Published:Updated:

செஞ்சிக் கோட்டை சிறப்புகள்: 830 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரமாண்டம்; தமிழ் மன்னர்களின் ஒரே கோட்டை!

செஞ்சிக் கோட்டை

செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னர். ஒரு பெரும் புதையல் கிடைத்து, இவர் தனக்காக ஒரு படை சேர்த்து, கோட்டை கட்டியதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:

செஞ்சிக் கோட்டை சிறப்புகள்: 830 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரமாண்டம்; தமிழ் மன்னர்களின் ஒரே கோட்டை!

செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னர். ஒரு பெரும் புதையல் கிடைத்து, இவர் தனக்காக ஒரு படை சேர்த்து, கோட்டை கட்டியதாகச் சொல்கிறார்கள்.

செஞ்சிக் கோட்டை
தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் கலைநயத்துடன் உருவாக்கிய நூற்றுக்கணக்கான கோயில்களை நாம் இன்றும் பார்த்து வியக்கிறோம். ஆனால், அந்த மன்னர்கள் கட்டிய கோட்டைகளோ, வாழ்ந்த அரண்மனைகளோ ஒன்றுகூட இப்போது இல்லை.

தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதற்கெல்லாம் சாட்சி சொல்லும் சரித்திர அடையாளமாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் கோட்டை. சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் ஒரே தமிழ் மன்னர்களின் கோட்டை.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில்சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை, செஞ்சிக் கோட்டை.

சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு செஞ்சி எழுச்சி பெற்றது. புதுச்சேரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இன்று ஒரு சிறுநகரமாக இருக்கும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்தது.

செழிப்பும் செல்வமும் நிறைந்த நகராக செஞ்சி திகழ்ந்தது. செஞ்சிக்கு வந்திருந்த போர்ச்சுக்கீசிய மதபோதகரான பிமெண்டா, ‘நான் இந்தியாவில் பார்த்த நகரங்களில் செஞ்சி மிக சிறப்பானது. போர்ச்சுகல் நாட்டில் இருக்கும் லிஸ்பன் நகரைத் தவிர மற்ற எல்லா நகரங்களையும்விட இது பெரியது’ என வியந்து எழுதினார். அப்போது தென்னிந்தியாவில் மிக வசதியான தேசமாக செஞ்சி கருதப்பட்டது.

அந்தக் கால மன்னர்கள் போர் செய்து எதிரிகளை வெல்வதைவிட, சொந்த நாட்டின் மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதையே பெருமையாகக் கருதினர். அப்படி ஒரு பாதுகாப்பான தலைநகரமாக செஞ்சி இருந்தது. 60 அடி அகல கோட்டைச்சுவர், அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத் தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்த செஞ்சிக்கோட்டை, இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. இதனாலேயே இதை 'கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை’ என ஐரோப்பியர்கள் புகழ்ந்தனர். பல ஆண்டுகள் எதிரிப்படைகள் முற்றுகையிட்டாலும் வீழாத கோட்டையாக இது இருந்தது.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை
சுற்றிலும் நான்கு மலைகள். அவற்றின் உச்சியில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் என கோட்டைக் காவல் அமைப்புகள், இந்த மலைகளின் மீது பிரமாண்டமான மலைப்பாம்பு போல நீளும் கோட்டைச்சுவர், நடுவில் திறந்தவெளி... இதுதான் செஞ்சி.

இவற்றில் உயரமான மலை, ராஜகிரி. ஒரு உரலில் குழவியை வைத்தது மாதிரி செங்குத்தான மலைப் பகுதி இதன் உச்சியில் உள்ளது. 800 அடி உயரமுள்ள மலை இது. 1012 படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். இதன் உச்சியை நெருங்கும் இடத்தில் இயற்கையாகவே ஒரு மலைப்பிளவு உண்டு. இதன்மீது இப்போது மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள். முன்பு இங்கிருந்த தற்காலிகப் பாலத்தை போர்க்காலங்களில் அகற்றிவிட்டால், எதிரிகள் நெருங்கவே முடியாது. அரசவை உள்ளிட்ட மன்னரின் நிர்வாகப் பணிகள் நடைபெறும் இடம் இது.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

இரண்டாவது மலை, கிருஷ்ணகிரி. சுமார் 300 விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் அழகிய தர்பார் மண்டபம் இதன் உச்சியில் உள்ளது. காற்று உள்ளே வந்து தாலாட்ட வசதியாக திறந்த சாளரங்களுக்கு மத்தியில் மன்னர் அமர இருக்கை. சுற்றிலும் விருந்தினர் இருக்கைகள் உள்ளன. இந்த இரண்டு மலைகளிலும் கோயில்கள், தானியக் களஞ்சியம் என எல்லாமே உள்ளன.

மற்ற இரண்டு மலைகளில் காவல் அரண்கள் தவிர முக்கியமாக ஏதுமில்லை.

இந்த மூன்று மலைகளுக்கு மத்தியில் கீழ்க்கோட்டைப் பகுதி உள்ளது. இங்கு சிவன் கோயில், வேணுகோபால சுவாமி கோயில், வெங்கடரமணர் கோயில் என நிறைய கோயில்கள் உள்ளன. இவற்றில் குறிப்பாக வெங்கடரமணர் கோயிலின் பிரமாண்டம் எவரையும் வியக்க வைக்கும்.

பாதுகாப்பு அரண்களைக் கடந்து கோட்டையின் மையப் பகுதிக்குச் சென்றால், கல்யாண மகால் நம்மை வரவேற்கும். மையத்தில் ஒரு மேடை; நீச்சல் குளம், தண்ணீர் வருவதற்கு சுடுமண் ஓடு குழாய்கள், சுற்றிலும் அரச குடும்பப் பெண்கள் தங்குவதற்கு அறைகள் இருக்கிறது. இதன் ஒரு பகுதியில் எட்டு அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது. மேலும் கீழும் செல்ல குறுகிய செங்குத்தான படிகள்; ஒவ்வொரு அடுக்கிலும் நடுவில் ஒரு அறை. இதன் உச்சி வரை தண்ணீர் செல்ல அந்தக் காலத்திலேயே சுடுமண் குழாய் பதித்திருந்த தொழில்நுட்பம் வியக்க வைக்கும். இதற்கு இணையாகச் சொல்ல ஒரு கட்டடம் எங்கும் இல்லை!

இதன் எதிரில் வீரர்கள் வசித்த குடியிருப்புகள் தரைமட்டமாகக் காணப்படுகின்றன. அருகிலேயே குதிரை லாயம், யானை மண்டபம் போன்றவை உள்ளன. யானைகளைக் குளிப்பாட்ட யானைக்குளம் இருக்கிறது. வீரர்கள் பயிற்சி எடுக்க உடற்பயிற்சிக்கூடம், பக்கத்திலேயே வெடிமருந்துக் கிடங்கு போன்றவை உள்ளன. கோட்டையின் இன்னொரு பகுதியில் பாதாள சிறைச்சாலை உள்ளது.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

சற்றுத் தள்ளி அரண்மனையும் கொலு மண்டபமும் இருந்த இடத்தின் அடிப்பகுதி மட்டும் காணக் கிடைக்கிறது. மன்னரும் மகாராணியும் வசித்த இடம் இதுதான். இதன் மையத்தில் ஒரு பிரமாண்ட கல் மேடையும், மன்னர் சாய்ந்து உட்கார கல் உருளையும் உள்ளது. தினசரி மன்னர் பலரையும் சந்திக்கும் இடமாக இதுதான் இருந்திருக்க வேண்டும்.

பக்கத்திலேயே கல்லால் அமைத்த சுழல் படிக்கட்டுகளுடன் ஒரு கட்டடம் உள்ளது. அதன் மேலே இருந்த கட்டடங்களும் சிதைந்துவிட்டன.

இந்தக் கீழ்க்கோட்டை பகுதியில் பிரமாண்ட தானியக் களஞ்சியம் இருக்கிறது. மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இதில் தானியங்களை சேகரித்து வைத்துவிட்டால், கோட்டைக்கு வெளியில் வந்து எதிரிகள் பல ஆண்டுகள் முற்றுகையிட்டாலும் சமாளித்துவிடலாம்.

செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னர். ஒரு பெரும் புதையல் கிடைத்து, இவர் தனக்காக ஒரு படை சேர்த்து, கோட்டை கட்டியதாகச் சொல்கிறார்கள். அவர் தலைமுறையினர் படிப்படியாக கோட்டையை மேம்படுத்தினர். அதன்பின் விஜயநகரப் பேரரசு செஞ்சியை வெற்றி கொண்டது. 200 ஆண்டுகள் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள் இங்கிருக்கும் கோயில்கள், கல்யாண மகால், கோட்டை மதில் அரண் மற்றும் கொத்தளங்கள் என பலவற்றையும் கட்டினர். பிறகு பீஜப்பூர் சுல்தானிடம் செஞ்சி நாயக்கர் சரணடைந்தார். பீஜப்பூர் படை செஞ்சி நகரையே சூறையாடியது.

அவர்களிடமிருந்து மராட்டிய சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றினார். உள்ளேயிருந்து சிலர் உதவி செய்ததால்தான் அவரால் கோட்டையைக் கைப்பற்ற முடிந்தது. 'மராட்டிய மண்ணில்கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை' என சொன்ன சிவாஜி, கோட்டையை இன்னும் பாதுகாப்பாக மாற்றினார். சிவாஜியின் மரணத்துக்குப் பிறகு வட இந்தியாவில் தோல்வியுற்ற அவரது மகன் ராஜாராம், அதன்பின் அடைக்கலம் புகுந்தது செஞ்சியில்தான்.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

அதனால் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பின் கவனம் இந்தக் கோட்டை மீது விழுந்தது. கோட்டையும் அவர்களிடம் விழுந்தது.

செஞ்சி என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர், ராஜா தேசிங்கு. செஞ்சியை அவன் ஆண்டது வெறும் 10 மாதங்கள் மட்டுமே! மொகலாயர்களின் ஆளுநராக செஞ்சியை நிர்வாகம் செய்தவர் சொரூப் சிங். அவரது மகன் தேஜ் சிங். அவரையே 'தேசிங்கு' என்றனர் மக்கள். தந்தை மறைந்ததும் ராஜா தேசிங்கு 22 வயதில் ஆட்சிக்கு வந்தான். இந்த ஆட்சி மாற்றத்தை மொகலாயப் பேரரசு அங்கீகரிக்கவில்லை. சமாதானத்துக்கும் தேசிங்கு வரவில்லை.

அதனால் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்தார். 30 ஆயிரம் படைவீரர்களுடன் வந்த நவாப்பை வெறும் 350 குதிரைப்படையினர், 500 வீரர்களோடு எதிர்கொண்ட தேசிங்கு, சில மணி நேரங்களில் வீழ்ந்தான்.

பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் அதிகம் அவதிப்பட்டது செஞ்சிக் கோட்டை. 1750ம் ஆண்டு புஸ்ஸி என்பவர் தலைமையிலான பிரெஞ்சுப் படை செஞ்சிக்கோட்டையை கைப்பற்றியது. வெறும் 24 மணி நேரத்தில் செஞ்சியைக் கைப்பற்றியதை, இந்தியாவில் பெற்ற முக்கிய வெற்றியாக பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள் இன்றும் எழுதுகிறார்கள். கோட்டையில் பீரங்கிகளை நிறுவி, துப்பாக்கியால் சுடும் கூண்டுகளைக் கட்டி, பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தினார்கள் அவர்கள். பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் போரில் கடைசியாக பிரிட்டிஷ்காரர்கள் கையில் வீழ்ந்தது செஞ்சிதான். அந்த நாளோடு பிரெஞ்சுக்காரர்களின் பேரரசு கனவு முடிவுக்கு வந்தது.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

150 ஆண்டுகள் போர்களும் சூறையாடல்களுமாக நாள்கள் நகர்ந்ததால், செஞ்சி மூச்சுத் திணறிப் போனது. மக்கள் பயத்தோடு வெளியேறியதால் நகரம் களையிழந்தது. ஒரு சிறிய கிராமமாக செஞ்சி சுருங்கிப் போனது. கோட்டையை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் கொள்ளையர்களும் சமூக விரோதிகளும் குடியேறினர். தென் ஆற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த காரோ என்பவர், ‘கோட்டையால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை அழித்துவிட வேண்டும்’ என 1803ம் ஆண்டு அனுமதி கேட்டார். நல்லவேளையாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதை நிராகரித்தார்கள்; கோட்டை தப்பியது.

நம் முன்னோர்களின் பெருமிதமான சரித்திரத்தை நம் மனக்கண்ணில் நிறுத்துகிறது செஞ்சிக் கோட்டை. வீரர்களை சுமந்துகொண்டு குதிரைகள் சீறிப் பாய்ந்த பாதைகளும், வாள்கள் உரசிய வாயில்களும் இன்று வெறுமையை சுமந்துகொண்டு காத்திருக்கின்றன, வரலாற்றைத் தேடி வரும் நமக்காக!