மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 10 - உள்ளேன் ஐயா...

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

இந்தத் தமிழ் நெடுஞ்சாலையில் எனக்கு நேர்ந்த ஒரு விபத்தை வாய்ப்பாக மாற்றிய வழிகாட்டி, பேராசிரியர் தமிழ்க்குடிமகன்.

ஏப்ரல் 14, சித்திரைத் திருநாள். ஒடிசாவில் மகா விஷ்வ சங்கராந்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள். அரசு விடுமுறை. எனது நண்பர் க.துளசிதாசன் தொகுத்த ‘கனவு ஆசிரியர்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன் எழுதிய `ஐயா நான் தங்களுக்கு கடன்பட்டவன்’ என்ற கட்டுரை. பிரபஞ்சன் தனது தமிழாசிரியர் வித்வான் திருநாவுக்கரசு பற்றி எழுதியது. நன்றியில் நனைந்த தமிழ்.

“என் கட்டுரை நோட்டைப் படித்து என்னை, என்னிடம் இருந்த எழுதுகிறவனைக் கண்டுபிடித்தார். நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன். மாலை தோறும் அவர் சைக்கிளில் பின்பக்கம் என்னை அமர வைத்து அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். வாத்தியார் வீட்டு அம்மா டிபன் கொடுப்பார்கள். இருவரும் சாப்பிடுவோம். திருநாவுக்கரசு எனக்கு யாப்பிலக்கணம் வகுப்பு எடுத்தார்” என்று மீள்நினைவில் பயணிக்கும் பிரபஞ்சன், தன் ஆசிரியரின் தூண்டுதலால் 13 வயதில் பரிசு கவிதை எழுதியதை, 16 வயதில் கதை, கட்டுரைகள், கவிதைகள் பிரசுரித்ததை நினைத்துப் பார்க்கிறார்.

தமிழ்க்குடிமகன் திருக்குறள் இருக்கைக்கு நிதி அளிக்க ஒடிசா வந்திருந்தபோது...
தமிழ்க்குடிமகன் திருக்குறள் இருக்கைக்கு நிதி அளிக்க ஒடிசா வந்திருந்தபோது...

மிகவும் வியப்பாக இருந்தது. பிரபஞ்சன் வரிகளைப் படிக்கும்போது, என் தமிழாசிரியர் புலவர் சோமநாதன் நினைவுக்கு வந்தார். நல்லாசிரியர்களுக்கும் சைக்கிளுக்கும் அப்படி என்ன சம்பந்தம்!

சோமநாதன் என்னை ஒருநாள் தனது சைக்கிளின் பின் சீட்டில் அமர வைத்து மதுரைத் தமுக்கம் மைதானத்திற்கு அவசர அவசரமாக ஓட்டிச்சென்றார். 1972-ம் ஆண்டு அது. மதுரை புறநகரில், மீனாட்சிபுரத்தில் குடியிருந்தோம். அப்போது எங்கள் பள்ளிக்கூடம் ஏதோ ஒரு ‘ஸ்டிரைக்’ காரணமாக மூடப்பட்டிருந்தது. சைக்கிளில் வந்த ஒருவர் அங்குமிங்கும் விசாரித்து எங்கள் வீட்டை அடைந்தார். அவர் கையில் ஒரு சீட்டு. புலவர் சோமன் எழுதிக்கொடுத்தது. “உடனே கிளம்பி வா. ஒரு பேச்சுப் போட்டி இருக்கிறது.”

தமிழக அரசு கால்நடைத்துறையின் பேச்சுப்போட்டி. ‘வாங்கற் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்ற ஆண்டாள் தமிழே தலைப்பு. பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தகவல் வந்து சேரவில்லை. கடைசி நேரத்தில் இதை அறிந்த சோமநாதன், வாடகை சைக்கிளில் ஆள் அனுப்பி என்னை வரவழைத்திருந்தார்.

அவர் சைக்கிள் ஓட்ட, பின் இருக்கையில் நான். அந்தத் தலைப்பில் நான் என்ன பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை மிதித்தார். தமுக்கம் மைதானம். அரங்கை அடைந்தபோது பேச்சுப்போட்டி கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தது. பள்ளி விடுமுறை என்பதால் தகவல் தெரிய தாமதம் ஆகிவிட்டது என்று ஏற்பாட் டாளரிடம் விளக்கம் அளித்து, பள்ளியின் அறிமுகக் கடிதத்தையும் கொடுத்து சம்மதம் பெற்றார். போட்டியாளர்கள் அனைவரும் பேசி முடித்துவிட்டதால் நடுவர்கள் வென்றவர்களை முடிவு செய்யும் ஆலோசனையில் இருந்தார்கள். நான் மேடை ஏறி பேசச் செல்வதற்கு முன் கடைசி நொடியில் சோமநாதன் அருகே ஓடி வந்து சொன்னார், “நடுவர்கள் எல்லாம் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் கவனத்தைத் திருப்ப நீ உன் முன்னால் இருக்கும் ஒலிபெருக்கிக் கருவியை சப்தம் வரும்படி இழுத்து நகர்த்தி வை. நடுவர்கள் கவனம் திரும்பி உன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால் உனக்குத்தான் முதல் பரிசு.”

book
book

அவர் சொன்னபடியே ஒலிபெருக்கிக் கருவியை இழுத்து நகர்த்தி அந்த ஓசையில் நடுவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துப் பேசத் தொடங்கினேன். கடைசியில் வந்து பேசிய எனக்கு முதல் பரிசு.

சோமநாதனைப் பற்றி எப்போது நினைத்தாலும் எனக்கு அந்த மிதிவண்டிப் பயணம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் ஏன் அப்படிச் செய்தார், ‘கூடுதல் மைல்’ நடப்பது என்ற குண இயல்பு இதுதானா, எந்த இலக்கணத்தில் இது அடங்கும்?

மதுரைத் தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது தமிழாசிரியராக வந்தார். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனக்கான மாணவனை ஒரு நல்லாசிரியரும் தனக்கான ஆசிரியரை ஒரு மாணவனும் எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்ற இருவிசை இயக்கத்தின் இனிய ரகசியம் இதுதான். சோமநாதன் என்னை எனக்கு அறிமுகம் செய்தவர்.

‘கனவு ஆசிரியரை’ கையில் ஏந்திக்கொண்டே புலவர் சோமநாதனை அலைபேசியில் அழைத்தேன். பேசி நான்கைந்து மாதங்கள் இருக்கும். “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? உடனே போட்டுவிடுங்கள்” என்றேன். அவருக்கு அதைவிட முக்கியம் கவியரங்கம். ‘‘இன்று மாலைகூட மதுரையில் சித்திரைக் கவியரங்கம் இருக்கிறது. நான்தான் தலைமை” என்றார். சிறிது நேரத்தில் அவனி மாடசாமியிடமிருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பிதழ்... கவியரங்கத்தின் தலைப்பு ‘சிறகுக்குள் வானம்.’ எனது நூலின் பெயர்.

இந்தத் தமிழ் நெடுஞ்சாலையில் எனக்கு நேர்ந்த ஒரு விபத்தை வாய்ப்பாக மாற்றிய வழிகாட்டி, பேராசிரியர் தமிழ்க்குடிமகன். அடைக்கலம் கேட்டு வந்தவனுக்கு அரியாசனம் கொடுத்த என் பேராசான்.

1976-ம் ஆண்டு நானும் என் தந்தையும் திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் பேராசிரியர் தமிழ்க்குடிமகனைச் சந்திக்கச் சென்றோம். வேகாத வெயில். எப்போதும் என்னை ஓட்டச் சொல்லி அவர் உட்கார்ந்து வரமாட்டார். பின் இருக்கையில் நான். என் தந்தை பேசவே இல்லை. இறுக்கமாக இருந்தார்.

புலவர் சோமநாதன்
புலவர் சோமநாதன்

மதுரையின் முக்கியமான கல்லூரி ஒன்றில் மூன்று ஆண்டு தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பில் விரும்பிச் சேர்ந்திருந்தேன். ஆனால், முதலாம் ஆண்டு முடித்த கையோடு கல்லூரியிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். இத்தனைக்கும் முதலாம் ஆண்டுத் தேர்வில் பல்கலைக்கழகத்தில் நான்தான் முதல் மதிப்பெண். கையில் டி.சி கொடுத்து “பையனுக்குப் பாத்திரக் கடை வைத்துக் கொடுங்கள்” என்று என் தந்தையிடம் சொல்லியிருந்தார் துறைத்தலைவர். இந்த நீக்கத்திற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நெருக்கடி நிலையில் தமிழக அரசு கலைக்கப் பட்டிருந்த அன்றைய அரசியல் சூழலின் பக்கவிளைவு. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே காமராஜர் “இங்கிருந்து ஓடிப் போய்விடு” என்று சொல்லியிருந்தாலும் நான் களத்தில் தான் இருந்தேன். “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று இப்போது சொல்லிக் கடக்கலாம். ஆனால், அப்போது அது வலித்தது. ‘பிறர்க்கென முயலுநர்’ சிலர் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் இயங்குகிறது என்பது புறநானூறு நமக்கு அளிக்கும் புரிதல்.

பேராசிரியர் தமிழ்க்குடிமகன் யாதவர் கல்லூரியில் என்னை நடத்திய விதமே தனி. கல்லூரியில் எனக்கென்று சில சிறப்பு விதிகள். கல்லூரி நூலகத்திலிருந்து எத்தனை நூல்களை வேண்டுமென்றாலும் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கலாம். ஒருமுறை கோடை விடுமுறையில் நான் படிக்க எடுத்த நூல்களை ரிக்‌ஷா வண்டியில் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். என்னை தனது குடும்பத்தில் ஒருவனாக நடத்தினார். மதுரையில் பேச்சுப் போட்டி என்றால் முதல் பரிசு எனக்குரியது என்று அவர் உறுதியாக நம்பினார். நான் என்மீது வைத்திருந்த நம்பிக்கையைவிட அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை அதிகம். நான் அவரின் மாணவனாகப் படித்துக் கொண்டிருக்கும்போதே பட்டிமன்றங்களில் எனக்குப் பேச வாய்ப்பளித்தார். எனக்குக் கைச்செலவுக்குப் பணமும் கிடைத்தது.

கல்லூரிக்குச் செல்வதற்காக ‘அவுட்-போஸ்ட்’ பஸ் ஸ்டாப்பில் நண்பர்களுடன் காத்திருப்பேன். தமிழ்க்குடிமகன் தமிழில் பதிவு எண் எழுதிய தனது புல்லட்டில் வருவார். என்னைப் பார்த்தால் நிறுத்தி ஏற்றுக்கொள்வார். அன்றும் அப்படித்தான் நிறுத்தினார். நான் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டேன், பெருமையாக.

“பாலகிருட்டிணன், நமது கல்லூரியில் முதுகலை இல்லை. பல்கலைக்கழக தமிழ்த்துறையில் சேர்ந்து முதுகலை படித்து முடி. கவலைப்படாதே, நம் கல்லூரியிலேயே விரிவுரையாளராக வந்துவிடலாம்” என்றார். தெம்பாக இருந்தது. நான் கல்லூரியை விட்டு மேற்படிப்பிற்குச் சென்றபோது எனக்குத் தனியே ஒரு விழா நடத்தி விடைகொடுத்தார். 1986-ல் திருவாரூரில் எனது திருமணம் அவரது தலைமையில்தான் நடந்தது.

நான் திசை மாறிப் பறப்பேன்; ஒடிசாவுக்குப் போய்விடுவேன்; அவர் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஆவார் என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்!

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவில் உள்ள உத்கல் பண்பாட்டுப் பல்கலைக் கழகத்தில் ‘திருக்குறள் இருக்கை’ (Thirukkural Chair) தொடங்க விரும்பினோம். அப்போது தமிழ்க்குடிமகன் தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். திருக்குறள் இருக்கைக்கான நிதியாக ரூபாய் பத்து லட்சத்தைத் தமிழக அரசின் சார்பில் ஒடிசாவிற்கு வந்து ஆளுநரிடம் நேரில் அளித்தார். மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்திக்க அவரை அழைத்துச் சென்றேன். முதல்வரிடம் எனது பழைய கதைகளைச் சொன்னார்.

இறுதியாக ஒருமுறை படித்துவிட்டு ‘விகடனுக்கு’ இந்தக் கட்டுரையை மின்னஞ்சல் அனுப்புகிறேன். சோமநாதனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டாவது தடுப்பூசி போட்டு ஒருவாரம் ஆகிறது என்றார். ஒடிசாவைத் தாக்கிய ‘யாஸ்’ புயல் பற்றி விசாரித்தார்.

வாடிய முகத்தை வாசிக்கத் தெரிந்த ஆசிரியரால்தான் வழித்துணையாய் நின்று வழிகாட்ட முடியும்; தோழமையோடு தோள் கொடுக்க முடியும். கற்பித்தல் என்பது ஒரு கண்டுபிடிப்புக் கலை. சுயம் அறியச் சொல்லித்தரும் அக்கறை. திறன் பாராட்டல் என்பது ஆக்கம் வளர்க்கும் அறம். விளைகிற பயிருக்கு வீரிய உரம். புலவர் சோமநாதனை, பேராசிரியர் தமிழ்க்குடிமகனை நான் சந்தித்தேன் என்பதால்தான் இந்தத் தமிழ் நெடுஞ்சாலை.

`ஆசிரியர்கள் மூடிய கதவைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை சுவாசிக்கக் கற்றுத் தருபவர்கள்’ - பிரபஞ்சனின் முத்திரை வரிகள்.

- பயணிப்பேன்...

*****

ரஞ்சித்சின்ஹ் டிஸாலே
ரஞ்சித்சின்ஹ் டிஸாலே

உலக ஆசிரியர்

வார்க்கி ஃபவுண்டேஷன் மற்றும் யுனெஸ்கோ நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து கொடுக்கும் விருது Global Teacher Prize. 2020-ம் ஆண்டின் சிறந்த உலக ஆசிரியர் விருதை ரஞ்சித்சின்ஹ் டிஸாலே என்ற இந்தியர் வென்றிருக்கிறார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவருக்குப் பரிசுத்தொகை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது 7.25 கோடி ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பாதித் தொகையை இறுதிப் போட்டிக்குத் தேர்வான மற்ற 9 ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தளிப்பதாக டிஸாலே அறிவித்துவிட்டார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் பரித்தேவாடி என்ற கிராமத்தில் பாழடைந்து கிடந்த ஒரு பள்ளிக்கூடத்தில் 2009-ம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்த இவர், 10 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள சாதனையைக் கண்டு தற்போது உலகம் வியக்கிறது.

அது ஒரு பழங்குடி கிராமம். இரண்டு சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே வகுப்பிற்கு வந்த இந்தப் பள்ளியில் இப்போது நூறு சதவிகிதம் வருகை. நடத்தும் பாடம் குழந்தைகளுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அந்தப் பகுதி மக்களின் தாய்மொழியைக் (கன்னடம்) கற்றுக்கொண்டு, பாட நூல்களைத் தானே மொழிபெயர்த்துச் சொல்லிக்கொடுத்தார். கியூ.ஆர் (QR Code) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிய முறையில் பாடம் நடத்தும் நடைமுறையில் மகாராஷ்டிரத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகச் செயல்படுகிறார்.

இந்தப் பகுதியில் குழந்தைத் திருமணக் கொடுமை என்பது இவரின் தலையீட்டால் முடிவிற்கு வந்துள்ளது. 22 சதவிகிதம் மட்டுமே பசுமையாக இருந்த இப்பகுதியை பொதுமக்கள் உதவியுடன் 33 சதவிகிதம் அளவுக்குப் பசுமையாக்கியுள்ளார். எப்போதும் பகைமை பாராட்டும் வெவ்வேறு நாடுகளில் வாழும் 19,000 இளைஞர்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திய ‘எல்லைகள் தாண்டி’ என்ற நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது