண்ணெய்க் கடைக்காரரும் நண்பர்களாகப் பழகினார்கள். நட்பு நீண்டநாள் நீடிக்கவில்லை. ரொட்டிக் கடைக்காரர், வெண்ணெய்க் கடைக்காரர்மீது வழக்கு போட்டார். வழக்கின் சாராம்சம் இதுதான். `நான் தினமும் இவர் கடையில் அரைக்கிலோ வெண்ணெய் வாங்குகிறேன். அதில் 50 கிராம் வெண்ணெயை எப்போதும் குறைத்துத் தருகிறார்.’
நீதிபதி, வெண்ணெய்க் கடைக்காரரிடம், `அரைக் கிலோ வெண்ணெய்க்கு 50 கிராம் குறைத்துத் தருவதா... இது என்ன நியாயம்?’ என்று கேட்டார்.

`ஐயா, அரைக் கிலோ வெண்ணெயை நிறுத்தித் தருவதற்குத் தனியாக எடைக்கல் எதுவும் என்னிடம் இல்லை. வெண்ணெயை எடைபோடுவதற்கு, இவர் கடையில் நான் வாங்கி வைத்திருக்கும் `அரைக் கிலோ’ என்று எழுதி ஒட்டப்பட்ட ரொட்டித்துண்டு பாக்கெட்டைத்தான் பயன்படுத்துகிறேன்.’
ஆக, 50 கிராம் ரொட்டித்துண்டைக் குறைவாகக் கொடுத்துவிட்டு, வெண்ணெய்க் கடைக்காரர்மீது வழக்கு போடு வதைப்போலத்தான் நம் சமூகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம் குறைகள் நம் கண்களுக்கு ஒருபோதும் தெரிவதில்லை. நம் உடையின் கிழிசலை, நம் கண்கள் பார்க்க மறுக்கின்றன. எதிரே இருப்பவரின் உடையிலிருக்கும் கிழிசலை, அழுக்கைத்தான் முப்பரிமாணக் கண்கொண்டு பார்க்கிறோம்.
வாழ்க்கைப்பாதை இருவழிப்பட்டது. அறவழியில், இல்லத்திலிருந்து கடமையாற்றுவது இல்லறம். அறவழியில், அனைத்தையும் துறந்து கடமையாற்றுவது துறவறம். இல்லறத்தின் பெருமையை `அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை‘ என்கிறார் திருவள்ளுவர். அதேபோல, துறவறத்தின் மாட்சிமையை,
`துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று’ என்கிறார்.
`இதுவரை இந்த மண்ணில் இறந்தவர்களை எண்ணிச் சொல்ல முடியாததுபோல, துறந்தார் பெருமை அளவிட முடியாது’ என்கிறார்.
சித்தார்த்தன், கணப்பொழுதில் புத்தராக மாறினார். அது துறவறத்தின் உச்சம்.
அவர் புத்தரான பிறகு, ஆயிரக்கணக்கில் பலரும் அவரைப் பின்பற்றி புத்த பிக்குகளாக மாறினார்கள். அப்படி ‘சங்கல்பன்’ என்பவனின் தந்தையும் துறவியானார். அவனால் அதைத் தாங்க முடியவில்லை. `நோய்வாய்ப்பட்ட தாய், மணமாக வேண்டிய தங்கைகள்... எல்லோரையும் விட்டுவிட்டுத் தந்தை சென்றுவிட்டாரே...’ என்ற கோபம் எழுந்தது. `இதற்கு புத்தர்தான் காரணம்’ என்று அவரைத் தாக்கத் தயாரானான்.
ஓரிடத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்த புத்தர்மீது ஒரு கல்லை எறிந்தான் சங்கல்பன். அவர் தலையில் கல்பட்டு ரத்தம் கொட்டியது. சங்கல்பனைத் தாக்கத் தயாரானார்கள் மக்கள்.

``அவனைத் தாக்காதீர்கள்’’ என்று தடுத்தார் புத்தர். அவனை அருகே அழைத்தார். தடவிக் கொடுத்தார். ``சங்கல்பா... நீ ஏன் என்மீது கல் எறிந்தாய் என்பதை நான் புரிந்துகொண்டேன். உன் தந்தை என்னோடு துறவியாக வந்துவிட்டார் என்பதுதானே உன் கோபம்... ஒன்றைத் தெரிந்து கொள். உலகில் இரு வகையான மக்கள் வாழ்கிறார்கள். சிலர் உலக இன்பத்தை விரும்புகிறார்கள்; துன்பத்தை வெறுக்கிறார்கள். அவர்கள் இல்லறத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார்கள். வேறு சிலரோ உலகத் துன்பத்தை நீக்க, துறந்து வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் இன்பத்தை வெறுக்கிறார்கள். இவர்களில் உன் தந்தை இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். எனவே, நீ கோபம்கொள்ள வேண்டாம். `ஆற்றுநீர் பரிசுத்தமானதா... தேன் பரிசுத்தமானதா?’ என்று உன்னைக் கேட்டால், `தேன்தான் பரிசுத்தமானது’ என்று நீ சொல்வாய். நானோ, `ஆற்றுநீர்தான் பரிசுத்தமானது’ என்பேன்.
ஏன் தெரியுமா... தேன், களவாடப்பட்ட ஒரு பொருள். ஆற்றுநீரோ எல்லா அழுக்குகளையும் தூய்மை செய்யக்கூடியது. அதனால்தான் ஆற்றுநீரைப் புனிதமானது என்கிறேன்.’’
அந்த நேரத்தில், புத்தரின் ரத்தம் பட்ட கல், பொன் கட்டியாக மாறியது. புத்தர் அதை சங்கல்பன் கையில் கொடுத்தார். அப்போதும் அந்தக் கல் தங்கக்கட்டியாகவே இருந்தது. ``சங்கல்பா, இப்போது நீயும் புத்தநிலையில் இருக்கிறாய். அதனால்தான் உன் கைகளிலும் இந்தக் கல் தங்கமாகவே இருக்கிறது. இதை நீயே வைத்துக் கொள்’’ என்று சொல்லி அனுப்பினார் புத்தர்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த ஊருக்கு வந்தார் புத்தர். அழுக்கு உடை, தாடியோடு இருந்த ஓர் இளைஞனை `திருடன்... திருடன்...’ என்று விரட்டிவந்தார்கள் ஊர் மக்கள். அவனைத் தாக்கினார்கள். அவனை அடித்துக்கொண்டிருந்தவர்களை புத்தர் தடுத்தார். அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார். பிறகு அவனைத் தூக்கி, காயம்பட்ட புண்ணுக்கு மருந்திட்டார்.
``என்னை அடையாளம் தெரிகிறதா?’’ என்று அவன், புத்தரிடம் கேட்டான்.
புத்தர் அவனைக் கூர்ந்து பார்த்தார்.
அவன் தன் அழுக்கு மூட்டையிலிருந்து ஒரு தங்கக்கட்டியை எடுத்து புத்தரிடம் கொடுத்தான். அவன்தான் சங்கல்பன் என்பது புத்தருக்குப் புரிந்தது. தங்கக்கட்டி, புத்தரின் கைக்கு வந்த கணத்தில் அது வெறும் கல்லாக மாறிவிட்டது. புத்தர் அதிர்ந்துபோனார். ``சங்கல்பா, நான் முன்பு புத்தநிலையில் இருந்தேன். நீயும் புத்தநிலையில்தான் இருந்திருக்கிறாய். உன் கையிலிருந்த தங்கக்கட்டி என் கைக்கு வந்தவுடன் கல்லாக மாறிவிட்டது. இனி நான்தான் புத்தநிலையைத் திரும்ப அடைய வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் புத்தர்.
தினமும் மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் துறவறம். அந்த அறத்தைத்தான் அருளாளர்கள் இந்த மண்ணில் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருந்தகைகளின் உள்ளம் அது.
ஒருமுறை தஞ்சைப் பெரியகோயிலுக்கு வந்தான் ராஜராஜ சோழன். திருக்கோயில் விளக்குகள் அணைந்திருந்தன. ``ஏன் விளக்குகள் எரியவில்லை?’’ என்று கேட்டான்.
``கோயிலுக்கு நெய் தரவேண்டியவர்கள் தரவில்லை’’ என்று திருக்கோயில் அலுவலர் சொன்னார்.
``யார் தருவார்கள்?’’
``செல்வந்தர்கள் தருவார்கள். இப்போது அவர்களிடமிருந்து நெய் வரவில்லை. அதனால் விளக்குகள் எரியவில்லை.’’
ஒரு நிமிடம் யோசித்தான் ராஜராஜன். ``நாளை முதல் நீங்கள் செல்வந்தர்களிடம் நெய் வாங்காதீர்கள். அதற்கு பதிலாகப் பசுமாடுகளைக் கோயிலுக்கு தானமாகப் பெறுங்கள்.’’
``பசுமாடுகளை நாம் என்ன செய்வது?’’
``அவற்றை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுங்கள். ஏழைகள், பசுமாடுகளுக்குப் பதிலாக, கோயிலுக்கு நெய்யை மட்டும் தரட்டும். மற்றவற்றை அவர்கள் வைத்துக்கொள்ளட்டும். ஒரே நேரத்தில் கோயில் விளக்குகளும் எரியட்டும். ஏழைகள் வீட்டு அடுப்புகளும் எரியட்டும்.’’
மறுநாள் முதல் அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. செல்வந்தர்கள் பசுமாடுகளைத் தானமாக அளிக்க, சாரி சாரியாய் வந்த ஏழைமக்கள் பெற்றுச் சென்றார்கள்.
சிறிது காலத்துக்குப் பிறகு ராஜராஜன் கோயிலுக்கு வந்தான். இறைவனை வணங்கி, கோயிலை வலம் வந்தான். ஒரு பகுதியில் விளக்குகள் அணைந்திருந்தன. ``ஏன் இங்கே விளக்குகள் எரியவில்லை?’’ என்று கேட்டான்.
``இந்தப் பகுதிக்கு நெய் தர வேண்டியவர் தரவில்லை’’ என்று கோயில் அலுவலர் சொன்னார்.
``யார் அவர்?’’
``எழுபத்தூரைச் சேர்ந்த மாறாயன். அவருக்கு 42 பசுமாடுகளை தானமாகத் தந்திருந்தோம். அவரிடமிருந்து ஒரு வாரமாக நெய் வரவில்லை.’’

ராஜராஜன் கண்களில் பொறி பறந்தது. பரிவாரங்களோடு எழுபத்தூருக்குப் போனான். மாறாயன் வீட்டு வாசலில் நின்றான். ``மாறாயா... வெளியே வா...’’ சேவகர்கள் அழைத்தார்கள். நீண்டநேரம் கழித்து மாறாயன் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண், கைக்குழந்தையோடு வெளியே வந்தாள். ராஜராஜனை விழுந்து வணங்கினாள்.
``எங்கே உன் கணவன்?’’ ராஜராஜன் கேட்டான். அவள் தன் சவலைக் குழந்தையை மண்ணில் போட்டுவிட்டு, அழுதாள். ``மகாராசா... நீங்கள் தந்த 42 பசுமாடுகளும் என் கணவரும் கடந்த மாதம் காவிரி ஆற்று வெள்ளத்தோடு போய்விட்டார்கள்.’’
இதைக் கேட்டுத் துணுக்குற்றான் ராஜராஜன். திரும்பி ஊர் மக்களைப் பார்த்தான். சூழ்ந்திருந்த மக்கள் ``ஆமாம்’’ என்றார்கள். ஆனாலும் ஒரு சந்தேகம் உறுத்தியது.
``உன் கணவன் வெள்ளத்தோடு போய் எத்தனை நாள்கள் ஆகின்றன?’’
``ஒரு மாதமாகிறது மன்னா.’’ .
``ஒரு மாதத்துக்கு முன்னரே உன் கணவனும் பசுமாடுகளும் வெள்ளத்தில் போய்விட்டார்கள். ஆனால், கடந்த வாரத்துக்கு முன்புவரை, மூன்று வாரங்களுக்கு நெய் தந்திருக்கிறாயே... எப்படி?’’
``அதை மட்டும் கேட்காதீர்கள் மகாராசா...’’ கதறியபடி சொன்னாள் அந்தப் பெண்.
``தைரியமாகச் சொல்... நான் இருக்கிறேன்.’’
``மகாராசா... பசுமாடுகளோடு என் கணவர் காவிரி வெள்ளத்தில் போன பிறகு, `கோயிலுக்கு நெய் கொடுக்க வேண்டுமே’ என்று என் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலை விற்று, நெய் வாங்கித்தான் கோயிலுக்குக் கொடுத்தேன். ஒரு வாரமாகத் தாய்ப்பாலும் வற்றிவிட்டது. அதனால் கோயிலுக்கு நெய் கொடுக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள் மகாராசா...’’ என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மயங்கி விழுந்தாள்.
அவளைத் தூக்கி நிறுத்தினான் ராஜராஜன். ``என்னைவிட என் தமிழ்க் குடிமக்கள் மேம்பட்டவர்கள். இந்தப் பெண் `வரகுணாள்’ பெயரைக் கல்வெட்டில் பொறிக்கச் செய்யுங்கள். மீண்டும் இவளுக்கு 42 பசுக்களைத் தானமாகக் கொடுங்கள். அவற்றை ராஜராஜன் தன் பொறுப்பில் பராமரிப்பான்.’’ கட்டளையிட்டான் ராஜராஜன். `சித்தார்த்தன்’, `ராஜராஜன்’ இருவர் பற்றிய இந்தக் குறிப்புகள் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய சிறுகதைகள். கோயிலைத் தழுவி வாழ்வது குடிகளின் வாழ்க்கை. குடிகளைத் தழுவி வாழ்வது கோயிலின் சமய வாழ்க்கை. இந்த வாழ்க்கைத் தளம் வலிமை பெற வேண்டும்.
`அன்பே தவம்’ என்பது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வதல்ல. எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பதும் அல்ல. அறத்துக்கு உட்பட்டு, நெறிகளுக்கு உட்பட்டு, சட்ட வழிகளுக்கு உட்பட்டு நம்மால் முடிந்த உதவிகளைத் துயருற்றோருக்கு, ஆதரவற்றோருக்குச் செய்வது. அதற்குத் தேவை, பொன், பொருள், சொத்துகள் அல்ல; அன்பு.

அன்பு, தவமாக மாறிவிட்டால் இந்த மண்ணுலகம் செழிக்கும். `கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு’ என்று பாரதி சொன்ன சொர்க்கம் தோன்றும். காண முடியாத ஒன்றல்ல சொர்க்கம். வாழும் மண்ணை அன்பால், அரவணைப்பால், தோழமையால், நட்பால், அகிம்சை உணர்வால் அரவணைத்தால் அது செழிக்கும். சொர்க்கம் இங்கே இறங்கும். இதுதான், `அன்பே தவம்’ காட்டும் பாதை. அந்தப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்வோம். அனைவருக்கும் வாழ்த்துகள்!
நிறைந்தது