கட்டுரைகள்
Published:Updated:

மெய் நலக் காப்பு - கவிதை

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

- ஸ்ரீநேசன்

உடல் இனிது

உடலில் சுடர்ந்திடும் உயிர் இனிது

அது வாழ்க

ஒவ்வோர் உறுப்பின் ஆற்றலும் அளப்பரிது

கண் நன்று

காணுதலின் ஒளி மட்டற்றது

இனிதாம் செவி அதனொலி நுகர்வு சிறப்பு

சுவை மணமுணர் நாவும் நாசியும் இனியன

உடல் போர்த்திய தோல் மேன்மை

வனப்பில் தொடுவுணர்வோங்குக

மார்பகம் அழகு

பால் சுரப்பு நாளங்கள் நலம் எய்துக

இதயம் தெய்வம்

இடையறாப்பணி உயிர்மையுடைத்து

முகிழ்த்தோடும் குருதி அரிது

நீரிழிவும் அழுத்தமும் அகல்க

உயிர்வளிப் பெருக்கம் ஊக்கம்

கல்லீரல் மண்ணீரல் நல்லன

கணந்தோறும் திசுக்கள் திறன் காண்க

உயிர் அணுக்கள் தேவைக்குப் பெருகுக

மெய் நலக் காப்பு - கவிதை

கருப்பை இனவிருத்தி செய்க

இரைப்பை பித்தப்பை

அவ்வவைப் பணியில் ஆக்கம் அடைக

குடல்கள் கொடை

மலஜல செயலிகள் அரும்பணி புரிவன

இயக்கம் இடையின்றித் தொடர்க

கைகால்கள் விரல்கள் உரம் பெறுக

உடலின் ஒவ்வொரு பிணியும் தீர்க

மூப்பு இனிது இயல்பாய் நிகழ்க

மெய் முழுதும் மறு ஆற்றல் எழுக

மூளைப் புதையலில் முழுத்தூண்டல் விளைக

பற்கள் உறுதியுறுக

பார்வை கூர்மையடைக

புதிதாக மனம் துலங்குக

அதில் அன்பும் கருணையும் மலர்க

உணர்ச்சியில் கலந்தூறிக் கற்பனை கனலுக

சொற்களுக்கு மந்திரப்பித்தேறுக

இனிது இனிது ஒவ்வொரு பிறப்பும்

குடும்பமும் ஊரும் உறவாய்க் குழுமும்

ஒவ்வொரு தேசமும் உடலாம் உணர்க

ஒவ்வொரு புலனும் மொழியே அறிக

கூடி முயங்கி ஓருடல் ஆகுக

மொழிகளின் மூச்சு உயிராய் இயங்குக

நமைச்சூழ் அடரிருள் அகல்க

வெளிச்சம் விரைந்து விரவுக

இனி அமைதியும் இனிமையும்

இறையாகி அருள்க.