தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புத்துயிர்ப்பு: ஷேக்ஸ்பியரின் பெண்கள்

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

ஜெர்ட்ரூட் - ஒஃபீலியா

உலகில் பலருக்கு வில்லியம் ஷேக்ஸ்பியரும் கடவுளும் வெவ்வேறானவர்கள் அல்லர். புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய விமர்சகரான ஹெரால்ட் புளூம் அந்தப் பலரில் ஒருவர்.

மேற்கத்திய உலகின் மகத்தான படைப்புகளை அறிமுகப்படுத்தும்போது எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக இவர் ஷேக்ஸ்பியரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவரைச் சுற்றித்தான் அல்லது அவருக்குப் பிறகுதான் மற்றவர்கள் வருகிறார்கள். சரி, ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் எதை முதன்மையானதாகச் சொல்வீர்கள் என்று கேட்டால் இவர் அளிக்கும் பதில், `ஹாம்லெட்.'

கார்ல் மார்க்ஸுக்கு ஷேக்ஸ்பியர்மீது மிகுந்த மதிப்பு இருந்தது. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் மார்க்ஸுக்கு மனப்பாடமே ஆகியிருந்தன. எங்கோ ஓரிடத்தில் ஒருமுறை மட்டுமே தோன்றி மறையும் சிறிய கதாபாத்திரங்களைக்கூட மார்க்ஸ் நினைவில் வைத்திருந்தார். அவர் மட்டுமல்லர், அவர் வீட்டிலுள்ள எல்லோருக்குமே ஷேக்ஸ்பியரைப் பிடிக்கும். மார்க்ஸுக்கு வீட்டில் வழங்கப்படும் செல்லப்பெயரான ‘மூர்’ என்பது ஒத்தெல்லோவில் இடம்பெறும் ஒரு பெயர்தான். மார்க்ஸைக் கவர்ந்த ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் ஹாம்லெட்டும் ஒன்று.

ஹாம்லெட்டைக் கொண்டாடதவர்களைப் பார்ப்பது சிரமம். வாழ்வின் ஆழங்களைத் தரிசிக்க வேண்டுமா... ஹாம்லெட் படி. மனித உளவியல் தெரிய வேண்டுமா... ஹாம்லெட் படி. தத்துவப் பார்வைகள் வேண்டுமா... ஹாம்லெட் படி. ஹாம்லெட்டில் இல்லாதது இந்த உலகில் எதுவும் இல்லை. ஷேக்ஸ்பியர் எழுதாததை வேறு எவரும் எழுதியதில்லை. இனியும் எழுத மாட்டார்கள்.

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

`ஆம், ஷேக்ஸ்பியர் ஒரு சிகரம், சந்தேகமில்லை. ஹாம்லெட் சிகரத்தின் நுனி, அதையும் ஏற்கிறோம். ஆனால், ஷேக்ஸ்பியர் அப்பழுக்கற்றவர் அல்லர். அவருடைய படைப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையும் அல்ல' என்கிறார்கள் புதிய அலை விமர்சகர்கள்.

இந்த உலகில் நல்லது, கெட்டது என்று எதுவுமில்லை. நம் சிந்தனைதான் அவ்வாறு நினைக்க வைக்கிறது.

ஹாம்லெட்டை எடுத்துக்கொள்வோம். டென்மார்க்கின் அரசர் ஹாம்லெட். அவர் மனைவி, அரசி ஜெர்ட்ரூட். இவர்களுடைய மகன், இளவசரன் ஹாம்லெட். தன் கணவரின் மரணத்துக்குப்பிறகு அவர் சகோதரரான கிளாடியஸ் என்பவரை ஜெர்ட்ரூட் மணந்து கொள்கிறார். இது இளவரசரைக் கொந்தளிக்க வைக்கிறது. அப்பா இறந்த சில மாதங்களில் ஏன் அம்மா மறுமணம் செய்து கொள்ள வேண்டும்... அதுவும் சித்தப்பாவை?

இந்த நிலையில் இறந்துபோன தன் அப்பாவின் ஆவியை ஹாம்லெட் தரிசிக்கிறான். `மகனே, உன் சித்தப்பன்தான் என்னை நஞ்சூட்டிக் கொன்றான். நீ அவனைப் பழி வாங்க வேண்டும்' என்று ஆவி கோருகிறது. ஹாம்லெட் எப்படித் தன் சித்தப்பாவைப் பழி வாங்குகிறான் என்பது மிச்சக்கதை. இந்த எளிய சரடை ஷேக்ஸ்பியர் அற்புதமான ஓர் அனுபவமாக மாற்றியிருப்பார்.

ஹாம்லெட்டையும் அவன் உலகையும் சுற்றிச் சூழலும் இந்த நாடகத்தில் இடம்பெறும் பிரதான பெண் கதாபாத்திரங்கள் இருவர். முதலில், அரசி ஜெர்ட்ரூட். அரசர் ஹாம்லெட்டை மயக்கி தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவர். அரசர் இறந்ததும் ஹாம்லெட் துக்கத்தில் ஆழ்ந்துபோய்விடுகிறான். இந்த துக்கம் அவனை ஒரு மென்மனம் கொண்டவனாக, அன்பானவனாக, பண்பானவனாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

ஜெர்ட்ரூட்டிடம் இந்தப் பண்புகள் எவையும் இல்லை. கணவன் இறந்துவிட்டானா, சரி மறுமணம் செய்துகொள்வோம் என்று துடிக்கிறாள். கிளாடியஸ் அவளை மணக்க முன்வந்தபோது, கணவரின் சகோதரர் ஆயிற்றே என்று அவள் அஞ்சவில்லை. கிளாடியஸை மணந்தால் டென்மார்க் என்ன நினைக்கும், குறைந்தது தன் மகன் ஹாம்லெட் என்ன நினைப்பான் என்றுகூட அவள் தயங்கவில்லை. கிளாடியஸை மணந்துகொள்வதோடு அவனைத் தன்வயப் படுத்துவதிலும் அவள் வெற்றி பெறுகிறாள். நான், என் வேட்கைகள், என் நோக்கங்கள், என் வாழ்க்கை. இதுதான் ஜெர்ட்ரூட்.

அடுத்து, ஒஃபீலியா. ஹாம்லெட்டின் காதலி. அப்படியொருவர் தேவை என்பதற்காகவே இவர் அநேகமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இனிமையான பல காதல் கடிதங்களை ஒஃபீலியாவுக்கு ஹாம்லெட் எழுதுகிறான். அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அப்பாவிடம் காண்பிக்கிறாள் ஒஃபீலியா. ஏன்? அப்பாமீது அவளுக்கு மிகுந்த மரியாதையாம். அப்பா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டாளாம்.

ஹாம்லெட்? ஓ, அவனையும் பிடிக்கும். அவனுக்காக உருகுவதும் பிடிக்கும். ஆனால், உருகுவதைத்தவிர வேறு எதுவும் தெரியாது அவளுக்கு. ஏன் என் காதலன் என்னை மறந்துபோனான்? ஏன் என்னை அவன் சந்திக்க வருவதில்லை? ஏன் கடிதம்கூட எழுதுவதில்லை? விதியை நோவதைத் தவிர, மேலதிகம் எதுவும் செய்வதில்லை ஒஃபீலியா. என் காதலிதான் உலகம் என்று இருந்தவன்தான் ஹாம்லெட். ஆனால், பழிவாங்கும் பணி வந்து சேர்ந்ததும் காதல் கீதலையெல்லாம் விலக்கிவைத்துவிட்டு ஒஃபீலியாவை அவன் தன் நினைவுகளிலிருந்து வீசியெறிந்து விடுகிறான். காதல் வேண்டும். காதலிக்க அழகிய இளம்பெண் வேண்டும். ஆனால், ஒஃபீலியாவுக்குக் கொடுத்த வாக்கைவிட அப்பாவின் ஆவிக்குக் கொடுத்த வாக்குறுதி முக்கியம் அல்லவா? ஒஃபீலியாக்கள் வருவார்கள், போவார்கள். கொள்கையை விட்டுக்கொடுக்க முடியுமா?

மேடையில் தோன்றும் பாத்திரங்களில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் சித்திரித்திருந்த ஆண் பாத்திரங்களை வெற்றிகரமாகப் பெண்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கராகவும் இருக்கிறார்.

கையில் வாளையும் மனம் முழுக்க பழிவாங்கும் உணர்வையும் சுமந்துகொண்டு நாடகம் முழுக்க ஹாம்லெட் அலைவதற்கு உண்மையான காரணம் என்ன? அப்பாவா அல்லது அம்மாவா? இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம், அம்மாவிடம் அவன் சீறி விழும் காட்சிதான்.

ச்சீ, நீயும் ஒரு தாயா? சூரியன் போல ஒளி வீசிய அப்பாவை எப்படி உன்னால் மறக்க முடிந்தது? அவர் நினைவுகளுக்கு எப்படி உன்னால் துரோகம் இழைக்க முடிந்தது? எப்படி உன்னால் மறுமணம் குறித்து சிந்திக்க முடிந்தது? போயும் போயும் சித்தப்பாவை எப்படி உன்னால் மணக்க முடிந்தது? எப்படி உன்னால் புதிய வாழ்வைத் தொடங்க முடிந்தது? எப்படி உன்னால் மகிழ்ச்சியோடு வாழ முடிகிறது? இந்த மகிழ்ச்சி என்னை உறுத்துவதுபோல உன்னை உறுத்தாதது ஏன்?

சுருக்கமாகச் சொல்வதானால், `நீ ஏன் ஒஃபீலியா போல் இல்லை' என்கிறான் ஹாம்லெட். ஒருவேளை அம்மாவும் சித்தப்பாவோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பாளோ என்னும் சந்தேகமும் அவனுக்கு எழுகிறது. ஆனால், அப்படியல்ல என்று ஆவி ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறது.

`சித்தப்பாவை மட்டும் கொல், உன் அம்மாவுக்கு சதியில் பங்கில்லை' என்கிறது ஆவி. இருந்தாலும், ஹாம்லெட்டின் ஆத்திரம் அடங்குவதாக இல்லை. கிளாடியஸை எந்த அளவுக்கு வெறுக்கிறானோ அதே அளவுக்கு ஜெர்ட்ரூட்டையும் அவன் வெறுக்கிறான். கிளாடியஸைக் கொல்வதன் மூலம் உண்மையில் ஹாம்லெட் தன் அம்மாவையே பழிவாங்குகிறான் என்றும் சொல்ல முடியும் அல்லவா? அம்மாவின் புதிய காதலைப் பறிப்பதன் மூலம், அம்மாவைத் தனிமைப்படுத்துவதன் மூலம் அவளைத் தண்டிப்பதுதான் ஹாம்லெட்டின் நோக்கம் என்றும் புரிந்துகொள்வதற்கு இடமிருக்கிறது அல்லவா? ‘முறை தவறிய அம்மா'வை வழிக்குக்கொண்டுவரும் ஓர் ஆணின் கதை தான் ஹாம்லெட்டா?

உலகம் ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்த மேடையில் பெண்கள் எப்போதுமே தட்டையாக, ஒற்றைப் பரிமாணம் கொண்டவர்களாகத் தோன்றி மறைகிறார்கள். ஜெர்ட்ரூட்களும் ஒஃபீலியாக்களும் குரலற்றவர்களாக இருக்கிறார்கள். ஹாம்லெட்டுகள் போல அவர்களுக்கொன்று தனித்த நோக்கங்கள் இருப்பதில்லை. ஹாம்லெட்டுகளால் காத லிக்கப்படுபவர்களாக, ஹாம்லெட்டுகளால் கைவிடப்படுபவர்களாக, ஹாம்லெட்டுகளால் முறைப்படுத்தப்படுபவர்களாக அவர்கள் சுருங்கி நிற்கிறார்கள்.

`ஷேக்ஸ்பியர் ஒரு மகத்தான கலைஞர். அவரைக் கொண்டாடித் தீருங்கள், உங்களை நாங்கள் தடுக்கப்போவதில்லை. ஆனால், அவர் ஓர் ஆணைப் போலச் சிந்தித்திருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார்கள் ஷேக்ஸ்பியரைப் புதிய நோக்கில் ஆராயும் விமர்சகர்கள்.

ஹெரால்ட் புளூம் சிடுசிடுக்கிறார். `இப்படியெல்லாம் ஷேக்ஸ்பியரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பெண்ணியவாதிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை' என்கிறார் புளூம்.

நாளை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வந்து, உங்கள் ஷேக்ஸ்பியரின் எல்லாப் பாத்திரங்களும் வெள்ளையர்களாக இருக்கிறார்கள். எங்களை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள் என்றும் சொல்வார்கள். இதற்கு முடிவு ஏது?

`முடிவு கிடையாது' என்கிறார்கள் விமர்சகர்கள். விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஷேக்ஸ்பியர் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பவும் இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். ‘ஷேக்ஸ்பியர்ஸ் குளோப்’ என்னும் உலகப்புகழ்பெற்ற மேடை நாடகக் குழுவினர் சமீபத்தில் மேடையேற்றிய ஹாம்லெட்டில் சில வியக்கத்தக்க மாற்றங்களைக் காணமுடிகிறது.

மேடையில் தோன்றும் பாத்திரங்களில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் சித்திரித்திருந்த ஆண் பாத்திரங்களை வெற்றிகரமாகப் பெண்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கராகவும் இருக்கிறார். எல்லா வற்றுக்கும் மேலாக, நாடகத்தின் இதயமாகத் திகழும் ஹாம்லெட், ஆணல்ல. மிஷெல் டெர்ரி என்னும் விருதுபெற்ற அபாரமான பெண் கலைஞர்.

மாற்றம் இயற்கையின் முக்கியமான விதி என்று வலியுறுத்திய மார்க்ஸ், இந்த பெண் ஹாம்லெட்டை நிச்சயம் வரவேற்றிருப்பார். மக்களின் கலைஞனான ஷேக்ஸ்பியரும் புத்துயிர்ப்பு பெற்ற ஹாம்லெட்டை ஏற்கவே செய்வார். புளூம்களுக்கு வேண்டுமானால் இது பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஷேக்ஸ்பியருக்கு இழைக்கப்படும் மாபெரும் தீங்கு என்றுதான் அவர் புதிய ஹாம்லெட்டை நிராகரித்திருப்பார். ஹாம்லெட்டின் புகழ்பெற்ற வசனங்களில் புளூம்களுக்கான விடையும் இருக்கிறது. ‘இந்த உலகில் நல்லது, கெட்டது என்று எதுவுமில்லை. நம் சிந்தனைதான் அவ்வாறு நினைக்க வைக்கிறது.’