Published:Updated:

`நடத்தையின் வழியாகவும், சொற்கள் ஊடாகவும் கற்றுத்தந்த ஆசான்...’ - சு.ரா பிறந்ததின பகிர்வு!

சுந்தர ராமசாமி

"தமிழில் மிக ஆழமான விஷயத்தையும் எளிய நடையில் தெளிவாக சொல்லிவிட முடியும் என்பதை உணர்த்தியவர் சுந்தர ராமசாமி."

Published:Updated:

`நடத்தையின் வழியாகவும், சொற்கள் ஊடாகவும் கற்றுத்தந்த ஆசான்...’ - சு.ரா பிறந்ததின பகிர்வு!

"தமிழில் மிக ஆழமான விஷயத்தையும் எளிய நடையில் தெளிவாக சொல்லிவிட முடியும் என்பதை உணர்த்தியவர் சுந்தர ராமசாமி."

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி... நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளுமை. நாவல், சிறுகதை, கவிதை என பல தளங்களில் அழுத்தமான படைப்புகளைக் கொடுத்தவர். பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றவர். இவரின் முதல் நாவலான `ஒரு புளியமரத்தின் கதை', வட்டார வழக்கில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல். இவரது `ஜே.ஜே சில குறிப்புகள்' தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பலராலும் கொண்டாடப்படுகிறது. மோசமான படைப்புகள் இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இலக்கியத்தின்‌ மீது கறாரான விமர்சனங்களை முன் வைத்தவர். சு.ரா, மலையாளத்திலிருந்து தோட்டியின் மகன், செம்மீன் ஆகிய நூல்களை தமிழுக்குக் கொண்டு வந்தவர். காலச்சுவடு இதழை தொடங்கினார். பல இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உரையாடுவார். அப்படி பல எழுத்தாளர்களை செம்மைப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

சுந்தர ராமசாமியின் நினைவுகளை படைப்பாளிகள் பலர் நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி

"நவீன தமிழ் இலக்கியத்திற்கு சுந்தர ராமசாமியின் பங்களிப்பு அளப்பரிய ஒன்று. தமிழ் இலக்கியத்தில் நவீன சிந்தனையை மிக ஆழமாக, அதே சமயத்தில் அழுத்தமாகவும், விசாலமாகவும் கொண்டு சென்ற மிக முக்கியமான படைப்பாளி சுந்தர ராமசாமி. இவர் அதிகமாக எழுதியது கிடையாது. மிகக் குறைவாக செறிவாக எழுதின எழுத்தாளர். இவரது பல படைப்புகள் நிச்சயம் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கூடியவை. குறிப்பாக `ஜே ஜே சில குறிப்புகள்' நாவல் 100 வருடங்களுக்குப் பின்னும் பேசுபொருளாக இருக்கும். தமிழில் மிக ஆழமான விஷயத்தையும் எளிய நடையில் தெளிவாக சொல்லிவிட முடியும் என்பதை உணர்த்தியவர் சுந்தர ராமசாமி.

மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி
மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி

இவர் `பசுவய்யா' என்ற புனைபெயரில் எழுதின கவிதைகள் அனைத்தும் தரமானவை. அதில் உள்ள ஒரு சொல்லைக்கூட நம்மால் மாற்ற இயலாது. அந்த அளவிற்கு தமிழ்மொழியில் கைதேர்ந்தவர். தமிழ்ச்சூழலை சரியாக புரிந்துகொண்டு அதை உலகளாவிய பார்வையோடு சொன்னவர் சுந்தர ராமசாமி. அவரிடம் கலை நேர்த்தியும் உண்டு. ஆழமான சிந்தனை வளமும் உண்டு. அவரது சிறுகதைகள், கட்டுரைகள் என அனைத்துமே கலை வளம் மிக்கவை. சுந்தர ராமசாமி நிச்சயம் தமிழின் மிகப்பெரிய பெருமிதம். இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிற, எழுத வரக்கூடிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சவாலாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கக்கூடியவர். தமிழினுடைய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவர் என்றைக்குமே நிரந்தர ஆசான்தான்."

சுந்தர ராமாசாமியின் நினைவுகள் பற்றி எழுத்தாளர் மற்றும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்தார்.
ஓவியர் சந்தோஷ் நாராயணன்
ஓவியர் சந்தோஷ் நாராயணன்

"என்னுடைய பள்ளிக்காலத்தில் `ஒரு புளியமரத்தின் கதை' வாசித்துவிட்டேன். `ஜே.ஜே சில குறிப்புகள்' கல்லூரி காலத்தில்தான் படித்தேன்.

எனக்குச் சொந்த ஊர் மார்த்தாண்டம் பக்கம் என்றாலும், 8-ம் வகுப்பு வரை வளர்ந்தது நாகர்கோவில் என்பதால் அதன் மீது ஒரு வசீகரம் உண்டு. வேப்பமூடு ஜங்ஷனும் மீனாட்சிபுரம் குளத்து பஸ் ஸ்டாண்டும் கோட்டாறும் தியேட்டர்களும் மனிதர்களும் என் சிறுவயது ஞாபகங்களுடன் பிணைந்துவிட்ட ஒன்று. புளியமரத்தின் கதையில் சுரா அளிக்கும் பழைய, எனக்கும் பரிச்சயமற்ற நாகர்கோவில் பற்றிய சித்திரமே முதல் வாசிப்பில் என்னைக் கவரும் அம்சமாக இருந்தது. அன்றிருந்த இளம் மனநிலையில் அந்த அளவிற்கே என் வாசிப்பும் இருந்தது. பிறகு இரண்டு மூன்று தடவை ஒரு புளியமரத்தின் கதையை வாசித்திருக்கிறேன். வெவ்வேறு வயதுகளில், ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் மனித மனங்களின் உள்ளடுக்குகள், அதன் கீழ்மைகள், அதன் பெருமிதங்கள், அதன் தந்திரங்கள் எல்லாம் இழைகளாக பிரிந்து கிண்டலும் கேலியுமாக என் முன்னே எழுந்து திரிவதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் ஒரு முறை வாசித்தால் பழைய வாசிப்பில் நான் தவறவிட்ட சுவராஸ்யமான இண்டு இடுக்குகள் கண்ணில் தட்டுப்படலாம்.

ஜே.ஜே சில குறிப்புகள் வாசிக்கும் காலத்தில் ஓரளவுக்கு தமிழ் எழுத்தின் பின்புலமும், வாழ்க்கையின் கலைடாஸ்கோப் அரசியல் சிக்கல்களைப் பற்றிய அறிமுகமும் புரிதலும் உருவாகி விட்டிருந்தது. ஜே.ஜே அவற்றின் மீது ஒரு மரண அடி அடித்தான். மெல்லிய தெளிவையும் எல்லையற்ற குழப்பத்தையும் உருவாக்கினான். கேள்விகளால் வாசிக்கும் என்னை சீண்டினான். எல்லாவற்றையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யக்கோரினான். ஜே.ஜே, என்னைத் தொந்தரவு செய்தது போலவே வாசிக்கும் எல்லாரையும் தொந்தரவு செய்தான். இத்தனைக்கும் `ஜே.ஜே சில குறிப்புகள்’ நான் வாசித்தது தொண்ணூறுகளின் கடைசியில். அது வெளியான காலத்தில் இன்னும் சலனங்களை உருவாக்கி இருந்தது.

மனிதர்களின் சிடுக்குகளை ஒரு சர்க்கஸ் மேஜிக் கண்ணாடியின் கோணல்களான கேரிக்கேச்சர்கள் போல `ஒரு புளியமரத்தின் கதை’ சித்திரித்தது என்றால், `ஜே.ஜே சில குறிப்புகள்’ அந்த சிடுக்குகளை முடிவில்லாத கேள்விகளால் தீவிரமான ஒரு பெயின்டிங் போல நமக்குள் அழுத்தமாக வரைந்து செல்கிறது. அவ்வாறுதான் அவரது சிறுகதை உலகமும்.

ஜே.ஜே சில குறிப்புகள்
ஜே.ஜே சில குறிப்புகள்

பிற்காலத்தில் இந்தப் புத்தகங்களுக்கு நானே அட்டை வடிவமைப்பும் செய்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையிலும் இரண்டு மூன்று முறை முறை சு.ராவை சந்தித்து உரையாடி இருக்கிறேன். பிறரை பேசவிட்டு அமைதியாக கதை கேட்பதில் அவருக்கு ஆர்வமுண்டு. அவருடைய மூன்றாம் தலைமுறையின் உலகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார் என்பதை அந்த உரையாடல்கள் எனக்கு காட்டின.

பல்வேறு சமூக அரசியல் இலக்கிய மதிப்பீடுகள் போன்ற காரணங்களால் சு.ராவைக் கொண்டாடவும் விமர்சிக்கவும் பல தரப்புகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் இலக்கியத்தின் நவீன மொழியை வடிவமைத்ததில் அவருடைய பங்கு மிக முக்கியமானது, மறுக்க முடியாதது என்று நினைக்கிறேன்."

கவிஞர், எழுத்தாளர் சுகுமாரன்

"15 வயதில் எனக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய ஆரம்பகால வாசிப்புகளைத் தாண்டி நான் கண்டெடுத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி. இலக்கியம் என்பது ஒரு குரு-சிஷ்யன் அடிப்படையில் வளர்க்கூடியது அல்ல என்பதை நான்‌ நம்புகிறேன். இருந்தாலும், இலக்கியத்தில் உங்கள் குரு யார் என்று என்னைக் கேட்டால், சுந்தர ராமசாமியைச் சொல்வேன். அவரிடம் கற்றுக்கொண்டது அதிகம். அவரிடம் சென்று, கலந்துரையாடல் செய்து கற்றுக்கொள்ளவில்லை. அவரின் இருப்பிலிருந்தும் எழுத்திலிருந்தும்தான் கற்றுக்கொண்டேன். என் தலைமுறை, எனக்குப் பின் வந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சுந்தர ராமசாமியை ‌பெரிய ஆளுமையாக கருதியது `ஜே.ஜே சில குறிப்புகள்' நாவலை வாசித்த பரவசத்தில்தான். ஆனால், நான் `ஜே.ஜே சில குறிப்புகள்' நாவல் வெளிவரும் முன்னமே ஒரு பொது விழாவில் சுந்தர ராமசாமியைப் பார்த்திருக்கிறேன்.

எழுத்தாளர் சுகுமாரன்
எழுத்தாளர் சுகுமாரன்

எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய சிறுகதைகள். `வாழ்வும் வசந்தமும்', `ஜன்னல்', `பிரசாதம்', `தண்ணீர்'... இவை அனைத்தும் மனதுக்கு நெருக்கமானவை. அதிலிருந்து `ஒரு புளிய மரத்தின் கதை' நாவலைப் படித்தேன். வட்டார வழக்கிலேயே ஒரு நாவலை எழுத முடியுமா என்ற கேள்விக்கு `ஒரு புளியமரத்தின் கதை' சிறந்த உதாரணம். பிற நாவல்களில் வட்டார வழக்கு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலில் இருக்கும். கதை நடக்கக்கூடிய இடம், அதன் அடையாளம் என வட்டார வழக்கை அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் புளியமரத்தின் கதையில் கையாண்டிருப்பார் சுரா.

வாழ்க்கை பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்பியவர் சுரா. அந்தக் கேள்விகள் எந்தத் தத்துவத்தின் அடிப்படைகளாலோ, கோட்பாடுகளாலோ வரையறுக்கப்பட்டது அல்ல. அது தன் அனுபவத்தின் மூலம், பட்டறிவின் மூலம் எழுப்பப்பட்ட வாழ்க்கை பற்றின கேள்விகள். இலக்கியம், வாழ்வு இரண்டிலும் அடிப்படையான சில மதிப்பீடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவர். மோசமான வாழ்வை ஒருவன் வாழ்ந்து விடக் கூடாது என்ற பதற்றத்தோடும், தரம் தாழ்ந்த படைப்பு இலக்கியத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடும் வாழ்ந்தவர். இந்த எச்சரிக்கை, மோசமான ஒரு படைப்பை வாசகனுக்கு தந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது."

கே.என் செந்தில்

காலத்தில் எரியும் சுடர்!
சுந்தர ராமசாமி

படைப்பு என்பதற்குப் பொருளே `புதிது' என்பதுதான் என்று தன் கட்டுரையொன்றில் சொல்கிறார் சு.ரா. `புதிதாக இருக்கிறதா', `காலத்தில் பின்தங்கியுள்ளதா’ என்ற வினாவை ஒரு படைப்பின் முன் எப்போதுமே கேட்பவராகவே இருந்தார் சுரா. சுய படைப்பாக்கத்திற்கு வெளியே படைப்பின் தோற்றுவாய், அவற்றின் கூறுகள், அதன் வெளிப்பாட்டு முறைமைகளைப் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் எழுதிய, பேசிய படைப்பாளி அவர். மதிப்பீடு சார்ந்து அவர் எழுப்பும் கேள்விகள் மூலமும், பிற படைப்புகளை முன்வைத்து தோற்றுவித்த விவாதங்களின் வழியாகவும் உருவாகிய கருத்துருவாக்கங்களே சுரா சிந்தனைப் பள்ளி என்று ஒன்று தொடர காரணமானது. அவர் மீதான போற்றுதல்களுக்கும், பழித்தூற்றல்களுக்கும் வித்திட்டவை அம்மதிப்பீடுகளே. `படைப்புமொழி' என்பதற்கு எப்போதும் அழுத்தம் கொடுத்து பேசுபவராகவே இருந்து வந்துள்ளார். ஒன்றைப் போல் மற்றொன்று இருந்துவிடக் கூடாது என்ற பிடிவாதம் அவருக்கிருந்தது.

`ஜே.ஜே'வின் மொழி தன்னிலிருந்து நீங்க 15 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்ததாக, அவர் கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் கூறியிருக்கிறார். உலகின் பெரும்படைப்பாளிகளை ஆட்டுவித்த `குற்ற உணர்ச்சி' யால் அலைகழித்த ஆன்மா சு.ரா வினுடையது. அதில் சிறிய செயல், பெரிய செயல் எனும் பேதமில்லை. தமிழ் நவீனத்துவத்தின் முதன்மையான படைப்பாளி. நவீனத்துவத்துவம் குறித்து தன் கட்டுரையொன்றில் பேசும் சுரா,

"மேற்கில் நவீனத்துவத்தின் எழுச்சிக்கான காரணங்களை திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலாது. மார்டனிசம், குறித்து பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த நூலில் சென்ற நூற்றாண்டில் `வெர்ஜினியா உல்ஃப்' எழுதிய நாவலொன்றில் ஒரு கதாபாத்திரம், `என்ன இது, நம்மிடம் எந்தப் புதுமையும் இல்லையா?' என்ற கேள்வி கேட்ட நிமிடத்தில் மார்டனிசத்தின் முதல் விதை ஊன்றப்பட்டதாக நினைவு. தமிழ் சார்ந்து இப்படியெல்லாம் சொல்ல முடியாது. காலப்போக்கில் நவீனத்துவம் என்று நாம் அழைக்கப்படுகிற சில எழுத்துகள் உருவாகி வந்திருக்கின்றன" என்கிறார் (நவீனத்துவத்துவமும் நானும்). சுராவின் அண்மை அறிந்த நெருக்கத்தையும், சுதந்திரத்தையும் ஒரு‌சில எழுத்தாளர்களிடமே உணர்ந்திருக்கிறேன். சிறிய பையன் ஏதோ அபத்தமாக பேசுகின்றானே என்ற முகச்சுளிப்பிள்ளாமல் அக்கறையுடன் காது கொடுத்தவர் அவர்.

கே.என் செந்தில்
கே.என் செந்தில்

`நினைவோடை’ வரிசையில் கிருஷ்ணன் நம்பி குறித்து நான் எழுதியிருந்த கடிதம் சு.ராவிற்குப் பிடித்திருந்தது. பதில் கடிதத்தில் `ஆழமாக வாசித்திருக்கிறீர்கள்’ என்றார். அதே உற்சாகத்தில் `மரியா தாமுவிற்கு எழுதிய கடிதம்' தொகுப்பிற்கு பெரிய கடிதம் எழுதி அனுப்பினேன். பதிலில், `உங்களால் இதைவிட நன்றாக எழுதியிருக்க முடியும்' என்று கூறியிருந்தார். இதிலிருந்தே என் வாசிப்பின் மீது எத்தகைய மதிப்பை கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தேன். இதையும் சரி, பிரியத்தையும் சரி சூசகமாக உணர்த்துவது போலதான் அவரால் வெளிக்காட்ட முடியும். அது அவரது இயல்பு. சு.ராவை வாசித்திருக்கவில்லை என்றாலோ, கடிதத்திலும், நேரிலும் பரிச்சயம் நேர்ந்திருக்கவில்லை என்றாலோ இப்போது இருக்கும் நான் இல்லை. என்றும் அவருடனான மானசீகமான உரையாடல் எனக்கு உண்டு. படைப்பின் மூலமாகவும், நடத்தையின் வழியாகவும், சொற்கள் ஊடாகவும் எவ்வளவோ கற்றுத்தந்த ஆசானுக்கு அவருடைய இளம் மாணவனின் வணக்கங்கள்!