மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 31 - கால் முளைத்த ஊர்கள்!

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

பயணங்களின் கூட்டுத்தொகைதான் பண்பாட்டு வரலாறு...

புதுடெல்லி, 2005 ஆம் ஆண்டில் ஒருநாள். பகதூர் ஷா ஜஃபர் மார்க்கிலுள்ள பார்சி அன்ஜுமான் உணவுவிடுதியில் நான். பார்சி மக்கள் கூடுமிடம். அப்போது பார்சி புலப்பெயர்வுகள் பற்றிய தேடலில் இருந்தேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல பார்சி வரலாற்றை நன்கறிந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு இந்தி அவ்வளவாக வராது என்பதை நொடிகளில் புரிந்துகொண்டு ‘மெட்ராஸா’ என்றார்.

இந்தியாவில் பார்சி மக்கள் தொகை சுமார் ஐம்பதாயிரம். பெரும்பாலானோர் மும்பையில் வசிக்கிறார்கள். அஹூரா மஸ்தா என்ற கடவுளை வணங்கும் ஜொராஸ்ட்ரிய சமயத்தைச் சேர்ந்த இம்மக்கள் 1300 ஆண்டுகளுக்கு முன் பாரசீகத்திலிருந்து (ஈரான்) புலம்பெயர்ந்து கடல்வழியாக குஜராத்தை அடைந்தார்கள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

புலம்பெயர்ந்த பார்சிகள் தங்களுடன் எடுத்துவந்தது என்ன என்று கேட்டேன். எங்கள் கடவுள், புனிதத் தீயான ஆதஸ் பெஹ்ரம் மற்றும் தாயக நினைவுகள் என்றார். நான் விடாமல் வேறு என்னென்ன என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்தவர் ஸன்ஜன் என்ற இடப்பெயர் என்றார். குஜராத்தில் பார்சி மக்கள் நிறுவிய முதல் குடியிருப்பிற்குத் தங்களது பூர்வீக ஊரான ஸன்ஜன் என்ற பெயரைச் சூட்டினார்கள். இது எனக்கு ஏற்கெனவே தெரிந்த வரலாறு. ஆனால் அதை அன்ஜுமானில் ஒரு பார்சியின் வாயால் கேட்பதைப்போல் வருமா?

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

``பார்சி மக்கள் தங்களது பழைய இடப் பெயர்களை இந்தியாவில் குடும்பப்பெயராகப் பயன்படுத்துவது தெரியுமா?’’ என்று கேட்டேன். ஸன்ஜனா, சூர்த்தி, கம்பாட்டா என்று சில பெயர்களைச் சொன்னார் அவர். டாடா, நாரிமன், மசானி போன்ற பெயர்கள் ஈரானில் இப்போதும் இடப்பெயர்கள் என்றேன். ரத்தன் டாடா, ஃபாலி நாரிமன், மினூ மசானி போன்ற பிரபலமான பெயர்களை மனதில் வைத்துச் சொன்னேன். அவர் திகைப்படைந்து “யார் சொன்னது” என்றார். நான்தான் சொல்கிறேன் என்று சொல்லி நான் கையோடு கொண்டு சென்றிருந்த மடிக்கணினியைத் திறந்து டாடாவையும் நாரிமனையும் ஈரான் வரைபடத்தில் காட்டிவிட்டு அட்சரேகை தீர்க்கரேகைகளையும் தெரிவித்தேன். அப்போதுதான் அவர் சீரியசாகக் கேட்டார். “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று. ‘`இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர்’’ என்று அறிமுகம் செய்துகொண்டேன். கிளம்பும்போது கேட்டேன் `` ‘வக்கீல்’ என்ற பார்சி குடும்பப் பெயர் ஏன் தெரியுமா?’’ ``வக்கீல் தொழில் பார்த்ததால்’’ என்றார். ``இல்லை, வக்கீல் என்பது ஈரானில் ஓர் இடப்பெயர்’’ என்றேன். நானும் அவரும் சில ஆண்டுகள் தொடர்பில் இருந்தோம்.

பார்சி புலப்பெயர்வு, புனைகதையோ குத்துமதிப்பான மீள்நினைவோ அல்ல. ஈரானிலிருந்து பார்சி மக்கள் புலம்பெயர்ந்தார்கள் என்பதை மரபணுவியல் அண்மையில் நிறுவியுள்ளது. இந்த மரபணு ஆய்வுக்குழுவின் தலைவர் குமாரசாமி தங்கராஜ் என்ற தமிழர்.

இந்தப் பார்சிப் பெயர்களைத் தோண்டித்துருவ காரணம் இருக்கிறது. சூரிய வழிபாட்டிற்கான தேடல் என்னை பாகிஸ்தான் இடப் பெயர்களுக்குள் இழுத்துவிட்டிருந்தது. ஒரு நள்ளிரவில் எனது ஆய்வுகளுக்காக வடிவமைத்த தேடுதல் செயலியில் வடமேற்கு நிலப்பகுதிகளில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மதிரை, வழுதி, கள்ளூர், ஆமூர், சேரி, பட்டி, மலை, குன்று, வரை, துறை மற்றும் பல தொல்தமிழ் இடப்பெயர்களின் எச்சங்கள் இன்னும் இருப்பதைக் கண்டறிந்து மகிழ்ச்சி தாளவில்லை. தூங்கிக்கொண்டிருந்த என் மனைவியை எழுப்பிச் சொன்னேன். அதைத் தொடர்ந்த தேடல்களில் அதியன், தித்தன், அளிசி (அழிசி) நள்ளி, பன்னி, பிண்டன், பேகம், கிள்ளி, உதியன், ஆதன், சாத்தன் போன்ற தமிழ்த்தொன்மப் பெயர்களையும் அப்பகுதி களில் இடப் பெயர்களாகக் கண்டு வியந்தேன். சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்களில் இடம் பெறும் காக்கை, ஐயூர், கொல்லி, கொற்றன், பொத்தி, மோசி, கல்வி போன்ற பல பெயர்க் கூறுகளின் பொருள் நமக்குப் புரியவில்லை. ஆனால் அவை வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் ஊர்ப்பெயர்கள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

ஒன்றா இரண்டா, விட்டு நகர்ந்து செல்ல? கொத்துக்கொத்தாய், நூற்றுக்கணக்கில். அந்தப் புதிய தரவுகளை எட்டு ஆண்டுகள் அடை காத்தேன். 2010-ல் பொது வெளியில் பேசுவதற்கு முன்பு அவற்றின் நம்பகத் தன்மையைப் பலமுறை உரசிப்பார்த்தேன். அப்படிப்பட்ட ஒரு கட்டளைக்கல்தான் பார்சி புலப்பெயர்வுகள் பற்றிய ஆய்வு.

ஈரானில் இடப்பெயர்களான டாடாவும் நாரிமனும் இந்தியாவில் இப்போது குடும்பப்பெயர்கள். இது சாத்தியம் எனில் சிந்துவெளி இடப்பெயரான பாரியும் தித்தனும் திதியனும் கிள்ளியும் ஆதனும் சங்க இலக்கியத்தில் சாத்தியம்தானே? ஸன்ஜன், சூரத் பயணிக்குமெனில் கொற்கை, வஞ்சி, தொண்டி என்ன விதிவிலக்கா?

2009 ஜூலை. அமெரிக்காவில் நியூயார்க்கிலிருந்து டென்வர் செல்லும் விமானத்தைத் தவற விட்டேன். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று அங்கிருந்து டென்வர் செல்லவேண்டிய நிலை. அட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் கரைக்கு நெருக்கி 4000 கி.மீ தூரம்; ஆறு மணிநேரப் பயணம். எனது கையில் இடப்பெயர் ஆய்வுகள் பற்றிய ஓர் ஆங்கில நூல். அருகிலிருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் பேச்சு கொடுத்தார். அமெரிக்க மண்ணிற்கு ஆப்பிரிக்கர்கள் கொண்டுவந்த இடப் பெயர்களைப் பற்றிச் சொன்னார். கெய்ரோ என்ற இடப்பெயர் மட்டும் அமெரிக்காவில் இருபதுக்கும் மேல்; லக்ஸர், சூயஸ், கார்ட்டூம் போன்ற பல ஆப்பிரிக்க நகரங்களின் பெயர்கள்.

அமெரிக்காவில் ஐரோப்பிய இடப்பெயர்களும் ஏராளம். ஒஹையோவில் மட்டும் இரண்டு லண்டன்கள். வெஸ்ட் மினிஸ்டர், கெனிங்ஸ்டன், இங்கிலாந்து, ப்ரிமிங்ஹம், ஷெஃபீல்டு என்ற பல பிரிட்டிஷ் இடப்பெயர்கள். பாரிஸ்களுக்குப் பஞ்சமே இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல 23 பாரிஸ். டச்சு குடியேற்றத்திற்கு ஆம்ஸ்டர்டாம் சாட்சி. ஸ்பானிய குடியேற்றத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ், மாட்ரிட், பாலோ ஆல்ட்டோ, மெர்சிடஸ் என்று புலம்பெயர்ந்த இடப்பெயர்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து என் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். “நான் எதைத் தேடுகிறேனோ அது எப்படியோ என் கண்ணில் பட்டுவிடுகிறது: எனக்குத் தகவல் கொடுக்க யாராவது வந்துவிடுகிறார்கள்.” அதற்கு அவர் பதில் அனுப்பினார். “இதில் வியப்படைய ஒன்றுமில்லை. நீங்கள் நாலு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தை இடப்பெயர்; சுற்றியுள்ளவர்கள் வேறு எதையும் பேசினால் உங்கள் காதுகளில் விழுவது இல்லை. அதனால் நீங்கள் தேடுவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.’’ அது நாசுக்கான ஒரு விமர்சனம்தான். இருந்தாலும் பாராட்டாக நினைத்து மகிழ்ந்தேன்!

2003ஆம் ஆண்டு ராயகடா மாவட்டத்தில் ஒரு பழங்குடி கிராமத்தில் நான். ``கடந்த 80 ஆண்டுகளில் உங்களுடைய ஊர் மூன்று முறை இடம் மாறியுள்ளது. ஆனால் ஊரின் பெயர் மட்டும் மாறவில்லையே” என்று கேட்டேன். குவி மொழி பேசும் அந்தப் பழங்குடிப் பெரியவர் என்னை ஏற இறங்கப்பார்த்தார். ``அதை எப்படி மாற்றமுடியும்? எங்கள் முன்னோர்கள் வைத்த பெயரை மாற்றும் உரிமை எங்களுக்கு ஏது. ஒருவேளை நாங்கள் ஊரின் பெயரை மாற்றிவிட்டால் அவர்களுடைய ஆவிகள் எங்களைப்பார்க்க வரும்போது குழப்பமாகிவிடாதா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார். வாயடைத்து நின்றேன். இடப்பெயர் உளவியல் பற்றிய புதிய புரிதல் அது. எந்தப் பல்கலைக்கழகம் இதை வகுப்பறையில் சொல்லித்தரும்!

தொன்மையான நாகரிகங்களைவிடத் தொன்மையானவை இடப்பெயர்கள். இடங்களுக்குப் பெயரிடுதல் என்பது மொழியாக்கத்தின் தொடக்க நிலையிலேயே நேர்ந்த வாழ்வியல் தேவை.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

பயணங்களின் கூட்டுத்தொகைதான் பண்பாட்டு வரலாறு. திசைகள் என்பவை நேற்று வந்தவை; தேடல்கள் மனிதன் உடன்பிறந்தவை. புலப்பெயர்வென்பது பொழுதுபோக்கு அல்ல; வாழ்தலுக்கான உத்தி. பயணப்பட்ட மனிதர்களோடு சேர்ந்து பயணிக்கின்றன ஊர்ப்பெயர்கள்.

மொரீசியஸ் ரூபாய் நோட்டில் பத்து ரூபாய் என்ற தமிழ் எழுத்து எப்படி வந்தது? கனடாவில் வன்னி வீதியும் மொரீசியஸில் வேலூர் வீதியும் எதனால் சாத்தியம்? நடந்த கால்கள்தான் வரலாற்றின் நாற்றங்கால்கள். இதற்கு இலக்கணம் ஏதுமில்லை. இங்கே கொண்டாடப்படாத கொலம்பஸ்களே அதிகம். குத்தவைத்து உட்கார்ந்து குளிர்காய்ந்தவர்கள் இன்னும் குகைகளில்தான் இருக்கிறார்கள். நகர்ந்து வந்தவர்கள்தான் நாகரிகம் படைத்தார்கள்.

சிந்துவெளியின் கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்திற்கும் சங்க இலக்கியங்களுக்கும் பொதுவான இடப்பெயர்களை, குடிப்பெயர்களை, நிலக்குடித் தலைவர்களின் பெயர்களை வேத இலக்கியங்கள் உச்சரித்ததுகூட இல்லை என்ற புரிதல்தான் இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டு வரலாற்றின் புதிர்முடிச்சுகளுக்கான திறவுகோல்.

ஏதோ பேருந்துகளும் ரயில்களும் விமானங்களும் வந்ததால்தான் நாமெல்லாம் ‌பயணம் செய்கிறோம் என்பது போன்ற நினைப்பு நிகழ்கால இயலாமையின் பக்க விளைவு. சென்ற ஆண்டு (2020) பெருந்தொற்றின்போது தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடந்தவர்களை நினைத்துப்பார்க்கிறேன். ஹரப்பா மக்கள்கூட இப்படித்தான் கிளம்பி நடந்திருக்கக் கூடும் ஏதோ ஒரு காரணத்தால்; அல்லது காரணங்களால்.

அஞ்சல்
அஞ்சல்

ஆப்கானிஸ்தானத்தில் ஒரு கள்ளூர் (Kallur); பாகிஸ்தானில் ஒரு கள்ளூர் (Kallur). சிந்துநதிக்கரையில் கள்ளூர் கோட் என்ற ஊர். கோட் என்பது வேறொன்றுமில்லை, கோட்டைதான். இந்தியாவில் மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் கள்ளூர்கள். தமிழ்நாட்டில் மட்டும் பத்துக் கள்ளூர் / கல்லூர் (Kallur). கர்நாடக மாநிலம் ராய்ச்சூரிலுள்ள Kallur முக்கியமான அகழாய்வுத்தலம். இங்கே 1930களில் கண்டுபிடிக்கப்பட்ட விரிகைப்பிடி நெடு வாள்கள் (Antenna Swords) தென்னிந்தியாவில் செப்புக் குவியல் பண்பாட்டிற்கான (Copper Hoard Culture) முதல் சான்றாகும். புதிய கற்கால கட்டத்திலிருந்தே இங்கே வாழ்வியலின் தொடர்ச்சிக்குத் தடயங்கள் உள்ளன. செப்புக் குவியல் பண்பாட்டின் பரவல் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றை ஹரப்பா பண்பாட்டின் சரிவிற்குப் பின் நிகழ்ந்த புலப்பெயர்வுகளோடு தொடர்புபடுத்துகிறார் ஸ்டூவர்ட் பிக்காட்.

இதோ எனது கையில் சங்க இலக்கியம். அகநானூறு 256வது பாடல். மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எழுதியது. கள்ளூர் என்ற ஊரில் நிகழ்ந்த ஒரு தொல்நிகழ்வை பிளாஷ்பேக்கில் பதிவு செய்கிறது இந்தப்பாடல்.

“தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,

கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்”

‘தொன்மையான புகழ்மிக்க, பெரும் பெயர் கள்ளூர்’ என்று சங்க இலக்கியம் நினைவுகூரும் கள்ளூர் சிந்து முதல் தென்கோடி வரை பரவிக்கிடக்கும் இத்தனை கள்ளூரில் எந்தக் கள்ளூர் (Kallur) என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். கால் முளைத்து நடந்த இந்தக் கள்ளூர் இடப்பெயர் தொடர் சங்கிலிக்கு நான் `கள்ளூர் நடைபாதை’ (Kallur Corridor) என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

சங்க இலக்கியக் கள்ளூரின் அஞ்சல் குறியீட்டு எண்ணை, நாம் அறிந்த வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைக்குள் மட்டும் தேடமாட்டேன். சிந்துக்கும் வைகைக்கும் தூரமில்லை. இதைத் தூசுதட்டிக் காட்டாமல் தூக்கமில்லை.

- பயணிப்பேன்

ரா.பி.சேதுப்பிள்ளை, கி.நாச்சிமுத்து
ரா.பி.சேதுப்பிள்ளை, கி.நாச்சிமுத்து

பெயர் ஆய்வியல்

பெயர்களைப் பற்றிய ஆய்வுகள் ‘ஆனோமாஸ்டிக்ஸ்’ (Onomastics) என்று அழைக்கப்படுகிறது. இடப்பெயர் ஆய்வுகள் ‘Toponymy’; மனிதப்பெயர் குறித்த ஆய்வு Anthroponymy; குடிப்பெயர், இனப்பெயர் - Ethnonym; ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளின் பெயர்கள் Hydronym; மொழிகளின் பெயர்கள் - Glossonym; சாலைகள், தெருக்களின் பெயர்கள்- Hodonym; மலை குன்றுகளின் பெயர்கள் – Oronym என்று அழைக்கப்படுகின்றன.

பெயராய்வு, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு முக்கியமான ஆய்வுக்களமாக வளர்ந்துள்ளது. இடப்பெயர் ஆய்வாளர்களின் இந்திய அமைப்புகள் மைசூரிலும் (Place Name Society of India) திருவனந்தபுரத்திலும் (PLANS) இயங்குகின்றன.

ரா.பி. சேதுப்பிள்ளை தமிழ் இடப்பெயர் ஆய்வுகளுக்கு முன்னோடி. மோ. அ. துரை அரங்கசாமி சங்ககாலப் பெயர்கள் பற்றி ஆய்வு செய்தார்.

கி.நாச்சிமுத்து இத்துறையில் சிறந்த பங்களிப்புச் செய்துவருபவர்.

தி.வை. சதாசிவ பண்டாரத்தார், ஒய். சுப்பராயலு, வே. வேதாசலம், ந. சுப்புரெட்டியார், ச.வே. சுப்ரமணியன், ஞானமுத்து, மணிமாறன், பகவதி, ஆளவந்தார், சந்திரசேகரன், மா. நயினார், கோ. சீனிவாசன், முத்தையா, ஜான் பீட்டர் போன்றோரும் பெயர் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது