மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 29 - ஞாயிறு போற்றுதும்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

சூரியக்கடவுளுக்கும் தொழுநோய்த் தீர்வுக்குமான நேரடித் தொடர்பு எங்கே தொடங்கியது தெரியுமா..?

1989ஆம் ஆண்டு, கோராபுட் மாவட்டச் சிறைச்சாலை.

“இந்தக் கொலையை நீங்கள்தான் செய்தீர்களா” என்று கேட்டேன்.

“சிங்கி ஆர்க்கே சத்தியமாக நான்தான் செய்தேன்” என்றார் அந்தச் சிறைக்கைதி. போண்டா பழங்குடிகளின் சூரியக் கடவுள் சிங்கி ஆர்க்கே.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போண்டா பழங்குடிக் கைதிகளை எனது ஆய்வுகளுக்காக நேரில் சந்தித்துப் பேச எழுத்துமூலமாக அனுமதி வாங்கியிருந்தேன், போண்டா பழங்குடிகளின் `கொலை மனப்பான்மை’ பற்றி மானுடவியலாளர் வெர்ரியர் எல்வின் எழுதியது மிகை என்று தோன்றியதால்.

கொலை பற்றிக் கைதிகள் சொல்லும் காரணத்திற்கும், காவல்துறையும் அரசுத் தரப்பு வழக்குரைஞரும் `சந்தேகத்திற்கு இடமில்லாமல்’ நிரூபித்த ‘உள் நோக்கத்திற்கும்’ (mens rea) சம்பந்தமே இல்லை. வக்கீல் வைத்து வாதாடாமல் ‘நான்தான் கொலைசெய்தேன்’ என்று சத்தியம் செய்யும் பழங்குடிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தர அரசுத்தரப்பு எவ்வளவு கடினமாக உழைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிக் கடிதம் எழுதினேன். சிறையிலிருந்து பரோலில் சென்றாலும் சொத்தில் பாதியை செத்தவர் குடும்பத்திற்குத் தந்து கெடா வெட்டி மன்னிப்பு கேட்காமல் ஊருக்குள் நுழையமுடியாது. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை. இருவேறு உலகம்.

ஹோ, முண்டாரி, சந்தாலி, கோல், ரெமோ, கதபா போன்ற மொழிகளைப் பேசும் பழங்குடிகள் சூரியனை `சிங்கி’ என்று அழைக்கிறார்கள். முண்டா சூரியக்கடவுளின் பெயர் சிங்பொங்கா. 1990 இறுதியில் மயூர்பன்ஜ் கலெக்டராகப் பணியாற்றியபோது சிங்பொங்காவைப் பற்றி மேலும் அறிந்தேன்.

பொங்காவை அணங்கு என்ற பழந்தமிழ்ச் சொல்லோடு ஒப்பிடலாம். ‘மூத்தவர்’ (ஹடம்) என்று அறியப்படும் சிங்பொங்காவை முண்டா பழங்குடியின் முதல் ஆணும் பெண்ணும் ‘தாத்தா’ என்று அழைத்தார்களாம்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

2000 ஜனவரி. கொனார்க் சூரியக் கோயிலில் நிற்கிறேன். புதிய பொறுப்பு. 1999 அக்டோபர் புயலில் சின்னாபின்னமான ஒடிசாவின் சுற்றுலா வளர்ச்சியை மீட்டெடுக்கவேண்டும். கொனார்க் கோயிலில் ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கியின் உருவச் சிற்பங்கள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறேன். ஒட்டகச்சிவிங்கியுடன் நடந்து வருபவர்கள் ஆப்பிக்க உடையில். சூரியக்கடவுளின் கற்சிலை. உடம்பில் மேற்சட்டை; கால்களில் குதிரைவீரர்கள் அணியும் சிறப்புவகைச் செருப்பு. காலணி அணிந்த கடவுளை ஒடிசா வரும்வரை பார்த்ததில்லை. கொனார்க் கோயிலை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் அன்றுதான் கூர்மையாகக் கவனித்தேன். ஒரு புதிய தேடலின் தொடக்கம்.

பண்டைய இந்தியாவின் சூரிய வழிபாடு பற்றி ஸ்ரீவத்சவா; கொனார்க் கோயில் பற்றி கருணா சாகர் பெஹரா; அலைஸ் பர்னர் மற்றும் ஆர்.எஸ்.சர்மா எழுதிய நூல்களைப் படித்தேன். மேற்கு ஒடிசாவில் பழங்கால மனிதர்கள் குகைகளில் தீட்டிய செவ்வண்ணச் சூரிய ஓவியங்களைச் சென்று பார்த்தேன்.

மகேந்திரகிரியில் கள ஆய்வு. ராஜேந்திர சோழன் பற்றிய கல்வெட்டு இருக்கும் இடம். மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். அதனால் வாடகைக் காரில் தொல்லியலாளர் ஒருவருடன் சென்று வந்தேன். அப்பகுதியில் வாழும் சபரா பழங்குடிகளின் சூரியக்கடவுள் உயிங்சும். அவரை மிஞ்சி எதுவும் இல்லை.

இந்தியாவிலுள்ள எல்லாப் பழங்குடி மலைகளிலும் பஞ்சபாண்டவர்கள் தூங்கியெழுந்துவிட்டார்கள்! பழங்குடி மலையுச்சியில் யுதிஸ்டர், குந்தி, பீமா கோயில்கள். குந்தி கோயிலின் சுற்றுச்சுவரில் உடைந்த நிலையில் சூரியக்கடவுள் உருவம். பெயர்களில்தான் பஞ்சபாண்டவர்; வழிபடப்படுவது சிவலிங்கம்.

சபரா பழங்குடியின் ரம்மா-பிம்மா என்ற இரு மூதாதையர் மகேந்திரகிரியில் வாழ்ந்தார்களாம். இந்தப் பெயர்கள் போண்டா மக்களின் ரமாய்-பிமாய் இணைக் கடவுள்களை நினைவுபடுத்துகிறது. பிமாய், பிம்மா இருவருமே சூரியக்கடவுள்கள்தான் என்கிறார் வெர்ரியர் எல்வின். கதைமரபு மகேந்திரகிரியில் பாண்டவர்களைக் குடியமர்த்தியது. ரம்மா, ரமாய் ஆகிய பெயர்கள் ராமாயணத்தோடு இணைத்துவிடப்பட்டன. மலைகளும் சமவெளிகளும் சந்திக்கும் விளிம்பில்தான் பழைய உண்மைகள் படுத்துத் தூங்குகின்றன.

பழங்குடி பூசாரியை எப்படி விட்டுவைத்தார்கள் என்று கேட்டேன். மன்டசா மன்னர் ஓர் அந்தணப் பூசாரியைக் கொண்டுவந்தாராம். அதைத்தொடர்ந்து காலரா நோய் பரவியதால் மன்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டாராம். அவ்வளவு சிரமமான இடத்தில் பூசாரியாக இருக்க வேறு யாரும் போட்டிபோட மாட்டார்கள் என்று தோன்றியது.

ஒருமுறை கொனார்க் கோயில் கருவறையில் கையில் ஒரு கோழியை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்கும் ஒரு பெண் சிற்பத்தைக் கவனித்தேன். நீண்ட சடைப்பின்னல். சூரியனுக்குச் சேவல் பலி கொடுக்கும் பழங்குடி மரபு நினைவிற்கு வந்தது.

2001 - 2002. கொனார்க் கோயில் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன். 2003ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை யுனெஸ்கோவிற்கு அனுப்பிய திட்டவரைவு அறிக்கையில் 20 நூல்கள்/ கட்டுரைகளின் பட்டியல். அதில் எனது கட்டுரைகள் மூன்று. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

2004 ஜனவரி 4. அலைஸ் பர்னர் நினைவு தேசிய சொற்பொழிவு. `சூரிய வழிபாட்டின் தோற்றம்: ஒடிசா பழங்குடிகளின் சூரியக்கடவுள்கள்’ என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்துகிறேன், கருணா சாகர் பெஹரா முன்னிலையில். கொனார்க்கின் சூரிய வழிபாட்டின் அடித்தளமாக இருப்பது பழங்குடி மக்களின் நம்பிக்கை மரபுகள்; அதை ஒற்றை அடையாளத்தால் கட்டமைக்க முடியாது என்பதைத் தரவுகளுடன் விளக்கினேன். கே.எஸ் பெஹரா அதை வழிமொழிந்து பேசினார். எனது சிறகுக்குள்ளே வானம்.

கொனார்க்கில் ஓட்டகச்சிவிங்கி
கொனார்க்கில் ஓட்டகச்சிவிங்கி
கொனார்க் பெண்
கொனார்க் பெண்

சூரியக் கோயில் கதைமரபுகளில் தொழுநோய் குறித்த அச்சம் ஒரு காரணியாகத் தொடர்ந்து இழையோடுவதைக் கவனித்து, புலன்விசாரித்தேன். பாகிஸ்தானிலுள்ள மூல்தானில் பழமையான சூரியன் கோயில். காரணியாக சாம்பாவின் தொழுநோய் பற்றிய கதை. இதே கதை கொனார்க் சூரியன் கோயிலும் தொடர்கிறது. இரண்டு இடங்களிலும் சந்திரபாகா நதி. சூரியன் கோயிலுக்கும் சந்திரபாகா நதிக்குமான தொடர்பைத் தேடி இமாசலப்பிரதேசத்தில் லாகுல் ஸ்பித்திக்குச் சென்றேன்.

காவிரிக்கரையிலுள்ள சூரியனார் கோயில் தல வரலாற்றைப் படித்தேன். சூரிய வழிபாட்டுத் தலம், எருக்க வனம், தொழுநோய் என்ற மூன்றுக்குமான மரபு சார்ந்த தொடர்பு பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது. சூரியனார் கோயிலில் தொழுநோய் சாபத்திற்கு ஆளாவது நவகிரகங்கள்.

அது சரி, சூரியக்கடவுளுக்கும் தொழுநோய்த் தீர்வுக்குமான நேரடித் தொடர்பு எங்கே தொடங்கியது? ரிக் வேதத்தில் அத்தகைய குறிப்பெதுவும் இல்லை. கிருஷ்ண யஜூர் வேதமும் பிராமணா இலக்கியங்களும் சூரியனால் தொழுநோய் குணமாவது பற்றிக் கூறுகின்றன. புராணமரபுகளில் இந்த நம்பிக்கை ஆழமாகிறது.

பழங்குடி மக்களின் சூரியக் கடவுள்களான சிங்பொங்காவும் சிங்கி ஆர்க்கேவும் தொழுநோயைத் தருபவர்கள், தீர்ப்பவர்கள். இந்த அச்சம்தான் இப்பழங்குடி மக்களின் நம்பிக்கை மரபின் மிக அடித்தளமான புள்ளியாகும்.

வேத மரபுகளில் சூரியன் முழுமுதல் படைப்புக்கடவுள் இல்லை. கலிங்க நிலப்பகுதிக்குச் செல்வதற்குத் தடை விதித்தன சாஸ்திர இலக்கியங்கள். அதையும் மீறிச்சென்றால் ஆரிய நிலப்பகுதிகளுக்குத் திரும்பும்போது பிராயச்சித்த சடங்குகள் செய்யவேண்டும். ‘கலிங்க, ஒட்ர நிலப்பகுதிகள் சூரியனின் நேரடி ஆளுகையில் உள்ள இடங்கள்’ என்று வராகமிகிரர் எழுதுகிறார்.

தொழுநோய் குறித்த அச்சம் ஒரு தொடர்கதை. பேரரசர் ஹர்ஷரின் அரண்மனைப் புலவர் மயூரகவி தொழுநோய் ஏற்பட்டதால் அவையிலிருந்து நீக்கப்பட்டாராம். அவர் சூரியக்கடவுளைப் போற்றி சூரிய சதகம் என்ற கவிதை நூலை எழுதி வழிபட்டுத் தொழுநோயிலிருந்து மீண்டதாகக் கதை மரபு.

கொனார்க் கோயிலைக் கீழைக் கங்கர் வம்சாவளி அரசரான முதலாம் நரசிம்ம தேவ் கட்டியதற்கான காரணம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. நரசிம்மர் தொழுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் சூரியக் கடவுளின் அருளால் அவர் குணமடைந்ததால் இக்கோயிலைக் கட்டினார் என்பதும் ஊகங்களில் ஒன்றாகும்.

சோழ மன்னர்களில் ஒருவர் வைணவ மரபினரால் ‘கிருமி கண்ட சோழன்’ என்று அழைக்கப்பட்டதை என்னால் இங்கே நினைவு கூராமல் இருக்கமுடியவில்லை. இதில் குறிப்பிடப்படும் கிருமி என்பது தொழுநோய்தான் என்ற கருத்தும் உண்டு. அது ஒரு தனிக்கதை.

தென்னிந்திய மன்னர்களோடு தொடர்புடைய கம்போடிய அங்கோர்வாட் கோயிலில் உள்ள தொழுநோய் அரசனின் சிலையை (Leper King) பார்த்தபோது இவையனைத்தும் எனது நினைவிற்கு வந்தன. மாபெரும் கட்டுமானங்களின் பின்னணியில் மன்னர்களின் மாபெரும் பயங்கள். இது சாத்தியம்தான். பயம் ஒரு உந்துவிசை.

கொனார்க் என்ற இடப்பெயரை வடமொழிச் சொல் ஆர்க்கா, பழங்குடிகளின் சிங்கி ஆர்க்கே, சூரியக் கடவுளின் தல விருட்சமான எருக்கு, தொழுநோய் சிகிச்சையில் சூரிய ஒளியின் தொடர்பு, எருக்கின் இடம் என்று பல்வேறு கோணங்களில் ஆராய்வதில் சில ஆண்டுகளைச் செலவிட்டேன். மாதம் ஒருநாளாவது கொனார்க்கில் இருப்பேன்.

சூரியன் கோயில் பூசாரிகளின் பூர்வீகமாகக் கருதப்படும் சாக தீவத்தை இடப்பெயர் தொகுப்புகளின் ஊடாகத் தேடினேன். ஒடிசாவில் சாகதீவ பிராமணர்கள் ஒரு சங்கம் வைத்திருப்பதைக் கண்டறிந்து சந்தித்தேன். ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரிலும் இதைப்போலவே ஓர் அமைப்பு இருப்பதை அறிந்து அங்கு சென்று பேசினேன். 2007ஆம் ஆண்டு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டா சூரியக்கோயிலுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றுவந்தேன்.

2019 அக்டோபர் 04. கொனார்க்கில் உலகக் கவிஞர்கள் மாநாடு. 82 நாடுகளிலிருந்து கவிஞர்கள். `கொனார்க்: அறிந்ததும் அறியாததும்’ என்ற தலைப்பில் நான் உரை நிகழ்த்துகிறேன். மீள்நினைவில் 2001இல் கொனார்க்கில் நாங்கள் ஏற்பாடு செய்த 14 மொழிகளில் பன்மொழிக் கவியரங்கம். கவிஞர் த.பழமலய் வாசித்த ‘வேறு ஒரு சூரியன்’ என்ற தமிழ்க்கவிதை இன்னும் நினைவில்.

பீமா கோயில்
பீமா கோயில்
கொனார்க் கோயில்
கொனார்க் கோயில்

சிங்கி ஆர்க்கா என்ற பெயரிலுள்ள ஆர்க்கா சம்ஸ்கிருதத்திலிருந்து போண்டா பழங்குடிகள் கடன்வாங்கியது என்ற கருத்தைப் படித்து நகைத்தேன். போண்டா மலைகளுக்கு நான் சிலமுறை சென்றிருக்கிறேன். சம்ஸ்கிருத மொழியைப் பேசும் எவரும் போண்டா மலைகளுக்குச் சென்று தங்கி கடவுளின் பெயரைக் கடனாகக் கொடுக்கவும்; அந்தக் கடனை அவர்கள் வாங்கிச் சுமக்கவும் வாய்ப்பே இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஆய்வுலகில் பதிவு செய்துவிட்டேன் என்பதுதான் எனக்கான நிறைவுப்பரிசு.

சிந்துவெளிப் பொறிப்புகளில் சூரிய உருவம் ஏன் இல்லை என்ற கேள்வி எனக்குள் இன்னும் இருக்கிறது. சிந்துவெளிப்பொறிப்புகளில் காணப்படும் மீன் குறியீடு, மீன் (fish) மீன் (star) என்ற இருபொருளைத் தருவதாக அஸ்கோ பர்போலா கருதுகிறார். சங்க இலக்கியத்தில் 157 இடங்களில் மீன். இதில் நாள் மீன், கோள் மீன், வெண் மீன், வட மீன், அறு மீன், எழு மீன் என்ற விண்மீன்கள் எத்தனை, கொழு மீன், சிறு மீன், கோட்டு மீன், புலவு மீன், சுறா மீன், பனை மீன் போன்ற நீர்மீன்கள் எத்தனை என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

சங்க இலக்கியம் பேசும் பல்மீன் ஒளி கெடத் தோன்றும் ஞாயிறும்; வயங்கு ஒளி நெடுஞ்சுடர் கதிர் காய்ந்து எழுந்த அகம் கனலி ஞாயிறும் அப்பழுக்கற்ற வானவியல். கைகால்கள் இல்லாத கதிரியக்கம். பால்வீதியில் குதிரைகள் ஏது? அதுதான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் சேர்ந்து கொண்டாடும் புரிதல்.

திங்களை, ஞாயிற்றைப் போற்றும் சிலப்பதிகாரம் கூறும் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டமும் நிலாக் கோட்டமும், இடைக்காலத்துச் சூரியனார் கோயிலும் அதன்பின் வந்த மரபுகள். நல்லவேளை பழைய தொழுநோய்க்கு மருந்துகண்டது புதிய அறிவியல்.

ஒருவகையில் கொனார்க் பற்றிய தேடலில் நான் செலவிட்ட சில ஆண்டுகள்தான் சிந்துவெளிப்பண்பாடு பற்றிய ஆய்வுகளில் இடப்பெயர்களை எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம் என்ற தெளிவையும் வரைமுறைகளையும் எனக்கு அளித்தது.

சிங்கி ஆர்க்கேவுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்.

ஞாயிறு போற்றுதும்!

பயணிப்பேன்...

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது