சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல இசை மேதை ஜோசப் ஹைடன் (Joseph Haydn). மேற்கத்திய இசை உலகில் மிகவும் புகழ்பெற்றவர், சிம்பொனி இசையின் முன்னோடி என்று இவரைக் கூறலாம். பிரபல இசைக் கலைஞர் மொஸார்ட் இவரின் தீவிர ரசிகர்.

ஜோசப் ஹைடன் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இறுதியாக மே 31, 1809 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது எழுபத்தேழு. உலக அளவில் புகழ்பெற்ற அந்த இசைக் கலைஞரை அவரது சொந்த நாடு கௌரவிக்க நினைத்தது. அவரது உடல் கெட்டுப்போகாத அளவுக்குப் பதப்படுத்தப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் புதைக்கப்பட்டது.
என்றாலும் அவரது வாரிசுகளுக்கு ஒரு குறை இருந்தது. மேலும் அதிக மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவருக்காக ஒரு நினைவாலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆனால் அப்போது ஆஸ்திரியா போர்ச்சூழலில் இருந்தது. தவிர நெப்போலியனின் படைகள் வேறு வியன்னாவைச் சூழ்ந்திருந்தன.
சுமார் பத்து ஆண்டுகள் கடந்தபின் ஜோசப் ஹைடனின் வாரிசுகள் அவருக்கு ஒரு நினைவாலயம் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார்கள். வியன்னாவில் இருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தள்ளியுள்ள தங்கள் கிராமத்தில் இந்த நினைவாலயம் அமைய வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

இதற்காக அவரது உடலை வியன்னாவில் இருந்த அந்தக் கிராமத்துக்குக் கொண்டு செல்ல அரசின் அனுமதியைக் கேட்டார்கள். ஆஸ்திரிய அரசும் சம்மதித்தது.
இதைத்தொடர்ந்து அவரது சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. அதைத் திறந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இசை மேதையின் துண்டிக்கப்பட்ட உடல் பகுதி மட்டுமே இருந்தது. தலையைக் காணவில்லை.
அரசு உடனே விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. யார் இந்தக் குற்றத்தைச் செய்தது என்று கண்டுபிடிக்க காவல் துறையும் உளவுத்துறையும் முடுக்கி விடப்பட்டன. அவர்களின் சந்தேகம் ஜோசப் ஜீ ன் என்ற மந்திரவாதியின் மீது விழுந்தது.
இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகளுக்கு மண்டையோடுகள் தேவைப்பட்டன. எனவே இறந்தவர்களின் மண்டையோடுகளை விற்கவும் வாங்கவும் அரசு அப்போது அனுமதி தந்தது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியாளர்களைவிட மந்திரவாதிகள் இவற்றை பெருமளவில் வாங்கத் தொடங்கினார்கள். (மண்டை ஓடுகளை பூஜைசெய்து இஷ்ட தேவதைகளை வரவழைத்து வேண்டிய வரத்தைப் பெறும் பழக்கம் மந்திரவாதிகளிடையே இருந்தது. இதை 'ப்ளாக் மேஜிக்' என்பார்கள்).

எனவே பொதுமக்களிடையே மண்டையோடுகளை விற்கும் பழக்கத்துக்குக் கடும் எதிர்ப்பு உண்டானது. ஒரு கட்டத்தில் (1802-ல்) அந்த விற்பனை அனுமதி சட்டத்தை ரத்து செய்தது அரசு. அதாவது மண்டை ஓடுகளை வாங்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இப்படித் தடை விதிக்கப்பட்டவுடன் மண்டையோடுகளைத் திருட்டுத்தனமாகப் பெற முயன்றனர் சில மந்திரவாதிகள். அந்தக் கோணத்தில்தான் மேலே குறிப்பிட்ட ஜோசப் ஜின் என்ற மந்திரவாதி மீது சந்தேகம் விழுந்தது.
ஒருவேளை அவர்தான் திருட்டுத்தனமாக இசை மேதையின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டாரோ என்று விசாரணை நடந்தது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். ஆனால் எந்தச் சான்றும் கிடைக்கவில்லை.
ஹைடனுக்கு ஏற்கெனவே அறிமுகமான இருவர், பீட்டர் மற்றும் ரோஸன்பாம் என்பவர்களின் மீதும் கூட சந்தேகம் எழுப்பப்பட்டது. அவர்கள் தங்களது அரைகுறை அறிவியல் ஆராய்ச்சிக்கு அந்த மண்டையோட்டைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.
சில வருடங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் உடலுறுப்பு ஆராய்ச்சியாளராக விளங்கிய ஒருவரிடம் ஜோசப் ஹைடனின் மண்டை ஓடு இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. அவரிடம் விசாரித்தபோது தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றார். தன்னிடம் இருக்கும் மண்டை ஓட்டை அவர்கள் சரி பார்க்கலாம் என்றார். "எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் கொடுத்துத் தொலையுங்கள்" என்று கத்தினார்.

ஆனால் பல வருடங்களான மண்டையோட்டை வைத்துக்கொண்டு அது அந்த இசை மேதையின் மண்டையோடுதானா என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு அந்தக் கால அறிவியல் முன்னேற்றமடையவில்லை. எனவே இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு.
இந்த நிலையில் இசை மேதையின் தலையில்லாத உடலுக்கு ஓர் செயற்கைத் தலைப்பகுதியைப் பொருத்தி நினைவாலயம் ஒன்றை எழுப்பினார்கள்.
பல வருடங்கள் கழிந்தபிறகு பால் எஸ்டெர்ஹேசி என்ற இளவரசரின் கடும் முயற்சியால் பல கைகள் மாறியிருந்த ஹைடனின் தலைப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. (ரோஸன்பாம் மூலமாகத்தான் அந்தப் பகுதி கைமாறியதாம்). அந்தப் பகுதியும் அவரது உடலில் பொருத்தப்பட்டது. பழைய தலையை நீக்குவதற்கும் தயக்கம் உண்டானது.
எனவே இரண்டு மண்டையோடுகளுடனும் அந்த இசை மேதையின் உடல் காட்சியளிக்கிறது!