மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 24 - புனைகதை போலொரு நிஜம்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

சிகாகோ என்ற பெயர் நார்மன் ஜீடேயால் எனக்குள் விதைக்கப்பட்ட விதை...

21 ஜனவரி 2017. சான்பிரான்சிஸ்கோ பன்னாட்டு விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் விமானத்திற்காக நானும் என் மனைவியும் காத்திருக்கிறோம்.

கோப்புகளை உருட்டாமல் கூட்டங்கள் நடத்தாமல் ஓர் உலகப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரங்கள் இருந்தால் இவ்வளவு இலகுவாகிவிடுமா மனசு! தலைமுடி மீண்டும் கறுப்பதுபோலத் தோன்றியது பிரமைதான். பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கோல்ட்மேன் பொதுக்கொள்கை நிறுவனத்தில் (Goldman School of Public Policy) பயிற்சி. சைக்ளோட்ரான் தெருவில் 'பெர்க்கிலி லேப்’ விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தோம். அருகே லாரன்ஸ் பெர்க்கிலி தேசிய சோதனைக்கூடம். 1939இல் துகள் இயற்பியல் வரலாற்றில் புதிய மைல்கல்லான சைக்ளோட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஆங்காங்கே ‘நோபல் பரிசு பெற்றவர்கள் கார்களை நிறுத்துமிடம்’ என்ற அறிவிப்புப்பலகைகள். நோபல் பரிசு பெற்ற 61 பேராசிரியர்கள் பணியாற்றுவதாக அறிந்தேன். 24 நூலகங்கள் ஒருங்கமைந்த மாபெரும் நூலக வளாகம். 400க்கும் மேற்பட்ட மொழிகளில் 1.34 கோடி நூல்கள். பிரமிக்கவைக்கும் வாசிப்புக்கூடம். வணங்கத்தான் முடிந்தது. காற்றை ஆழமாக உள்ளிழுத்து சுவாசித்தேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

செல்வத்தின் பயன் ஈதல். உயர்கல்விக்கு வாரிக்கொடுக்கும் தொழில் நிறுவனங்கள். கலிபோர்னியா பல்கலைக்கழக அறக்கட்டளையின் கையிருப்பு 1.59 பில்லியன் டாலர். பயிலரங்கின் கடைசி நாள் ஓர் எதிர் பாராத அனுபவம். சர்வதேச பேச்சுவார்த்தைகள் பற்றிய செயல்முறை வகுப்பு. அமெரிக்க அதிபர், மெக்சிகோ அதிபர், கனடா பிரதமர் இடையிலான பேச்சுவார்த்தை. அப்போது அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றிருந்தார். இன்னும் பதவி கூட ஏற்கவில்லை. வகுப்பறைக்குச் சென்ற பின்தான் தெரியும், ‘நான்தான் ட்ரம்ப்’ என்பது. மெக்சிகோ சுவர், இறக்குமதி வரி, அனுமதியற்ற குடியேற்றம், கச்சா எண்ணெய் ஏற்றுமதி என்று சீரியசாகப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, கடைசியில் எனது மதுரைக் குசும்பைக் கொஞ்சம் எடுத்துவிட்டபோது பேராசிரியர்களும் சிரித்தார்கள். அமெரிக்கர்களின் நகைச்சுவை உணர்வு உலகறிந்தது. அது அவர்களின் கேடயமும்கூட.

சான்பிரான்சிஸ்கோ - சிகாகோ நான்கு மணி நேரப் பயணம். விமான நிலையத்தில் ஜிம் என்ற ஜேம்ஸ் நை. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆவணப்புலத்தின் முக்கிய ஆளுமை. அவரது அழைப்பில்தான் இந்த சிகாகோ பயணம். ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் மூலமாக அறிமுகம். இந்த ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. அங்கு இயங்கும் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராக ஐராவதம் மகாதேவன் எனது பெயரைப் பரிந்துரைத்திருந்தார். அதன்படி 2011 இறுதியில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சுந்தருடன் ஜிம் வந்திருந்தார். அப்போது நான் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றினேன். இருவரும் கிளம்பிச் சென்ற மறுநிமிடமே இணையத்தில் தேடினேன். நார்மன் ஜீடே என்ற பெயரை.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

சிகாகோ என்ற பெயர் நார்மன் ஜீடேயால் எனக்குள் விதைக்கப்பட்ட விதை. அது ஒரு வார்த்தையா, வசியமா, என் கழுத்தில் கட்டிவிட்ட தாயத்தா? எதுவானால் என்ன.

1989ஆம் ஆண்டு. ஆளரவற்றமற்ற அந்த அழகிய அடர்காட்டுத் தார்ச்சாலை, மழையில் குளித்துப் பேரழகானது. ஆந்திர எல்லைப் பகுதியிலுள்ள சில பழங்குடி கிராமங்களுக்குச் சென்றுவிட்டு கோராபுட் திரும்புகிறேன். குடையுடன் ஒரு வெளிநாட்டுக்காரர் ஒரு ‘டிராக்ஸ்’ வண்டியைக் கை அசைத்து நிறுத்த முயற்சி செய்தார். வண்டி நிற்கவில்லை. எனது ஜீப்பை நிறுத்தச் சொன்னேன். ‘‘எங்கே போகவேண்டும்?” என்று கேட்டேன். ‘ஜெய்ப்பூர்’ என்றார். ‘‘ஏறிக்கொள்ளுங்கள்’’ என்றேன்.

அவர் நிச்சயமாக சுற்றுலாப் பயணி இல்லை. விசாரித்தேன். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் நார்மன் ஜீடே. தூக்கிவாரிப் போட்டது. ராஞ்சியில் ஒரு நூலகத்தில் முண்டா மொழிகள் பற்றிய அவரது நூல் ஒன்றை ஜெராக்ஸ் போட்டு எடுத்துவந்து அப்போதுதான் படித்திருந்தேன். எனது பெயரை மட்டும்தான் சொன்னேன். ‘நீங்கள் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியா’ என்று கேட்டார். அடிக்கடி இந்தியா வருபவர் அவர். கதபா பழங்குடிகளின் ஈமச் சடங்குகள் பற்றி ஆராய்ந்து வருவதையும் கோயா மொழி கற்பதையும் அவரிடம் தெரிவித்தேன். அவர் அமெரிக்கா திரும்பும் முன் மீண்டும் ஒருமுறை சந்தித்து எனது கள ஆய்வுக் குறிப்பேடுகளைக் காட்டி, சில ஐயங்கள் கேட்டேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

சில நாள்களுக்குப் பின் எனது மேலதிகாரியான எஸ்.கே.மேனனின் தொலைபேசி. ‘‘நார்மன் ஜீடே என்னைச் சந்தித்தார். உன்னை பார்சல் பண்ணி சிகாகோவுக்கு அனுப்பச் சொன்னார்” என்று சொல்லிச் சிரித்தார். மேனனை பெர்ஹாம்பூரில் நேரில் சந்தித்தேன். அவர் ஒரு சிறந்த வாசிப்பாளர். அவரின் மனைவி பண்பாட்டு மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவந்தார். ‘‘நார்மன் ஜீடேயே சொல்லிவிட்டார். எப்போது கிளம்புகிறாய்” என்று சீரியசாகக் கேட்டார். ‘‘என்னிடம் அவர் இப்படிச் சொல்லியிருந்தால் இந்நேரம் மூட்டையைக் கட்டியிருப்பேன்” என்றார் மேனன்.

என் மனைவியிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்தேன். அவர் மேனன் சொன்னதை ஆதரித்தார். ஆராய்ச்சியும் கல்விச்சூழலும் என்னை மேலும் மகிழ்விக்கும் என்பது அவரது கருத்து. அப்போது என் மூத்தமகள் 15 மாதக் குழந்தை. “அது இது என்று ரொம்ப யோசிக்காதீங்க. மனசுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்” என்றார். அறியாதவை குறித்த அச்சமும், அமெரிக்கா போவதற்காகவா ஐ.ஏ.எஸ் எழுதினோம் என்ற கேள்வியும் எனக்குள். ‘`ஆட்சிப்பணிதான் பிடித்திருக்கிறது’’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

2007இல் டில்லியில் ஒருநாள். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாவட்டங்களில் ஏறி இறங்கி டில்லி திரும்பி நேராகத் தேர்தல் ஆணையம் சென்று வேலைகளை முடித்துவிட்டு 11 மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்ட சில நிமிடங்களில் கணிப்பொறியில் சிந்துவெளி இடப்பெயர்களை நோண்ட ஆரம்பித்தபோது என் மனைவி கேட்டார். “சிகாகோ போயிருக்கலாம்தானே” என்று.

2016இல் 80 ஆண்டு வரவுசெலவுத் திட்டங்களின் ஊடாக ஒடிசாவின் பொருளாதார வளர்ச்சியை ஆவணப்படுத்த விரும்பினோம். 1916இல் ஒடிசா மொழி அடிப்படையில் தனிமாநிலமாக உருவானதன் வரலாற்றுப் பின்னணி குறித்த சில முக்கியமான ஆவணங் களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஜிம்மிடம் கேட்கலாம் என்றார் சுந்தர். ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட அரிய ஆவணங்களை ஒரு குறுந்தகட்டில் பதிவிட்டுக் கொடையாக அளித்தார் ஜிம். அடுத்த சில மாதங்களில் அவரை ஒடிசா தலைமைச் செயலகத்தில் சொற்பொழிவாற்ற அழைத்தோம். அவரது உரையை மாநில முதல்வரும் கேட்டார் என்பது சிறப்பு.

ஜனவரி 22, 2017. சிகாகோவை ஒருநாள் முழுவதும் எங்களுக்குச் சுற்றிக்காட்டினார் ஜிம். இரவில் ஒரு உணவுவிடுதிக்கு அழைத்துச் சென்றனர் ஜிம்மும் அவரின் மனைவி ஜீனும்.

“நார்மன் ஜீடே இப்போது எங்கே இருக்கிறார்” என்று கேட்டேன்.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

‘‘சிகாகோவில்தான் வசிக்கிறார். 90 வயதிருக்கும். உடல் நலமில்லை. அவரது வீடுகூட இங்கிருந்து நடந்துபோகும் தூரம்தான். என்ன விஷயம்? அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“சரியாக 28 வருடங்களுக்கு முன்பு என்னை சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய அழைத்தார்” என்றேன்.

‘‘ஜீடேயை நாளை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியுமா?” என்று கேட்டேன்.

‘‘சந்தேகம்தான். நீங்கள் அவரை கோராபுட்டில் சந்தித்ததையும் இப்போது சிகாகோ வந்திருப்பதையும் அவருக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன்” என்றார்.

சிகாகோ பல்கலைக்கழகம். காற்றில் தெரிகிறது கல்வியின் தரம். இங்கே படித்து நோபல் பரிசு வாங்கியவர்கள் 89 பேர். பல்கலைக்கழகத்தின் நூலகத்தைச் சுற்றிக்காட்டினார் ஜிம். விசைக்கொள்கை நிறுவனத்தின் (Energy Policy Institute at University of Chicago) இயக்குநர் மைக்கேல் கிரீன் ஸ்டோனைச் சந்தித்தேன். அதன்பிறகு தெற்கு ஆசிய மொழிகள் துறையில் ‘சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ பற்றிப் பேசினேன். பழந்தமிழ் சங்க இலக்கியம்தான் இந்தியத்துணைக்கண்ட நகர்மய வாழ்வியல் குறித்த ஆகச்சிறந்த செவ்வியல் இலக்கியம் என்பதை வலியுறுத்திய நான், கீழடியில் அதுவரை கிடைத்திருந்த சான்றுகளையும் விளக்கினேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அமெரிக்காவின் உண்மையான பலம் அதன் படைகளா அல்லது அதன் பல்கலைக்கழகங்களா என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. ஆண்டுதோறும் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கவருகிறார்கள். சீனர்கள் முதலிடம், இந்தியர்கள் இரண்டாவது இடம். உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இயல்பாக இயங்குகின்றன. பெர்க்கிலி லேப் உணவுக்கூடத்தில் எங்களுடன் அமர்ந்து சாப்பிட்டவர்களில் நோபல் பரிசு பெற்றவர்களும் இருக்கலாம். பிறக்கும்போதே பெருத்திருந்த மூளை கசிந்து நெற்றியில் வழிவது போன்ற பொய்த்தோரணை யாரிடமும் இல்லை. சிகாகோவிலிருந்து வாஷிங்டன், நியூயார்க் சில நாள்கள் சுற்றிப் பார்த்துவிட்டு ஏர் இந்தியாவில் டில்லிக்கு நானும் எமிரேட்சில் துபாய் வழியாக சென்னைக்கு என் மனைவியும் பறந்தோம். கைப்பேசியில் காட்சிப்படங்கள். நான் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேசுவதைப் படம்பிடித்திருந்தார் மனைவி. “அங்கும் இங்கும் ஓடி கடைசியில் சிகாகோவிற்கு வந்து ஆய்வுரை நிகழ்த்திவிட்டீர்கள்” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

2017 ஏப்ரல் 3ஆம் தேதி ஒடிசா அரசிற்கும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் செயல் நோக்கப் புரிந்துணர்வு கையெழுத்தானது. ஒடியா இணையக் கல்விக்கழகம் ஜிம் வழிகாட்டுதலில் உருவானது. மைக்கேல் கிரீன்ஸ்டோன் ஒடிசா வந்தார். ஒடிசாவிலுள்ள பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகளின் அளவை மெய்நிகராகக் கண்காணிக்கும் திட்டத்தை சிகாகோ பல்கலைக் கழகத்தின் உதவியுடன் செயல்படுத்தினோம். வாழ்க்கை மிகவும் ரசனையானது. தனித்தனிப் புள்ளிகள் போலவும் இருக்கிறது. புள்ளிகள் இணைந்த கோடுபோலவும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ‘இரண்டு குதிரைகளில்’ நான் ஏறிப் பயணிக்கும் தமிழ் நெடுஞ்சாலை. புனைகதை போல முன் நின்று புன்னகைத்துப் போகிறது நிஜம்.

- பயணிப்பேன்

சிகாகோ
சிகாகோ

சிகாகோ

இலினொய் மாநிலத்தில் மிச்சிகன் ஏரிக்கரையில் அமைந்துள்ள சிகாகோவின் மக்கள் தொகை 30 லட்சம். ஆண்டுதோறும் 4 கோடிக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எல்லாம் 200 ஆண்டு வரலாறும் வளர்ச்சியும்தான். 1831இல் சிகாகோ நகரம் உருவானது. 1871ஆம் ஆண்டு நகரின் மூன்றில் ஒரு பகுதி தீக்கிரையானது. அந்தச் சாம்பலிலிருந்து மீண்டும் எழுந்ததுதான் இன்றைய சிகாகோ. கட்டடக்கலையின் பரிசோதனைக்கூடம். எஃகுத்தூண்களைக் கொண்ட வானளாவிய கட்டடங்கள் இங்குதான் முதன்முதலில் கட்டப்பட்டன. நகரின் ஊடாகப் பாயும் சிகாகோ நதி. அகன்ற நடைபாதைகள், 552 பூங்காக்கள். 33 ஏரி மணல்வெளிகள், ஒன்பது அருங்காட்சியகங்கள், 16 சரித்திரப் புகழ்பெற்ற ஏரிக்காயல்கள், 10 பறவை மற்றும் வனவிலங்குக் காப்பகங்கள். ஜாஸ் இசையின் மையம். அவசரகதியைத் தாண்டிய அழகியல்.

‘கிளவுடு கேட்’ (Cloud Gate) என்று அழைக்கப்படும் நவீன திறந்தவெளிச் சிற்பத்தைப் பார்த்தோம். இதை வடிவமைத்தவர் அஷீஸ் கபூர் என்ற இந்தியர். 100 டன் எடை கொண்ட துருப்பிடிக்காத எஃகுத்தகடுகளால் செய்யப்பட்டது. 2006இல் திறக்கப்பட்ட இந்தச் சிற்பம், சிகாகோவின் முத்திரை அடையாளமாக மாறிவிட்டது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது