மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 9 - நேதாஜி பிறந்த வீடு

நேதாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
நேதாஜி

நேதாஜி நினைவு இல்ல அருங்காட்சியகத்தை முதல்வர் நவீன் பட்நாயக் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

“ஓ பயணியே... சற்று நீ இங்கே இளைப்பாறிச் செல். இந்தியாவின் தவப்புதல்வன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த புனித இல்லம் இது” என்று எழுதியிருந்தது, அந்தப் பெரிய வீட்டின் காம்பவுண்டு சுவரில் பதித்திருந்த பளிங்குக் கல்வெட்டில். கட்டாக் நகரின் மையப்பகுதியில் ஒடியா பஜார் என்ற குறுகலான தெரு. 2001-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள்.

நேதாஜி பிறந்த வீட்டில் அருங்காட்சியகம் அமைப்பது பற்றி மறுநாள் டெல்லியில் ஒரு கலந்தாய்வு. அதற்கு முன் நேரில் பார்வையிட வந்திருக்கிறேன். அப்போது நான் ஒடிசா மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலாளர்.

சுபாஷ் சந்திரபோஸ்
சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜியின் மறைவு பற்றிய மர்மம், அவரது வங்காள அடையாளம் ஆகியவை பேசப்படும் அளவுக்கு அவரது பிறப்பும் வளர்ப்பும் பேசப்படுவது இல்லை. கட்டாக்கில் மெட்ரிகுலேஷன் வரை படித்துவிட்டு மேற்படிப்புக்காகக் கொல்கத்தா சென்றார் நேதாஜி. அவர் பிறந்த ‘ஜானகிநாத் பவன்’ என்ற அந்த வீடு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. நேதாஜியின் தந்தை ஜானகிநாத் போஸ் பெரிய வழக்கறிஞர். கட்டாக் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 1897-ல் சுபாஷ் பிறந்த போது ஜானகிநாத் கட்டாக் நகரசபையின் துணைத் தலைவர். பின்னர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜானகிநாத்தின் மறைவிற்குப் பிறகு இந்த வீடு நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸுக்குச் சொந்தமானது. 1954-ல் சரத்தின் மகன் அமியநாத்தின் வேண்டுகோளின்படி அந்த வீட்டை ஒடிசா அரசு ரூ.75,000 கொடுத்து விலைக்கு வாங்கியது. 1956 முதல் நேதாஜி சேவா சதன் அறக்கட்டளையின் மகப்பேறு இல்லம் செயல்படத் தொடங்கியது. 1961-ல் நேதாஜியின் மகள் அனிதா போஸ் ஐரோப்பாவிலிருந்து முதன்முறையாக கட்டாக் வந்தபோது, புற நோயாளிகளுக்கான பிரிவைத் திறந்து வைத்தார்.

1991-ல் பிஜூ பட்நாயக் முதல்வராக இருந்தபோது இந்த வீடு மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1997-ல் இந்திய விடுதலையின் பொன்விழாவும் நேதாஜியின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டபோது நேதாஜி பிறந்த இல்லத்தில் அருங்காட்சியகம் அமைக்க மைய அரசு திட்டமிட்டது. ஆனால் செயல் வடிவம் பெறவில்லை. நேதாஜி பிறந்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுந்ததும் உண்டு.

சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடம்
சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடம்
சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடம்
சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடம்


நேதாஜி பிறந்த வீட்டில் நான். முதல் மாடிக்கு அழைத்துச் சென்று ‘இந்த அறையில்தான் நேதாஜி பிறந்தார்’ என்றார்கள். நேதாஜியின் படத்துக்கு மாலையிட்டு வணங்கினேன். பூட்டிக் கிடந்த இரண்டு இரண்டு அறைகளைத் திறந்து காட்டினார்கள். பல பழைய பொருள்கள்.

அருங்காட்சியகம் அமைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. மகப்பேறு இல்லத்தை என்ன செய்வது? தரைத்தளத்தில் மகப்பேறு இல்லம்; முதல் மாடியில் அருங்காட்சியகம் அமைக்கலாமா? மகப்பேறு இல்லத்தை வேறொரு கட்டடத்திற்கு மாற்றி முழு வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்றலாமா?

இதற்கிடையே மகப்பேறு இல்லத்தை இடம் மாற்றி, புதிதாக ஏழு மாடி மருத்துவமனை மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு கட்ட பெரிய திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டிருந்தது. அதற்கு நிதியாதாரம் என்ன, யார் அதை நடத்துவது என்று விடை தெரியாத பல கேள்விகள்.

நேதாஜி பிறந்த வீடு; அவர் பிறந்த அறை; அரிய புகைப்படங்கள்; பள்ளிக்கூட ஆவணங்கள் என வரலாறு பிறந்து தவழ்ந்து, நடந்த வளாகம் அல்லவா? மகப்பேறு இல்லத்தை வேறொரு இடத்திற்கு மாற்றினால் தவிர அருங்காட்சியகம் சாத்தியம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

புவனேஸ்வரம் திரும்பியதும் முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்தேன். மகப்பேறு இல்லத்தை இடம் மாற்ற வேண்டிய தேவை, அந்த இடத்தில் ஏழு மாடி மருத்துவமனையின் சாத்தியமின்மை பற்றி விளக்கினேன். பழைய முன்மொழிவைக் கைவிட்டு அருங்காட்சியகம் மட்டும் அமைக்க புதிய திட்டம் சமர்ப்பிப்பதாக மைய அரசிடம் தெரிவிப்பதற்கு முதல்வர் அனுமதியளித்தார்.

மறுநாள் டெல்லியில் சாஸ்திரி பவனில் கலந்தாய்வுக் கூட்டம். அப்போது முனைவர் ஆர்.வி.வைத்தியநாத அய்யர் மைய அரசின் பண்பாட்டுத் துறைச் செயலாளர். அருங்காட்சியகம் அமைக்கும் புதிய செயல் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க உறுதி அளித்தேன். ‘மாநில அரசும் மத்திய அரசும் சமமாக செலவைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் 1.5 கோடி ரூபாய் வரை நிதி அளிக்க முடியும்’ என்றார்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

புதிய திட்டம் வடிவம் பெற்றது. மகப்பேறு இல்லம் தற்காலிகமாக அருகிலிருந்த இன்னொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய மருத்துவமனை கட்ட பழைய சிறைச்சாலைப் பகுதியிலிருந்த அரசு நிலம், சேவா சதனுக்கு வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை ஜானகிநாத் பவனைப் பண்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்தது. இதற்கிடையில் நீ.

கோபாலஸ்வாமி மைய அரசின் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். மைய அரசின் உயர்மட்டக் குழு 2001 செப்டம்பரில் ஒடிசா வந்தது. நேதாஜி வீட்டிலிருந்த பழைய பொருள்கள் எல்லாம் தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில முதல்வரின் தலைமையில் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தேசிய அறக்கட்டளை’யைப் பதிவு செய்தோம். பண்பாட்டுத்துறைச் செயலாளர் என்ற முறையில் அறக்கட்டளையில் நானும் இடம் பெற்றேன்.

முதல் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அருங்காட்சியகத்தை உருவாக்கும் பணியை அனுபவம் மிக்க இண்டாக் (INTACH) நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.

நேதாஜியை நேரில் பார்த்தவர்கள், இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்கள் தங்களிடமுள்ள நினைவுப்பொருள்களை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக அல்லது விலைக்குத் தந்து உதவும்படி இந்தியா முழுவதும் பல பத்திரிகைகளில் வேண்டுகோள் விடுத்தோம். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து கிடைத்த ஆதரவு அபாரமானது. எங்கள் அதிகாரிகள் விஜயநகரம், சென்னை, எர்ணாகுளம், கொல்கத்தா, டெல்லி ஆகிய இடங்களுக்குச் சென்று பல பொருள்களை, அரிய புகைப்படங்களைத் திரட்டி வந்தார்கள்.

2003 ஜனவரி 23-ம் தேதி. நேதாஜி பிறந்த நாள். நேதாஜி நினைவு இல்ல அருங்காட்சியகத்தை முதல்வர் நவீன் பட்நாயக் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நினைவுப்பொருள்களை நன்கொடையாக அளித்த ஐ.என்.ஏ வீரர்களை, வீராங்கனைகளை அரசு விருந்தினர்களாக விழாவில் கலந்துகொள்ள அழைத்திருந்தோம். நேதாஜியின் மகள் அனிதா போஸுக்கும் அழைப்பு விடுத்தோம். அவரால் பங்கேற்க இயலவில்லை.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

சென்னையிலிருந்து கேப்டன் டி.தாசன், லெப்டினெண்ட் ஆர்.லட்சுமி தேவி நாயுடு, கேப்டன் சி.எம்.சந்தானம், ஜி.வேணுகோபாலன், கே. நாகையா, ஆர். சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா மேடையில் அவர்களுக்கு நினைவுப் பரிசளித்து முதல்வர் கௌரவித்தார். முதுமையைப் பொருட்படுத்தாமல் சென்னையிலிருந்து வந்திருந்த ஐ.என்.ஏ தியாகிகள் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசி மகிழ்ந்தேன்.

விழா முடிந்து புவனேஸ்வரம் திரும்புகிறேன். மீள் நினைவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பின்னோக்கி மதுரைக்குச் செல்கிறது எனது மனம். எழுபதுகளின் தொடக்கம். நாங்கள் குடியிருந்த பகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் பொதுக்கூட்டம். தீப்பொறி ஆறுமுகம் பேச வந்திருக்கிறார். இரண்டு டயர் வண்டிகளைச் சேர்த்து நிறுத்தி டியூப் லைட் கட்டி ஒரு மைக் வைத்தால் அதுதான் மேடை. பின்னணியில் முக்கிய தேசியத் தலைவர்களின் படங்கள், மாலை போட்டு. அதில் நேதாஜியின் படமும் ஒன்று.

அப்போது திடீரென்று எங்கள் பகுதியில் வசிக்கும் பெரியவர் ஒருவர் எழுந்து நின்று சத்தம் போட்டு உரையை நிறுத்தச் சொன்னார். அவர் கோபத்திற்குக் காரணம், நேதாஜியின் படத்திற்கு மாலை போட்டிருந்ததுதான். “இறந்தவர்கள் படத்துக்குத்தானே மாலை போடுவார்கள். நேதாஜி இறந்துவிட்டார் என்று உங்களுக்கு யார் சொன்னது?” எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பேச்சு தடைபட்ட கோபத்தில் தீப்பொறி ஆறுமுகம். ஏற்கெனவே பேசிவிட்டு வண்டிக்குக் கீழே மடக்கு சேரில் அமர்ந்திருந்தேன். கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக நான் மேடையில் ஏறி அந்த மாலையைக் கழற்றினேன். இந்தச் சம்பவத்தை எப்பொழுதோ மறந்துவிட்டேன். ஆனால், கட்டாக்கில் திடீரென்று எனக்குள் அது உயிர்த்தெழுந்துவிட்டது.

தமிழ் நெடுஞ்சாலைக்காகக் கணிப்பொறியில் குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஐ.என்.ஏ தமிழர்கள் பற்றிய தேடலில் சென்னைக் கொளத்தூரில் வசிக்கும் லெட்சுமி கிருஷ்ணன் பற்றிய செய்தி. பொதிகைத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணல் பார்த்து, 2003 துவக்க விழாவிற்கு இவர் வரவில்லையே என்று தோன்றியது. நண்பர் ஒருவரின் உதவியால் தொடர்பு எண் கிடைக்க, தொலைபேசியில் அழைக்கிறேன். அவரின் மகள் பேசினார். அதன்பின் 93 வயது லெட்சுமி கிருஷ்ணனிடம் பேசுகிறேன். அவரது குரலில் அப்படி ஒரு பெருமிதமும் கம்பீரமும். ‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி பிறந்த வீட்டைப் பார்ப்பதற்காக கட்டாக் வந்தேன்” என்றார். அருங்காட்சியகம் பற்றிச் சொல்லிவிட்டு நேதாஜி இல்லத்தின் புதிய புகைப்படங்களை வாட்ஸப்பில் அனுப்பி வைத்தேன். “அம்மா நேரில் வந்து பார்க்க விரும்புகிறார்” என்றார் அவர் மகள். இருவரையும் ஒடிசாவின் விருந்தினர்களாக வரும்படி அழைக்கிறேன். ‘கொரோனா தணிந்ததும் வருகிறோம்’ என்றார்.

நேதாஜி பிறந்த வீட்டிற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவிக்கும்போதெல்லாம் நான் அந்த டயர் வண்டி மேடையில் நிற்பது போல உணர்கிறேன். ஒரு நீள்வட்டப் பாதையில் கால நில இடைவெளிகள் கரைந்த நிகழ் நிழல் கண்ணாடியில் கறுப்பும் வெள்ளையும் கலந்த ஒரு மெல்லிய புகையாய் ஞாபக விழுதுகள். நாயுருவி விதைகள்போல சட்டையில் ஏதோ ஒட்டிக்கொண்டு உடன் வருகிறது.

- பயணிப்பேன்...

லட்சுமி கிருஷ்ணன்
லட்சுமி கிருஷ்ணன்
லட்சுமி கிருஷ்ணன்
லட்சுமி கிருஷ்ணன்
தமிழ் நெடுஞ்சாலை - 9 - நேதாஜி பிறந்த வீடு

ஐ.என்.ஏ தமிழர்கள்

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்கியவர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள்.

பெண்கள் படையான ஜான்சி ரெஜிமெண்டில் பெரும்பாலோனோர் தமிழ்ப் பெண்கள். இந்தப் படையின் தலைவர் லட்சுமி சுவாமிநாதன். பின்னர் லெட்சுமி ஷாகல் என்று அறியப்பட்டார். பர்மாவிலிருந்து போர்க்கைதியாகத் திரும்பிய இவர் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரானார். 1971-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ல் பத்ம விபூஷண் விருது பெற்றார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சத்யவதி, மலேசியாவைச் சேர்ந்த ஜானகி அந்தப் படைப் பிரிவில் முக்கியப் பங்காற்றினர். ஜானகி பின்னர் மலேசியா செனட்டின் உறுப்பினராக இருந்தார். அவருக்கு 2000-ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருதளித்தார்.

தமிழர்களின் பங்களிப்பு இந்திய தேசிய ராணுவம் தொடர்பானது மட்டும் அல்ல. ஆசாத் ஹிந்த் தேசிய வங்கி ரங்கூனில் தொடங்கப்பட்டபோது அந்த வங்கியில் இருந்த பெயர்ப்பலகையில் காணப்படும் முருகேசன், நடராஜன், குமார், கணபதி, குமரய்யா, டேவிட், டேனியல் போன்ற பெயர்கள் இதற்குச் சான்று.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது