Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 5 | மருதக்கோட்டை இடிந்த கதையும், விளக்குத்தூண் வந்த கதையும்!

பத்துத்தூண் தெரு

மதுரையைத் தூங்கா நகரம் என்று அழைப்பது சிலப்பதிகார காலத்திலேயே இருந்திருக்கிறது. பகலில் நாளங்காடியும், இரவில் அல்லங்காடியும் மதுரையில் இயங்கியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அல்லங்காடி எனும் இரவு வணிக வளாகங்கள் இருந்த பகுதியே இன்று சிம்மக்கல், யானைக்கல்சிலைகள் நிற்கும் பகுதியாகும்.

Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 5 | மருதக்கோட்டை இடிந்த கதையும், விளக்குத்தூண் வந்த கதையும்!

மதுரையைத் தூங்கா நகரம் என்று அழைப்பது சிலப்பதிகார காலத்திலேயே இருந்திருக்கிறது. பகலில் நாளங்காடியும், இரவில் அல்லங்காடியும் மதுரையில் இயங்கியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அல்லங்காடி எனும் இரவு வணிக வளாகங்கள் இருந்த பகுதியே இன்று சிம்மக்கல், யானைக்கல்சிலைகள் நிற்கும் பகுதியாகும்.

பத்துத்தூண் தெரு
”மதுரையைச் சுத்தின கழுத, மதுரைய விட்டு எங்கயும் போகாது” என மதுரைக்காரர்கள் தங்களைத் தாங்களே பகடி செய்துகொள்வதுண்டு. அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. முக்கிய காரணங்களாய் நான் நினைப்பவை இரண்டு...

1. மதுரை இப்போது மாநகராட்சி என்றாலும், உண்மையில் இது ஒரு பெரிய கிராமமே. அறக்கப்பறக்க ஓடி ஓடி வேலை செய்தாலும், ஒரு கிராமத்து மனிதரின் நிதானமான உளவியல் உள்ளார்ந்து இருக்கும்.

2. இரவு பகல் என எந்த நேரத்திலும், மதுரையின் முக்கிய வீதிகளில் இட்லி, புரோட்டா சால்னாக்கடைகள், டீக்கடைகள் காய்கறி, பழச்சந்தைகள் என மனிதர்கள் உற்சாகமாய், ஆரவாரமாய் இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், மதுரையைத் 'தூங்கா நகரம்' என்று அழைப்பது சிலப்பதிகார காலத்திலேயே இருந்திருக்கிறது. பகலில் நாளங்காடியும், இரவில் அல்லங்காடியும் மதுரையில் இயங்கியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அல்லங்காடி எனும் இரவு வணிக வளாகங்கள் இருந்த பகுதியே இன்று சிம்மக்கல், யானைக்கல் சிலைகள் நிற்கும் பகுதியாகும்.

விளக்குத் தூண்
விளக்குத் தூண்

தீவிர யோசனையில் இருப்பவர்களைப் பார்த்து, 'மதுரைக் கோட்டையைப் பிடிக்கப் போறீயா'ன்னு கேலியாகச் சொல்வதுண்டு. இன்றைய தலைமுறைக்கு 'மதுரையில் ஏது கோட்டை' என்று ஆச்சர்யமாய் இருக்கும். கோட்டைச்சுவரின் சின்னஞ்சிறு துண்டு மட்டும் கோட்டை இருந்ததன் அடையாளமாய் இன்றைக்குப் பெரியார் பேருந்து நிலையம் அருகில், நேதாஜி சாலை ஆரம்பிக்கும் இடத்தில் நிற்கிறது. சட்டென்று பார்த்தால் அது கோட்டைச் சுவரின் எச்சம் என்பது தெரியாமல் கடந்துபோயிடுவோம்.

நிகழ்காலம் இப்படி இருக்க, அதென்ன மதுரைக் கோட்டையை இடித்த கதை? மதுரையின் அடையாளங்களாக சிம்மக்கல், யானைக்கல், விளக்குத்தூண் வந்த வரலாறு என்ன? விடைகாண காலத்தின் கைபிடித்து, மதுரையின் வரலாற்றுக்குள் போனால், வரலாறு நம்மை சந்தடி மிகுந்த நவபத்கானா தெருவுக்கும், பத்துத் தூணுக்கும் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

திருமலை நாயக்கர் பற்றியும், இராபர்ட். டி. நொபிலியின் உறவினரான இத்தாலிய கட்டடக் கலைஞர் ஒருவரின் உதவியோடு ஏழு ஆண்டுகள் இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட அவரின் மகாலைப் பற்றியும் பேசாமல், மதுரையம்பதியின் கதை நெசவு சாத்தியமே இல்லை. மகால் பற்றிய கதை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், கொஞ்சம் மீண்டும் நினைவூட்டிக்கொள்வோம்.

திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட மகால், இப்போதிருக்கும் மகாலைவிட நான்கு மடங்கு பெரியது. சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரு பெரும் பகுதிகளைக் கொண்டது. சொர்க்கவிலாசம் என்பது தர்பார் மண்டபம், அமைச்சகம், அலுவலர் அறைகளைக் கொண்டது. ரங்க விலாசம் நாடகசாலை, அந்தப்புரம், ஆயுதசாலை, வசந்த வாவி, மலர்வனம், சந்திரிகை மேடை என மற்ற பகுதிகளைக் கொண்டு விளங்கியது. முதலில், அரண்மனையின் பிரதான வாயில் வடகிழக்கே நவபத்கானா தெருவில் அமைந்திருந்தது.

யானைக்கல்
யானைக்கல்

18 இசைக்கருவிகளின் முழக்கத்துக்குப் பெயரே நவபத்கானா. அரச மரியாதையுடன் வரும் விருந்தினர்கள் 18 வகை இசைக்கருவிகள் முழங்க, பல்லக்குகளில் அரண்மனை பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்படுவார்களாம். அரண்மனை மரியாதை அது! பல்லக்கு மண்டபங்களும் வாயில் அருகே இருந்தன. இப்போது, அந்த இடம் கார் பார்க்கிங் இடமாக உள்ளது. பிரதான நுழைவாயில் கிழக்கு வாயிலாக மாற்றப்பட்டுள்ளது. 20 அடி உயரமும், 5 அடி சுற்றளவும் கொண்ட பத்துப் பெரிய தூண்கள் அரண்மனையின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கலாம். மன்னரின் பட்டத்து யானையும் பிற யானைகளும் கட்டப்பட்ட இடமே பத்துத் தூண் பகுதி என்கிறார்கள். பத்துத் தூண்களும் விளக்கேற்றவும், கண்காணிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

காலம் உருண்டோட, திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாதர் நாயக்கர், மதுரையிலிருந்து திருச்சிக்குத் தலைநகரை மாற்றியபோது, அரண்மனையின் பல பகுதிகளை இடித்து, மரத்தூண்கள், சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய கலைப்பொருள்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டாராம். நகர்த்த முடியாத பத்துத்தூண்களும், இரைச்சலும், சந்தடியும் மிகுந்த நவபத்கானா தெருவும் மட்டும் வரலாற்றைச் சொல்ல நம்மோடு இன்றும் அரண்மனையின் பிரதான வாசல் பக்கம் இருக்கின்றன.

அரண்மனையைச் சுற்றிலும் 900 அடி நீளம், 660 அடி அகலம், 40 அடி உயரம் உடைய பாரிமதில் என்னும் சுற்றுச்சுவர் இருந்தது. 1637–ல் கோட்டைச்சுவரும், அதைச் சுற்றி அகழியும் அமைக்கப்பட்டன. 1659 வரை திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராய் வைத்து ஆட்சி நடத்தினார். அவருக்குப் பின் மதுரை நவாப்புகளின் படையெடுப்பு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள், அவர்களின் கூட்டாளிகள் எனப் பலரது படையெடுப்புகளால் மதுரை மெல்ல அதன் பொலிவை இழக்கத் தொடங்கியது. 1801-ல் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்துக்குள் மதுரை வந்தது. தொடர்ந்து நடந்த போர்கள், ஆட்சிமாற்றங்கள் என மதுரையின் வரலாறு மக்களை ஒருவித அயர்ச்சிக்குள் தள்ளியிருந்த காலமது.

பல நூற்றாண்டுகளாக மதுரையின் சாலைகளும் மாறவில்லை. பெயர்களும் மாறவில்லை. கோட்டைக்குள் மீனாட்சி அம்மன் கோயில், தென்கிழக்கு மூலையில் திருமலை நாயக்கர் அரண்மனை, சித்திரை, ஆவணி, மாசி வீதிகள் என நான்கு வாசல்கள், 72 கொத்தளங்கள், சுமார் 17,000 அடி சுற்றளவுக்கு அகழி... என மதுரை விரிவாக்கத்துக்கு வழியில்லாத சிறிய ஊராகவே இருந்திருக்கிறது. கோட்டைக்குள் சுமார் 5,000 குடும்பங்கள் 1800களில் இருந்ததாக ஆவணங்கள் சொல்கின்றன. சித்திரைத் திருவிழா நேரங்களில் 60,000 ஜனங்கள் கூடுவார்கள் என்றும், ஊரில் தாங்காத நெரிசலும், இரைச்சலும் மிகுந்திருக்கும் என்றும் வரலாறு சொல்கிறது.

1837-ல், கிட்டத்தட்ட கோட்டைச் சுவர் எழுப்பி இருநூறு ஆண்டுகள் கழித்து, ஒரு பெருமழையில் அந்தச் சுவர் சரிந்து விழுந்தது. குப்பைகளால் தேங்கிக் கிடந்த அகழி நாற்றமெடுக்கத் தொடங்கியது. அப்போது மதுரையின் கலெக்டராய் இருந்த ஜான் பிளாக்பெர்ன் என்கிற பிரிட்டிஷ்காரர், மதுரை மூச்சுவிடவே திணறிக்கொண்டு இருப்பதை உணர்ந்தார். இடிந்து விழுந்த கோட்டைச் சுவரை முழுதாய் இடித்து அப்புறப்படுத்தவும், குப்பைகளால் நாற்றமெடுக்கும் அகழியை மூடவும் நிதி ஆதாரம் வேண்டுமென கிழக்கிந்திய கம்பெனியிடம் முறையிட்டார். மதராசப்பட்டினம் போல வரிவருவாய் அதிகம் இல்லாத சிறிய ஊரான மதுரையின் நிர்வாகச் செலவுகளுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி தயாராய் இல்லை. கலெக்டரை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டது.

யானைக்கல்
யானைக்கல்

பிளாக்பெர்ன்னுக்கு முந்தைய கலெக்டரான ரவுஸ்பாண்டியன் என்கிற பீட்டர் பாண்டியனை மீனாட்சி அம்மையே ஒரு பெரும் விபத்தொன்றில் இருந்து காத்ததாகவும், அவர் மீனாட்சியம்மையின் ஆசி பெற்ற, செல்லப்பிள்ளையாக, அன்றைய மதுரை மக்களோடு நல்ல உறவில் இருந்தார் என்றும் சொல்வார்கள். பிளாக்பெர்ன்னும் அவரது அடியைப் பின்பற்றினார். மதுரையை விரிவாக்கம் செய்யவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் சுயமாய் செயல்படுவதென முடிவெடுத்தார். அப்போது விக்டோரியா யுகத்தின் தொடக்கக் காலம் என்பதால், பிரிட்டிஷ் கலெக்டர்கள் இந்தியாவில் சுயேச்சையாகச் செயல்பட ஆரம்பித்திருந்தார்கள்.

பிளாக்பெர்ன் மக்களோடு பேசினார். வீடுகளில் போதிய இடமின்றி நெருக்கியடித்து வாழ்ந்துகொண்டிருந்த மக்களிடம், அவர்கள் இடிக்கிற அளவு இடத்தை அவர்களுக்கே தருவதாக வாக்களித்தார். மக்களின் ஒத்துழைப்பில் கோட்டைச்சுவர் அப்புறப்படுத்தப்பட்டு, அகழி மூடப்பட்டது. மதுரையின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டு, மதுரை பரந்த உலகை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

மதுரையின் இந்த விரிவாக்கப் பணியில், கலெக்டரோடு துணை நின்ற மாரட், பெருமாள் மேஸ்திரி என்பவர்கள் பெயரில் இன்றும் மதுரையில் தெருக்கள் இருக்கின்றன.

1847-ல் பணி நிறைவு செய்து ஜான் பிளாக்பெர்ன் பிரிட்டனுக்குத் திரும்புகிற சமயம், அவருக்கு நன்றி சொல்லும் வகையில், கீழ மாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில், இப்போதைய காமராசர் சாலையில், பத்துத்தூண் அருகே, எஃகிலான அழகிய வேலைப்பாடுகள் மிக்க தூணை எழுப்பி, கீழே, மதுரை மக்களின் நன்றியையும் தெரிவித்துள்ளனர். எண்ணெயிட்டு ஏற்றுகிற விளக்கையும் அந்த விளக்குத்தூணில் காணலாம்.

சிம்மக்கல்
சிம்மக்கல்

1836-37-ல் மதுரைக் கோட்டையை இடிக்கும் பணி நடந்தபோது, யானை, சிங்கச் சிலைகள் இடிபாடுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அந்தப் பகுதிகளிலேயே நிறுவப்பட்டன. இதில் யானைச் சிற்பம் வைகையைப் பார்த்தபடியும், சிங்கச்சிலை செல்லத்தம்மன் கோயில் எதிரிலும் நிறுவப்பட்டு, இன்றும் மதுரையின் அடையாளங்களாக நிற்கின்றன. கோட்டையை இடித்தபோது கிடைத்த கற்களை வைத்து வைகையின் குறுக்கே கல்பாலம் என்கிற தரைப்பாலம் கட்டப்பட்டது.

- வலம் வருவோம்...