Published:Updated:

இப்படியும் நடந்ததா? Twin Town: இந்தக் கடவுள் தேசத்தின் கிராமத்தில் நிறைய இரட்டையர்கள் - என்ன காரணம்?

கோதினி கிராமம் | Twin Town ( ripleys.com )

அந்தக் கிராமத்தில் எவ்வளவு ஜோடி இரட்டையர்கள் இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. 280 ஜோடி இரட்டையர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கிறார்கள் என்றது அந்தக் கணக்கெடுப்பு.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? Twin Town: இந்தக் கடவுள் தேசத்தின் கிராமத்தில் நிறைய இரட்டையர்கள் - என்ன காரணம்?

அந்தக் கிராமத்தில் எவ்வளவு ஜோடி இரட்டையர்கள் இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. 280 ஜோடி இரட்டையர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கிறார்கள் என்றது அந்தக் கணக்கெடுப்பு.

கோதினி கிராமம் | Twin Town ( ripleys.com )
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண கிராமம் கோதினி. ஆனால் அந்தக் கிராம எல்லையில் உள்ள வரவேற்பு பலகை அசாதாரணமானது. ‘இறைவன் வரமாக அளித்துள்ள இரட்டையர் கிராமம் (Twin Town) உங்களை வரவேற்கிறது' என்கிறது அது.

மல்லாபுரம் மாவட்டத்தில் இருக்கிறது இந்தக் கிராமம். இங்கு முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். சுற்றிலும் தென்னை மரங்கள், ஆங்காங்கே குறுக்கிடும் கால்வாய்கள், அரிசி வயல்கள் என்று ஒரு வழக்கமான கேரள கிராமத்தைப் போலவே காட்சியளித்தாலும் இது ஒரு விதத்தில் மிகவும் மாறுபட்டது.

கோதினி கிராமம்
கோதினி கிராமம்

சாலையில் செல்லும் போது எதிர்ப்புறமாக வரும் ஒருவர் உங்களைப் பார்த்து நட்புடன் புன்னகைப்பார். பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு நீங்கள் சிறிது ​தூரம் நடந்து செல்லும்போது மறுபடியும் அவர் உங்களுக்கு எதிர்ப்புறத்தில் நடந்து வந்து புன்னகைக்கும்போது குழப்பமாக இருக்கும். ‘இப்போதுதானே இவர் வந்து நம்மைக் கடந்து செ​ன்றார். பின் எப்படி மறுபடியும் நமக்கு எதிர்ப்புறமாக வர முடிகிறது?’ என்று யோசிப்பீர்கள். ஆனால் உண்மை வேறு. அந்த இருவரும் இரட்டையர்கள். இது போன்ற அனுபவம் உங்களுக்கு கோதினியில் பல இடங்களில் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்களாகப் பிறக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரத்தில் ஒன்பது குழந்தைகள் இரட்டையர்கள். ஆனால் மேற்படி கோதினி கிராமத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45 குழந்தைகள் இரட்டையர்கள்.

2006-ல் ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமீரா, ஃபெமீனா ஆகிய மாணவிகள் இரட்டையர்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் பெரும் வியப்பை அளித்தது. அவர்கள் வகுப்பில் மட்டுமே எட்டு ஜோடி இரட்டையர்கள் இருந்தார்கள். அலசிப் பார்த்ததில் பிற வகுப்புகளிலும் நிறைய இரட்டையர்கள் காணப்பட்டனர்.

அவர்கள் வகுப்பு மாணவ மாணவியர் ஏதாவது ஒரு தலைப்பில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியபோது, அந்த இரட்டையர் சகோதரிகள் தேர்ந்தெடுத்த கணக்கெடுப்பு ‘அந்தப் பள்ளியில் எவ்வளவு ஜோடி இரட்டையர் மாணவிகள் இருக்கிறார்கள்’ என்பதுதான். கணக்கிட்டு பார்த்ததில் 24 ஜோடி இரட்டையர் மாணவிகள் அங்கு இருந்தனர்.

இந்தத் தகவல் அந்த கிராமத்தில் பரவியது. ‘அட நமது வீட்டிலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றார்க​ளே’, ‘மூன்றாவது வீட்டில் இரட்டைச் சகோதரிகள் இருக்கிறார்களே’, ‘இப்போது இங்கு இல்லையென்றாலும் இதே கிராமத்தில் வசித்த என் சித்தப்பா வீட்டிலும் மாமா வீட்டிலும் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததே’ என்பதுபோல் இது பேசுபொருள் ஆனது.

கோதினி கிராமத்தில் இரட்டையர்கள்
கோதினி கிராமத்தில் இரட்டையர்கள்
இதைத்தொடர்ந்து அந்தக் கிராமத்தில் ஒரு சிறிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் எவ்வளவு ஜோடி இரட்டையர்கள் இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. 280 ஜோடி இரட்டையர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கிறார்கள் என்றது அந்தக் கணக்கெடுப்பு.

அப்போதுதான் அந்தக் கிராமவாசிகள் இடையே ஒரு கருத்து ஆழமாகப் பதிந்தது. ‘இந்தக் கிராமத்துக்கு ஏதோ ஸ்பெஷல் தன்மை இருக்கிறது. இதனால்தான் இங்கே இத்தனை ஜோடி இரட்டையர்கள் பிறக்கிறார்கள்'.

அடுத்த கட்டமாக இரட்டையர் நல வாழ்வுக்கு என்று ஒரு தனி குழு அமைக்கப்பட்டது. எக்கச்சக்கமான இரட்டையர்கள் காணப்பட்டாலும் ஒவ்வொரு ஜோடியிலும் ஒருவர் போலவே மற்றொருவர் இருப்பார் என்று கூறிவிட முடியவில்லை. அதாவது ஆங்கிலத்தில் 'Non-Identical Twins' என்று சொல்வார்கள். அப்படியும் நிறைய பேர் இருக்கின்றனர்.

சுகுமார் என்பவர் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் குடும்பத்தில் யாரும் இரட்டையர்கள் இல்லை. ஆனால் அவர் மகள் திருமணம் செய்துகொண்டு கணவனுடன் கட்டாருக்குச் செல்ல, அங்கு அவள் கருத்தரித்தார். அவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க, சுகுமாரனுக்கு பெரும் வியப்பு!

இந்தக் கிராமத்தில் இப்போது சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் 400 இரட்டையர்கள் இருக்கிறார்கள்.

தெற்கு வியட்நாமில் உள்ள ஹுங் ஹியெப்ஃப்ரம் (Hung Hiepfrom) என்ற பகுதியிலும் நைஜீரியாவில் உள்ள இக்போ ஒ​ரா (Igbo-Ora) என்ற பகுதியிலும் பிரேசிலில் உள்ள கான்டிடோ கோடோய் (Cándido Godói) என்ற பகுதியிலும் நிறைய இரட்டையர்கள் பிறந்திருக்கிறார்கள். அவற்றிலுள்ள அறிவியல் பின்னணியையும் ஒரு குழு ஆராய்ச்சி செய்கிறது. இக்பா ஓராவில் வசிக்கும் பெண்களுக்கு அதிக இரட்டையர்கள் பிறப்பதற்கு அவர்களது உணவுப் பழக்கம் காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். உள்ளூரில் விளையும் ஒரு குறிப்பிட்ட கிழங்கை அவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்களாம்.

2016 ஹைதராபாத் அறிவியல் மையம், லண்டன் மற்றும் ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒரு குழுவை அமைத்து கோதினி மர்மத்துக்கு விடை காண முயன்றனர். இரட்டையர்களின் எ​ச்சிலை சேகரித்து அவற்றை டிஎன்ஏ சோதனை உட்படுத்தினர்.

கோதினி கிராமத்தில் இரட்டையர்கள்
கோதினி கிராமத்தில் இரட்டையர்கள்

கோதினி இரட்டையர்கள் அதிக அளவில் இருப்பதற்கு பரம்பரைதான் காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அந்தக் கிராமத்தில் உள்ள காற்று அல்லது தண்ணீர் போன்ற பொதுவான ஏதோ ஒன்று இரட்டையர்களாகக் குழந்தைகள் பிறப்பதற்குத் தூண்டுகின்றன என்கிற எண்ணம் ஆழமாக பரவியுள்ளது. விஞ்ஞானிகளால் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை.

இந்த இரட்டையர்கள் ஏதாவது குறையோடு இருக்கிறார்களா என்பதும் அவர்களைப் பெற்ற தாயின் உடலில் ஏதாவது உடற்கூறு மாறுபாடு இருக்கிறதா என்பதும் ஆராயப்பட்டது. அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

இவர்கள் உட்கொள்ளும் உணவு வகை காரணமாக இப்படி இருக்குமோ என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அப்படி ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தையில்லாத் தம்பதிகளுக்கு அது பெரும் வரமாக அமைய வாய்ப்புண்டு.

- மர்மசரித்திரம் தொடரும்...