மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 32 - அந்த நாள்!

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

ஒருவேளை, எனது மதம் இதுவென்று ஒலிபெருக்கியில் அறிவித்து அதனால் நான் உயிர்பிழைத்திருந்தால் இந்தக் கட்டுரை மட்டுமல்ல; இந்தத் தமிழ் நெடுஞ்சாலையே இல்லை.

29 ஏப்ரல் 1989. நவரங்பூர் காவல்நிலையத்தை ஒரு பெருங்கும்பல் சுற்றிவளைத்துத் தாக்குகிறது. மூடிய ஜன்னல்களின் மீது சரமாரியாகக் கற்கள். கதவை உடைத்து நுழைய விடாமல் வராண்டாவில் நின்று தடுக்கும் காவலர்கள். உள்ளே இன்ஸ்பெக்டர் நாற்காலியில் நான். மூலையில் உட்கார்ந்திருந்த இளைஞர் ஒரு கண்ணாடி பாட்டிலை சுவரில் அடித்து உடைத்து என்மீது பாய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. சுதாரித்து விலகுகிறேன். என்னுடன் இருந்த பயிற்சி அதிகாரிகள் இருவரும் அந்த இளைஞரை மடக்கி அமுக்குகிறார்கள். நாலு இறுக்கு இறுக்கி அறையொன்றில் தள்ளித் தாழிடுகிறோம். அது ஒரு மதக்கலவரம்.

முதல்நாள் நள்ளிரவு என்னை எழுப்பினார் மாவட்ட கலெக்டர். “நவரங்பூர் பகுதியில் கலவரச் சூழ்நிலை; விடிந்தால் கடையடைப்பு; சப்கலெக்டர் விடுமுறையில் இருக்கிறார். உடனடியாக அங்கு செல்லுங்கள்” என்கிறார். அப்போது நான் பழங்குடி வளர்ச்சித்திட்ட அதிகாரி. நவரங்பூர் எனது பணிவரம்பிற்கு உட்பட்ட பகுதி அல்ல. ஒருமுறைகூடப் போனதில்லை. நிர்வாக அதிகாரிகளை மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கும் சட்டம் ஒழுங்குப் பணியில் அனுப்பும் அதிகாரம் மாவட்ட மாஜிஸ்டிரேட்டான கலெக்டருக்கு உண்டு. விருந்தினர் விடுதியில் பயிற்சி அதிகாரிகள் துகின் காந்த பாண்டே ஐ.ஏ.எஸ், சுனில் ராய் ஐ.பி.எஸ். இவர்களுடன் நான் என மூவரும் ஜீப்பில் கிளம்பினோம். நவரங்பூரில் உள்ளூர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை. பிரச்னையைப் பெரிதாக்கக் கூடியவர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

மிகவும் செல்வாக்குடைய அமைச்சரின் தொகுதி. அவரின்றி அங்கே ஓர் அணுவும் அசையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். விடிவதற்கு முன்பே காவல் நிலையத்தில் சென்று அமர்ந்தேன். அமைச்சர் என்னைச் சந்தித்தார். முறைப்படி வரவேற்றுப் பேசினேன். ‘கடையடைப்பு அமைதியாக நடைபெறும்’ என்றார். ‘அரசு அலுவலகங்கள் எப்போதும் போல இயங்கும்’ என்றேன். ‘கடுமையான போலீஸ் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது’ என்றார். ‘அது சூழ்நிலையைப் பொறுத்தது’ எனப் பதிலளித்தேன்.

பக்கத்து ஊர்க் கடைத்தெருவில் பிரச்னை என்று தகவல் வந்தது. அங்கு சென்று திரும்புவதற்குள் அமைச்சரின் உத்தரவால் நவரங்பூர் சப்கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டதை அறிந்து அங்கே விரைந்தேன். அலுவலகத்தை மீண்டும் திறக்க உத்தரவிட்டேன். சிறிது நேரத்தில் இன்னொரு தகவல்.

குறிப்பிட்ட ஒரு கடவுள் உருவத்திற்குச் செருப்பு, மண்டையோட்டு மாலை போட்டு முழக்கமிட்டபடி ஒரு வழிபாட்டுத்தலத்தை நோக்கிப் பெரிய ஊர்வலம். சந்துபொந்துகளில் புகுந்து அந்த வழிபாட்டுத் தலத்தை அடைந்து கைவசம் இருந்த போலீஸ் படையை அங்கே குவித்தேன். ஒரு கல்லறையைச் சிலர் கடப்பாரையால் பிளப்பதைப் பார்த்து ஒருகணம் வெகுண்டு போலீஸ்காரர் கையிலிருந்த தடியை வாங்கி அந்தக் கடப்பாரை ஆளை அடித்துத் தடுத்து, காவல் நிலையத்திற்கு அனுப்பினேன். ஊர்வலம் மேலும் நகரத் தடைவிதித்தேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

சாலையில் சாக்பீஸால் கோடுகிழித்தோம். கல்வீச்சு தொடங்கியதும் தடியடி நடத்த உத்தரவு. ஊர்வலத்தில் அமைச்சரும் இருந்தார். ‘வழிபாட்டுத்தலத்தைப் பாதுகாக்கத் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கமாட்டோம்’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்தேன். தடியடியில் கூட்டம் சிதறி ஓடியது. கூடுதல் ஆயுதப்படை அவசியம் என்பதை உணர்ந்து மேலதிகாரிகளிடம் பேசக் காவல்நிலையத்திற்குச் சென்றேன். சிதறியோடிய கூட்டம், சற்று நேரத்தில் காவல் நிலையத்தைச் சுற்றிவளைத்தது. அவர்களின் இலக்கு - நான்.

காவல் நிலையக் கதவுகள் எப்போது வேண்டுமானாலும் தகர்க்கப்படலாம். தொலைபேசியில் ஒரு பெண் பதற்றமாகப் பேசினார். ‘பள்ளி மாணவிகள் பத்திரமாக வீட்டிற்குத் திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்; பயமாக இருக்கிறது’ என்றார். மாவட்ட ஆட்சித் தலைவரையும் காவல்துறைக் கண்காணிப்பாளரையும் தொடர்புகொண்டு கூடுதல் படை கேட்டேன். ஆனால், அவர்களின் நிலைப்பாடு வேறுமாதிரியாக இருந்தது. இத்தனை போலீஸ், கண்ணீர்ப்புகைக் குண்டுகள்; இத்தனை ரவுண்டு துப்பாக்கி ரவைகள் ஏற்கெனவே இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் சொன்னது வெறுப்பாக இருந்தது. ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவதற்கும் (use of force) படையைக் காட்டி பயமுறுத்துவதற்கும் (show of force) இடையிலுள்ள வேறுபாடு முக்கியமானது. சிறிய ஆயுதப் படை, பெரிய கும்பல் என்பது ஆபத்தான கலவை. செய்கூலி, சேதாரம் இரண்டும் அதிகமாகும்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

உளவுத்துறை அதிகாரி ஒருவர் தொலைபேசியில் பேசினார். ‘‘முற்றுகையிடப்பட்டிருக்கிறேன்; நிலைமை மோசமாக உள்ளது. இது ஒரு SOS. உள்துறைச் செயலரிடம் தெரிவியுங்கள்” என்றேன். எனக்கு வேறு வழியில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் உள்துறைச் செயலர் வினோத் ஜா என்னிடம் பேசினார். ஜாஜ்பூரில் சப்கலெக்டராக இருந்தபோது ஒரு பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் களத்தில் இறங்கிக் கையாண்ட விதம் பற்றி எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியவர். சுனாபேடாவிலிருந்து டி.ஐ.ஜி மாத்தூர் தலைமையில் கூடுதல் படைகளை உடனே அனுப்ப உறுதியளித்தார்.

வராண்டாவில் நின்ற மூத்த போலீஸ் அதிகாரி லேசாகக் கதவைத் திறந்து உள்ளே வந்தார். “நிலைமை கைமீறிப் போகிறது; நீங்கள் மதம் மாறியவர் என்று வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நீங்கள் வெளியே வந்து உங்கள் மதம் இதுதான் என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அறிவித்துவிட்டால் பிரச்னை சுமுகமாக முடிந்துவிடும்” என்றார். ‘‘செத்தாலும் சாவேன். அதுமட்டும் ஒருபோதும் நடக்காத காரியம்” என்றேன்.

தீயணைப்பு வாகனத்தின் ஒலி. தொலைபேசியில் மீண்டும் அந்தப்பெண்ணின் அழைப்பு. அடைபட்டிருப்பதில் அருவருப்பும் கொஞ்சம் குற்ற உணர்வும்கூட. கும்பல் உளவியலை ஏற்கெனவே படித்ததுமட்டுமல்ல; பார்த்தும் அறிந்தவன் நான்.

கழிவறைக்குள் சென்று அசுத்தமான அந்த அறையின் மங்கலான கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்தேன். என் மனைவி திருவாரூரில் பெற்றோர் வீட்டில் இருந்தார். முதல் மகள் எட்டு மாதக் குழந்தை. ஆண்கள் அழமாட்டார்கள் என்பது மட்டரகமான மூடநம்பிக்கை. அழுது, முகத்தைக் கழுவி, கைக்குட்டையால் துடைத்து, வெளியே வந்து சுனில் ராயிடம் சொன்னேன்.“நான் வெளியே செல்ல விரும்புகிறேன். நான்தான் இங்குள்ள உயர் அதிகாரி. அந்த ரிவால்வரை என்னிடம் தாருங்கள்.”“முடியவே முடியாது சார். நான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. உங்களுடன் வருகிறேன். உங்கள்மீது தாக்குதல் நடந்தால் நான் தயங்காமல் சுடுவேன்” என்றார் சுனில் ராய்.

ஆர்.பாலாகிருஷ்ணன்
ஆர்.பாலாகிருஷ்ணன்

யாரும் எதிர்பாராத சூழலில் கதவைத் திறந்துகொண்டு மூவரும் வெளியே வந்தோம். சுனில் ராயின் கையில் துப்பாக்கி. இதை எதிர்பாராத கூட்டம் கொஞ்சம் பின்வாங்கிச் சிதறியது. தூரத்திலிருந்து கல்வீசினார்கள். போலீஸ்காரர்கள் கொடுத்த ஹெல்மெட்டை அணிந்திருந்தோம். மாத்தூரின் தலைமையில் கூடுதல் படைகள் வந்துசேர்ந்தன. போலீஸ் பஸ்ஸின் மீது வன்முறைக்கும்பல் கல்வீசியதில் கூர்க்கா வீரர் ஒருவர் தலையில் பலத்தகாயமடைந்து நினைவிழந்திருந்தார். ஆயுதப்படையினர் அந்த வீரரைக் காவல் நிலையம் முன்பு கிடத்தி “ஆணையிடுங்கள்” என்று என்னிடம் கேட்டார்கள். முதலில் அந்தக் காவலரை மருத்துவமனைக்கு அனுப்பினோம். டி.ஐ.ஜி-யும் நானும் தனியாக ஆலோசனை செய்தோம். `துப்பாக்கியை நீட்டியபடிதான் நானே நகருக்குள் வரமுடிந்தது. பயங்கரக் கல்வீச்சு’ என்றார். 144 தடையுத்தரவு பிறப்பித்து ஒலிபெருக்கியில் அறிவித்தோம். ‘30 நிமிடங்களில் வீதிகளில் ஒரு ஈ காக்காகூட கண்ணில்படக் கூடாது’ என்று இலக்கு நிர்ணயித்தோம். நாங்கள் இருவரும் ஹெல்மெட், கவச உடை அணிந்து போலீஸ் படையுடன் முன்னே சென்றோம். அங்கும் இங்கும் கல்வீச்சுகள். தயக்கமற்ற போலீஸ் தடியடி. பலர் காயமடைந்தார்கள். 30 நிமிடங்களில் முழு அமைதி.

ஆனால் பிரச்னை வேறுவிதமாக திசை திரும்பியது. அமைச்சரவையிலிருந்து விலகுவதாக முதல்வருக்கு டெலக்ஸ் அனுப்பினார் அமைச்சர். தடியடி நடத்திப் பலரைக் காயப்படுத்தியதற்காக என்னை இடைநீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் ரீதியாகக் கோரினார்கள். மறுநாள், தென்மண்டல வருவாய் ஆணையாளர் எஸ்.கே மேனன் விசாரணை நடத்தினார். அடுத்த நாள் தலைமைச் செயலரே வந்தார். சில நாள்கள் கழித்து அடுத்த தலைமைச் செயலர் ஆகப்போகும் இன்னொரு உயரதிகாரி வந்தார். டில்லியிலிருந்து ஓர் உயரதிகாரி வேறு. விசாரணை மேல் விசாரணை.

“ஊர்வலத்தில் அமைச்சர் இருந்தார் என்பதற்காக நான் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை வேறுமாதிரி கையாண்டிருக்க முடியாது. இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் நேர்ந்தாலும் இதைத்தான் செய்வேன்” என்று தெளிவாகச் சொன்னேன். நடந்தது என்ன என்பதை அறிந்திருந்ததால் அன்றைய முதல்வர் ஜெ.பி பட்நாயக் அரசியல் குரல்களுக்குச் செவிமடுக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பிஜூ பட்நாயக்கும் எனது நடவடிக்கையை வரவேற்றிருந்தார். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் டெலிகிராப் ஆங்கில நாளிதழின் தலையங்கத்திலும் ‘பாகுபாடற்ற கண்டிப்பான அணுகுமுறை’ என்று குறிப்பிடப்பட்டது.

தமிழ்  நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

நவரங்பூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்டது பெரும்பான்மை மதத்தினரும் ஒரு சிறுபான்மை மதத்தினரும். அமைச்சரும் இன்னொரு சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்தான். அதுவல்ல பிரச்னை. வகுப்புவாத அரசியல் அடிப்படையிலேயே ஆபத்தானது. சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைவிட முக்கியமானது மனப்பான்மை. சட்டவிரோதம் எந்தச் சாயம் பூசிவந்தாலும் சட்டவிரோதம்தான்.

நானும் டி.ஐ.ஜியும் தனிப்பட்ட வன்மத்தால் மக்களைத் தாக்கியதாக ஏழு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். ‘இந்தத் தனிநபர் வழக்கில் எனக்காக அரசு வழக்கறிஞர் வாதாடுவதை விரும்பவில்லை. எனக்கான வழக்கறிஞரை நானே தேர்ந்தெடுக்க அனுமதி வேண்டும்; செலவை அரசே ஏற்கவேண்டும்; இல்லையெனில் வழக்கறிஞர் இன்றி நானே வாதாடுவேன்’ என்று அரசுக்குக் கடிதம் எழுதினேன். அரசு சம்மதித்தது. ஆனால், அதற்கெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. வழக்கு தொடுத்தவர்கள் திடீரென்று வழக்கை வாபஸ் பெற்றார்கள்!

மே 31, 1989. தலைமைச் செயலாளர் நளினி காந்த பாண்டா ஓய்வுபெறும் நாள். புவனேஸ்வரத்திற்கு அழைத்தார். முதல்வரிடம் தான் அளித்த அறிக்கையின் நகலை என்னிடம் அளித்தார். ‘உனக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் இதைப் பயன்படுத்திக்கொள்’ என்றார். நன்றியால் நிறைந்தது எனது மனசு. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமைச் செயலகத்திற்கு அமைச்சர் செல்லவில்லை. பிறகு செல்லத்தொடங்கினார். மேலும் ஒன்றரை ஆண்டுகள் அதே பொறுப்பில் கோராபுட்டில் பணியாற்றினேன். நவரங்பூர் சம்பவத்தின் படிப்பினைகளை மசூரி அகாடெமியிலும் ஹைதராபாத் போலீஸ் அகாடெமியிலும் அந்த இரு பயிற்சி அதிகாரிகளும் அனுபவப்பகிர்வு செய்து விளக்கினார்கள்.

நிழற்குடைகளால் நிரம்பியவை அல்ல நெடுஞ்சாலைகள். அடுத்த வளைவில் காத்திருக்கலாம் அடையாளம் தெரியாத அதிர்ச்சி, அல்லது, அறிமுகமான கத்தி. பளிங்குபோல் பாதை கனவில் வரலாம்; நிஜத்தில் வேகத்தடைகள் வீசி எறியலாம். அல்லவை பெருகி நல்லவை குறைகிறது என்று நம்பிக்கை வறட்சி அவ்வப்போது தோன்றினாலும் யாராவது வந்து வேருக்கு நீருற்றிவிடுகிறார்கள்.

2016 ஆகஸ்ட். மீண்டும் நவரங்பூரில் நான். 27 ஆண்டுகள் இடைவெளி. டில்லியிலிருந்து வெளியாகும் ஓர் ஆங்கில நாளிதழ் நவரங்பூரை ‘இந்தியாவின் ஜீரோ மாவட்டம்’ என்று சித்திரித்தது. இதைப் பற்றி வாதிடுவதைவிட, அதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திச் செயல்பட தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக் ஆணையிட்டார். நவரங்பூரில் போர்க்கால அடிப்படையில் வளர்ச்சிப்பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு எனக்கு. அடுத்து இரண்டு ஆண்டுகள் நவரங்பூருக்குப் பலமுறை சென்றேன்.

காலியாகக் கிடந்த பணியிடங்களை நிரப்பினோம். தற்காலிகப் பணிகளில் டாக்டர்களை நியமிக்கும் அதிகாரமும் நிதியாதாரமும் கலெக்டருக்கு அளித்தோம். மாவட்ட இலவசப் புற்றுநோய் மையம்; ஓராண்டில் 21,000 பேருக்கு வீடுகள், 11,000 பேருக்கு இலவச வீட்டுமனை, 4127 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலப்பட்டா, 213 சிற்றூர்களுக்குப் புதிய மின் இணைப்பு; புதிய பாசன வசதிகள், மீன் வளப்பெருக்கத்தில் புதிய உச்சம் என்று ஏராளமான வாழ்வாதாரத் திட்டங்கள். மக்காச்சோளம் நவரங்பூரின் அடையாளம். ஒடிசாவின் உற்பத்தியில் பெரும்பகுதி இங்கே. மக்காச்சோள விவசாயிகளுக்கு ஆன்லைன் சந்தைவசதி செய்தோம்.

எந்த தேசிய நாளிதழ் நவரங்பூரை ‘ஜீரோ மாவட்டம்’ என்று அழைத்ததோ அதே நாளிதழில் ‘மாறிவரும் நவரங்பூரின் புதிய முகம்’ என்ற செய்திக்கட்டுரை. நவரங்பூரில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. இதற்கான முதல் பரிசான ரூபாய் 60 லட்சத்தை முதல்வரிடம் பெறுகிறார் கலெக்டர் ரஷ்மிதா. 2017 டிசம்பர் 15-ம் தேதி மசூரி ஐ.ஏ.எஸ் அகாடெமியின் அழைப்பின் பேரில் நவரங்பூரின் வளர்ச்சிப் பயண அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

எனது ஞாபக வடுக்களுக்கு நவரங்பூர் மருந்து போடுகிறதா அல்லது அதன் காயங்களுக்கு நான் மருந்து போடுகிறேனா... தெளிவாகப் புரியவில்லை. அதனால் என்ன? இரண்டும் ஒன்றுதான்.

ஒருவேளை, எனது மதம் இதுவென்று ஒலிபெருக்கியில் அறிவித்து அதனால் நான் உயிர்பிழைத்திருந்தால் இந்தக் கட்டுரை மட்டுமல்ல; இந்தத் தமிழ் நெடுஞ்சாலையே இல்லை. ஏனெனில், அதற்குப் பிறகு என்னை ஒருபொருட்டாக நான் மதித்திருக்கவே மாட்டேன். என்னிடம் என்ன இருந்திருக்கும் எழுத!

- பயணிப்பேன்...

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது